‘த்தூ’ என்பது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் சில ஊடகங்களுக்கு அப்படித்தான் தெரிகின்றது. சாதாரணமாக தங்கள் தரப்பு நியாயத்தை மறுதலிக்கும் யாரையும் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைதான் ‘த்தூ’ என்பது. கருணாநிதியையும், விஜயகாந்த்தையும் பார்த்து எக்குத்தப்பாக கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்கள் யாரும் தவறியும் ஜெயலலிதாவிடம் போய் அப்படி கேள்வி கேட்பதில்லை. அப்படி அவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஊடக தர்மமே ஆகும். இந்த ஊடக தர்மம் என்பது அந்த ஊடகத்தை நடத்தும் முதலாளிகள் சம்மந்தப்பட்டது.

 Vijayakanthஊடகத்தை நடத்தும் முதலாளி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனாக இருந்தால் அவன் ‘தினமலரையும்’, ‘தினமணியையும்’ போல செய்திகளை வெளியிடுவான். அதுவே அவன் ஒரு கருப்பு பார்ப்பனனாக இருந்தால் ‘தினகரனைப்’ போல செய்திகளை வெளியிடுவான். ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா போடுபவன் என்றால் அவன் ‘தினத்தந்தி’ போல செய்திகளை வெளியிடுவான். கம்யூனிஸ்ட் போர்வையில் இருக்கும் பார்ப்பனனாக இருந்தால் ‘இந்து’ பத்திரிக்கை போல செய்திகளை வெளியிடுவான். காசு வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடும் paid news பத்திரிக்கையாக இருந்தால் ‘குமுதம்’, ‘நக்கீரன்’ ‘விகடன்’ போல செய்திகளை வெளியிடுவான். இங்கே ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கின்றது. அந்த அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்தே அவர்கள் வெளியிடும் செய்திகளின் தன்மை இருக்கும். இதுதான் ஒருவரைப் பார்த்து, சுட்டுவிரலை நீட்டி கேள்வி கேட்பதற்கும், மற்றொருவரைப் பார்த்து, கூழைக்கும்பிடு போட்டு கேள்வி கேட்பதற்கும் அடிப்படையாக அமைவது.

 விஜயகாந்த் என்ற ஒரு அரசியலற்ற, கொள்கைகள் அற்ற நபரை இன்னும் எவ்வளவுதான் நீங்கள் துன்புறுத்துவீர்கள்? போகும் இடத்தில் எல்லாம் அந்த மனிதரை வளைத்து வளைத்து கேள்வி கேட்டால் அவர் என்ன தான் செய்வார்? எந்த சரக்குக்கு எந்த சைடிஸ் மேச்சாக இருக்கும் என்று கேட்டால் மனிதர் தடுமாறாமல் பதில் சொல்வார். அதை விட்டுவிட்டு 2016-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவாரா, கருணாநிதி ஆட்சிக்கு வருவாரா என்று கேட்டால் அவர் என்னதான் செய்வார் பாவம்.

இன்று விஜயகாந்துக்கு எதிராக 'பொங்கும்' பத்திரிக்கையாளர்கள் பலருக்கு இதற்கான தகுதி இருக்கிறதா? விதிவிலக்காக இருக்கும் சில நேர்மையான பத்திரிகையாளர்களை நாம் மதிக்கும் அதே நேரத்தில், ஒட்டுண்ணி பத்திரிகையாளர்களை நாம் கேள்வி கேட்க வேண்டியதும் அவசியம். ஊடக முதலாளிகளுக்கு மட்டுமல்ல, ஊடகத்தில் பணியாற்றும் பலருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதே உண்மை.  அரசியல் கட்சிகளிடம் மாதம் ஒரு கவர் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவான செய்திகளை எப்படியாவது தங்களது ஊடகத்தில் திணிக்க முயலும் பத்திரிக்கையாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? காவல் துறை கொடுக்கும் செய்தி உண்மையா, பொய்யா என்று விசாரித்து அறியாமல், 'பைப் குண்டுகளுடன் முஸ்லிம் தீவிரவாதிகள் கைது' என்று செய்தி வெளியிடும், காவல் துறையின் ஏவல் அடிமைகளாக எத்தனை கிரைம் ரிப்போர்ட்டர்ஸ் இருக்கிறார்கள்? பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும், 'கவரு'க்காக காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் எத்தனை பேர்? 'கவர்' இல்லையா என்று PROவிடம் வெளிப்படையாக கேட்கும் மானங்கெட்ட பத்திரிகையாளர்கள் எத்தனை பேர்? ஊடக முதலாளிகளால் நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையை விட்டு துரத்தப்படும்போதெல்லாம், உடலின் சகல துவாரங்களையும் மூடிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் எத்தனை பேர்? பொதுப் பிரச்சினைக்காக மாற்று அரசியல் இயக்கத்தவர் நடத்தும் போராட்டங்களில் வந்து, 'சீக்கிரம் பைட் கொடுங்க, எங்களுக்கு வேற வேலை இருக்கு' என்று அராஜகம் செய்யும் பத்திரிகையாளர்கள் எத்தனை பேர்? இந்த போலிப் பத்திரிக்கையாளர்களை எல்லாம் பார்த்து இத்தனை நாள் 'த்தூ' என்று துப்பாமல் இருந்ததால்தான், இன்று விஜயகாந்த் துப்பும்போது 'குய்யோ முய்யோ' என்று கத்துகிறார்கள்.

 நாம் பல இடங்களில் ‘த்தூ’வை பயன்படுத்தாததன் விளைவே இன்று ‘த்தூ’ நமக்குப் புதிதாக தெரிகின்றது. ‘த்தூ’ என்பது துரோகிகளுக்கு நாம் எச்சிலால் கொடுக்கும் சவுக்கடி. சுயமரியாதை உள்ள மனிதனைப் பார்த்து நாம் ‘த்தூ’ சொல்லும்போது அவன் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தப்படுகின்றான். தான் செய்த துரோகத்தை எண்ணி எண்ணி வேதனைப்படுகின்றான். ஆனால் சுயமரியாதையற்ற இழிபிறவிகளைப் பார்த்து நம் சொல்லும் ‘த்தூ’ எந்த வகையிலும் அவர்களை பாதிப்பதில்லை. அவர்கள் எச்சிலை துடைத்துப்போட்டு விட்டு மீண்டும் அடுத்த துரோகத்திற்குத் தயாராகின்றனர். இப்படிப்பட்ட இழிபிறவிகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் வழிநெடுகிலும் சந்திக்கலாம்.

 விஜயகாந்த் சொன்ன ‘த்தூ’ என்பது நக்கிப் பிழைப்பதற்காகவே பத்திக்கையாளர்களாக பணியாற்றும், செய்திகளை விலைபேசும் ஊடக விலைமாந்தர்களுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இருப்பினும் இது போன்ற ‘த்தூ’ க்களை நம்மில் பலர் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. காரணம், நாகரிகம் என்ற போர்வையில் நமக்குள் ஒளிந்திருக்கும் கோழைத்தனம். எங்கே ‘த்தூ’ என்று சொல்லிவிட்டால் இந்தச் சமூகம் தன்னை மரியாதை தெரியாதவன், தன்னிலை மறந்தவன், அகம்பாவம் பிடித்தவன் என்றெல்லாம் சொல்லிவிடுமோ என்ற பயம். எனவே நாம் ‘த்தூ’ வை பயன்படுத்தத் தயங்குகின்றோம்.

 ஆனால் இனிமேல் நீங்கள் ‘த்தூ’ வை அடிக்கடி பயன்படுத்தும் சூழ்நிலை வரலாம். தேர்தல் நெருங்குவதால் ‘வாக்காளப் பெருமக்களே’ என்று சொல்லிக்கொண்டு சிலர் உங்களைக் காண வருவார்கள். அவர்களிடம் நீங்கள், போன தேர்தலுக்குக் கொடுத்த வாக்குறுதி எல்லாம் செஞ்சி கிழிச்சிட்டியாடா மானங்ககெட்ட பயலே, எந்த மூஞ்சி வைச்சிகிட்டு இப்ப ஓட்டுகேட்க வந்திருக்க ‘த்தூ’ என்று சொல்லலாம். இல்லை இன்னும் குறிப்பிட்டு சொல்ல விரும்பினால் அ.தி.மு.க.காரர்களைப் பார்த்து ‘ரெண்டும் ரெண்டும் எப்பிடி எட்டாகும், திருட்டுப்பசங்களா.. த்தூ’ என்று சொல்லலாம். தி.மு.க வைப் பார்த்து ,மதுவிலக்குக் கொண்டுவந்தாதான் உங்களோட சாராய ஆலைகளை எல்லாம் மூடுவீங்களா, கொலகாரப் பாவிங்களா… த்தூ’ என்று சொல்லலாம், விடுதலை சிறுத்தைகளைப் பார்த்து ‘முத்துராமலிங்கத்துக்கு மாலை போட்டுதான் தலித் விடுதலையை சாதிக்க வேண்டுமா.. த்தூ’ என்று கேட்கலாம், சிபி.ஐ மற்றும் சி.பி.எம்.மைப் பார்த்து ‘ஜல்லிக்கட்டை ஆதரிப்பதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதமா.. த்தூ’ என்று கேட்கலாம், வைகோவை பார்த்து, ‘கொள்கை கிலோ என்ன விலை. த்தூ’ என்று கேட்கலாம், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் தான்” என்று சொன்ன ஜெயலலிதாவிற்கு ஓட்டு கேட்கப்போன தமிழன துரோகிகளும் இருக்கின்றார்கள், அவர்களைப் பார்த்தால் நீங்கள் எதுவும் கேட்கவே வேண்டாம்; பார்த்த மாத்திரத்திலேயே காறி முகத்தில் ‘த்தூ’ என்று துப்பிவிடலாம். இப்படியாக நாம் வாயில் எச்சில் சுரக்கும் வரை ‘த்தூ’ வை சொல்லிக்கொண்டே போகலாம்.

 மேலும் இந்தத் ‘த்தூ’ அரசியல் கட்சிகளைப் பார்த்துமட்டும் தான் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் இந்தத் ‘த்தூ’ வை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களை நம்பவைத்து ஏமாற்றிய உங்களின் நண்பர்களுக்கு எதிராகவும், உங்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையிடும் முதலாளிக்கு எதிராகவும், கண்முன்னால் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமலும் போகும் அற்ப மனிதர்களுக்கு எதிராகவும், தன்னை நம்பி வந்தவர்களைப் பிரச்சினையில் சிக்கவைத்து விட்டு, தன்னுடைய பாதுகாப்பையும், தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய வேலையையும் மட்டும் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளியும் புரட்சியாளர்கள் என்ற போர்வைக்குள் வாழும் புல்லுருவிகளுக்கு எதிராகவும், தன்னுடைய சக தோழர்களிடம் எப்பொழுதும் தான்தான் பெரிய அறிவாளி, நீ எப்போதும் எனக்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என்று செறுக்குடன் இருக்கும் மண்டைவீங்கி அறிவாளிகளுக்கு எதிராகவும் நீங்கள் இந்தத் ‘த்தூ’ வை பயன்படுத்தலாம்.

 எனவே ‘த்தூ’ என்பது நீங்கள் சுயமரியாதை உள்ள மனிதனாக மாறுவதற்கான முதல்படி. சுயமரியாதை இருந்தால்தான் சமூக அவலங்களைப் பார்த்து உங்களுக்கு கோபம்வரும். அப்புறம்தான் நீங்கள் எதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சியின் சித்தாந்தங்களை கற்று, சமூகத்தை மாற்றியமைக்க முன்வருவீர்கள். ஆகவே ‘த்தூ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே!

- செ.கார்கி

Pin It