டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி,
மதிப்பிற்குரிய அய்யா அப்துல்கலாம் மறைவு,
மழை வெள்ளத்தில் மக்களைக் காக்க புறப்பட்ட தமிழக இளைஞர்கள்.
இந்த மூன்று நிகழ்வுகள் நடக்கும்போதும் மேம்போக்கான அரசியல் புரிதல் கொண்ட இளைஞர்களால் இணையதளங்களில் ஒரு விசயம் அதிகம் பேசப்பட்டது. "நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களை முதல்வர் ஆக்க வேண்டும்" என்பதுதான்.
"ரஜினியை முதல்வர் ஆக்கணும், அப்துல் கலாமை பிரதமர் ஆக்கணும், அப்பதான் நாடு உருப்படும்" என சில ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்னர் பேசிக் கொண்டதுண்டு. இப்போதும் அதே போலவே பேசுகிறார்கள். ஆனால் ஒரு சின்ன முன்னேற்றம். நடிகர் ரஜினிக்குப் பதிலாக சகாயம் என்னும் நேர்மையான அதிகாரியை முன்னிறுத்திப் பேசுகிறார்கள். ஆனாலும் தனிநபர் துதி பாடல் தவிர வேறு எந்த அரசியலும் இதில் இல்லை.
"யாராவது வந்து களத்தில் நின்று மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும்..நாம் வாக்களிப்போம். இணையதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து கொள்வோம். அதுவே போதுமானது" என்பதுதான் இவர்களின் மனநிலையாக உள்ளது. ஒரு சராசரி வலதுசாரி சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. இளைஞர்களை குறை சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கு அந்த அளவிற்குத்தான் அரசியல் சொல்லிக் கொடுத்துள்ளார்கள் நம்ம அரசியல்வாதிகள். ஓட்டு போட்டு இந்த சமூகத்தை தலைகீழாக திருப்பி விடலாம் என தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார்கள். "மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேருங்கள்" என்று அழைக்கும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாக அரசியல் சென்றுள்ளது.
தற்போதைய கட்டமைப்பின் கீழ் நடைபெறும் வாக்கு அரசியலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர்.நல்லக்கண்ணு போன்றவர்களை ஆதரிக்கும் மனப்பான்மை உண்டு. இங்கே வலதுசாரித்தனமாக அரசியல் பேசும் பல இளைஞர்களுக்கு தோழர். நல்லக்கண்ணு பற்றியோ, அவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் போராட்டங்கள் பற்றியோ தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. வலதுசாரி அரசியல் அப்படி ஒரு சொகுசு மனப்பான்மையை உருவாக்கி வைத்துள்ளது.. அதனால் இடதுசாரி அரசியல் பற்றி சிந்திக்க கூட மனம் மறுக்கிறது. ஒருவேளை அறிந்து கொண்டாலும் 'இதெல்லாம் சாத்தியமாகுமா?' என்கிற ஐயப்பாடு தொற்றிக் கொள்கிறது.
மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின் மூன்றாவது நிகழ்வைப் பற்றி சிறிது பேசுவோம். மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் கடலூர் பாதிக்கப்பட்டபோது மக்களுக்காக உதவ பெருமளவில் இளைஞர்களும், பொதுமக்களும் முன்வந்திருக்கிறார்கள். சாதி, மதம், மொழி, இனம், தேசம் என அனைத்தையும் தாண்டி மனிதநேயம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டத்தகுந்த செயல். ஆனால் இந்த இளைஞர்களுக்கும், மக்களுக்கும் முறையான அரசியலைக் கற்றுத்தராமல் வெறும் வாக்கு அரசியலையே மீண்டும் மீண்டும் சொல்லித் தரும் செயலும் இந்த இடத்தில் நிகழ்கிறது. மக்கள் சக்தியை வீணடிக்கும் செயல்தான் இது.
மழை வெள்ளம் தொடர்பாக நாம் எழுப்ப வேண்டிய பல கேள்விகளும், அவற்றிற்கான தீர்வுகளை ஆராய வேண்டிய தேவைகளும் உள்ளன.
* இவ்வளவு மழை மற்றும் வெள்ளம் இருக்கும் என அறிந்தும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசு நிர்வாகம். என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
* இத்தனை கால ஆட்சியில் எத்தனை ஆறு, குளங்களை தூர்வாரியிருக்கிரார்கள்? எத்தனை ஏரிகளின் கரைகளை வலுப்படுத்தியுள்ளார்கள்?
* பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரில் ஒரே மாநகரில் பெரும் எண்ணிக்கையில் மக்களை எந்த திட்டமிடலும் இல்லாமல் நிரப்புவது சரியல்ல என்பதை ஏன் அறியவில்லை?
* "பேரிடர் மீட்பு தோல்வி அடைந்து விட்டது , மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்" என அப்துல் கலாமின் ஆலோசகர் திரு.பொன்ராஜ் கூறியிருப்பது மிக முக்கியமான வாக்குமூலமாகும். ஏனெனில் கூடங்குளம் அணு உலை மிகப் பாதுகாப்பானது எனவும், பேரிடர் மீட்பில் நமது அரசுகள் திறமையானவர்கள் எனவும் மக்களுக்கு பாடம் எடுத்தவர்கள் இவர்கள்தான்.
* வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரை இலவசமாகத் தருவதாகக் கூறியுள்ளது பெப்சி நிறுவனம். நம் ரத்தத்தை உறிஞ்சிய நிறுவனம் இப்போது நம் மீது இரக்கப்படுகிறதாம்.. என்ன வேடிக்கை!!* அலட்சியப் போக்கால் மியாட் என்னும் தனியார் மருத்துவமனையில் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள். அது குறித்து அதிகம் விவாதிக்கப்படவில்லை.இவ்வாறு பல பிரச்சினைகள் நம் முன்னே உள்ளன. இவை எவற்றையும் ஆராயாமல் வெறுமென "வாருங்கள், ஓட்டுகளை சேகரித்து அரசியலைப் புரட்டிப் போடுவோம்' என இளைஞர்கள் நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அரசியல்.
மண்ணின் தன்மை, சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் இவற்றைப் பொறுத்துதான் அம்மண்ணில் என்ன பயிரிட முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும். அதுபோல சமூகத் தேவைகள், அதற்கு குறுக்கே நிற்கும் இடர்பாடுகள் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்துதான் அம்மண்ணிற்கு தேவைப்படும் அரசியலைத் தீர்மானிக்க முடியும்.
வெறும் ஓட்டு அரசியல் மட்டும்தான் இம்மண்ணின் தேவையாக உள்ளதா? சாதியவாதிகள், மதவாதிகள், முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியோரின் வசதிக்கேற்ப இங்கே ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளார்கள். மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களாட்சி அமைத்ததாகப் மார்தட்டுகிறார்கள். ஆனால் சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் அதே மக்கள் மீது சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இதற்கு மாற்றாக ஓர் அரசியலை முன்னெடுப்பது என்றால் அதற்காக மக்களை அரசியல்படுத்துவதுதான் முதற்பணியாக இருக்க வேண்டும். மாறாக மக்களின் வாக்குகளைப் பொறுக்கும் பணியல்ல. மக்களை அரசியல்படுத்த நாம் பயணிக்க வேண்டிய பாதை வலது அல்ல, இடது.
- குருநாதன் சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்