மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.
தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.
1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.
பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.
ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.
சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.
நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.
உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாகவில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.
உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.
இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.
தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!!
இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டியதொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.
(புரட்சி தலையங்கம் 29.04.1934)