பின்னிரவு... மணி 2...
இடம்: ரயில் நிலையம்...

ஜோலார் பேட்டை போவதற்காக நின்று கொண்டிருந்தேன்.யாருமே இல்லாதது போல இருந்தது... மங்கிய வெளிச்சத்தில் இருந்தது, நான் நின்று கொண்டிருந்த இடம். கோவையில் நிற்பது போலவே தெரியவில்லை. ஆங்காங்கே... சிலர் நின்று கொண்டும்... அமர்ந்து கொண்டும்... பழுப்பு நிற வெளிச்சத்தில் மயங்கி சரியும் தூக்கத்தை சரி செய்துக் கொண்டே இருந்தார்கள். நான் முதல் முறையாக "பொது"ப் பெட்டியில் ஏறக் காத்திருந்தேன். கூட்டம் குறித்து மனதுக்குள் ஒரு வகை பயம்தான்...நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லை... எப்படியும் ஏறி விடலாம் என்பதுதான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த தடக் தடக்...

ஒரு ரயில் மெல்ல மெல்ல ஊரிக் கொண்டு வந்து நிற்க.... ஈசல் புற்றில் இருந்து வெளி வந்தது போல... அத்தனை நேரம் எங்கு பதுங்கி இருந்தார்கள் என்று தெரியவே இல்லை. திடு திடுமென வந்த மொத்த கூட்டமும் எஞ்சினுக்குப் பின்னால் இருந்த பொதுப் பெட்டிகள் மூன்றையும் சூழ்ந்து கொள்ள, நான் விழித்திரையில் வேகம் கொண்டு நோக்கத் தொடங்கினேன். நிஜம் வேறு விதமாய்ப் பறந்தது. சிறு சிறு மூட்டை முடிச்சுக்களோடு அப்பப்பா..எத்தனை மனித முடிச்சுக்கள்..!!!!!. பார்க்கும் இடமெல்லாம் மனித தலைகள்.. கால் வைக்க, உடல் அசைக்க, திரும்பி நிற்க, அமர, பார்க்க, எதற்கும் இடம் இருக்க முடியாத ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் குவிந்து நிறைந்து வழிந்து தொங்கிக் கொண்டிருந்தார்கள் வட நாட்டு இளைஞர்கள்.

north east indians

நான் பார்த்த வரை ஒரு பெண் கூட கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. அத்தனை ஆண்களும் ஒரே மாதிரியாக க்ளோனிங் செய்தது போலவே இருக்க... நான் திக்கு முக்காடி தள்ளி வந்து நின்று கொண்டேன். "ஜோலார் பேட்டை" போகும் எண்ணத்தை நொடி நேரத்தில் கை விட்ட நான், கண்கள் விரிய மிதந்து உள்ளுக்குள் அப்படி ஒரு வகை மிரட்சி கொண்டு நின்று கவனிக்கத் தொடங்கினேன். என் மனதுக்குள் ஈக்கள் குழுமி தேடித் தொலைவது போல ஒரு பிரமை வந்தது. பெட்டிகளுக்குள் இனி இடமே இல்லை. அப்படி அடைத்து, தீப் பெட்டியை அடுக்கினாற் போல மனித தலைகள் தெரிய அதையும் தாண்டி கீழே நின்ற ஒரு 150 பேர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயற்சித்தார்கள். உள்ளே இருப்பவர்கள் இவர்களை உள்ளே விடாமல் தடுத்தார்கள். ஜன்னல் வழியே உள்ளே பார்த்துக் கொண்டே, கதவைத் திறக்கும்படி கெஞ்சியது ஒரு கூட்டம். உள்ளே இருப்பவர்கள் திறக்க விரும்பாமல் வெற்றுப் பார்வையை வீசினார்கள். அது, மிகப் பெரிய ஒரு சுயநலத்தைக் கொண்ட தருணம். மனிதனை மனிதன் தாண்டிப் போகும்.. தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும் என்ற கோட்பாட்டின் தோல் உரிக்கும் கணம். உள்ளே ரயில் முழுக்க நிறைந்து வழிந்தவர்களும், வெறுமையை சுமந்த கண்களோடும், உடலோடும்.. அதே வட நாட்டவர்கள்தான்.

வெளியே இருப்பவர்களோ வெறித்த பார்வையைக் கொண்டே காலால் எட்டி எட்டி உதைத்தார்கள் கதவை. இரண்டு பெட்டிகளை ஒரு வழியாக திறந்தும் விட்டார்கள். திறக்க திறக்க பத்து பத்து பேர் கூட்டாக நிற்க, பின்னால் இருந்து மூவர் ஒவ்வொரு பத்து பேரையும் உள்ளே துணிமூட்டையைத் தள்ளுவது போல முதுகுக்கு அணை கொடுத்து தள்ளினார்கள். அதாவது ஒரு பைக்குள் முடியாத அளவுக்கு துணிகளைத் திணிப்பது போல.. "ஆ. ஒ. ம்ம்ம்." என்று ஹிந்தியில் ஏதேதோ சொல்லிக் கொண்டும் கத்தித் கொண்டும் உள்ளே மெல்ல மெல்ல கூட்டம் நழுவிச் சென்றது. வறண்ட பாறையில் துடித்து துடித்து நகரும் மீன் கூட்டங்கள் போல... மூச்சு முட்ட பார்த்த நான் வியர்த்திருந்தேன். இவர்கள் எப்படி இன்னும் அத்தனை தூரத்தை ஒரு இஞ்ச் கூட நகராமல் கடப்பார்கள் என்று பெருத்த யோசனை வேறு என் தலையைக் குடைந்தது. அங்கும் இங்கும் ஓடுவதும், ஓடி ஓடி திறக்காத இன்னொரு கதவைத் திறக்க சொல்லி காலால் எட்டி எட்டி வெறி கொண்டு கத்துவதும்... அந்த இடம் அந்த பத்து நிமிடங்களில் வேட்டையாடி வாழ்ந்த மனித காலத்துக்குப் போய் விட்டது போல, நான் மிரண்டேன். மனதுக்குள ஆயிரம் வாள்கள் குத்திக் கிழிக்க தடுமாறி தடுமாறி நானும் ஓடி ஓடி கவனித்தேன்... வண்டி கிளம்பத் தொடங்கியது.

ஏனோ எனக்குள் ஒரு வித தவிப்பும்...இயலாமையும் சேர்ந்து கொண்டது. நான் தவித்தேன்.. மனதுக்குள ஆயிரம் பாதங்களின் திசை அறியா தடுமாற்றத்தை உணர்ந்தேன். வண்டி நகரத் தொடங்கி விட்டது. முண்டியடித்து... ஒரு காலை மட்டும் ரயில் கதவுகளில் பதித்தவர்கள் ரயிலில் ஏறியவர்கள் ஆகினர். அதுவும் வைக்க முடியாதவர்கள் நிலை தடுமாறி நகரும் ரயிலை முன் பின்னாகப் பார்த்து படபடத்து.... அங்கும் இங்கும் அலை மோதும் கால்களை அடக்கவே முடியாமல் சற்று தூரம் ஓடிக் கொண்டும் வேகமாக நடந்தபடியுமிருக்க .. ஒரு வயதான ஆள்.. உள்ளே தாழ்பாள் போட்டு "திறக்க முடியாது" என்று கூறிய கதவை பலம் கொண்டு ஓங்கி ஓங்கி தட்டியும் ஹிந்தியில் ஏதோ சொல்லி கத்தியும், அது பெரும் வெறியாக மாறி வேக வேகமாய் கையாலும் காலாலும் அடித்தும் உதைத்தும் தடுமாறி வண்டியோடு சேர்ந்து ஓடியும்... முடியாமல்... ஒரு கட்டத்தில் நின்று விட்டார். நின்ற பின் போகும் ரயிலையே வெறிக்கப் பார்த்த கண்களில் சிறிது கலக்கம் மிதந்தது. இயலாமைக்குள் நின்று விட்ட தூரத்தை, கடக்கவே முடியாதோ என்ற வருத்தம் அது என்றே பட்டது. மிகப் பெரிய வன்முறையை செய்து விட்டு எப்போதும் போல போய்க் கொண்டிருந்த ரயிலை நானும் மிகுந்த வேதனையோடு பார்த்த கணம் அது.

மழை பெய்யாமலே ஓய்ந்தது போல, "எதுவுமே தெரியாது" என்பது போல அந்த ரயில் முதுகைக் காட்டிக் கொண்டு வேகமாய் போய் விட்டது. பார்க்க பார்க்க காணாமல் போகும் மாயங்களின் நீட்சியென அந்த ரயிலின் மௌனம் சத்தமாய் கேட்டுக் கொண்டிருந்தது மனதில். ஆங்காங்கே ரயில் ஏறமுடியாமல் சிதறியவர்கள் எதுவுமே பேசிக் கொள்ளாமல்... வந்த வேகத்திலயே காணாமல் போய் விட்டார்கள்... மீண்டும் ஒரு கௌஹாத்தி எக்ஸ்ப்ரெஸ் வந்தால் அவர்கள் திரும்பக் கூடும்.

இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருந்த போதும் ஒரு காவலாளியோ...ஒரு ரயில்வே ஊழியரோ அங்கு வரவேயில்லை... ஏதோ ஒரு தனி தீவுக்குள் மாட்டிக் கொண்டது போல ஒரு வித இருண்மைக்குள் நான் பாதை தொலைந்தவனாக நின்று கொண்டிருந்தேன்... அடுத்த 10 நிமிடங்களில் சென்னை போகும் ரயில் வர அதில் ஏறிக் கொண்டேன். ஒரு ஓரத்தில் கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தது.... பொதுவாகவே ரயில் பயணத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக ரசிக்கும் நான் அன்று மிகவும் வருத்தம் கொண்ட மனநிலைக்குள் இருந்தே உணர்ந்தேன்... யார் இவர்கள் என்றொரு கேள்வி என்னை விடாமல் விரட்டியது.. எங்கிருந்து வருகிறார்கள்.. ஏன் இப்படி..? தங்களைத் தாங்களே மனிதர்கள் போல உணர மறுக்கிறார்களா... இல்லை... காலை 7 மணி முதல் இரவு 9 வரை (குறைந்தபட்சம்) விடாமல் வேலை வாங்கி சொற்ப சம்பளம் கொடுத்து நாம் அப்படி மாற்றி விட்டோமா.?... எங்கும் படுத்துக் கொள்கிறார்கள்.. எந்த உணவும் அவர்களுக்கு ஒத்துக் கொள்கிறது.. முகவரியே இல்லாமல் ஓர் அடையாளமின்றி உலவும் இந்த இளைஞர்கள் கனவற்றவர்களா.?

எல்லா தவறுகளுக்கும் இப்போது அவர்களை கை காட்டித் தப்பிக்கும் பழக்கம் நமக்கு அதிகமாகி விட, அவர்களும் ஆங்காங்கே சில தவறுகள் செய்யாமல் இல்லை. திருட்டு முதல் கொலை வரை எல்லாமே நடக்கத்தான் செய்கிறது. தவறு செய்பவன் எல்லா ஊரிலும் இருக்கத்தான் செய்கிறான்... நாம் செய்யும் தவறுக்கு ஒரு பின்னணி இருப்பது போல அவர்கள் செய்யும் தவறுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது... அவன் வடநாட்டான் என்பதாலேயே அவன் குற்றம் செய்வதாக ஒரு கருத்தியல் உலவுவதையும் நினைக்கத்தான் வேண்டி இருக்கிறது... பொதுவாகவே தன் சொந்த இடத்தை விட்டு எந்த மனிதனும் அத்தனை சீக்கிரத்தில் புலம் பெயர மாட்டான். இவர்கள் கொத்து கொத்தாய்... கூட்டம் கூட்டமாய்.. பணம் தேடிக் கொண்டு வருகிறார்கள்... வறுமை இவர்களை அமர விடுவதில்லை...நான் பார்த்த வரை.. பஞ்சம் பிழைக்க வந்த எந்த ஒரு வட நாட்டு இளைஞனும் கேளிக்கையில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. அதிகபட்சம், வாரம் ஒரு பீர்... அதுவே அத்தனை இறுக்கத்தையும் இறக்கி வைப்பதாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ... எங்கெங்கு திரும்பினும் ஹோட்டெல்லா... அங்கு சப்ளைக்கு அவன்தான் நிற்கிறான்... பெட்ரோல் பங்கா... அவன் தான் வண்டியை நிரப்புகிறான்... கட்டட வேலையா... அவன்தான் நிறைந்து நிற்கிறான்... கூலி குறைவு... எத்தனை வேலை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்... திருப்பி எதுவுமே கேட்க மாட்டான் என்று நம்மூர் முதலாளிகளும் இவர்களை சுரண்டி சுரண்டி பிழிந்து விடுகிறார்கள்... அத்தனையையும் தாங்கிக் கொள்ளும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் இருக்கலாம்.. உறவு இருக்கலாம்.. மனைவி இருக்கலாம்.. காதலி இருக்கலாம்... ஆனால் எதையுமே வெளிக் காட்டிக் கொள்ளாமல் சொல்வதை மட்டுமே மாடு மாதிரி செய்யும் இவர்களை நாம் எப்போதும் போலவே கடந்து கொண்டுதானிருக்கிறோம்... கண்டு கொள்ளாமலே... ஒரு கேளிக்கைப் பொருள் போல ஒரு பரிகாச காட்சி போல இவர்களின் தோற்றத்தை நாம் வரையறுத்து வைத்திருக்கிறோம்...

இவர்களின் தேவை என்ன.. எங்கிருந்து வருகிறார்கள்... எங்கே தங்கி இருக்கிறார்கள்.. யார் வருகிறார்.. யார் போகிறார்.. எந்தத் தகவலுமே நம் அரசிடம் இல்லை என்றே நம்புகிறேன்... இவர்கள் எத்தனை பாவமாக இருக்கிறார்களோ... அத்தனை மூர்க்கமாகவும் இருக்கிறார்கள்..வினையும் எதிர்வினையும் மாறி மாறி வந்துதானே தீரும்... நாம் இவர்களை மதிப்பதும் இல்லை.. கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை.. அவர்களும் எதையும் செய்து விடும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். இந்த இடம் பெயருதலில் அவர்களின் வாழ்வும் இருக்கிறது.. அவர்களைப் பற்றிய அந்நிய பயமும் நமக்கு இருக்கிறது... இன்னும் சொல்லப் போனால் இவர்களில் யாரேனும் சிலர் எந்தத் தவறையும் செய்து விட்டு சுலபமாக அவர்களின் இருப்பிடம் நோக்கிப் போய் விட முடியும். கண்டு பிடிக்கவே முடியாது. காரணம் எந்த அடையாளமும் இவர்களுக்கு இல்லை... அரசு இவர்களின் வருகையை கணக்கில் கொள்வதில்லை... அடையாளமற்ற தோற்றத்தில் வறுமைக்கு வந்தவர்களாகிப் போகிறார்கள்... எப்போது வேண்டுமானாலும் வரலாம்... எப்போது வேண்டுமானாலும் போகலாம்... எங்கும் நிரந்தர வேலை இல்லை... ஒரு தொடர் பயணம் போல இவர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதற்குள் என் மனம் போகவில்லை... அது எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் குணம்.. நான் அதிகமாக சிந்திப்பது. நாம் இவர்களை எப்படி நடத்துகிறோம்... குறைந்த பட்சம் மனிதாபிமானத்தோடாவது நடத்த வேண்டும். பொதுப் பெட்டி என்றால் எத்தனை டிக்கெட்டை வேண்டுமானாலும் ரயில்வே கொடுத்து விடுமா... அதாவது... நாங்கள் டிக்கெட் கொடுத்துக் கொண்டே இருப்போம்... இடம் இருந்தால் ஏறிக் கொள்.. இல்லை என்றால் தொங்கிக் கொண்டு போ.. அதுவும் முடியாதென்றால் நாங்கள் பொறுப்பல்ல என்பது போல ஒரு வகை மெத்தனத்தை கையாள்வதாகவே நான் கருதுகிறேன்...

ஒரு நாள் தனி நாடு கேட்கும் நிலைமைக்கு அவர்கள் குவிந்து விடப் போகிறார்கள். அப்போது. பட்டிமன்றம் வைத்து வட இந்தியர்களுக்கு நம் நாட்டில் இடம் தரலாமா வேண்டாமா என்று பேசிப் பிரயோசனம் இல்லை. அவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும். அதே சமயம் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்... இல்லை என்றால் வராதே என்றாவது சொல்லி விட வேண்டும். எதை சொன்னாலும் செய்வான் என்பது அவனின் பசி... இதைத்தான் சொல்ல வேண்டும் என்பது நமது பண்பாடு.. வந்தவனை வாழ வைத்தே பழகிய தமிழன், இன்னும் அப்படியே இருக்க வேண்டும்.

ஜோலார் பேட்டை சென்று இறங்கிய பிறகும் ஊசலாடிக் கொண்டிருந்தது. கதவை அடித்து உதைத்து ஒன்றுமே செய்யமுடியாமல், கண் கலங்கி கத்திக் கொண்டே நின்ற அந்த வட நாட்டு ஆளின் வருகைக்கு ஏதோ ஓர் உயிர் காத்துக் கொண்டு இருக்கலாம் எங்கோ என்ற உண்மை.

- கவிஜி

Pin It