இவ்வளவு சுருக்‍கமான மனிதர்களை உலகில் வேறு எங்குமே பார்க்‍க முடியாது. அவர்களைப் பொருத்தவரை வார்த்தைகளை வீணடிப்பது என்பது சென்னை பெருநகரத்தில் குடிதண்ணீரால் வாய் கொப்பளிப்பதற்கு சமமாகும். 2 வார்த்தை அதிகமாக பேசிவிட்டால் இரண்டு பவுன் நகையை தொலைத்து விட்டதைப் போல் அதிர்ச்சியடைந்து பின் கவலையடைவார்கள்.

பேசவேண்டிய இடங்களில் பேசாமலும், பேசக்‍கூடாத இடத்தில் வாய்கிழியப் பேசுவதிலும் ராணுவ ஒழுங்கை கடைப்பிடிக்‍கும் நம்மவர்களில், பேச வேண்டிய நேரங்களில் பேசாமல் வார்த்தை சிக்‍கனத்தை மேற்கொள்ளும் பொழுதுதான் ஹிட்லரைத் தோற்கடித்து விடுகிறார்கள்.

என்ன உடம்பு சரியில்லையா?

உடம்புக்‍கு என்ன, காய்ச்சலா?

விட்டு விட்டு காய்ச்சல் வருதா?

டாக்‍டரைப் பார்த்தியா?

பிளட் டெஸ்ட் எடுத்தியா?

அப்பொழுதுதான் அந்த அணுஆயுதம் போன்ற தாக்‍குதல் ஒற்றை எழுத்தில் வெளிப்படும். அவர்கள் கூறுவார்கள்

"ம்"

"என்ன ம்...ம்மா..... ம்....ன்னா.... என்ன அர்த்தம்."

அதற்கும் அவர்கள் பதில் "ம்" தான்.

"என் பொறுமையை சோதிக்‍காமல் பதில் சொல்லு. நீ என்ன நேற்று இரவு மணிரத்னம் படம் பார்த்தியா.... அளந்துதான் பேசுவியா? ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா?” என்று பேசி முடிப்பதற்குள் பி.பி. 160ஐத் தாண்டிவிடும். கடைசியில் நலம் விசாரிக்‍கச் சென்று நலம் இழந்து போகக்‍கூடிய சூழல் உருவாகிவிடும்.

அவர்கள் கோபத்தில் இருப்பார்கள், சமாதானப்படுத்தலாம் என்று நினைத்தால், சமாதானப் புறாவை வறுத்துத் தின்பது போலவா நடந்து கொள்வது? தலையை பிய்த்துக்‍ கொள்ளக்‍ கூடிய அளவுக்‍கு அந்த ஒற்றை எழுத்துக்‍கு அவ்வளவு வலிமை உண்டா என்ன? அப்படி என்ன கேட்டுவிட்டேன். உடம்புக்‍கு என்ன என்று கேட்பது ஒரு தவறா?

கேள்வி : என்ன உடம்பு சரியில்லையா?             பதில் : ம்

கேள்வி : உடம்புக்‍கு என்ன காய்ச்சலா?   பதில் : ம்

கேள்வி : விட்டு விட்டு காய்ச்சல் வருதா? பதில் : ம்

கேள்வி : டாக்‍டரை பார்த்தியா?                   பதில் : ம்

கேள்வி : ப்ளட் டெஸ்ட் எடுத்தியா?           பதில் : ம்

கேள்விகளுக்‍கான பதிலைப் பார்க்‍கும் பொழுது அனைத்தும் சரியாகத்தான் பொருந்துகிறது. இருப்பினும் அந்த ஒற்றை "ம்" ல் எத்தனை வெறுப்பு அடங்கியிருக்‍கிறது. எத்தனை கோபம் அடங்கியிருக்‍கிறது. எத்தனை எள்ளல் அடங்கியிருக்‍கிறது. கடைசியில் சமாதானப்படுத்த வந்தவன் சமாதானமாக முடியாமல் தவித்துப் போக நேரிட்டு விடுகிறது.

நான் சமாதானம் தான் பேச முயற்சிக்‍கிறேன் எனத் தெரிவிக்‍க வெள்ளைக்‍ கொடி காட்டினால் முதலில் அதை கவனிக்‍க வேண்டுமே, வெள்ளைக்‍கொடியை ஆயுதமாக நினைத்து விட்டால் என்ன செய்வது.

எப்பொழுதாவது சில சமயங்களில் வேறு என்ன கேட்பது என்று தெரியாமல் கேட்பது தான். இல்லையென்றால் வேறு எப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பது.

"என்ன சாப்பிட்டியா?"

அதற்கு சாப்பிட்டேன் அல்லது சாப்பிடவில்லை என்று பதில் சொல்ல வேண்டியது தானே. இவ்வளவு கிரிமினல் தனமாகவாகவா பதில் சொல்வது.

"வேறு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தானே இந்தக் கேள்வியை கேட்கிறாய்..."

இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்து பதில் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்? இருந்தாலும் இரண்டு விதிகளை கடைபிடித்தே ஆக வேண்டும். ஒன்று.... தோற்றதாக காட்டிக்‍கொள்ளக்‍ கூடாது. இன்னொன்று எவ்வளவு திணறினாலும் இருமியோ, தும்மல் வருவது போன்ற பாவனை செய்தோ சமாளித்துக்‍ கொள்ள வேண்டும். எப்பொழுதும் மீசைக்‍கும் மண்ணுக்‍கும் 2 அடி இடைவெளியாவது இருந்துகொண்டே இருக்‍க வேண்டும்.

குரலில் உள்ள நடுக்‍கத்தை விரும்பி வருவித்துக்‍ கொண்ட இருமலோடு மேச் செய்துகொண்டு, சிறப்பாக சமாளித்தபடி, கெத்தை வரவழைத்துக்‍ கொண்டு கம்பீரமாக,

"கேட்ட கேள்விக்‍கு மட்டும் பதில் சொன்னா போதும்"

என்று கோபத்துடன் கேட்டால் அவர்களுக்‍கும் அந்த பழமொழி நன்றாகவே தெரிந்திருக்‍கிறது.

அதுதான் அந்த மீசை.... மண்....

அவர்கள் கூறுகிறார்கள்,

"கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலை"

இப்படித்தான் சமாதானக் கொடிகள் எல்லாம் புரிந்து கொள்ளப்படுகின்றன. சமாதானக்‍ கொடிக்‍கும் நாம் வெள்ளை நிறம் கொடுத்தால் அதற்கு அவர்கள் வேறு நிறம் கொடுத்து விடுகிறார்கள்.

இதனால் எல்லாம் கோபம் வந்தால் அது நியாயம் தானே, நியாயத்துக்‍கு தோள் கொடுத்து கோபத்துடன்....

"இனிமே சாப்பிட்டியா எனக் கேட்டால் என்னை செருப்பால அடி"

எனக்‍ கூறினால், அதற்கு இப்படியா செருப்பால் அடிப்பது போன்று பதில் கூறுவது?

"சரி"

ஒற்றை வார்த்தையில் கடுப்பேற்றுவது போன்று பேசுவது அவர்களுக்‍கு கைவந்த கலை என்றால், ஒற்றை வார்த்தையில் பதில் கூற முடியாதபடி கேள்வி கேட்பது நமக்‍கு கைவந்த கலையாயிற்றே.

சாப்பிட்டியா? என்று கேட்டால்தானே ஒற்றை வரியில் பதில் வரும், எடுத்தவுடன் என்ன சாப்பிட்டாய்? என்று கேட்டுவிட்டால் விரிவாக பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

உடம்பு சரியில்லையா? என்று கேட்டால்தானே ஒரு வரியில் பதில் வரும், என்ன உடம்புக்‍கு? என்று எடுத்தவுடன் கேள்வியைப் போட்டால் விரிவாக சொல்லித்தானே ஆக வேண்டும்!

டாக்‍டரை பார்த்தாயா? என்று கேட்டால்தானே மணிரத்னம் படத்தில் வருவது போன்று ஹஸ்கி வாய்சில் பேசுகிறாய். டாக்‍டர் என்ன சொன்னார்? என்று கேட்டால்....

ஹாஹா....ஹாஹா....

கேள்வி : என்ன சாப்பிட்டாய்             பதில் : சோறு

கேள்வி : என்ன உடம்புக்‍கு                 பதில் : ஒண்ணுமில்லை

கேள்வி : டாக்‍டர் என்ன சொன்னார் பதில் : நத்திங்

நான் நீதி சொல்லித்தான் தீருவேன்...

நீதி : இயற்கை விதிகளுக்‍கு நாம் மதிப்பளித்துத்தான் ஆக வேண்டும்

நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யக்‍ கூடாது

ஏன் தெரியுமா?

ரொம்ப சிம்பிள்

அது நிமிராது... அதனால் நாம் அதை நிமிர்த்த முயற்சிக்‍கக்‍ கூடாது.

வாழ்க்‍கை வெளிப்படையாகத்தான் இருக்‍கிறது. நாம் தான் அதைப் போட்டு குழப்பிக்‍ கொள்கிறோமா?

- சூர்யா

Pin It