அறிவுத் திறன் என்பது அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவானது. இது மாற்ற முடியாத இயற்கை நியதி. ஆகவே கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பிற சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் சூதும், ஏமாற்று வித்தைகளும் பின்னிப் பிணையாமல் இருந்தால், அனைத்து வகுப்பு மக்களும் ஏறத் தாழ அவரவர் மக்கள் தொகை விகிதத்திலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆனால், அவ்வாறு திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்டு விடாமல், சாதி அடிப்படையில், பார்ப்பனர்கள் உயர் நிலைகளிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலைகளிலும் தான் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திணிக்கப்பட்ட முறை தான், உலகில் எங்கும் இல்லாத, வருணாசிரம அதர்ம முறை. இம்முறை செயல்பட்டதன் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர் நிலை வேலைகளுக்குச் செல்ல முடியாமல் மனித வளம் வீணானது / வீணாகிக் கொண்டு இருக்கிறது. பார்ப்பனர்கள் என்பதற்காகவே அவர்கள் உயர் நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் உயர் நிலைகளில் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அதனால் நிர்வாகம் சரியாக நடக்காமல் குளறுபடியாகவே நடக்கிறது / நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு மனித வளம் வீணாவதையும், நிர்வாகம் சீர்கெடுவதையும் தடுப்பதற்காக, இட ஒதுக்கீடு முறையை மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முதலிய சமூக நீதிப் போராளிகள் போராடிப் பெற்றனர். இட ஒதுக்கீடு செயல் படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என மெய்ப்பித்து இருக்கிறார்கள். அதுவும் அப்படித் தெரிந்து விடக் கூடாது என்று பார்ப்பனர்கள் செய்யும் கடுமையான சூழ்ச்சிகளையும் மீறி மெய்ப்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைக்க முயலுவதைப் போல், இட ஒதுக்கீட்டினால் திறமை உள்ள பார்ப்பனர்களின் வாய்ப்பு பதிக்கப்படுகிறது என்று சிறிதும் மனம் கூசாமல் பச்சைப் பொய்யைப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் சில கூறுகள் தான், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ்ஸும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவதும், இப்பொழுது குஜராத்தில் பட்டேல்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் செய்யும் போராட்டமும்.

ஆனால் பார்ப்பனர்களின் சதித் திட்டங்களால் நடக்கும் இத்தகைய போராட்டங்களுக்கு, மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும், அரசியல் தலைவர்களும் தெளிவான (புததிசாலித்தனமான) எதிர்வினையை ஆற்றுவதாகத் தெரியவில்லை. பட்டேல்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஹர்திக் பட்டேல் 27.8.2015 அன்று 80% - 90% வரை மதிப்பெண்கள் பெற்ற பட்டேல் சமூகத்தினர் போட்டித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அதை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தேர்ந்தெடுக்கப்படுவதை ஒரு குறையாகச் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்கள் சமூகத்தவர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்றும், பாலையும், காய் கறிகளையும் சந்தைக்குக் கொண்டு வர மாட்டார்கள் என்றும் கூறி உள்ளார்.

இதற்கு எதிர்வினையாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் ஊர்வலம் நடத்தப் போவதாக 18.9.2015 அன்று அறிவித்து உள்ளனரே ஒழிய, ஹர்திக் பட்டேல் குறிப்பிடும் குறைந்த மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட முற்பட்ட வகுப்பினரை விடத் திறமைசாலிகள் என்று களத்தில் மெய்ப்பித்து உள்ளதை எடுத்துக் காட்டத் தவறிவிட்டனர். அதன் மூலம் பொதுப் போட்டி முறையில் சூது பின்னிப் பிணைந்து உள்ளது என்றும், அம்முறையில் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை என்றும், இட ஒதுக்கீடு முறையில் தான் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுமான கருத்தியலை முன்வைக்கவும், வளர்த்தெடுக்கவும் தவறி விட்டனர்.

மேலும் பட்டேல் சமூகத்தினர் வங்கியில் உள்ள பணத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்றும், பால், காய் கறிகளைச் சந்தையில் கொண்டு வர மாட்டார்கள் என்றும் மிரட்டுவது நகைப்புக்கு உரிய சிறுபிள்ளைத்தனமாகும். பட்டேல்களின் பணம் வங்கிகளில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் ஒடுக்கப்பட்ட வகுபபு மக்களுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. மேலும் வயல் வெளிகளில் மாடுகளை மேய்ப்பதும், பால் கறப்பதும், பயிர்களை விளைவிப்பதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களே ஒழிய, முற்பட்ட சமூக மக்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களைத் தாராளமாகப் புறக்கணித்து விட்டுப் பாலையும், காய் கறிகளையும் சந்தையில் கொண்டு வர முடியும். இதை எடுத்துக் காட்டாமல், ஹர்திக் பட்டேல் வெற்றி வீரர் போல் தோற்றம் அளிப்பதைத் தொடர விட்டு இருப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் பெரும் தவறாகும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இப்பிரச்சினையைக் கருத்தியல் ரீதியாகத் தங்களை வலுப்படுத்திக் கொள்ளாததால், பார்ப்பனர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்கின்றனர். இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறை சாதிய ரீதியாக இருக்கும் நிலையில், அதற்கான தீர்வும் சாதிய ரீதியில் தான் தேட முடியும் / தேட வேண்டும். ஆனால் இட ஒதுக்கீடு முறையைப் பொருளாதார அடிப்படையில் செயல்படுத்த மறுபரிசீலனை வேண்டும் என்று 20.9.2015 அன்று ஆர்.எஸ்.எஸ். கூறி உள்ளது.

இதற்குக் கருத்தியல் ரீதியில் விடை அளிக்க வேண்டும் என்று சிறிதும் அக்கறைப்படாத லாலு பிரசாத் யாதவ் உட்பட ஒடுக்கப்ட்ட வகுப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 21.9.2015 அன்று 'முடிந்தால் இட ஒதுக்கீடு முறையை நீக்கிப் பார்' என்று சவால் விட்டு உள்ளனர். ஆனால் முழுக்க முழுக்க சூழச்சியிலேயே ஊறிக் கிடக்கும் பார்ப்பனர்கள் வேறு விதமாகத் தங்களை வெளிப்படுத்திக் காட்டி உளனர். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். மூலம் கூறிய பார்ப்பனர்கள், அக்கருத்து தங்களுடைய கருத்து அல்ல என்று பா.ஜ.க. மூலம் சொல்லி உள்ளனர். அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வு பொங்கி எழாமல் பார்த்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பொதுப் போட்டி முறையில் பின்னிப் பிணைந்து உள்ள சூழ்ச்சிகளைக் கருத்தியல் ரீதியாக மறைக்கும் முயற்சியைச் சற்றும் களைப்படையாமல் முன்னெடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

கேரளாவில் வாழும் தமிழ்ப் பார்ப்பனர்கள் 22.9.2015 அன்று, பார்ப்பனர்களைச் சிறுபான்மையினர் என அங்கீகரித்து, சிறுபான்மையர்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் பங்கு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். சிறுபான்மையினர் என்பதன் வரையறையே என்னவென்றால் அச்சமூகத்தினர் தங்கள் மக்கள் தொகையின் விகிதத்தை விட மிகக் குறைவாக வாய்ப்பு பெற்றவர்கள் என்பது தான். ஆனால் தங்கள் மக்கள் தொகையின் விகிதத்தை விட மிக மி......மிகப் பல மடங்குகள் வாய்ப்பைப் பெற்று இருக்கும் பார்ப்பனர்கள் இதைக் கோருவதை என்னவென்று சொல்வது? அவர்கள் புரியாமல் பேசுகிறார்களா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கும் ஆற்றலே இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார்களா?

இங்கு இப்படி நடந்து கொண்டு இருக்க, குஜராத்தில் வேறு கூத்து நடக்கிறது. இட ஒதுக்கீடு என்பதே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்காகத் தானே ஒழிய, திறமையற்வர்களுக்காக அல்ல. ஆனால் அனைத்து வசதிகளைப் பெற்றிருந்தும் திறமையின்மை காரணமாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் உயர்சாதிக் கும்பலினருக்கு ஒதுக்கீடு தர வேண்டும் என்று அந்த மாநில அரச திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறதாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதால் மன உளைச்சல் அடைந்து போயிருக்கும் உயர்சாதிக் குமபலினரைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, இதை உத்தேசித்து இருப்பதாக 22.9.2015 அன்று குஜராத் அரசாங்கம் அறிவித்து உள்ளது.

மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவதும், அவ்வமைப்புகளுக்குக் கீழ் படிந்த பா.ஜ.க. அது தங்கள் கருத்து அல்ல என்று கூறுவதும், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இதை உணர்ந்து கொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத், இட ஒதுக்கீடைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மட்டுமே கூறுவதாகவும் 22.9.2015 அன்று கூறி உள்ளனர்.

இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு விகிதாச்சாரப் பங்கீடு தான். அதாவது அரசு, தனியார்த் துறைப் பணிகளில் அனைத்து நிலைகளிலும், பெட்ரோல், எரிவாயு போன்ற முகமைகளிலும் (Agency) தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதசிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, மக்கள் தொகையில் அவரவர் விகிதத்தில் வாய்ப்புகளைப் பங்கிட்டுக் கொடுப்பதே.அறிவுத் திறன் என்பதும், திறமை என்பதும் அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவாக இருப்பதால், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர் நிலைகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலை வேலைகளிலும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வழியை இது ஏற்படுத்தும்.

இம்முறையில் ஒரு வகுப்பில் உள்ள ஒரு அல்லது சில சாதியினர் மற்ற சாதியினரின் உரிமைகளில் தலையிடும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் இது முற்பட்ட வகுப்பினர், அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மொத்த உரிமைகளையும் பறித்துக் கொள்ளும் முறையை முடிவு கட்டிவிடும். ஒரே வகுப்பில் உள்ள சாதியினர் பெறும் வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டால், அதைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, உள் ஒதுக்கீடு மூலம் அதை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும்

இன்று, தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மீண்டும் சேர்க்கும்படி போராடும் ஜாட்களும், தங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் பட்டேல்களும், தங்களுக்குப் போதுமான பங்கு கிடைக்கவில்லை என்று நினைத்தால், அதற்கு இப்போதைய அணுகுமுறையை விட்டு விட்டு, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை வென்றெடுத்து அதில் உள் ஒதுகீடு பெற்றுத் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அதாவது விகிதாச்சாரப் பங்கீடு என்பது எந்த ஒரு வகுப்பினரையும், எந்த ஒரு சாதியினரையும் பாதிக்காத, அனைவருக்கும் நீதி வழங்கக் கூடிய முறையாகும். ஆகவே நாம் அனைவரும் இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக விகிதாச்சாரப் பங்கீட்டிற்காகப் போராடுவோம்.

இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், பொதுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்சாதிக் கும்பலினரை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்து இருப்பதைக் கணக்கில் கொண்டு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிற இந்து மத அமைப்புகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும் இப்போராட்டத்தில் இணைய வேண்டும். எதிர்காலத்தில், ஆக்க வேலைகளில் திறமைசாலிகளான தங்கள் குழந்தைகள், ஆக்க வேலைகளில் திறமை இல்லாத, ஆனால் ஏமாற்று வித்தைகளில் மட்டுமே திறமை வாய்ந்த உயர்சாதிக் கும்பலினரால் ஒடுக்கப்படாமல் இருப்பதற்காக அவர்கள் தங்கள் அமைப்பிற்குள்ளேயே இப்போராட்டத்தை முன்னெடுத்தே ஆக வேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தால், வருங்காலத்தில் அவர்களுடைய குழந்தைகள், தங்கள் முன்னோர்களின் தவறுகளுக்காக நரக வேதைனையை அனுபவிப்பார்கள்; தங்கள் முன்னோர்களைச் சபிப்பார்கள்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.9..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It