நான் எங்கோ வானத்துக்கு அப்பால்.. ஒரு நீல வண்ணமாய் ஓடிக் கொண்டிருக்கிறேன்... என் கனவுகள் எனக்கு முன்பா பின்பா என்று தெரியாதபடி என் நிழல் என்னை சூழ்ந்திருக்கிறது...நான் அவ்வப்போது நட்சத்திரங்களை பறித்து தின்று கொள்கிறேன்....ஆனாலும் பசி ஆறாத தூரத்தில் மரக் கிளைகளின் சாயலை.. கொண்டே நான் நீந்துகிறேன்.. எனக்கு நீச்சல் மறக்கும் போதெல்லாம்... ஏதாவது ஒரு பறவை தன் சிறகு தந்து என்னை வழி நடுத்துகிறது.. கடவுள்களின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து விட்டு பரிதவிப்போடு முத்தமிட்டும் கடந்து விடுகிறேன்.. கடக்க கடக்கத்தான் வானம் நீள்கிறது என்று தத்துவம் பேசும் ஆழ் மனதை அவ்வப்போது கன்னம் கிள்ளுகிறேன்..... காற்றுக்கு கவிதை முளைத்து காதலிக்கு நிலவு முளைத்த பின்னிரவுகளில் என் ஓய்வு தீர்க்கமாகிறது வெறும் நினைவுகளூடாகவே......

man lonelyகாதுக்குள் இரையும் பெருவெடிப்பின் நீட்சி கடந்து விடாத புள்ளிக்குள் ஒரு கருந்துளையாகவே நான் சுழலுகிறேன்... சுழல சுழல.. ஒன்றும் ஒன்றும்.. ஒன்றாகவே இருப்பதில்.. எனது எண்ணம் முழுக்க ஆன்ம சூனியம்.. அத்து மீறும்... வரைபடங்களுடன்... கத்தி கத்தி சரியும் சிறு துளி பெரு மழை, கனவை அள்ளி வீசுகிறது.. ஆனாலும்.. அரட்டித் திரியும் அந்திம காலங்களை சற்று தூரத்தில் கண்டு விலகி.. ஓடி ஒளியும் சாதாரண.. பிம்பத்தின் நுட்ப கிடங்கை நான் நெய்கிறேன். நெய்ய நெய்ய பெய்யும்.. மணல் மழைக்குள்.. பிஞ்சு கால்களென...மெல்ல மறையும் என் பால்ய நினைவுகள்...

பேசும் பொருள்களின்... ஜட நிலை வார்ப்புகளை.. நான்...இலையுதிர் காலத்துக்குள் ஒளித்துக் கொள்கிறேன்.. யாருமறியாத.. எனது பழுப்பு நிற கனவுகளை அங்கேதான் கண்டெடுக்கிறேன்... ஒரு வெற்றிட ஓவியமாக என் நடனம் இருக்கும்... அந்த வெளிகளில்.... உங்களுக்கு அனுமதி இல்லை.. எனது நிர்வாண பிம்பங்கள், எல்லா மூளைகளிலும் இருக்கும் சாத்தான்களை சுத்திகரித்து கடவுளாக்கும்... வேதாளம் ஏறும் முருங்கை மரங்களை.. நான் எப்படியாவது... ஊசி இலைக் காடுகளின் மிகப் பழமையான மரமாக்கி விடுகிறேன்..... எனது ஆசை அப்படி..அது ஆழமான பின் கதவின்.. ரகசியங்களைப் போன்றது......மறக்க மறக்க... நினைக்கும்.. என்னை நானே மறக்கவும் செய்யும் நினைவு அது...

என் நினைவுகளின் ஜன்னல்களை ஒரு போதும் அடைப்பதில்லை..... கல் எறிந்து தினம் ஒரு கண்ணாடி நீங்கள் உடைக்கலாம்... மீண்டும் மீண்டும்.. ஜன்னல் திறக்கவே விரும்புகிறேன்.. குறி தவறாமல் எம் முகம் சிதைக்கும்.. உங்கள் கல்களில்.... எனது முத்தங்கள் பதிந்து கிடக்கும்... திரவமற்ற நிலைக்குள்... நிறம் என்னவாக இருக்கும்..... உருவமற்ற உறைக்குள்....பதில் என்ன தூவும்..... தவிர்த்தலின் நோக்கம்.. பிழைக்கும் மானுட இயக்கம்...குடை மறந்த தேசத்தில்..... எனக்கு மழைதான் ஆசான்... துளை இட்ட பின் பேசாத புல்லாங்குழலை நான் மூங்கிலாகவே விட்டு விடுகிறேன்.. அதன் நீட்சி இசை அல்ல... இசைத்தல்....காற்றுக்கு சும்மா இருப்பது பிடிக்குமா.. கேள்வியைதான்.....பதிலாகவும் அசைக்கிறது......பதில்கள் அற்ற பக்கத்தில் ஒரு தூரம் செய்து வீசி விடுவது என்னைப் போல் ஒருவன்.. அவனும்..... இவனானால்.. இவனும் அவனாகும்.. சாமர்த்தியத்தில்... வழி தப்பித்துக் கொள்கிறது.... ஜன்னல் உடைப்பை தடுக்கும் கையில் உடைத்த கல்... நடுங்குகிறது விசை.....

மீண்டும் அப்பால் செல்லும் வழி நெடுக தொடுவானம்... அந்தரத்தில் அங்கும் இங்கும்....அசைந்து  அசைந்து காணும் விழிகளில் ஒரு கம்பி மீது நடக்கும் பாதங்களை எறும்பாக்கி விடுகிறது... இலை தேசக் கனவுகளோடு அது.. இன்னும் இன்னும் தன் கால்களை அகல பரப்பிக் கொண்டே நகருவதில்...... என் சூட்சுமம் அவிழ்கிறது. நினைவுகளைப் போல அழுகை ஒன்று உண்டோ.... கேட்டு கேட்டு கேட்கையில் மறதியைப் போலொரு.. மகத்துவம்... உண்டோ.. மண் கடந்த.. வெளியில்.. நிறம் என்ன நிறம்...? கேட்டு விட்டு... கேட்கிறது கேள்வி...

உண்டு உறங்கி அதுவாகவே இருக்கும் நான்.. எதுவாகவும் ஆகி விட சொல்லும் இயற்கையின் மார்புக்குள்.... சுருண்டு கிடந்து, சூடாய்.... பூமியாய் மாறிடவே விரும்புகிறேன்.... எட்டி எட்டி பார்க்கும்.. பார்வைக்குள்.....வெறும் எட்டிப் பார்த்தலின் முந்தைய நொடிகளே மிச்சம்.. பார்க்கப் பட்டவை மீண்டும் சுழன்று கொள்கிறது...... வால் தேடும்.. நாயின் வாக்கிய அமைப்பில் சுழலும் புள்ளி...என் வழி நெடுகிலும்... என்னை வாலாக்கி விட்டிருக்கிறது.  வந்த பொழுதில் வாழ்ந்த பொழுதில்.. என்ன என்ன என்ன.. என்று எங்கெல்லாமோ அனுப்பிய வார்த்தைகளை ஒன்று குவித்து ஒன்றையே குவித்து மீண்டும் தனக்குள் நிரப்பிக் கொண்ட முன் பின் பயணத்தின் திறவுகள்.. மீண்டும் மீண்டும் ஒரு பந்தைப் போல.. இந்த அந்தகார சூனியத்தில் ஆண்ட காலங்களின் நிழலுக்குள்... நேரமற்ற குவியலாய்... பால் வீதி செய்து..அதில்.. பயணங்களையும் செய்கிறது... நான் யார் என்று கேட்கும் குரலுக்குள் நானே இருப்பதில் நானே கையசைத்து.....நானாகவே மாறுகிறேன்..... கர்வம் கொஞ்ச நொடிகள், என்பது எவன் தத்துவமாகவும் இருக்கட்டும்... இப்போது எனது.  காதலைப் போல எல்லா நம்பிக்கைக்குள்ளும் ஒரு துளை இட்டு.....உள்ளே மறைந்து கொண்டே துவர்க்கும் ருசியில்  பிறக்கும் ரகசிய பிளவில் ஆதி முழுக்க முளைக்கும் ஆப்பிள்களுக்கு ஆகாயத்துக்கு அப்பால் பெயரில்லை...

சுமையற்றுத் திரியும்.. இறகுகளுக்கு வெளி அசைக்கும் வளைதலின் சூட்சுமம்.. புரிவது போலொரு பாசாங்கு செய்கிறது... ஆனாலும்.. புரிகிறது... தவங்கள் கலைதலில் தானே.. தர்க்கங்கள் பிறக்கின்றன... சொர்க்கம் ஒரு போதும் திறவல்ல.....மூடல் என்பதன் வெளிச்சத்தில்....இருண்மையின் நிறத்தின் தீர்வில் ஒரு புள்ளி கூடுகிறது... மூன்றாம் சிந்தனைக்கு அருகே.. எட்டாவது சிந்தனை வந்து போகும் காலப் பிழை காலந்தோறும் நடக்கதான் செய்கிறது.. நடப்பதில் பிழையாகிக் கிடப்பது...புழு....பூச்சி.... புல்...... பூண்டு.. பிறகு மனிதனாகிய நான்.. என்னைத் தாண்டும்.. மனிதன்.. பின்று நாளில் வருவான்.. அவனும் நானாகவே இருப்பதில் தானே எனது ஆத்ம திருப்தி... ஆன்ம நியதி... ஆத்திர நீதி..ஆனால் எல்லாமே மறந்து போகும்...

மறதி வரும்... அதுவே நினைவாகும்... பின் மறதியாகும்.. பின் நினைவாகும்.. பின்.. நிழலாகும்.. பின்.. நீயும்.. அதுவே பின் நானாகும்.. நானில் குளிர் மிஞ்சும்.. குணம் இல்லை...கனவே போல இருப்பதில்.. தூக்கத்துக்கு இடமில்லை.. பசி இல்லை.. பாவம் இல்ல.. ஒரு சொல். கொண்ட மிதப்பு.. அது தீண்ட தீண்ட தகும்.. நிஜத்தின் சாயலில் சாயத்தை அள்ளி அள்ளி வீசும்... அதற்குள் நான் ஹோ வென கத்திக் கொண்டு கருவாகி விடுவேன்.... ஒன்றுமில்லா.....சுழலுக்குள்.... மகரந்தம் அற்ற மரத்தோடு... என் கடைசி மறதியை ஓர் ஆணியைப் போல அடித்து விட்டிருப்பேன்... அது உங்கள் கண்களுக்கு தெரிய போவது இல்லை... நீங்களும் என்னோடு....நானாக இல்லாமலே போய் விடுவீர்கள்.... நீண்டு கிடக்கும் வழியெங்கும்.... ஒரு வானம்... மீண்டும் மீண்டும்.. தன்னை தொடுவானமாக்கி நீட்டித்துக் கொண்டே இருக்கும்... அதுவும் என் வழியே.. சொல்ல சொல்ல..... சொல்..... சொ.....

- கவிஜி 

Pin It