ஆப்கானிஸ்தான் என்ற தேசத்தை அமெரிக்க ரவுடி நேரடியாக ஆக்கிரமித்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த பதினைந்து ஆண்டுகளில் அமெரிக்கா அங்கு நடத்திய கொலை வெறியாட்டங்கள் மனித சமூகமே வெட்கி தலைகுனியக் கூடியது. 9/11க்கு அப்புறம் அல்கய்தாவை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று கூறி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா ஏறக்குறைய 1,00,000க்கும் அதிகமான பொதுமக்களை கொன்று போட்டுள்ளது என்று பிரவுன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. இறந்து போன சிவிலியன்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1,49,000க்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

 இந்த நிலையில் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவானதால் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறும் என்று அறிவித்தது ஒபாமா அரசு. 2014 ஆண்டின் இறுதியில் அமெரிக்கத் தலைமையிலான பன்னாட்டுப் படைகள் முழுவதும் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது உலகை நம்பவைக்க அமெரிக்கா போட்ட வேடம் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

 ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள குந்தூஸ் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அங்கிருந்த எம்.எஸ்.எல் மருத்துவமனைமீது குண்டுகள் விழுந்தது. இதில் ஒன்பது மருத்துவர்கள் உட்பட 19 பேர் உயிர் இழந்துள்ளனர்; 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவமனை அது. கொல்லப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் மருத்துவ சேவை செய்வதற்காக அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆவார்கள். இந்தத் தாக்குதலைத் தாங்கள் தான் நடத்தினோம் என்பதை அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்டு இருக்கின்றது.

 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அமெரிக்க அதிபர் கொலைகார ஒபாமா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் முடிந்த அடுத்த நாளே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருப்பதானது ஐ.நா என்பது அமெரிக்காவின் கைகூலி அமைப்பு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் சைட் அல் ஹூசைன் “இது ஒரு மன்னிக்க முடியாத போர் குற்றம்” என்று கூறியுள்ளார். அத்துடன் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக அவரும் ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.

 இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஜனவரி மாதம் ஆப்கானில் ஹெல்மண்ட் மகாணத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதில் 26 பேர் உயிரிழந்தனர். இவை அனைத்தும் அமெரிக்கப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டன என்று சொன்ன பின்னால் நடந்தவை.

 உலக நாடுகளுக்கே ஜனநாயகத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும், இனஅழிப்புகளும் கேட்பார் யாருமின்றி தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக்கைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் பார்வை சிரியாவின் மீது திரும்பி இருக்கின்றது. ஆப்கானிஸ்தானுக்கு அல்-கய்தா, ஈராக்கிற்கு ரசாயண ஆயுதங்கள், அதேபோல சிரியாவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒரு லட்சம் மக்களின் உயிர் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது, ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட 20 லட்சம் மக்களின் உயிர் தேவைப்பட்டது, இப்போது சிரியாவில் எத்தனை லட்சம் மக்களின் உயிரை காவுவாங்கி அங்கு ஜனநாயகத்தை அமெரிக்கா கொண்டு வரப்போகின்றது என்று தெரியவில்லை.

 இப்படிப்பட்ட அமெரிக்கா தான் ஈழத்தமிழர்களுக்கு நீதிபெற்று தரும் என்று இங்குள்ள அமெரிக்க அடிமை ஈழ ஆதரவாளர்கள் தமிழ்மக்களை நம்ப வைத்தார்கள். அப்போதே நாம் சொன்னோம் அமெரிக்காவை நம்ப வேண்டாம் என்று. நம்பியதன் விளைவு, ஈழத்தமிழ்மக்கள் முதுகில் அமெரிக்கா குத்திவிட்டது.

 உலகிற்கே பெரியண்ணனான தன்னைத் தட்டிக்கேட்கும் தைரியம் யாருக்குமில்லை என்ற மமதையில் அமெரிக்கா ஆடிக்கொண்டு இருக்கின்றது. உலகம் முழுவதையும் தன்னுடைய இராணுவ பலத்தையும், டாலரையும் வைத்தே அமெரிக்கா மிரட்டி வருகின்றது. தன்னுடைய இராணுவத்தையும், டாலரையும் பார்த்துப் பயப்படாத நாடுகள் மீது பொருளாதார தடை விதிப்பதும். தனக்குப் பயப்படும் நாடுகள் மீது தன்னுடைய சண்டித்தனத்தைக் காட்ட போர் தொடுப்பதும் அமெரிக்கா வழக்கமாக மேற்கொள்ளும் நடைமுறை.

 ஆள்வைத்துக் கொலை செய்வது, உள்நாட்டு கலவரங்களைத் தூண்டிவிடுவது, ஆட்சிக்கவிழ்ப்பு செய்து தன்னுடைய கைப்பாவை அரசை உருவாக்குவது போன்றவை அமெரிக்கா உலகிற்குக் கற்றுத்தந்த ஜனநாயக விழுமியங்கள். ஜூலியன் பால் அசாங் தன்னுடைய விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் அமெரிக்க அரசையே அம்மணமாக்கிக் காட்டினார். அது செய்த எல்லா அயோக்கிய தனங்களையும் உலகமே அறியத் தந்தார். பல நாடுகள் அந்த ஆவணங்களைப் படித்தப் பின்பு பீதியில் உறைந்தன. தங்கள் நாட்டுத் தலைவர்களின் கழிப்பறையைக்கூட விட்டுவைக்காமல் அமெரிக்கா வேவு பார்த்ததையும், கேவலமான பட்டப்பெயர்கள் வைத்துத் தங்கள் நாட்டை அமெரிக்கா அசிங்கப்படுத்தியதையும் எண்ணி பல நாடுகளின் மக்கள் கொதித்துப் போனர்கள். ஆனால் ஒரு நாடும் அமெரிக்காவை எதிர்த்து நிற்கத் துணியவில்லை.

 உலகின் பல நாடுகளின் தலைவர்கள் வெட்க மானமே இல்லாத ஊழல் பேர்வழிகளாக இருப்பதாலும், தங்கள் சொந்த நாட்டு மக்களின் சுயமரியாதையையும் அவர்களுக்குச் சொந்தமான வளங்களையும் அமெரிக்க எசமானர்களுக்கு அடகுவைக்கும் அயோக்கியர்களாக இருப்பதும் அமெரிக்க ரவுடிக்குக் கூடுதல் பலத்தை உருவாக்கியுள்ளது. சில மானங்கேட்ட தலைவர்கள் கொலைகார அமெரிக்க அரசுடன் ஹாட்லைனில் வேறு பேசுகின்றார்கள். அமெரிக்கா என்றால் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடுகின்றார்கள். இது போன்ற தலைவர்கள் அமெரிக்க என்ன அட்டூழியம் செய்தாலும் பெயரளவுக்குக் கூட கண்டனம் செய்வது கிடையாது. மாறாக அதை நக்கிப் பிழைப்பதையே தங்களின் பிறவிப்பயனாக கருதுகின்றார்கள்.

 ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பாட்டாளிவர்க்க மக்கள் தங்கள் நாடுகளில் இருக்கும் மதவாதிகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய அடிமை அரசுகளுக்கு எதிராவும் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு போர்க்குணம் கொண்ட போராட்டங்களைக் கட்டி எழுப்பி போராடும்போது மட்டுமே ஏகாதிபத்தியத் தாக்குதலை முறியடிக்க முடியும். அதே போல சாமானிய மக்களுக்கான அரசையும் தங்கள் நாடுகளில் உருவாக்கிக்கொள்ள முடியும். அப்படி நடைபெறும் போராட்டங்களுக்கு மற்ற நாடுகளில் உள்ள குறிப்பாக ஏகாதிபத்திய போர் தொடுக்கும் நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க மக்கள் தங்கள் ஆதரவை மனப்பூர்வமாக தரவேண்டும். அதுவே பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும்.

 அதை விட்டுவிட்டு மதவாதிகள் தங்களைக் காப்பாற்றுவார்கள், சாதியவாதிகள் தங்களைக் காப்பாற்றுவார்கள், ஐ.நா சபை தங்களைக் காப்பாற்றும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமானால் நம்மைக் காப்பாற்ற ஒருவரும் வரமாட்டார்கள்; அழிந்து மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.

- செ.கார்கி

Pin It