கீற்றில் தேட...

ஆன்மீகவாதிகள் எல்லோரும் பாசிசத்தின் நிழலில் இளைப்பாறுவதில்லை. அவர்களுக்கு ஆன்மீகம் என்பது மனநிம்மதிக்கான ஒரு இடமாக, தங்கள் வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தவும் அதை கடவுள் என்ற மீ உயர் சக்தி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையிலுமே ஆன்மீகத்தில் நாட்டம் கொள்கின்றார்கள்.

இதைத்தான் மார்க்ஸ் “மதத்தின் துயரம் என்பது அதே சமயத்தில் உண்மையான துயரத்தின் வெளியீடாகவும், உண்மையான துயரத்துக்கெதிரான ஆட்சேபணையாகவும் இருக்கின்றது. மதம் என்பது எப்படி உணர்ச்சியற்ற நிலைமையின் உணர்ச்சியாக இருக்கிறதோ, அதே போன்று இதயமற்ற உலகத்தின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கின்றது. அது மக்களுக்கு வாய்த்த அபினி" என்றார்.

அதாவது "மக்களின் யதார்த்தமான ஆனந்தத்துக்காக, மக்களின் மாயையான ஆனந்தமாகவுள்ள மதத்தை ஒழித்தாக வேண்டியிருக்கின்றது. அதன் நிலையைப் பற்றிய மாயைகளை விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாயைகளுக்குத் தேவைப்படும் ஒரு நிலையையே விட்டொழிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான்” என்றார்.rajini and yogi 400சமூகச் சூழல் பெரும் வர்க்க சுரண்டலாகவும் ஒடுக்குமுறையாகவும் இருக்கும்வரை மனிதர்கள் கடவுள் பற்றிய சிந்தனைகளை விட்டொழிக்க மாட்டார்கள். ஒரு சாதாரண ஆன்மீகவாதியின் நம்பிக்கை இவ்வளவுதான்.

ஆனால் மதவெறியர்களின் நம்பிக்கை அதைத் தாண்டியது.அவர்களிடம் இருப்பது ஆன்மீக உணர்வல்ல. அது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் மறைக்க கடவுளையும் மதத்தையும் ஒரு கேடயமாக சமானிய உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் தந்திரம்.

ஆளும் வர்க்கம் வெறும் ராணுவத்தையும் காவல்துறையையும், நீதிமன்றங்களையும் மட்டுமே நம்பி ஆட்சி செய்வதில்லை. கோடானகோடி மக்களை அப்படி ஆளும் வர்க்கத்தின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் ஏற்றுக் கொள்ள செய்வது சாத்தியமே இல்லை.

அதனால்தான் அது கருத்தியல் ரீதியாக மக்களை தங்கள் மீதான வர்க்கச் சுரண்டலையும் ஒடுக்குமுறையும் ஏற்றுக் கொள்ள செய்ய மதம், சாதி, இலக்கியம், தத்துவம் போன்றவற்றின் மூலம் வேலை செய்கின்றது. அது மிக வலிமையாக மக்கள் மீது தொழிற்படுகின்றது.

அதுவும் மக்கள் மத்தியில் செல்வாக்காக உள்ள ஒருவர் தனது கொள்கையாக பாசிசத்தை மதவாதத்தை முன்னெடுக்கும் போது அந்த நபரைப் பின்பற்றும் மக்கள் எந்தவகையான சுய பரிசீலனையும் செய்யாமல் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இதை நன்றாக உணர்ந்துதான் சினிமா, கிரிக்கெட் போன்றவற்றில் புகழ்பெற்ற நபர்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் தங்கள் பக்கம் இழுத்து அவர்கள் மூலமாக இந்து மதவெறிப் பாசிசத்துக்கு ஒரு போலியான அடையாளத்தை உருவாக்கி வருகின்றது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் குஷ்பு, நமீதா, கவுதமி, ராதாரவி, நெப்போலியன், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, எஸ்வி சேகர், மதுவந்தி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் இளையராஜா, தினா, தயாரிப்பாளர் நடராஜன், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் என பலர் பாஜகவில் இணைந்தனர்.

ஆனால் இவர்களுக்கு பெரிய அளவில் ஓட்டுக்களை பெற்றுத் தரும் வலிமை இல்லை என்பது பாஜகவிற்கு தெரியும். அதனால்தான் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பெரிய அளவு செல்வாக்குள்ள நடிகர் ரஜினியை இழுக்கப் பார்த்தது.

ஏற்கெனவே மக்கள் மத்தியில் மதவெறி பிடித்த கட்சி என்று அம்பலமான பிஜேபிக்கு அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ரஜினி நேரடியாக பிஜேபியில் சேர்ந்து ஓட்டு கேட்கப் போனால் இதுவரை ரஜினி உருவாக்கி வைத்திருக்கும் ‘எல்லா மக்களுக்குமான நடிகர்’ என்ற பிம்பத்தை இழக்க வேண்டி வரும் என்பது. அது ரஜினிக்கும் கூட சிக்கலான ஒன்றாகவே இருந்தது.

அதனால்தான் தனியாக கட்சி ஆரம்பிப்பதே சிறந்தது என முடிவெடித்து அரசியல் தரகன் மணியனுடன் சேர்ந்து “வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று ஊளையிட்டார்.

சிஸ்டத்தை சரி செய்ய 70 வயது வரை காத்துக் கிடந்த ரஜினி 'காடு வா வா என்கின்றது வீடு போ போ' என்கின்றது என்று சொல்லும் வயதில் கட்சி ஆரம்பித்து சிஸ்டத்தை சரி செய்யக் கிளம்பினார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவேன் என்று ஊளையிட்டுக் கொண்டிருந்த நரி உண்மையிலேயே அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தது ரஜினி தாத்தாவின் கிழட்டு ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட செய்தது.

ஆனால் இயல்பிலேயே அற்பவாதியான ரஜினி எங்கே அரசியலுக்கு வந்தால் இத்தனை நாள் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் இழக்க வேண்டி வருமோ, நோகாமல் கையையும் காலையும் ஆட்டி பல நூறு கோடிகள் சம்பாதித்த தன்னை வெய்யிலிலும் மழையிலும் வதைத்து விடுவார்களோ எனப் பயந்து உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடும் தனது முடிவில் இருந்து மீண்டும் பின்வாங்கினார்.

‘ஆண்டவன் கட்டளையிட்டால் வருவேன்’ என்று பம்மாத்து செய்துவந்த ரஜினி, அரசியலுக்கு வந்தால் சிக்கிரம் ஆண்டவனிடமே போய்விடுவோமே எனப் பயந்து பின்வாங்கினார்.

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே கீழ்மட்டம்வரை கட்சி அமைப்புகளை வலுவாக கட்டி வைத்திருக்கும் திமுக, அதிமுக போன்றவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பெரும்பான்மையாக வெற்றி பெற முடியுமா? என்ற நிதர்சனமும் ரஜினிக்கு கிலியை ஏற்படுத்தி இருந்தது.

பணம், புகழ் எல்லாவற்றையும் இழந்து அனைத்துக் கட்சிகளிலும் தனக்கு உள்ள நண்பர்களை எல்லம் பகைத்துக் கொள்ளவும் ரஜினி விரும்பவில்லை.

ஆனால் ரஜினியின் ஆழ்மனதில் தூங்கிக் கொண்டிருந்த மதவெறியனால் சும்மா இருக்க முடியவில்லை. அவ்வப்போது தனது நச்சு நாக்கை நீட்டிக் கொண்டே இருந்தார்.

ஸ்டெரிலைட் போராட்டத்திற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று சொன்னார், பெரியார் மீது அவதூறாக குற்றச்சாட்டை முன்வைத்தார். CAA, NPR, NRC போன்றவற்றை ஆதரித்துப் பேசினார். ரஜினியின் இந்த எல்லா நடவடிக்கைகளும் சினிமாத்தனத்துடன் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டதாகவே இருந்தது. அவர் முன்வைக்கும் அனைத்துக் கருத்துக்களும் சற்றேறக் குறைய அல்ல, முழுவதுமாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலாகவே இருந்தது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கருத்தியலுக்கும் எதிராகவே ரஜினியின் கருத்தியல் இருந்தாலும் ரஜினியின் சினிமா மார்க்கெட் பெரிய அளவில் பாதிப்படையவில்லை என்பது தமிழ்நாட்டு மக்கள் ரஜினியின் நடிப்பை ஏற்றுக் கொண்ட அளவிற்கு ரஜினியின் பாசிச கருத்துக்களை ஆதரிக்கவில்லை என்பதைத்தான் நிரூபித்தது.

அந்த தைரியம்தான் இன்று ரஜினியை வெளிப்படையாக ராமர் கோயில் கட்டுவதைப் பார்வையிட்டு அதை ஆதரிப்பதையும், தன்னைவிட 20 வயது குறைவான இந்துமதவெறி பாசிஸ்ட் ஆதித்யநாத்தின் காலில் ஒரு அடிமையைப் போல விழவும் செய்திருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாடே ரஜினியை காறித்துப்பிய பிறகு இது குறித்து விளக்கமளித்த ரஜினி “ஒரு சந்நியாசியாக இருக்கட்டும், யோகியாக இருக்கட்டும் அவர்கள் நம்மைவிட சின்ன வயதுகொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்” என்று தனது ஈனச் செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார்.

யோகி ஆதித்யநாத்தின் யோக்கியதை என்னவென்று இந்தியாவிற்கே தெரியும். அவர் நடித்த ஆன்மீக ஆராய்ச்சிப் படமாகட்டும் உபியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையாகட்டும் எல்லாமே அப்பட்டமாக நடைபெற்றவை. ஆனால் ரஜினி போன்ற பாசிஸ்ட்டுகளால் யோகி போன்ற முரட்டு பாசிஸ்ட்களை ஆதரிக்க முடிகின்றது. அவர்களின் காலில் கூட விழ முடிகின்றது.

இதன் மூலம் ரஜினி சொல்ல வருவது தான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும், வன்முறையாக பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் கட்டப்படும் ராமர் கோயிலை ஆதரிக்கின்றேன் என்பதும் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர எல்லா தகுதியும் ஆதித்யநாத்துக்கு உள்ளது என்பதும் தான்.

அப்பட்டமாகவே தானொரு இந்து மதவெறிப் பாசிசத்தை ஆதரிக்கும் நபர் என்பதை ரஜினி திரும்ப திரும்ப வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். ஆனால் தமிழ்நாட்டிலேயே வேகாத பருப்பை பிஜேபி இந்தியா முழுவதும் கடைவிரிக்கப் பார்க்கின்றது என்பதுதான் ஒரு துன்பியல் நகைச்சுவை.

ரஜினி இமயமலைக்குப் போனாலும், பாபாஜியைப் பார்த்தாலும், உபி போனாலும், யோகியின் காலில் விழுந்தாலும் தமிழ்நாட்டில் அதனால் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்த முடியாது.

இந்தியா முழுவதும் இந்து மதவெறிப் பாசிசத்துக்கு எதிரான அலை வலுவாக அடித்துக் கொண்டு இருக்கும்போது கோமாளி ரஜினியை வைத்து அதை மடை மாற்றி விடலாம் என தப்புக்கணக்கு போடும் நாக்பூர் சதிகாரக் கும்பலுக்கு நிச்சயம் மக்கள் புத்தி புகட்டுவார்கள்.

- செ.கார்கி