தமிழ் முசுலீம் சமூகத்தின் முக்கிய அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சியில் ஏற்பட்ட "பிளவு அரசியல்" ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முசுலீம் சமூகம் ஆதிக்க சக்திகளாலும் இந்துத்துவ பயங்கரவாதிகளாலும் தொடர் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து முசுலீம்களிடையே பாரிய மக்கள் இயக்கம் ஒன்று கட்டமைக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் 1995ம் ஆண்டு குணங்குடி ஹனீபா, பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, ரிபாயி போன்றவர்களால் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகம்(தமுமுக) என்ற பேரியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் துவக்கப்பட்ட நாள் முதற்கொண்டே முசுலீம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர் களப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் இந்த இயக்கத்தின் தொண்டர்களும் தலைவர்களும் ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியாக தமிழ் முசுலீம் சமூகத்தை வலுவாக்கி அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அரசியல் வானில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2009ம் ஆண்டு தமுமுகவின் அரசியல் பிரிவாக மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சி பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களுடன் கைகோர்த்து போராட்டக் களங்களை சந்தித்து வருகிறது. தற்போது இந்த கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டசபையில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ் முசுலீம் சமூகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ள மமகவில் தான் தற்போது பிளவு அரசியல் தலைதூக்கி ஆதிக்க சக்திகளை குஷிப்படுத்தியுள்ளது.

கட்சியின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரிக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு மமகவை இரண்டாகப் பிளக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல்களில் உருண்டு கொண்டு இருப்பவர்களும் மனித பிணங்களில் அரசியல் நடத்துபவர்களிடம் இருக்கும் ஒற்றுமை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயக்கம் நடத்துபவர்களில் இல்லாமல் போனது எப்படி? இந்தப் பிளவு அரசியல்களின் பின்னால் ஆதிக்க சக்திகளின் நுண்ணிய சதி வேலைபாடுகள் முகிழ்ந்து காணப்படுகிறது.

இந்தியா என்ற இந்த பாரிய ஜனநாயக நாடு மிகவும் வினோதமானது. இந்த நாட்டில் அரசியல், ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் குறிப்பிட்ட சதவீத மக்கள் தொகை கொண்ட ஆதிக்க சக்திகளிடம்தான் உள்ளது. இங்கு முகாலாயர்களின் ஆட்சி நடந்தாலும் அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சி நடந்தாலும் முக்கிய அதிகார வர்க்கமாக இந்த ஆதிக்க சக்திகள்தான் இருந்து வந்துள்ளனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கமாக ஒருங்கிணையும்போது அவர்களை உடைத்துச் சிதறடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதுதான் வரலாறு. இந்த ஆதிக்க சக்திகளின் பொது புத்தி இன்று அதிகாரத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளிலும் புரையோடிக் காணப்படுகிறது.

சசி பெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்த மதிமுக, மமக, வி.சி, கம்யூனிஸ்டு கட்சிகள் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை துவக்கியது ஆதிக்க சக்திகளுக்கும் தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவிற்கும் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மதுவுக்கு எதிராக வீரியமான போராட்டத்தை மக்கள் நலக் கூட்டு இயக்கம் தொடர்ந்து நடத்தி வந்தது தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிந்தது. இதைத் தொடர்ந்துதான் திமுகவும் அதிமுகவும் சில உள்ளடி வேலைகளில் இறங்கின. மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக தன் வசப்படுத்தி கொண்டது. இதன் மூலம் மதிமுக திணற ஆரம்பித்தது. அதே போன்று இந்த கூட்டு இயக்கத்தை உடைப்பதற்காகவே அதிமுக தரப்பில் இருந்து மமகவிற்கு சில தேர்தல் அழைப்புகள் வந்துள்ளன. அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் அதீத ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது. இதைத் தொடர்ந்துதான் மமக மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இருந்து வெளியேறியது என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

குறுகிய தேர்தல் நலனுக்காக சிறிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுக்கு கூட உள்ளாகாத ஜவாஹிருல்லா அதிமுகவுடன் கை கோர்த்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டு இயக்கத்தைச் சார்ந்த கட்சிகளை வெளிப்படையாக விமர்சித்ததை யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. எப்படியென்றாலும் ஆதிக்க சக்திகள் விரித்த வலையில் மமக சிக்கி கொண்டது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தமிழ் முசுலீம் சமூகத்துக்காவும் தீவிர களாமாடியவர்கள் ஜவாஹிருல்லாவும் தமீமுன் அன்சாரியும் என்பதை மறுக்க முடியாது. தமிழ் முசுலீம் அரசியல் ஆளுமைகளில் முதன்மையானவர்களாக இருக்கும் இவர்கள் இரண்டு பேரும் ஊடகங்களின் முன்னால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது சரியானதல்ல. முசுலீம் சமூகத்தை கவ்விக் கொண்டு செல்ல காவிக் கழுகு அந்த சமூகத்தின் தலையின் மீது வட்டம் இட்டுக் கொண்டிருக்கும்போது இவர்களின் பிளவு யாருக்கு சாதகமாக மாறும்?

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கங்கள் அனைத்தும் ஆதிக்க சக்திகளின் பிளவு அரசியலுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஆதிக்க சக்திகளின் இயக்கம் நம் எதிரே சம்மணம் இட்டு பல் இளித்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் தலைவர்களே இந்துத்துவ பேராபத்து காந்தியையும் அம்பேத்கரையும் உள்வாங்கிக் கொள்ளும்போது உங்களிடம் ஏன் பிளவு அரசியல் எடுபடுகிறது? நமக்குத் தேவை பிளவு அரசியல் அல்ல... அனைவரையும் ஒருங்கிணைத்து வீரியமான போராட்டக்களத்தை நோக்கி நகர்த்தி செல்லும் அரசியல். குறுகிய கால தேர்தல் நலனை மனதில் கொள்ளாமல், நீண்ட கால மக்கள் நலனை முன்னிருத்தும் அரசியல். இதை இந்த இரண்டு ஆளுமைகளும் புரிந்து கொண்டு மீண்டும் கைகோர்த்து களமாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- ஷாகுல் ஹமீது

Pin It