“சமூகத்தில் நலிந்தோர், முதியோர், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் ஆகிய பிரிவினரைக் கடுமையான வாழ்வுக்கான போட்டியிலிருந்து ஓர் அரசு பாதுகாப்பதுதான் “சமூகநீதி” ஆகும். ஒடுக்கப்பட்டவருக்கென சில வாய்ப்புகளைக் கொடுப்பதன் மூலம் சமூகத்தின் முன்னேறிய பிரிவினருடன் அவர்களுக்குச் சமமான வாய்ப்பளிக்க முடியும். சமூக நீதி என்பது உரிமைகளின் தொகுப்பாகும். ஒருவகையில் இது மற்றவர்களின் உரிமையைக் குறைப்பது போலத் தோன்றினாலும், வேறொரு வகையில் மற்றவர்களின் உரிமைகளுக்கான பாதுகாப்பும் ஆகும். இருப் போரையும் இல்லாதாரையும் சரிநிகராகச் செய்யும் ஒரு சமன் செய் சக்கரமே (Balancing Wheel) சமூக நீதியாகும்” என்று நீதிபதி கே. சுப்பாராவ் அவர்கள் சமூகநீதி குறித்து வரையறை செய்து விளக்கமளித்தார். இந்த சமூகநீதியைப் பெறுவதற்கான போராட்டம், ஆரிய-திராவிட போராட்டமாய் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் தன் பொது வாழ்க்கையை காங்கிரசுக் கட்சியில் துவக்கிய காலத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக விகிதாச்சார உரிமை எனும் இடஒதுக் கீட்டுக் கொள்கையை வலியுறுத்தி போர்க்குரல் எழுப்பினார். பார்ப்பனப் பண்ணையமான காங்கிரசுக் கட்சி இதனை ஏற்க மறுத்தது.
காங்கிரசுக் கட்சியின் அமைப்பான “சென்னை மாகாணச் சங்கம்” (Madras Presidency Association) என்ற பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் துணைத் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரியார், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வாதாடினார். காங்கிரசுக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இடஒதுக்கீட்டுக் கொள்கையைவிட, மற்ற அரசியல் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதனால் சென்னை மாகாணச் சங்கம், விரைவிலேயே செயலிழந்து மறைந்து போனது. ஆனாலும் பெரியார் சோர்ந்திடவில்லை; தொடர்ந்து தம் கொள்கையை வற்புறுத்தினார். காங்கிரசுக் கட்சியின் மாநாடுகளில் எல்லாம் இதனை தீர்மானமாக்கி, செயல்படுத்தச் செயலில் இறங்கினார்.
காங்கிரசுக் கட்சியின் 26-ஆவது மாநில மாநாடு 1920-ஆம் ஆண்டில் திருநெல் வேலியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பார்ப்பனர் அல்லாத உறுப்பினர்கள் பெரியார் தலைமையில் ஒன்றுகூடி, தேர்தல் - வேலை வாய்ப்புகள் ஆகியவைகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கிட அரசை வலியுறுத் தும் தீர்மானத்தைத் தயாரித்து அதனைத் தீர்மான வரைவுக் குழுவிடம் அளித்தார்கள். பெரியார் முன் வ.உ. சிதம்பரனாரும், தண்டபாணிப் பிள்ளையும், சோமசுந்தரம் அவர்களும் வழிமொழிந்த இத்தீர்மானத்தை எஸ். கஸ்தூரி ரங்க அய்யர் கடுமையாக எதிர்த்தார். பின்னர் ஒருவழியாக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் மாநாட்டில் இத்தீர்மானம் நிறை வேற்றப்படவில்லை. பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தீர்மானக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகுப்பு வாரிப் பிரதிநிதித் துவத் தீர்மானம் என்ன ஆயிற்று என்று தண்டபாணிப் பிள்ளை எழுந்து கேட்டார். “அது பொது நன்மைக்கு விரோதமான தீர் மானம். எனவே அதைத் தவறானது என்று தீர்மானித்துவிட்டோம்” என்று மாநாட்டின் தலைவரான எஸ். சீனிவாச அய்யங்கார் அலட்சியமாகவும், அகம்பாவ மாகவும் பதில் கூறினார்.
இதனை அடுத்து, காங்கிரசுக் கட்சியின் 27ஆவது மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்ற போதும், பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தை எழுப்பினார். அங்கும் எதிர்ப்பு கிளம்பி, ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனைப் போலவே, திருப்பூரில் நடைபெற்ற கட்சியின் 28ஆவது மாநாட்டிலும் பெரியாரின் வகுப்புரிமைத் தீர்மானம் புறக்கணிக்கப் பட்டது.
1924-ஆம் ஆண்டில் திருவண்ணாமலை யில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் மாநாடு பெரியார் தலைமையில்தான் நடை பெற்றது. ஆனால் சீனிவாச அய்யரும், பார்ப் பனர்களும் கூச்சலும், குழப்பமும், ரகளையும் செய்து, அங்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் செய்து விட்டார்கள்.
இதற்கு அடுத்து காங்கிரசுக் கட்சியின் 31-ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் கூடியது. இந்த மாநாட்டிலும் பெரியாரும் எஸ். இராமநாதனும் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானம் புறக்கணிக்கப் பட்டது. தீர்மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை? என்று பெரியார் எழுந்து நின்று ஆவேசமாய்க் கேட்ட போது, தீர்மானம் ஒழுங்குக்கு மாறானவை யாதலால், அதனை ஏற்க முடியாது என்று மாநாட்டுத் தலைவரான திரு.வி.க. பார்ப்பனர்களின் மொழியிலேயே பதில் அளித்தார்.
“இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை!” என மாநாட்டுப் பந்தலிலேயே சூளுரைத்துவிட்டு, வெளியேறினார் பெரியார்! தாம் உயர்த்திப் பிடித்த வகுப்புரிமைக் கொள்கையை நிறைவேற்றிட, தம்முடைய சுயமரியாதை இயக்கத்தின் மூலம் தொடர்ந்து களமிறங்கினார் பெரியார்!
தந்தை பெரியார் அவர்களின் வகுப்புரிமை முழக்கத்தை 1909-ஆம் ஆண்டில் பார்ப்பன ரல்லாதார் சங்கமும், 1912-ஆம் ஆண்டில் சென்னை ஐக்கிய சங்கமும், 1913-ஆம் ஆண்டில் சென்னை திராவிடர் சங்கமும், 1916-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியும் ஓங்கி எழுப்பின.
மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி இதனை நிறைவேற்றச் சட்டம் இயற்றியது. பனகல் அரசர் தலைமையிலான அமைச்சர் அவை 1921 ஆகஸ்ட் திங்களில், இதற்கான சட்ட வரைவை சட்டமன்றத்தில் முன்வைத்தது. இந்த சட்ட வரைவு, அரசு ஆணையாக (16.9.1921) அறிவிக்கப்பட்டது.
இந்து, சுதேசமித்திரன் முதலான பார்ப்பன ஏடுகள் இதனைக் கடுமையாக எதிர்த்து எழுதின. பார்ப்பனர்கள் சிண்டை அவிழ்த்து விட்டு, வீதிக்கு வந்தார்கள். அரசு ஆணையை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த பார்ப்பன அதிகாரிகளும் இவர்களுக்குத் துணை நின்றார்கள். இதனால் 6 ஆண்டுகளாகியும் அரசின் ஆணை நடைமுறைக்கு வரவில்லை!
இதன்பின்னர் பதிவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற எஸ். முத்தையா முதலியார் அனைத்துத் துறைகளிலும் வகுப்புரிமையை நடைமுறைப்படுத்தினார். முத்தையா முதலியார் வாழ்க! என்று குடியரசு இதழில் தலையங்கம் தீட்டி, பாராட்டினார், பெரியார். “வகுப்புப் பித்தம் தலைக்கேறிவிட்டதா?” என்ற நஞ்சைக் கக்கி சுதேசமித்திரன் (8.11.1928) தலையங்கம் தீட்டியது.
தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப 12.5 விழுக்காடு இருக்க வேண்டும் என்று நீதிக்கட்சி பரிந்துரைத்த போது, இதனைச் செய்தால், பார்ப்பனரல்லாதாரும் கேட்பார்கள். எனவே இதனை ஏற்க இயலாது. அந்த கோப்பிலேயே எழுதி, திருப்பி அனுப்பப் பட்டது. நீதிக்கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் செய்வதிலும் இவர்கள் வெற்றி கண்டார்கள்.
இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆந்திரப் பார்ப்பனரான, முதல்வர் பிரகாசம், 20.8.1946 அன்று சட்டமன்றத்திலேயே “நான் கம்யூனில் ஜி.ஓ.வுக்கு எதிரானவன் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறேன்” என்று பிரகடனம் செய்தார்.
இந்தப் பிரகாசத்திற்கு அரசியல் நெருக்கடி வந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய நிலையில், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வரானார். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்த முதல் முதல்வர் என்ற பெருமையை ஓமந்தூரார் பெற்றார். இதனை எதிர்த்து, இந்திய நடுவண் அரசின் பொறுப்பில் இருந்த காங்கிரசு அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு தரக்கூடாது என்ற ஆணையையும் ஏற்க மறுத்துவிட்டார் முதல்வர் இராமசாமி ரெட்டியார்.
தாடி இல்லாத இராமசாமி என்று பார்ப்பன ஏடுகள் முதல்வரைக் குறிவைத்துத் தாக்கி எழுதின. தமிழகத்திற்கு அப்போது வந்திருந்த காந்தியாரிடம் ஓமந்தூராரைப் பற்றி புகார் கூறினார்கள். அவர் பதவி விலகும் அளவுக்கு, சதிச் செயலில் ஈடுபட்டு, சூழ்ச்சி வலையை விரித்தார்கள். இதன் விளைவாக ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து குமாரசாமி ராஜா முதல்வரானார். எதிர்க்கட்சித் தலைவரான பிரகாசம் சட்ட மன்றத்திலும், வெளியேயும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களை பேசிக் கொண்டே இருந்தார். அவருடன் இணைந்து பாஷ்யம் அய்யங்கார் என்ற முன்னாள் அமைச்சரும் சட்டமன்றத்தில் தாண்டவமாடினார்.
“சென்ற 25 வருட காலமாகவே இருந்து வரும் கம்யூனல் ஜி.ஓ.வின் காரணமாகவே திறமையுள்ள மக்கள் நிர்வாகத்தில் இடம்பெற வில்லை. பார்ப்பனர்கள் என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணிப்பது தவறு. இந்த கம்யூனல் ஜி.ஓ.வை ரத்து செய்தால்தான் நாட்டில் சிறப்பான நிர்வாகம் நடைபெறும்” என்று பொய் அழுகை அழுது புலம்பினார் பாஷ்யம் அய்யங்கார்!
இந்தச் சூழ்நிலையில், நீதிமன்றத்தின் மூலம் வகுப்புரிமையின் குரல்வளையை நெறித்துக் கொல்ல பார்ப்பனர்கள் சதிச் செயலில் ஈடுபட்டார்கள். இவர்கள் செண்பகம் துரைராசன் என்பவரை ஏவிவிட்டார்கள்.
செண்பகம் துரைராசன் என்னும் பார்ப்பனப் பெண் கணவனை இழந்தவர். பி.ஏ. பட்டம் பெற்று 15 ஆண்டுகள் கழித்து, மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்ததாகவும் தகுதி இருந்த போதிலும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையால்தான் தமக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், தகுதி திறமையைப் புறக்கணிக்கும் வகுப்புவாரி உரிமை தடையாக இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பார்ப்பன மாணவிக்காக வழக்காடினார். “சென்னை இராஜ்ய மக்கள், புதிய சகாப்தத்துக்கேற்ப தங்களை அமைத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, வகுப்புரிமை போன்ற பிற்போக்கான விஷயங்களில் தலை யிட்டு வாதிடலாகாது” என்று நீதிமன்றத்தில் உபதேசம் செய்தார் அல்லாடி!
27.7.1950 அன்று அரசமைப்புச் சட்ட விதி 29(2)க்கு முரண்பட்டது கம்யூனல் ஜி.ஓ. என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தமிழக அரசு தீர்ப்பினை எதிர்த்து 9.4.1951 அன்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
திருமதி. செண்பகம் துரைராசன் எந்த மருத்துவக் கல்லூரிக்கும் மனு செய்யவே இல்லை என்பது உச்சநீதிமன்ற விசாரணை யின் போது அம்பலமானது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்க மறுத்து பெரியார் தலைமையில் தமிழகம் போர்முரசு கொட்டியது. அண்ணாவின் தி.மு.கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாய் வெடித்துக் கிளம்பியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கிளர்ச்சித் தீயை முதலில் பற்ற வைத்தார்கள். வகுப்புரிமைக்காக முதன் முதலாக அரசு ஆணை அறிவித்த முத்தையா முதலியாரும் நமக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதன் விளைவாகத்தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு, இடஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டது. இதன்பின் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறிய, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்ய காகா கலேல்கர் தலைமையிலான குழுவை நடுவண் அரசு அமைத்தது. அந்தக் குழுவும் பல பரிந்துரைகளைச் செய்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் ஜவகர்லால் நேரு, கலேல்கரைக் கடுமையாகக் கண்டித்ததைச் சோசலிஸ்ட் தலைவர் மதுலிமாயி பின் நாளில் அம்பலப்படுத்தினார்.
இதன் விளைவாக, பிற்படுத்தப்பட் டோரின் நலனுக்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான கலோல்கரே, சமூக நீதிக்கு எதிராக, குடியரசுத் தலைவருக்கு 30 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை எழுதி, இந்த பரிந்துரைகளை நிறைவேற்றக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
“அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனெனில் அரசுப் பணிகள் என்பவை வேலைக்காரர்களுக்காக (ளுநசஎயவேள) இல்லை. அவை மொத்த சமூகங்களுக்கும் பணியாற்று வதற்காக” என்று இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர் களின் குரலையே கலேல்கர் அக்கடிதத்தில் பதிவு செய்திருந்தார்.
இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக முனைப்புடன் ஈடுபட்ட இராஜகோபாலாச்சாரி யின் அரசின் சதிவேலைகளையும் நம்மால் எளிதில் மறக்க இயலாது. “எல்லோரும் படித்துவிட்டால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? எனவே அவரவர் குலத் தொழிலையே செய்ய வேண்டும்” என்று சலவைத் தொழிலாளர் மாநாட்டிலேயே முதல்வர் இராஜாஜி உபதேசம் செய்தார். பள்ளி இறுதி வகுப்பில் (S.S.L.C.) வடிகட்டும் முறையை (Selection) புகுத்தி ஒடுக்கப்பட்டவர்களை கல்விச் சாலையின் உள்ளே நுழையவிடாது ‘நந்தியாய்’ நின்று தடுத்தார். 6000 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடி கல்விக்கான வாய்ப்புக் கதவை இழுத்து மூடினார்.
குலக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்து, பாதிநேரம் படிப்பு, பாதிநேரம் குலத்தொழில் என வருணாசிரமம் உயிர்த்தெழ ஆணையிட்டது ஆச்சாரியாரின் அரசு! மனுதர்மத்தின் மறுபதிப்பான இந்தச் சட்டத்தை எதிர்த்து பெரியாரும் - அண்ணாவும் போராடினார்கள். ஒட்டுமொத்தத் தமிழர் களும் போர்க்குரல் எழுப்பியதன் விளைவாக, தமிழகச் சட்டமன்றம் 29.7.1953 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடந்தது.
தீர்மானத்திற்கு ஆதரரவாக 138 வாக்குகளும், எதிர்ப்பாக 138 வாக்குகளும் பதிவானது. எதிர்க்கட்சித் தலைவரான, கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை! இந்த நிலையில் அவைத் தலைவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து குலக்கல்வி ஒழிப்புத் தீர்மானத்தை தோற்கடித்தார்.
ஆனாலும்கூட, இத்தீர்மானத்தில் “ஒரு குழு அமைத்து முடிவு கூறும் வரை குலக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற திருத்த தீர்மானத்தின் மீதும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 139 வாக்குகளும், எதிர்ப்பாக 137 வாக்கு களும் பதிவாகி திருத்தம் நிறைவேற்றப்பட்ட தையும் நினைவுகூற வேண்டும். அப்போதே ஆட்டம் கண்ட ஆச்சாரியாரின் அரசு, திராவிட இயக்கம் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவால், உடல்நலம் சரியில்லை என்று முதல்வர் பதவியில் இருந்து இராஜாஜி விலகும் நிலையை அடைந்தது.
அதன்பின்னர் காமராசரின் அரசும், அண்ணா, கலைஞர் அரசுகளும் சமூக நீதி காக்க நிறைவேற்றிய அனைத்துத் திட்டங் களையும் நம் இன எதிரிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு பிற்படுத் தப்பட்டோருக்கு 9000 ரூபாய் ஆண்டு வருமானம் நிர்ணயித்த போது அவர்கள் வானளாவ புகழ்ந்தார்கள்! அவரது அமைச்சர் அவையில் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அண்டே என்ற பார்ப்பனர், மருத்துவத் துறையில், பொதுப் போட்டி (Open Competition) என வழங்கப்பட்ட அச்சொற்றொடரின் சுருக்கமான O.C. என்ற வார்த்தையைத் திரிபுவாதம் செய்து Other communities என மாற்றி அதன் அடிப் படையில் ஒதுக்கீடு செய்யப் போவதாக அறிவித்தார்.
மக்கள் எதிர்ப்பையும், நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த பெரும் தோல்வியையும் கண்டு 9000 ரூபாய் ஆணையை திரும்பப் பெற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடு என உயர்த்தினார். எம்.ஜி.ஆர். இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்தது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். அரசை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்த தேசிய முன்னணியின் அரசின் பிரதமர் வி.பி. சிங் அவர்கள், 6.8.1990 அன்று மண்டல் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அதே நேரத்தில் அன்றைய நாள் இரவில், புதுதில்லி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், பா.ச.க. பொதுச் செயலாளர் முரளி மனோகர் ஜோஷியும், பார்ப்பனர்களும் ஒன்றுகூடி மந்திராலோசனை நடத்தினார்கள்.
1979-ஆம் ஆண்டு பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு, மண்டல் குழுவை அமைத்த போதிலிருந்தே இன எதிரிகள் சதி வேலையைத் தொடங்கிவிட்டார்கள். மண்டல் குழு பரிந்துரைகள் குப்பைத் தொட்டியில் வீசப் பட்ட நிலையில், வே.ஆனைமுத்து அவர்கள் 26.1.1982 மற்றும் 4.3.1982 ஆகிய நாள் களில் அன்றைய உள்துறை அமைச்சர் ஜெயில்சிங் அவர்களைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டதன் விளைவாக 30.4.1982-இல் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் அவைகளை நிறைவேற்றிடவும், நீண்ட போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது. வடமாநிலங்களில் அய்யா வே. ஆனைமுத்து தலைமையில் பிரச்சாரம், போராட்டம் எழுச்சியுடன் மக்கள் இயக்கமானது.
அதன் விளைவாக வி.பி. சிங் அரசிற்கு அளித்த ஆதரவை பா.ச.க. திரும்பப் பெற்றது. ராமனின் கமண்டலத்தை மண்டலுக்கு எதிராகத் திருப்பிவிட்டனர். அத்வானியின் ரத யாத்திரை, இரத்த யாத்திரையானது. அதையடுத்து பா.ச.க. அரசுக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களை ஆட்சியை விட்டு இறக்கினர்.
அதன்பின்னர் மதவாத பா.ச.க. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. கிறித்தவ, இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வைக்கப்படுவதால் வகுப்புவாரி உரிமைக்கு அங்கு வாய்ப்பு இல்லை. தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்ற உரிமைக்குரல் மறுக்கப்பட்டு விட்டது. கிரிமிலேயர் என்ற பொருளாதார அடிப்படை சட்ட விரோதமாகத் திணிக்கப்படுகிறது. பொருளாதார அளவுகோலை முன்வைத்து, முன்னேறிய சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு, 10 விழுக்காடு என புதிய அறிவிப்பை வெளியிட்டு இடஒதுக்கீட்டுக் கொள்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் அநீதி நடைமுறைக்கு வந்ததுவிட்டது.
சமூகநீதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ச.க. ஆட்சியில் தடைக்கற்கள் பெருமளவில் பிரளயமாய் எழுந்து நிற்கின்றன. அதனை முறியடிக்க, பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கையினர், மார்க்சியர்கள் அணிதிரள வேண்டியது முதன்மையான கடமையாகும். தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து, சமூகநீதியை மீட்டெடுக்க நாம் முழுவீச்சில் களமாடுவோம்!