இந்தியாவில் புகழ்பெற்ற வழக்கறிஞர் என்று அனைவராலும் ராம்ஜெத்மலானி அவர்கள் அழைக்கப்படுகின்றார். பலரும் அப்படித்தான் ரொம்ப நாளாக அவரை நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதுவும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தபோது அவர்மீதான மரியாதை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பல மடங்கு கூடியது. அப்படிப்பட்ட ராம்ஜெத்மலானி ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்பதும், பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வழக்குகளிலும் ஆஜராகி குற்றவாளிகளைக் காப்பாற்றும் ஒரு நான்காம் தர பணவெறியன் என்பதும் நம்மில் பலர் அறியாதது.

 வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலை மட்டுமே செய்யும்போதே அவர்களில் பலர் வசூல்ராஜாக்களாக இருப்பதையும், பிழைப்புவாதிகளாக இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அதே வழக்கறிஞர்கள் அரசியல்வாதிகளாகவும் இருக்கும்போது சொல்லவே வேண்டாம். அவர்கள் அனைத்துக் கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டி போல ஆகிவிடுவார்கள். ராம்ஜெத்மலானி அப்படி ஒரு சிறந்த குப்பைத்தொட்டி போன்றவர்.

பாஜக சார்பாக பலமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். நிதின் கட்கரியைப் பற்றி விமர்சனம் செய்ததால் 2013 ஆண்டு அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டு காலத்துக்கு நீக்கப்பட்டார். மோடியின் தீவிர பக்தர். தன்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டாலும் மோடி பிரதமராக வேண்டும் என்று அவருக்காக தேர்தலில் ஓட்டு கேட்டவர். மோடி குஜராத்தில் சிறப்பான ஆட்சி செய்வதாகவும் அதேபோல பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா முழுவதும் தன்னுடைய சிறப்பான ஆட்சியை விரிவுபடுத்துவார் என்றும் மக்களை நம்ப வைத்தவர். அப்படிப்பட்ட ராம்ஜெத்மலானி, இன்று மோடியை நம்பிக்கைத் துரோகி என்று சொல்லும் நிலைக்குச் சென்றுள்ளார்.

 ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று டெல்லி ஜந்தர்மந்தரில் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு சென்று பேசும்போது இதைக் குறிப்பிட்டுள்ளார். “நரேந்திர மோடியை ஒரு தேவதூதராகத்தான் நான் நினைத்தேன், அதனால் தான் ஆதரித்தேன், ஆனால் ஏமாந்து போய்விட்டேன். அவர் மக்களின் நம்பிக்கையை மோசடி செய்துவிட்டார். அவருக்கான தண்டனையைப் பீகார் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பதன் மூலம் வழங்க வேண்டும். பா.ஜ.கவின் தோல்வி என்பது பீகாரில் இருந்து தொடங்க வேண்டும். அதனால் ஜக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் பேசியிருக்கின்றார்.

 மேலும் தன்னைப்பற்றி சொல்லும்போது “நான் அவர்களைப் போல மக்களையும், நண்பர்களையும் மறந்து பதவியில் திளைக்கும் அரசியல்வாதி இல்லை” என்று சொல்லியிருக்கின்றார். எவ்வளவு அப்பட்டமான பொய்!

 உலகமே மோடியைக் கொலைகாரன் என்று சொன்னபோது ராம்ஜெத்மலானிக்கு மட்டும் அவர் நல்லராகத் தெரிந்தார். வெட்கமே இல்லாமல் மோடிக்காக ஓட்டு கேட்டார். அதற்கான காரணம் என்பது மிக எளிது. மோடியைப் போலவே ராம்ஜெத்மலானியும் ஒரு பாசிஸ்ட். பணம் கொடுத்தால் எவ்வளவு கீழ்த்தரமான வழக்குகளிலும் குற்றவாளியைத் தப்புவிக்கும் திறன் படைத்தவர். அவர் இதுவரை ஆஜரான வழக்குகளைப் பார்த்தாலே ராம்ஜெத்மலானி எப்படிப்பட்ட மட்டமான வழக்கறிஞர் என்று தெரிந்துகொள்வீர்கள்.

 பங்குசந்தை ஊழல் வழக்கில் ஹர்ஷத் மேத்தாவுக்கும், ஹவாலா மோசடி வழக்கில் அத்வானிக்கும். சோராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் அமிர்ஷாவுக்கும், 2ஜி ஸ்பெக்ரம் வழக்கில் கனிமொழிக்கும், சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் எடியூரப்பாவுக்கும், 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆஸ்ரம் பாபுவுக்கும், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லல்லுபிரசாத் யாதவுக்கும், சஹாரா நிறுவனம் மீது செபி தொடர்ந்த மோசடிவழக்கில் சுப்ரதாராய்க்கும், பொறுக்கி பிரேமானந்தாவுக்கும், சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக வழக்காடிய பெருமகனார் இந்த ராம்ஜெத்மலானி அவர்கள். ஒரு நேர்மையான வழக்கறிஞர் எந்த எந்த வழக்குகளில் ஆஜராகக் கூடாதோ அந்த அத்தனை வழக்குகளிலும் ஆஜராகி, வழக்கறிஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாகத் திகழ்கின்றார் ராம்ஜெத்மலானி அவர்கள்.

 இவர் மோடியை நல்லவன் என்று சொல்லி ஓட்டு போடச் சொன்னால் ஓட்டு போடுவதற்கும், நல்லவன் இல்லை என்று சொல்லி ஓட்டு போடவேண்டாம் என்றால் ஓட்டு போடாமல் இருப்பதற்கும் மக்களை எல்லாம் இவர் முட்டாளாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார். காசுக்காக விலைபோகும் ஒரு விபச்சாரியிடம் இருக்கும் நேர்மையைக்கூட தன் வாழ்நாளில் எப்போதும் கடைபிடிக்காத ஒரு மனிதர் ராம்ஜெத்மலானி. நம்ம ஊர் ராமதாசை விட ஒரு மட்டமான அரசியல்வாதி. அடிப்படையில் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு இந்து மதவெறியர்.

 அமிர்த்ஷாவையும், ஆஸ்ரம் பாபுவையும், பிரேமானந்தாவையும் காப்பாற்ற நினைத்தார் என்றால் அவரின் தொழில் நேர்மையை நாம் புரிந்துகொள்ளலாம். சில வழக்குகளில் ஆஜராகி சில நல்லவர்களை அவர் காப்பாற்றி இருக்கலாம். அதை வைத்து ராம்ஜெத்மலானியை ஒரு நேர்மையான வழக்கறிஞர் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ராமதாசு ஒரு அப்பட்டமான சாதி வெறியராக இருந்தாலும் கூடங்குளம், காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான போராட்டம் போன்றவற்றிக்கு ஆதரவு தரவில்லையா? அது போன்றதுதான் இதுவும். இது எல்லாம் தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் போடும் நாடகம்.

 இன்று மோடிக்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று சொல்லும் ராம்ஜெத்மலானி அவர்கள், நாளை ஓட்டுப் போடு என்று சொல்லமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர் அடுத்தத் தேர்தல் வரையும் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக ஓட்டுப் போடு என்றுதான் சொல்லுவார். ஏனென்றால் அவர் மூளைக்குள் உட்கார்ந்திருக்கும் பிழைப்புவாதி அவரை அப்படித்தான் சிந்திக்கத் தூண்டுவான். ஆனால் நாம் தான் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற பிழைப்புவாதிகளைத்தானே லட்சிய மனிதர்களாக இந்திய மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

- செ.கார்கி

Pin It