dalit family strips

குரங்கு குட்டிக் கரணம் போட்டாலும் வேடிக்கை... மனிதனைக் குத்திப் போட்டாலும் வேடிக்கை... ஆட்டுக்குட்டியை அறுத்து தொங்க விட்டாலும் வேடிக்கை.. பைத்தியகாரி அம்மணமாகப் போனாலும் வேடிக்கை.. எனக்குப் புரியவில்லை....... என்ன மாதிரி வடிவமைப்பில் மனிதன் தன் நாகரிகத்தை அமைத்துக் கொண்டான் என்று.... என் வீட்டு அம்மணம் கற்பு... மற்றவன் வீட்டு அம்மணம் வேடிக்கையா...? வீடும் நாடும் ஒன்று தானே... எல்லாரும் மனிதர்கள் என்றால் ஒரு கூட்டம் ஆளுவதேன்....? ஒரு கூட்டம் வீழுவதேன்...? கேட்க கேட்க கேள்விதான் வருகிறதே அன்றி சரியான பதில்களைச் சொல்ல ஒரு தலைவன் கூட இங்கில்லை.... ஒன்று, பேசவே முடியாத பிரதமர் வருகிறார்...... அல்லது நாடு நாடாய் சுற்றிப் பார்க்கும் பிரதமர் வருகிறார். பலபோது அதிகார வர்க்கமும் காவல் துறையும் தவறுக்குப் பின்தான் நிற்கின்றன.... மீண்டும் ஓர் அந்நிய ஆட்சி போல...... பணம் படைத்தவன் சொல்ல வேண்டும்... பணம் இல்லாதவன் அடி பணிய வேண்டும்.. நியாயமே இல்லாத மானுட சமுதாயம்.. விதைப்பது விஷத்தைதான் என்பதற்கு இந்த நிர்வாணங்களே சாட்சி.. ஒரு சோறு போல அவர்களே கலைந்தாலும்.... அதற்கான மூலம் எது... அதே ஆதிக்கம் தானே....?

பண்பாட்டில்.. கலாச்சாரத்தில்.. இந்தியாவை முன் நிறுத்தும் அதே நேரத்தில்தான்... சாதியாலும்.. மதத்தாலும்... தன் முனைப்பாலும்.. அதிகாரத் திமிராலும்......பழி வாங்க... காதல் வாங்க, காசு வாங்க, இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ காரணங்களால், யோனிக்குள் கம்பி நுழைக்கும் வக்கிரத்தனமான பைத்தியகாரத்தனமும்.....பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் வக்கிரங்களும்... நிர்வாணம் என்பதை ஒரு குறியீடாக மாற்றும் மாற்று சிந்தனையை விதைத்த விஷமத் தன்மையின் ஆதிக்க மற்றும் அதிகார அத்துமீறலும் நடக்கிறது.... எல்லாமே வேடிக்கை என்றால்.. நாளை உன் வீடு பற்றி எரியும்போது பிடில் வாசிக்க தானே செய்யும் அதே வேடிக்கை.... தற்கொலை செய்பவனை பார்த்துக் கொண்டு இருப்பது போலத்தான்... ஒரு குடும்பத்தின் ஆடை களைதல் விபத்தை வேடிக்கை பார்க்கும் செயலும்....

ஒரு நிர்வாணத்தை வலுக்கட்டாயமாக உரித்துக் காட்ட வைத்த வினைகளை கண்டிப்பாக மன்னிக்க முடியாது...அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை கண்டிப்பாக மன்னிக்கவே முடியாது... கூடாது.....அதே நேரம் நிர்வாணத்தை ஆயுதமாக பயன்படுத்துவதையும் கண்டிக்கவே தோன்றுகிறது.... "சரி நாங்கள் வேறு எப்படி தான் எங்கள் எதிர்ப்பைக் காட்ட...?"- என்ற கேள்விகளில்... நம் அறிவு ரீதியான, தர்க்க ரீதியான பார்வைகளும், எண்ணங்களும் அடிபட்டுப் போகின்றன... மனதின் விசித்திரப் போக்கின் கட்டமைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது, இதை. இந்தக் குடும்பத்தின் பொது நிர்வாணம் அவர்களின் இயலாமையின் வெளிப்பாடா... அல்லது சுற்றி நிற்கும் ஊரின், "நமக்கென்ன" என்ற மிதப்பின் கூறுகளா..... அல்லது முகத்தைக் கூட மறைக்காமல் ஒரு குடும்பத்தின் நிர்வாணத்தை இன்றைய தொழில் நுட்பத்தின் விளைவாக பகிரும் இணையப் பொது புத்தியின் வரையறையா....?...அல்லது "நாங்கள் அப்படித்தான்... செய்வோம்.. எங்கள ஒரு மசுரும் புடுங்க முடியாது" என்ற அதிகார ஆணவ ஆதிக்கமா...?

வினைகள் வினைகளாகவே இருப்பதில்லை.... அது எதிர் வினை ஆகும் காலம், வினைகள் இல்லாமலே போய் விடும் திரும்புதலும் உண்டு.. இளைத்தவன் மிரளும் போது வலுத்த கொளுத்தவனின் காடு கொள்ளாது... "என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்று மாவோ சொன்னதை இதற்கும் பொருத்திக் கொள்ளலாம்..... நிர்வாணம் என்ற ஓர் ஆயுதத்தை எடுக்க வைத்தது யார்.... என்ற மிகப் பெரிய கேள்விக்கு நாம் பதில் தேட வேண்டியிருக்கிறது... ஒரு குடும்பம் நிர்வாணத்தை தங்களின் எதிர்ப்பாகக் காட்டியது தவறு என்றால் அதற்கு திரி வைத்த காவல் துறையும் தவறுதான் செய்திருக்கிறது... அந்த நிலைமைக்கு தள்ளிய வலியின் வலிமையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது...

கலவியின் வலை கொண்டே மனிதன் பிறக்கிறான்.. வளர்கிறான்.. மரிக்கிறான்.. அது நிஜத்தின் ஜன்னலென ஒரு நிர்வாணத்தை சுமந்து கொண்டேதான் திரிகிறது.... அந்த வலை பற்றிய புரிதலும் இல்லாமல்...அறிதலும் இல்லாமல்...திரும்ப முடியாமல் தத்தளிக்கும் கரப்பான் பூச்சிகளைப் போல, இன்றைய பெரும்பாலைய மனிதர்கள் செயல்படுகிறார்கள்....அது, எல்லாவற்றையும் மூடி மூடி வைத்து அதன் மீது கொண்ட மோகத்தை அதிகமாக மிக அதிகமாக, வெடிக்கும் அளவுக்கு பதுக்கி வைக்க பழக்கி விட்டதால்.... பிணத்தின் துணி விலகினாலும் கூட ஒரு கணம் ஆசை தீரப் பார்த்து விட்டு பின்பு தான் பரிதாபம் கொள்ள செய்கிறது, நாகரிக மானுடம்... அல்லது... டிஜிட்டல் நவீனம்..... அதே சமயம்... அச்சுறுத்தலுக்கும், அடி பணிய செய்யவும்... அதே நிர்வாணங்கள்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன....நிர்வாணம் முதன்மைப் படுத்தும் வளராத ஒரு சமூகமாகவேதான் நாம் இன்னமும் இருக்கிறோம்... நாகரீகம் என்பது மறைக்கும் துணியில்தான் இருக்கிறது என்ற போலித் தத்துவங்களே... நம்மை ஆட்சியும் செய்கின்றன...

பொதுவான இத்தகைய மனநிலைக்கு, புரிந்து கொள்ளாத, புரிய வைக்கத் தவறிய நாம் சொல்லும் அதே கலாச்சாரத்தின், பண்பாட்டின் பக்க விளைவுகள்தான் காரணம் என்றால் கொஞ்சம் நிர்வாணக் கண்களைக் களைந்து விட்டு ஆடை பூண்டு நிதானமாக யோசிக்கவும் வேண்டும்... நிர்வாணமாய் நிற்பதைக் கூட எதிர்ப்பின் வெளிப்பாடாய் ஒரு குடும்பம் செய்கிறதென்றால்... அங்கு நிர்வாணம் சுமப்பது ஒரு குடும்பம் அல்ல.. ஒட்டு மொத்த இந்தியாவும்தான்...... கூட்டு வன் கலவியின் கொக்கரிப்பு போலவேதான் வெறுமனே நீலப்படத்தின் விசித்திர காட்சி போல பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஊரின் அமைதியைக் காண வேண்டியிருக்கிறது...... சிறுவர்கள், முன்னால் நின்று பார்க்கிறார்கள்... பெரியவர்கள் துகில் உரிப்பதை கண்டும் காணாமலும்.. வேடிக்கை என ஒதுங்குகிறார்கள்... காவல் துறை அவர்களின் அந்த செயலை தடுத்த நிறுத்த அந்த நேரத்தில் எந்த செயல்பாட்டையும் எடுத்ததாக தெரியவில்லை..

ஒரு குடும்பம் தங்களை நிர்வாணப் படுத்திக் கொண்டுதான் தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டிய சூழலில் தான் இந்தியா இருக்கிறதென்றால்... அது வெட்க கேடான ஒன்று தானே....இத்தனையும் கண்டும் காணாமல் இருக்கும் சக மனிதனின் மனசாட்சி எங்கே..? சச்சின் நூறு அடிக்க வேண்டும் என்று பிராத்திக்கும் இந்தியக் கைகள் எங்கே...?... இதற்கா ஓட்டு போடுகிறோம். இதுவா ஜனநாயக நாடு..? காந்தியின் அகிம்சை இதையா போதித்தது..? சுபாசின் வீரம் இதையா வாதித்தது...? அம்பேத்காரின் சட்ட திட்டம் இதையா போதித்தது....? போதி கண்ட புத்தனின் நாடு...இப்படி அம்மணமாய் வீதி நிறைக்கிறதே... ஆசிய ஜோதி.. அணைந்து விட்டதா என்ன...? ஆத்மா பரிசோதனை மரித்து விட்டதா என்ன...?

ஒரு மனம் கூடவா அங்கு இல்லை...அட, தைரியமாய் இருப்பது போல நடிக்கக் கூடவா இந்தியனுக்குத் திராணி இல்லை... புரிந்து விட்டது... நன்றாகப் புரிந்து விட்டது.. நாளையே சீனாக்காரன் உள்ளே புகுந்து அடித்தால்... வேடிக்கை பார்த்தே செத்து போகும் கூட்டம் தான் நாம்...

விபத்துகளும்... வலிகளும் .... அடியும், உதையும்..அவமானமும்.. ஆக்கிரமிப்பும்... யாருக்கோ எங்கோ நடப்பது என்று தானே நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.. விதி வலியது.. வாழ்வின் போக்கு விசித்திரமானது.. அது எப்போது வேண்டுமானாலும்.. எப்படி வேண்டுமானாலும் நம் பக்கம் திரும்பும்.. அப்போதும் இதே மக்கள் கண்டும் காணாமலும் கடந்து போவார்கள்... விதை தானே விளையும்.... தோழர்களே...குறைந்த பட்சம் பக்கத்துக்கு வீட்டுக்காவது உதவுவோம்...அது தொடர்ந்து...தொடர்ந்து.... எங்கோ ஒரு வீட்டுக்கு உதவும்.. இந்திய பாதுகாப்பு அம்சம் குறித்து எப்போதுமே ஒரு கேள்வி தொக்கிதான் நிற்கிறது... ஒவ்வொரு முறையும் பலி கொடுத்தே கற்றுக் கொள்ளும் நாடுதான் நம் நாடு.... நீர் வரும் முன்னே அணை கட்ட எப்போதுதான் பழகுவது....... இதோ இப்போது கூட இலங்கையில் இந்தியாவைப் பார்த்து நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் சீனாக்காரனின் ராக்கெட்...சொல்லும் கதைகள் பல... இது உதாரணம்தான்.... வீட்டில் இருக்கும் பெண்ணில் இருந்து.. பள்ளிக்கு செல்லும் குழந்தை வரை.. சுற்றுலா செல்லும் சிறுவர்களில் இருந்து ..... திருவிழாவுக்கு போகும் சிறுமிகள் வரை.. இங்கு யாருக்குமே பாதுகாப்பில்லை....இருந்திருந்தால்... இப்படி ஒரு பெண்ணும் ஆணும் அம்மணமாக பொதுவில் நின்று மன்றாடுவார்களா....ஏதும் அறியாத அவர்களின் குழந்தை துணி இல்லாத தன் தாயின் மார்போடு சரிந்து விழித்துக் கொண்டு தடுமாறுமா....? மனசாட்சிக்கு அர்த்தமே தெரியாமல் ஓர் ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்குமா....!....

இது வன்கொடுமையின் மிகப் பெரிய ஆழம்.... இதை வேரோடு சாய்த்து பிடிங்கி ஏறிய வேண்டிய மானுட குலம் இன்னும் சாதிக்குள் தலையை முக்கிக் கொண்டு கிணற்று தவளையைப் போல செத்துக் கிடப்பது அநியாயம்... அது மீண்டும் உயிர்த்தெழ வேண்டுமானால் "சாதிகள் இல்லையடி... மனுஷா" என்று புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்... சாதி அடிப்படியில் ஒரு வெங்காய சலுகையும் கொடுக்க வேண்டாம்... எத்தனையோ திட்டங்களை இப்போது இருக்கும் மூளையை வைத்துக் கொண்டு போடலாம்.. மாற்று.. மாற்றி யோசி.. மனிதனை மனிதன் அடிமைப் படுத்தும்.. ஒடுக்கும், மனதின் துணியை உருவி அம்மணமாக்கும் இந்த சாதி வேண்டாம்.. அதன் மூலம் வரும் எந்த பங்கீடும்.. ஒடுக்கப்பட்ட எந்த மனதையும் விரிவு படுத்தி விட முடியாது... அது மீண்டும் மீண்டும் அடிமை விதியையே விதைக்கிறது, இரண்டு பக்கமும். பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதாக சொல்லி விட்டு பொதுவில் ஆடை உருவச் செய்து .. அம்மணமாகி அசிங்கப் படுத்தும்.. பெரும்பான்மை மனப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்........

வேற்றுமையில் ஒற்றுமை... எங்கள் இந்தியா.... மனதைத் தொட்டு சொல்லுங்கள் ... அப்படியா இருக்கிறது உங்கள் இந்தியா.......? இங்கு பாதுகாப்பை வெறும் துப்பாக்கிகளும்....தோட்டாக்களும் மட்டும்தான் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.... இல்லை தோழர்களே.... பாதுகாப்பு என்பது மனதாலும்.... பண்பாட்டினாலும்.....கலாச்சாரத்தினாலும், நாகரிகத்தினாலும்.....சக மனிதனின் அன்பாலும்தான் கட்டமைக்கப் படுகிறது...... கண்ணுக்கு தெரியாத சாதியும் சமயமும்...கண்ணுக்கு தெரியும் மனிதத்தை சாவடிப்பதை, நிர்வாணமாக்குவதை ஒரு போதும் இனியும் அனுமதியோம்...

இது ஏதோ ஒரு சாதி (என்று சொல்லப் படும்) குடும்பத்துக்கு நடந்த கொடூரம் அல்ல.. ஒட்டு மொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் நடக்க வாய்ப்பு இருக்கலாம் என்று எடுத்துக் காட்டிய உதாரண மிரட்டலாகவே படுகிறது........ நிர்வாணத்தைக் கண்டு அஞ்சுவதை விட தங்களின் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பை கண்டு புலம்பும்.. போராடும்,.. கத்தலும்.... கதறலும்தான் அந்த பெண்ணின் உணர்வுக்குள் இருந்த வெளிப்பாடாய் அந்த காணொளி காட்சி காட்டுகிறது....தங்களின் நிர்வாணத்தைக் கூட.. கடக்க வைத்து விட்ட ஆதிக்கத்தின் அச்சுறுத்தல்.... மிகப் பெரிய வன்முறை ...மனித இனத்தின் மீது ஒரு மாபெரும் வெறுப்பை வர வைத்து விட்ட இந்த கொடிய நிகழ்வுக்கு இந்த அரசும்.. .. இந்த மனிதர்களும், என்ன பதில் கூற போகிறார்கள்... எல்லாம் சரியாகி நாளை அந்த பெண் ஒரு சாதாரண வாழ்வை நடத்தி விட முடியுமா...? எத்தனை பெரிய மன உளைச்சல், அந்த குடும்பத்தை சுற்றி நிற்கும்.. கணவனும் மனைவியும்.. குழந்தையோடு நிர்வாணமாய் ஊர் முன்னால் நின்று புலம்பி, போராடி..தத்தளிப்பதை இன்று உலகமே பார்த்து விட்டது..

இயலாமையின் வலியோடு.... இந்த வாழ்வின் மீதான அபத்தத்தை தாங்கிக் கொண்டு...நம்பிக்கை என்பதன் அர்த்தம் மறந்து, வெறுப்பின் மீதமாய்...ஓங்கி அழவும்... வார்த்தைகள் இன்றி, இந்திய சுதந்திர அடிமைகளாக.. மிரண்டு நிற்கும் ... இந்த குடும்ப நிர்வாணத்துக்கு என்ன செய்யப் போகிறோம்... இவர்களை இப்படி நிலைக்குத் தள்ளியவர்களுக்கு தண்டனை தரப் போகிறோமா.. இல்லை.. இவர்களுக்கு ஆறுதல் கூறப் போகிறோமா... அல்லது.. எப்போதும் போல வேடிக்கைதான் பார்க்க போகிறோமா....?!

- கவிஜி

Pin It