kalam siachen

ஜம்மு. இந்தியா- பாக் எல்லைப் பிரதேசம். பிரேத அமைதியில் எரியும் பளிச் வெளிச்சம். ஆயிரம் வாட்ஸ் லைட்டெரிஞ்சாலும் நாம கண்ண மூடிகிட்டா இருட்டுதான்டா செல்லத்தொரன்னு தம் கட்டி டியூட்டில நின்னுகிட்டு இருக்கும்போதுதான் திடீர்னு பதுங்கு குழிக்குள்ளார வந்துட்டார் நம்ம கலாம் அய்யா.

எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. (அதெப்படி ஓடும்னு ரொம்ப நாளா டவுட்டு). தூக்கச்சடவுல பரிதாபமா நின்னவன்கிட்ட பொசுக்குனு கேப்பாரா கேள்வி? என்னப்பா தம்பி செல்லத்தொர கனவு கண்டியான்னு... அனுஷ்கா கனவை கண்டேன்னா சொல்ல முடியும்?

இல்லிங்கய்யா தூக்கமே இல்ல அப்புறமா எப்படிங்ய்யா கனவு காணன்னு சொல்லி வைச்சன். .

விட்டாரா மனுசன்? ஏன் தூக்கமில்லன்னு கேட்டாரு... அவர்கிட்ட போய் அய்யா டியூட்டி முடிஞ்சும் ரெஸ்ட் நேரத்துல சித்ரவதை செய்றாங்க ஆபிசருங்கன்னு சொன்னா என்னான்னு யோசிச்சன். ஆனா முசுலிமா பாத்து பாத்து நிக்க வைச்சு கார் ஏத்துன மோடியவையே கேள்வி கேக்காத மனுஷன், அவங்கூர் மீனவன் செத்ததுக்கே ஒன்னும் பேசாத அப்பாவி மனுஷன் இத கேட்டு என்ன செய்திடப்போறார்னு ஒரு ரோசன. நான் தூங்கிட்டா பாகிஸ்தான்காரன் உள்ளார பூந்துடுவான். அப்புறமா நம்ம நாட்ட வல்லரசாக விடாம செய்திடுவாங்கன்னு பெருமையா சொல்லிட்டு அய்யாவ பார்த்தா அவர்க்கு செம்ம கோவம்...

அட அற்பமே, ஒனக்குதான் அணுகுண்டு செய்து கொடுத்திருக்கேனே அப்புறமா ஏன் பயப்படனும்னு கேட்டாரு.

நாம போட்டா அவனும் போடுவானே அய்யா, அவன்கிட்டயும்தான் இருக்குதேன்னு சொன்னன்.

முட்டாள் பதரே, பாகிஸ்தான் தம்மாத்துண்டு நாடு... ஒரு குண்ட போட்டாலே போதும். திருப்பி அடிக்க அங்கன ஆள் மிஞ்சாதுன்னு சொன்னாரு பாருங்க. அட ஆமால்ல?மேன்மக்கள் மேன் மக்கள்தான்னு நெனச்சிகிட்டாலும்

மனசுக்குள்ள நல்ல வேள சைனா பார்டர்ல இல்ல நாமன்னு ஒரு அல்ப மகிழ்ச்சி.

இல்லிங்கய்யா எங்க ஆபிசர் திட்டுவாருன்னு சொன்னன். அந்தாளயும் இப்பதான் கனவு காண சொல்லிருக்கன், நீயும் கனவுல 2020ல நம்ம நாட்ட வல்லரசாக்குற வழிய பாருன்னு ஒரே அட்வைசு... ஒரே கொயப்பமாகிருச்சு எனக்கு. என்னடா எந்தப்பக்கம் போனாலும் கேட்ட போடுறாறே இந்தாளு நல்லவரா கெட்டவரான்னு ஒரே டவுட்டு.

அய்யா கெளம்பும்போது ஒரே ஒரு ரெக்வெஸ்ட்னு சொன்னன்... என்னான்னு பார்த்தாரு ஒரு பாங்கா. .

அய்யா, இந்த பேங்க்காரங்கள மட்டும் கனவு காண சொல்லிடாதீங்க, ஏன்னா ஒன்னாம் தேதி சம்பளம் போடாம தூங்கிடப்போறானுங்க. எம்பட புள்ளங்களுக்கு தூக்கமும் தெரியாது கனவும் தெரியாது பசி மட்டும்தான் உணரும்னேன்.

அத்தோட அணு குண்டல்லாம் எம்பட புள்ளங்களுக்கு சாப்புட புடிக்காதுன்னு சொன்னதும் அய்யா அப்படியே மெர்சலாகி மவுனமாகிட்டாரு.

அய்யாவோட வந்தவங்கதான் என்னய தேச துரோகின்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க பாகிஸ்தான்காரன் என்னடான்னா என்னய இந்தியன் எதிரின்னு சுடுறான். இவிங்க என்னடான்னா துரோகின்னு சொல்றாங்களேன்னு எனக்கு மறுபடியும் ஒரே கொயப்பம். உள்ளார எனக்கு நானே நான் நல்லவனா கெட்டவனான்னு ஒரே கொடச்சல்.

இப்ப அய்யாவோட அன்பர் ஒருத்தர் சொன்னாரு,

அய்யாதான் ஊனமுற்ற குழந்தைகளுக்கு எடை குறைவான செயற்கை கால்களை செய்தார்னு. நம்ம வாய் ஒரு பொசகெட்ட நாய் மாதிரி... நெழலை பாத்தாலே கொ லைக்கும் . . நேரா பாத்தா விடுமா என்ன?

அய்யா தீர்க்கதரிசனமா கூடங்குளத்துல நாளைக்கே ஒரு வெபத்து நடந்தா செத்தது போக மிச்ச மீதி ஊனமாகுற புள்ளைங்களுக்கு இப்பவே செயற்கை கால், கைலாம் கண்டுபிடிச்சிட்டாரு போலன்னு சொல்லிகிட்டுதான் இருந்தன்... பொளேர்னு ஒரு அற என் கன்னத்துல...

ஜிவ்வுனு ஏறுன கோவத்துல விசயகாந்த கண்ணுல ஏத்திகிட்டு முழிச்சி பார்த்தா அத்த விட கோவத்துல முறைச்சிட்டு நிக்கான் எங்காபிசர். டியூட்டில தூங்கவா செய்றன்னு அசிங்கம் அசிங்கமா கேக்குறான்.

இல்ல சார் கலாம், கனவுன்னு சொன்னா சரக்கடிச்சியான்னு இன்னும் வண்டி வண்டியா திட்டுறான்.

கலாம் அய்யா சொன்னாரேன்னு ஒரு கனவு கண்டது தப்பாய்யா? நம்ம நாட்ட வல்லரசாக்கத்தான் செல்லத்தொர தூங்குனான் கனவு கண்டான்னு யாராச்சும் எங்க ஆபிசர்க்கு எடுத்து சொல்லுங்களேன்...

இவன்- கலாமின் பட்டாளச்செறகு...

முக்கிய குறிப்புகள் -

  • நாட்டை வல்லரசாக்கும் முன் நல்லரசாக்குங்கள் என்பதே எமது அவா...
  • ராணுவத்துக்கு அதிக நிதியும் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி குறைப்பதும் நல்லரசுக்கு அழகல்ல.
  • இந்த வருட பட்ஜெட்டில் ராணுவத்துக்கு மட்டும் 2லட்சத்து 29ஆயிரம் கோடி. கடந்த வருடத்தை விட 12. 5% அதிகம். ஆனால் மருத்துவம், கல்விக்கு கடந்த வருடத்தை விட குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வெற்று கனவுகளல்ல... நிகழ்கால போராட்டங்களே எதிர்காலத்தை நிச்சயிக்கும். ஆனால் நம்மாட்கள் வல்லரசு கனவு காண்கிறேன் என்று இன்றைய அநியாயங்களை கண்டும் காணாமல் உறங்கி கிடக்கிறான் என்னைப்போலவே...
  • இதற்கு மேலேயும் புரிந்து கொள்ளாமல் வசை பாடுபவர்கள் பாடலாம். மேடை இலவசமே...
Pin It