விரிந்து கிடப்பதில்தான் வானம் அர்த்தமாகிறது... அர்த்தத்தில் உயர்ந்து கிடப்பதில்தான் தமிழ் தலை நிமிர்கிறது... நிலை... எதிர் நிலைக்குள் நின்று... எதிர் வினை புரிவது போல.. சரி தவறுக்குள் நின்று தலை தூக்கி.... தவம் கலைத்து.. ஒரு வழியாக நடு நிலைக்குள் நிற்கும் இடத்துக்கு வர.....இன்னும் தேவை அலசலே..என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.... கனவுகளை விதைத்த இலக்கிய சூட்டுக்குள் முளைத்துக் கொண்டே கிடக்கும்..... மொழியாக நான் விரிகிறேன்..

செம்மொழி. உலகில் போற்றப்படும் மொழிகளுள் முக்கியமான மொழி. "யாமறிந்த மொழிகளிலே... தமிழ் மொழியைப் போல...ஒன்றை காணவில்லை.." என்று கூறிய பாரதியின் முருக்கு மீசை... நம் தமிழ் என்றால் அது மிகை அல்ல.. மிகை என்ற சொல்லுக்கும் பொருள் தரும்.. அமுதக் கனலை அவன் தாசன் வீசி எறிந்த கவிதைச் சோலைக்குள் சற்று நுழைந்தால் புரிந்து விடலாம்... புரிதலின் ஒட்டு மொத்தக் கடலில்..... ஓயாது... அலையும்.... அலையின்...தீவிரத் தன்மையோடுதான் தமிழ்..அலைந்து கொண்டிருக்கிறது......வள்ளுவன் வரிகளை இனி ஒரு மனிதன்... எழுதிடவே முடியாது... பயிரைக் கண்டு வாடிய மனிதனை தமிழ் இனத்தில் மட்டுமே காண முடியும்........ உலக நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகம்.. வைகை நாகரிகம் என்பது சங்கம் வளர்ந்த மதுரைக்கு தமிழ் கிரீடம்......மனித நேயத்தில்....மானுடம் தழைக்க செய்த தமிழனின் பண்பை விரிக்கும்..மொழி, தமிழ்.....

தமிழ் எனும் சொல், வெற்றிடத்துக்கும் உவமை செய்யும்.... அது மாயக் கண்களைக் கொண்டு.. கைகளைக் கொண்டு... இதயத்தைக் கொண்டு.. மானுடம் செய்கிறது... அது வாழ்வியல் கற்றுக் கொடுக்கிறது...பாரம்பரியம் பயிற்றுவிக்கிறது... கூடி வாழும் கலாசாரத்தை விதைக்கிறது... விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அள்ளித் தெளிக்கிறது... தீமைக்கும் நன்மையே செய்கிறது..... தமிழ் மொழி.. ஆதி மொழி... அது ஆதவனின் மொழி.. தமிழ் படித்தவன் முகம் மட்டுமல்ல.. அகமும்...அன்பால்... நிரம்பி வழியும்....அது உங்களை சுற்றும் வாழ்வியல் சூட்சமத்தை சீராக்கி... உங்களை நல் வழிப் படுத்தும்...

தமிழ் இனி மெல்ல சாகும் என்பது கோபத்தின் சுவடுகள்.. அது எப்போதும் சாவதில்லை.. உலகில் கடைசி மனிதன் கூட முதல் மனிதனாக தமிழை தூக்கி சுமப்பான்... வெறும் புகழ்ச்சி அல்ல....ஆசை. இலக்கிய செழுமைகள்... கதைகள்.. கவிதைகள்.. ஆவணங்கள்... என்று தமிழ் படைப்புகள்.. அர்த்தமுள்ள சூட்சுமங்களை இங்கே பதிவு செய்து கொண்டேதான் இருக்கின்றன...தமிழைக் கொண்டாடுபனாகவே இருக்கும் தமிழன்... அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பதுதான் தீராத ஆசை...ஆசைகள்... ஒருபுறம் இருப்பினும்... வாழ்வின் நிதர்சனங்கள் மறுபுறம்.. மாற்றி யோசிக்கும் இடைநிலையில்....... அமுதென்று சொல்லும் போதே இனிக்கும் தமிழை....தெரிந்தோ தெரியாமலோ போகிற போக்கில் கடந்து விட நினைப்பதில் தொடங்குகிறது இன்றைய தமிழ் பிரச்சினை.....அது நாம் நம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும்.....நாம் கேட்கின்ற கேள்விகளையும், நாமே கிடைக்க செய்கின்ற பதில்களையும்..வினைக்கான அலசல்களையும்..எதிர் வினைக்கான குற்றசாட்டுகளையும்........ சுய தவறுகளையும்... அக உணரல்களையும்...ஒரு சேரக் காண செய்யும் உத்தியாகவே நகர்கிறது...

"என் தாய் மொழிக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்... என் வீடு கொடுக்கிறது... என் அலுவலகம் கொடுக்குமா...?" என்ற கேள்வியோடு... உங்களைப் பார்க்கிறேன்... நீங்களும் அப்படியேதான் என்னை பார்ப்பீர்கள்... நம் மொழியினூடாக நம் வாழ்வை மிகத் துல்லியமாக பார்க்கும் நிலையை நாம், ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னால் சற்று இழந்து விட்டோம் என்றுதான் கூற முடியும்.....ஒரு வாக்கியத்தில்.. குறைந்த பட்சம்.. ஒரு ஆங்கில சொல்லாவது வந்து விடுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை..... மீறி தவிர்த்தால்.... அது மற்றவர்க்கு கேலியாகத் தெரிகிறது...'டீ' என்று கூறுவதால் தமிழ் செத்து விடவா போகிறது என்று கேட்பவர்க்கு.. ஆம் என்ற பதிலை உங்களால் கொடுத்து விட முடியுமா...?அதே சமயம்... ஆங்கிலப் பள்ளியில் படித்தால்தான்.. தன் குழந்தை முன்னுக்கு போகும் என்று நினைக்கும் அளவுக்கு..தமிழ் வழிப் பள்ளிகளை வைத்திருக்கும் நம் அரசை குறை கூறித்தான் ஆக வேண்டும்... இன்னும் கழிப்பிட வசதி இல்லாத எத்தனை அரசு பள்ளிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன தெரியுமா....? ஆதாரத்துக்கே வழி இல்லாத போது எப்படி என் மாணவியும் மாணவனும் கல்வியைப் கசடற கற்பார்கள்...... பின்...காலம் போற்றும் இலக்கியம் எப்படி படைப்பார்கள்......?...மொழியைத்தான் எப்படி வளர்ப்பார்கள்?-கேள்விகள் தன்னை நீட்டித்துக் கொள்வதை தடுக்க முடியவில்லை...

நாளைய தனியார் நிறுவனக் கூலிகளைத்தானே இன்றைய கல்வி அமைப்பு உருவாக்கிக் கொண்டிருக்கிறது..... யோசித்துப் பாருங்கள்.. "நூற்றுக்கு நூறு எடு... அப்போதான் அந்த கல்லூரில இடம் கிடைக்கும்.. அப்போதான்....அந்த நிறுவனத்தில வேலை கிடைக்கும்.." என்று வேலையைத்தான் அடிப்படையாக கொண்டு பயிற்றுவிக்கப் படுகிறதே தவிர.. ஆழ்ந்த அறிவை, வாழ்வியல் புலமையை...கற்றுக் கொள்ள நம் சட்டமும் அனுமதிப்பதில்லை.... நம் திட்டமும் அனுமதிப்பதில்லை......எந்த ஒரு கற்றலும்... அதன் தாய் மொழியில் இருக்கையில்தான்... இன்னும்... முழுமையாக மூளைக்குள் செல்கிறது....கற்றலின் ஆகப் பயனை நாற்றாக்குகிறது... ஆனால் இங்கு நடப்பதென்ன.... அந்நிய மொழியில்தான்... அரசாங்கமே நடக்கிறது.... விளங்குமா என் மொழி.... கையொப்பமே.. இன்று ஆங்கிலத்தில்தானே போடப்படுகிறது..... பெரும்பாலும்...இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் வரும் 'ஹை... ஹெல்லோ'வை.. எப்படி மாற்றி வணக்கம் என்று கூற செய்யப் போகிறோம்.. இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் அதிகாரம் என்றே நம்பும்.. தன்மைதான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது...தமிழ்நாட்டில், ஒரு நகரத்தில் நேர்காணல் கூட ஆங்கிலத்தில் நடப்பது எத்தனை பெரிய வேடிக்கை...மதிப்பை, மரியாதையை ஒரு ஆங்கில மொழிதான் தரும் என்று நம்ப வைத்தது வியாபார தந்திரம்..அதில் தமிழ் மொழி கரைந்து கொண்டே போகிறதே.. யார் மீட்பது.....?

உலகமயமாக்கல்... வந்த பிறகு... பொருள் உள்ளவன் மொழிதான் உலக மொழி... அதாவது..சந்தைக்கு மாடு ஒட்டி வருபவன்தான் முதலாளி..அவன் மொழிதான் பேசப்படும் மொழி.. சந்தைக்கு சென்று மாட்டை வாங்குபவன் வாயை மூடிக் கொண்டு விற்பவன் மொழியில் பேசி.. அல்லது இருவருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் பேசி.....விற்பவன் பணத்தில் பணம் கொடுத்து மாட்டை ஓட்டிக் கொண்டு வர வேண்டும்...இங்கும், எதிர்வினையை வினைதான் நிர்ணயிக்கிறது....என்று மீண்டும்.. நியூட்டனின் விதி நிருபனமாக்கிக் கொண்டேயிருக்கிறது...ஆக, வினையை நாம் விதைக்க வேண்டும்.. அதாவது விற்பவனாக மாற வேண்டும்....அதற்கு கடுமையாக, புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும்...உற்பத்தியில் நாம் மேலோங்க வேண்டும்.. அப்போது அதன் நீட்சியாக நம் மொழி மேலோங்கும்.....இருப்பதிலேயே மிகப் பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று........இங்கு தேவையைத் தாண்டி....ஒரு சிந்தனை விரவிக் கிடக்கிறது.....(அது பக்கத்துக்கு வீட்டுக்காரனின் வாங்குதல் பற்றிய சிந்தனை...) அதனால்தான் கணிப்பொறியோ..அலைபேசியோ...காரோ... கலைப் பொருளோ...எதுவாக இருந்தாலும் இங்கு கொண்டு வந்து கொட்டுகிறான். (நாமும் போட்டி போட்டுக் கொண்டு... வாங்கி வாங்கி வீட்டை நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.... ஒரு பக்கம் வட்டி கட்டியே வீணாய் போய்க் கொண்டிருக்கிறோம்...) என்று நம் தயாரிப்பில் பொருள் உற்பத்தி முன்னிலையில் இருக்குமோ அன்று நம் மொழியை அவன் பேசுவான்... ஆக, மொழி என்பது.... இலக்கியம் சார்ந்த ஒன்று மட்டுமல்ல..அது பொருளாதார, புவியியல் கோட்பாடுகளையும் சார்ந்தே இருக்கிறது...உலகமே, கொடுத்து வாங்கும் ஒரு சந்தைதான்... இருப்பவனும் இல்லாதவனும் இணையும் புள்ளி... அதற்குள்... கொஞ்சம் அதிகம் எல்லாமே சேர்ந்து கொள்ளும்...மொழிக்கும் அது பொருந்தும்...

மொழிக்குள் நுண்ணிய அரசியல் இருப்பதை மொழிப் பற்றாளர்கள்.. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்... நாம் நாகரிகமான அரசியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது நம் மொழியும் உயர்ந்த இடத்துக்கு போகும்.. நாம் அறிவியல் உயர்ந்து நிற்கையில் நம் மொழியும் உயர்ந்து நிற்கும்.. மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்கள்.... அறிவியலில் உயர்ந்த இடத்தில் நின்று தமிழ் மொழியை வெடிக்கக் செய்தாரே.. பரவ செய்தாரே.....அது ஒரு சோற்று உதாரணம்...

இன்றைய குழந்தைகள்தான் நாளைய அப்துல் கலாம்கள்.. சோற்றை ஊட்டும் போது அதில்.. தாய் மொழியையும் சேர்த்து ஊட்ட வேண்டும்..அதை விடுத்து "அயோ... என் புள்ளைக்கு தமிழே வராதுன்னு" பெருமையாக பேசும் அம்மாக்களின் மனநிலை, தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறுக்கு சமம்.. அதை அறுத்தெறிவோம்..... தமிழ் தெரியாது என்பது பெருமையா....? அது அவமான சிந்தனையின் முதல் துளி.. ஆனால்.. முழுதும் விஷம்...விஷங்கள் முறிக்கப்பட வேண்டும்.. இல்லையெனில்...அத்தையை ஆன்ட்டி என்று கூப்பிடும் அவலம் எதிர் காலத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும்...

இன்று முக நூல்... ட்விட்டர்.. யு ட்யுப், கணிபொறி, அலைபேசி, என்று இன்னுமின்னும்...உலகம்.. வேறு சக்கரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.... அதனோடு நாமும் நம் மொழியும் சேர்ந்து கொள்ள வேண்டுமே தவிர.... தமிழ் மொழி..... புறாவைக் கொண்டு தான் செய்தி அனுப்பும் என்று கூறிக் கொண்டிருந்தால் உலகம் நம்மை விட்டு விட்டு சென்று விடும்.. அலைபேசியோ.... ஆண்டவனோ....அதற்கு தகுந்தாற் போல நமது.... தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது..... சங்க இலக்கியம் படிப்போம்..... நவீன இலக்கியம் படைப்போம்..... மரபுக் கவிதை உணருவோம் ..... ஹைக்கூவும் செய்வோம் .......நமது அனைத்து விவாதங்களும் தமிழிலேயே இருக்கட்டும்..... தமிழ் நாட்டுக்குள், தேவை எனில் ஆங்கிலம் பேசுவோம்.... வேற்று மொழி பேசுவோம்.. ஆனால் தமிழ் தெரிந்த முதலாளியும்.. தமிழ் தெரிந்த தொழிலாளியும் தமிழில் பேசிக் கொள்வதில் எந்தக் கொலைக் குற்றமும் இருந்துவிடப் போவதில்லை என்பது என் கூற்று...புது மொழியைக் கற்றுக் கொள்கையில் அவன் இன்னொரு முறை பிறக்கிறான்... என்பது...மூத்தவன் சொல்... அதை.. உணர்ந்தவர்கள்... தேவை இல்லாத இடத்தில் தாய் மொழி தவிர்த்து வேறு மொழி பேச மாட்டார்கள்.... இன்னும் கூற போனால்... அரைகுடங்கள்... தலும்புவது போலதான்... கோயம்புத்தூர்காரனும்...தஞ்சாவூர்க்காரனும் ஆங்கிலம் பேசுவது...

ஆறு ஏழு வயதில்தான் பள்ளிக்கே போக வேண்டும் என்று சட்டம் இருக்கின்ற பின்லாந்தில்தான்...உலக அளவில்... கல்வித் துறை மேம்பட்டு இருப்பது முரண் அல்ல......நிஜம்...அதுவும்... அவன் மொழியில்தான்.. ஒருவனின் மொத்த படிப்பும் கற்பிக்கப் படுகிறது....அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள்... ஆனால்.. அதுவும் ஒரு மொழியாக.. அவ்வளவே... ஆங்கில வழியில் அல்ல......தாய்மொழியில் கற்கையில்தான்... மிக அர்த்தமுள்ள புரிதல்கள் கிடைக்கின்றன்...புரிதலே.. கற்றலின் விதை... அதுதான் விருட்சமாகும்.... அதுதான்.. அறிவியல் செய்யும்.. அதுதான் பொருளாதாரம் செய்யும்... அதுதான்... மனதளவில்.. உடலளவில்.....குடும்பளவில்.... உறவுகளளவில்.... நட்பளவில்.... காதலளவில்.... ஆட்சி அளவில்.. எல்லை அளவில்..நம்மைத் திடப்படுத்தும்... அதுதான்... நம் மொழியை இன்னும் இன்னும் உயரத்துக்கு அழைத்துச் செல்லும்... மொழியை பேசித்தான் வாழ வைக்க முடியும்..........பேசுவோம்.... உரக்க பேசுவோம்......உணர்ந்து பேசுவோம்...... உள்ளம் திறந்து பேசுவோம்... உரிமையை பேசுவோம்...

அவனவன் மொழிதான் அவனுக்கு ஒரு மிகச்சிறந்த வெளியை திறந்து விடும்.. அது தமிழுக்கும் பொருந்தும்...ஆனால் மொழியை வைத்து நடக்கும்....தவறான அரசியல்... கடவுளை வைத்து நடந்து கொண்டிருப்பதற்கு சமம்....கடவுளையும் மொழியையும் ஆயுதமாக்கி ஆதாயம் தேடும் அதிகார சிந்தனை இன்னும் நம்மில் புரையோடிக் கிடப்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்..ஆங்கிலம் பேசுபவன்..சமஸ்கிருதம் பேசுபவன்.. ஹிந்தி பேசுபவன் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்ற மிக மோசமான விதைகளை நம் மண்ணில் தூவி விட்டவர்களின் அரசியலில்தான் நமது சுதந்திர இந்தியாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது....அது எல்லாவற்றிலும், அரைகுறையாகவே இன்னும் ஆங்கிலயேன் போட்டு வைத்த பாடத் திட்டத்தையே பின் பற்றிக் கொண்டிருப்பதில் வந்து நிற்கிறது.....அது, மிகப் பெரிய மாய வலையை பின்னிக் கொண்டேயிருக்கிறது..... அதாவது... அடிமைக்கும் அடிமை தேவைப்படுவது போல..தமிழை தனக்கு கீழாக வைத்துப் பார்ப்பதில் இந்திய அரசியலுக்கு ஒரு சட்டாம்பிள்ளைத்தனம் இருக்கிறது..... தமிழக அரசியலோ அதை விட வெட்கக்கேடு..... இன்னமும்.. புத்தகத்தில் முதலைமைச்சர் படத்தையோ....முன்னால் முதலமைச்சர் படத்தையோதான் போடுகிறார்கள்..அப்படி என்ன முன்னுதாரணமாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று விளங்கவில்லை...

சாவு வீட்டிலும் ஓட்டு சேகரிக்கும் மனோபாவத்தில்தான் நமது அரசியல் இருக்கிறது... இதையெல்லாம் தாண்டிதான் தமிழ் வளர வேண்டியிருக்கிறது.... கல்விக் கண் திறந்த ஐயா காமராஜரை தூக்கி வீசிய சமூகம்தான் இது... அந்த அறியாமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் தமிழுக்கான திட்டங்களை செய்ய வேண்டியிருக்கிறது... இன்னொரு முக்கியமான முரணையும் இங்கே காண வேண்டும்..அதாவது, தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும்.. தமிழ் வெறியை ஊட்டி விடக் கூடாது என்பதில் கவனத்தோடு இயங்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.... தமிழ் மொழியை பேசுகையில் வேறு மொழி கலப்படம் செய்வது எத்தனை ஆபத்தானதோ.....அதை விட ஆபத்து, நான் தமிழ் மொழி மட்டும்தான் படிப்பேன்..பேசுவேன்..... தமிழ் மொழி மட்டுமே.. உலக அளவில் சிறந்த மொழி என்பதும்...அது நம்மை நம் வட்டதுக்குள்ளேயே அடைத்து விடும்.... நம் தமிழ் சிறகுகளை பறக்க விட வேண்டுமானால்...அதற்கு நாம் திசை அறிந்திருக்க வேண்டும்... இங்கே திசைகள் என்பது.. பறந்து விரிந்த மானுட குலம்.. இங்கே நாட்டுக்கு ஒரு மொழி....நாட்டுக்கு ஒரு பாரம்பாரியம்.... நாட்டுக்கு ஒரு பண்பாடு இருக்கிறது....அவைகளின் ஊடாகவும் பறந்து திரிந்துதான் நம் கொடியை நாட்ட வேண்டும்... போட்டியே இல்லாமல் வெற்றிபெறுவது எதற்கு....?

சுதந்திரமான சிந்தனையே ஒரு முழுமை பெற்ற சமூகத்தை படைக்க முடியும்..... படைப்பு என்று வருகிகின்ற போது தமிழ் நாட்டில் தமிழ் படித்தவனும்.. தமிழில் இலக்கியம் படைத்தவனும் வாழ முடியுமா என்று எங்கேயோ கேட்ட குரல்களின் வலியை மீண்டும் காதுக்குள் கொண்டு வந்து கண் மூக்கு வைத்து உருவம் கொடுத்து பார்க்கிறேன்.......ஒரு மிக மோசமான அனுபவமாகத்தான் இருக்கிறது...."இவ்ளோ மார்க் எடுத்துகிட்டு தமிழ் படிக்க வந்ருக்க" என்று ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்... மொழியின் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கத்தை வெளிச்சம் போட்டுக் கட்டிய நிஜம் அது......அதே சமயம் ஒரு தமிழ் கதாநாயகன் ஆங்கிலம் பேசினால்... அவன் அறிவாளி என்று கட்டமைத்த புத்திசாலித்தனமும் நம் திரைப்படங்களையே சாரும்..அவற்றைக் கடந்திடுவோம்.....

தமிழில் நல்ல இலக்கியங்கள் படைப்பவனைக் கொண்டாட வேண்டும் .. வள்ளுவனையும். ....கம்பனையும்....பாரதியையும்... பாரதிதாசனையும்..... புதுமைப்பித்தனையும்..ஜெயகாந்தனையும்...இன்னும் இருக்கும் இலக்கிய ஆளுமைகளை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்......இலக்கியச் செழுமை.. தமிழ் மொழியின் மூன்றாவது கண்ணைத் திறந்து விடுகிறது...இன்றைய பெரும்பாலானவர்களின் மத்தியில், படிக்கும் ஆர்வம் குறைந்திருக்கிறது என்பது உண்மை.... முகநூலுக்குள் நுனிப் புல் மேய்வதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும்.... அது ஆழமான செறிவை உண்டாக்குமா என்றால்... கண்டிப்பாக இல்லை என்றே கூறலாம்.... பொழுது போக்கு என்ற சொல்லுக்குள் சில செய்தி பரிமாற்றங்கள் தமிழ் மொழியை முழுதாக வளர்த்து விடும் என்பதில் எனக்கு ஐயம் உண்டு...... புத்தகமோ....கணினித் திரையோ..... படியுங்கள்.. படிக்க படிக்க... அடி மனதில்.. ஒரு ஆற்றல்...படைக்கும்...அதுதான் மொழி வளர்ச்சியின் விருட்சம்...பதிவுகள் செய்வது கால சக்கரத்தின் கடமை... அதை ஒவ்வொரு கண்ணியாக பார்த்து பார்த்து கோர்ப்பது காலத்தினடியில் சுழலுபவனின் கடமை.....

இன்னும் எண்களை சொல்லும் போது நாம் ஆங்கிலத்தைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்....அதை மாற்றிக் கொள்வோம்...மெல்ல மெல்ல பழக்கம்... நடைமுறை ஆகும்.. அது மொழிக்கும் பொருந்தும்...

இன்னொரு முக்கியாமான விஷயத்தை பகிர்ந்தே ஆக வேண்டும்.. வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள்.. தங்கள் மூளையைத்தான் அவர்களுக்கு பலி தர வேண்டுமே தவிர... மொழியை அல்ல.. அன்னியசெலாவனி வேண்டுமானால்..... ஒன்று, உற்பத்தியை அதிகரித்து.. ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும்.. இல்லை என்றால்... வேலைக்கு தலை குனிந்து அந்நிய நாட்டுக்கு ஓட வேண்டும்... இரண்டாவதை செய்தவர்களும் வாழ்க.. ஆனால் விடுமுறையில் தாய்நாடு வரும்போது தயவு செய்து தமிழைக் கொல்லாதீர்கள்.... அது அருவருப்பான அத்துமீறலாக இருக்கிறது,..... தமிழ், முகம் பொத்தி அழும்.....இலைமறைக் காட்சியைக் காண சகியாது...

தாய் மொழியைக் காக்க சிறு சிறு கோர்வைகளை மெல்ல மெல்ல கோர்ப்போம்....... நம்நாட்டு பொருளாதாரக் கொள்கைகள் தாய் மொழியை சார்ந்து இருக்க வேண்டும்...நாம் தமிழில் கையெழுத்து இட்டு பழக வேண்டும்.. பெயரைத் தமிழில் எழுதி விட்டு கையொப்பத்தை ஆங்கிலத்தில் போடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்...... இன்னும் பல பேர் அப்பா பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் போட்டு விட்டு பெயரைத் தமிழில் எழுதுகிறார்கள்... கவனிக்கப்பட வேண்டிய விஷயம்..

வீட்டில் குழந்தைகள் கண்டிப்பாக தமிழ்தான் பேச வேண்டும் என்று கட்டளையை விதைப்பதற்கு பதில் அவர்கள் தமிழில் பேசினால்தான்.. இயல்பாக இருக்கிறார்கள் என்ற சூழலை விதைப்போம்.. நம்மை போல உலக அளவில் கதை சொல்லிகள் கிடையாது.... சொல்வோம்..... கதை சொல்வோம்.....கூட்டுக் குடும்பத்தின் தேவையைக் கதையாக கூறுவோம்...அது மொழியின் கூட்டுக்குள் கட்டப் பட்ட சிறகு என்ற உண்மையைக் கூறுவோம் ... கேட்பவரின் கற்பனை விரியும்...என்பதை உணர்த்துவோம்.....மானுட குலம் அவரவருக்கான சூழலுக்கு ஏற்ப தனக்கென ஒரு மொழியை சிறுக சிறுக காலத்தின் பிடியில்.. செதுக்கி செதுக்கி சேர்த்து வைத்திருக்கிறது ... காலங்கள் பல தாண்டிய மூளைகளின் வழியே கட்டமைப்பட்டிருக்கிறது...... தமிழ் மொழி...உலகில் சிறந்த மொழிகளுள் சுவையான மொழி... சுதந்திரமான மொழி..... அதில் இரட்டைக் கிளவியும்.. சொலவடையும்... சொல்லாடலும்... எப்படி வேண்டுமானாலும் வாக்கியங்களை ஒடித்துப் போட்டு பொருள் உண்டாக்கும் நுண்ணிய கலைகளின் திறவுகளைக் கொண்ட மொழி.....பொக்கிஷங்கள் நிறைந்த உணர்தல்களைக் கொண்ட தமிழ் மொழியை...பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்... தோழர்களே... அடுத்து நூற்றாண்டுக்கு அதை டிஜிடலாக்கி கொண்டு சேர்ப்பது... இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த பணி...

தமிழ் மொழிக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது... வாழ்க்கை இருக்கிறது... அது பெரிய பெரிய ஜாம்பாவான்களைக் கொண்டு செய்யப்பட்ட அடுக்குத் தொடர்... அதை கலைத்து விடும் அதிகாரம் நம்மில் யாருக்கும் கிடையாது..... கடைக்கோடி தமிழனுக்கும் சொந்தமான மொழியை கிள்ளுக்கீரை மாதிரி எவனோ ஒரு வியாபாரி கிள்ளி விட்டு போவதை அனுமதிக்க முடியாது.......அது ஒரு விவசாயியின் மொழி... அது ஒரு நெசவுக்காரனின் மொழி...ஒரு கட்டடக்காரனின் மொழி.... ஒரு கரகாட்டக்காரனின் மொழி...ஒரு வரலாற்று ஆசிரியரின் மொழி....தூர்வாராமல் கிடக்கும் ஒரு நதியோரத்தின் மொழி.... மலைகளின் மூலிகைக் காற்றின் மொழி... அது ஒரு கனவுக்காரனின் மொழி... அது அன்பின் மொழி....வள்ளுவனும் வள்ளலாரும் கட்டிய கோவில் அது... கம்பனும்.. இளங்கோவும் செய்த... அற்புத சிருஷ்டிகள் தமிழுக்குள் இருக்கின்றன... தமிழனின் மனம் விசாலமானது..அவன் கொடுத்தே பழகியவன்... அப்படிப்பட்ட பெருமனதுக்காரனின் மொழி... நீண்ட நெடிய.. வாசல்களைத் திறந்து விட்டுக் கொண்டேயிருக்கும் அற்புத ஜாலங்கள் நிறைந்த வெளி.. அங்கே சிறகடிப்போம்.. ஒருபோதும் எச்சமிடாமல் இருப்போம்.. மொழி.. தாயின் கருவறை.. கழிவறையாக்க்கி விடக் கூடாது..

பேசுவோம்.. பேச பேச அது பிழைத்துக் கிடக்கும்......

இணையத்தை தமிழோடு இணைப்போம்...மென்பொருள்கள் தமிழில் நிறையட்டும்... நம் சங்க இலக்கியங்களை...இணையத்தில் பதிவேற்றுவோம்... இருக்கும் தொழில்நுட்பங்களையெல்லாம் தமிழ் கொண்டே முறைப்படுத்துவோம்.....தகுதி உள்ளவைதான் தப்பி பிழைக்கும்.... தமிழுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது என்று இன்றைய கண்ணாடி மாட்டி கூறுவோம்....ஆளுக்கொரு எழுத்தை தாங்கிப் பிடிப்போம்... அது தன்னை நீட்டித்துக் கொள்ளும்...தமிழ் இலக்கியம் படிப்போம்... அதன் சூட்சுமத்தை உள் வாங்குவோம்.. தமிழின் ஆதியை உணர்வோம்...... இரண்டாவதாக வருபவனை இந்த உலகம் ஒருபோதும் நினைவு வைத்துக் கொள்ளாது என்று எங்கோ படித்த ஞாபகம்..... தமிழ் முதலாவாதாகவே இருக்கட்டும்.. அதில்தான் தமிழனின் பெருமை இருக்கிறது.... நாங்கள் தமிழ் வழியாக படித்தவர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுவோம்..என் பிள்ளையை தமிழ் வழி பள்ளியில்தான் படிக்க வைக்க போகிறேன் என்று உறுதி எடுப்போம்..தரமான பள்ளிகள் வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவோம்....தாய்மொழி சார்ந்த சிந்தனையே நல்ல உருவாக்கம் பெரும்... என்பதில் ஐயமில்லை....என்று உரக்க சொல்வோம்...

மொழி நம் பாரம்பரிய கலைகளூடாக வாழ்கிறது... ஆனால் நாம் நம் பாரம்பரிய கலைகளை இன்று எந்த அளவுக்கு வைத்திருக்கிறோம் என்பது நாம் அனைவரும் ஒரு மாதிரி அறிந்ததே.... திராவிடக் கட்சிகளின் முற்போக்கு சிந்தனையில் மொழி வளர்ந்ததோ இல்லையோ.. கலைகள் நிறைய பின்னுக்கு தள்ளப் பட்டு விட்டன..... என்பது மறுக்க முடியாத உண்மை... பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால்.......இதோ இந்த கட்டுரை எழுதுவதற்கான திராணி எனக்கு இல்லாமலே போய் இருக்கும்...படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு இல்லாமல் போயிருக்கும்.... இது எனக்கு தெரிந்து 80% பேருக்கு பொருந்தும்...ஆட்சியைப் பிடிக்க பயன்படுத்திக் கொண்ட மொழியில் இன்று வெற்று அரசியல் மட்டும்தான் நடக்கிறது....தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் கலைகளை நம் அரசோ... நாமோ.. கண்டு கொள்ளாமல் அதனுள் இருக்கும் மொழியை எப்படி வளர்க்க முடியும்..... தமிழுக்குள் இருக்கும் ஆட்டங்களை.. தத்ரூபங்களை.. மருத்துவத்தை என்றோ காவு கடுத்து விட்டோம்... சித்தர்கள் கொடுத்த தவங்களை கை விட்டு விட்டோம்..... இன்னமும்.. கோவில் கோவிலாக சுற்றி காரணமே தெரியாமல் மொட்டை போடும் நிலைக்குள்தான் தமிழன் இருக்கிறான்.. கோவில்களின் நிஜத் தத்துவம் புரியாமல்... அதனுள் இருக்கும் அறிவியல் தெரியாமல், காசு கொடுத்து முண்டியடித்து தரிசனத்துக்கு நாம் அலைந்து கொண்டிருக்கையில்தான் இங்கே வரும் வெளிநாட்டு சுற்றுலாக்காரன் அறிவியல் பூர்வமாக, சாஸ்திரங்களையும்.. கணிதங்களையும்...அள்ளிக் கொண்டு போய் அவன் நாட்டில்... பட்டம் வாங்கி கொண்டிருக்கிறான்..... தமிழனின் மனம் விசாலப் படாமல்.... தமிழை எப்படி விசாலப் படுத்த முடியும்.... நம் கோவில்களையும்... பழைய புராதானக் கட்டடங்களையும் கட்டிக் காப்பாற்றாமல் அதனும் இருக்கும் மொழியின் சூட்சுமத்தை எங்கனம் காப்பாற்ற முடியும் ...?

காலத்தின் பிடியில் மறதிக்கு வலிமையான இடம் உண்டு... அது.. மெல்ல மெல்ல மடை மாற்றி விடும் வெளிகளை எங்கும் பரப்பி வைத்திருக்கின்றது.....நமக்கே தெரியாமல்...சூழ்நிலைகள் தள்ளி விட்ட புள்ளிக்குள்.....நாம் மறந்து போனவைகளை நாமே இப்படி...ஏதாவது ஒரு தருணத்தில் சுய அலசல் செய்து கொண்டு சரியான வழியில்தான் செல்கிறோமா என்று தெரிந்து கொண்டு, இல்லை என்றால் சரி செய்து கொண்டு வாழ்வை நகர்த்துவதுதான் புத்திசாலித்தனம்.. உலகத்துக்கே குறள் சொன்ன குரல் நமது மொழி என்பதில்..பெருமையைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்... அதை தற்காத்துக் கொள்ள.....தமிழ் வழி சமூகமாக மாறுவதுதான் சாலச் சிறந்த வழி... நமது பாடத் திட்டத்தில்... நமது கலாச்சாரங்கள் பற்றியோ....சித்த மருத்துவங்கள் பற்றியோ.....நமது நாகரிங்கள் பற்றியோ....சித்தர்கள் பற்றியோ...வான சாஸ்திரங்கள் பற்றியோ... யோக கலைகளைப் பற்றியோ...பண்பாடு பற்றியோ..... எதுவும் இல்லாமல், அல்லது விரிவாக இல்லாமல் அல்லது புரிந்து கொள்ள ஏதுவாக, இலகுவாக இல்லாமல்...நாளைய சமூகம்... தமிழை எப்படி புரிந்து கொள்ளும் அல்லது எப்படி காப்பாற்றும்..என்ற கேள்வியோடு.... உங்களை பார்க்கிறேன்.. அசோகர் மரம் நட்டது முக்கியம் என்றால்.... நம்மாழ்வர் மரம் நடுங்கள் என்றதும் முக்கியம்..என்ற சிந்தனையோடு, தமிழைப் படிப்போம்..தமிழில் படிப்போம்....... தமிழைப் பேசுவோம்...தமிழில் பேசுவோம்....தமிழ் தானாக வளரும்........

- கவிஜி

Pin It