hardik patel agitation

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு ஹர்திக் படேல் என்கிற இளைஞர் தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆனால், இந்தப் போரட்டம் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான போராட்டமல்ல, இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் என்கிற உண்மை, தற்போது தெரிய வருகிறது. பாஜக மத்தியில் ஆட்சி செய்யும் போது, பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில், இப்படி ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் இருக்கின்றன என்கிற கோணத்தில் செய்திகள் வெளிவருகின்றன. ஏனென்றால், அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த முடியாது. காவல்துறையினரே சில கடைகளை அடித்து நொறுக்கினர் என்கிற செய்திகளை தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த சமஸ் அவர்களின் கட்டுரை எடுத்துக்காட்டியது. பாஜக எதற்காக இப்படி ஒரு போராட்டத்தைத் தூண்டி விட வேண்டும்?

இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமென்றால், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தேவந்திரகுல வேளாளர் மாநாட்டில் அமித்ஸா பேசிய கருத்துக்களை நாம் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு சாதியும் தன் சாதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். சாதியில் உள்ள நல்ல விசயங்களின் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். அந்த வகையில், தாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல... எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நான் பாராட்டுகிறேன் என்றார். இந்தியாவில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் முன்மாதிரியாக தேவந்திர குல வேளாளர் சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்தை போல் அனைத்து சாதிகளும் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தினார் அமித்ஸா.

சாதியை உயர்த்திக் கொள்வது எப்படி?

சாதியை உயர்த்திக் கொள்வது என்றால் என்ன? அது சாத்தியமா? சாத்தியம் என்கிறார் அமித்ஸா. ஒவ்வொருவரும் தன் சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து விடவேண்டும். அதை எந்த சமூகம் தாமாக முன் வந்து தனக்கான உரிமைகளை இழக்கிறதோ, அவர்களை பாஜக கொண்டாடும். அதற்கான அடித்தளம்தான், மதுரையில் நடந்த தேவந்திர குல வேளாளர் மாநாட்டில் போடப்பட்டது. பட்டியல் சமூகம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் தேவந்திரகுல வேளாளர் சமூகம் தன்னை பட்டியல் சமூகத்திலிருந்து நீக்கி விடு என்று கோரிக்கை வைப்பது, விந்தையிலும் விந்தையாக இருக்கிறதல்லவா! ஏன்? இது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

தேவந்திரகுல வேளாளர் அரசியலும் இந்துத்துவ மனநிலையும்

தென்தமிழகத்தில் அடர்த்தியாக இருக்கும் பள்ளர் சமூக அமைப்புகள் தேவந்திரகுல வேளாளர், மள்ளர் என்கிற பெயர்களே தங்களின் பெருமை மிகு அடையாளம் என்று கருதுகின்றனர். இந்தப் பெயரின் மூலமாக தங்களுடைய வரலாற்றை மீட்க முடியும் என்பது அவர்களின் வாதம்.

தேவந்திர குல வேளாளர்கள் என்கிற பெயர் ஏன்?

பள்ளர்கள் அடிப்படையில் விவசாய குடிகள். விவசாயிகளான இவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்த நிலம் மருதம் (வயலும் வயல் சார்ந்த பகுதியும்). ஆகவே, இவர்கள் மருத நில மக்கள். மருத நிலத் தலைவன் இந்திரன். தங்கள் திணையின் தலைவன் இந்திரனின் புத்திரர்கள் தாங்கள் என்று சொல்லும் வண்ணம் தங்களை இந்திர குலத்தோர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இந்திரன் தேவலோகத்தில் இருப்பதால், தேவந்திர குல வேளாளர்கள் என தங்களுக்குப் பெயரிட்டுக் கொண்டார்கள். இதுதான் பெயருக்கான காரணம்.

தமிழகத்திலுள்ள முற்போக்கு இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகளின் போராட்டங்களில் பள்ளர்களின் பங்களிப்பை தனி வரலாறாக எழுதலாம். இந்த சமூகம் தேசிய இன உணர்வு, மொழி உணர்வு, சாதி ஒழிப்புப் போராட்டம், வர்க்கப் போராட்டங்கள் என தமிழகத்தின் மய்ய வாழ்வாதாரப் போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் தன்னை இணைத்துக் கொண்டது என்றால் அது மிகையல்ல.

இந்த பள்ளர் சமூகம்தான் தற்போது ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி, அமித்ஸா, எச்.ராஜா ஆகியோரை வைத்துக் கொண்டு, தங்களை உயர்ந்த சாதியாக அறிவிக்கவும், தாழ்த்தப்பட்ட சாதிப் பட்டியலிருந்து நீக்கவும் கோரிக்கை வைக்கிறது. இந்தக் கோரிக்கையானது, பள்ளர் சமூக மக்களின் சமூக நீதி வரலாற்றை நேர் எதிராக திருப்பி பயணிக்கச் செய்யும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிப் பெயர் மாற்றமும், சாதிப் பெருமிதமும்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரே ஆயுதம் சாதி ஒழிப்பே என்பதுதான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் காட்டிய வழி. ஆனால், சில தாழ்த்தப்பட்ட அமைப்புகள், சாதியைப் புனரமைத்தலே தங்களின் வளர்ச்சிக்கான வழி என்று தீர்மானித்திருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. அதன் விளைவே, தங்கள் சாதியின் பெயரை தேவந்தரகுல வேளாளர் என்று சொல்லிக் கொள்வது. அவ்வாறு சொல்லிக் கொள்ளும் போது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் மற்றவர்களுக்கு உணர்த்துகிறார்கள்.

amitshah tamizhisai

இது போன்ற அரசியல் மூலமாக, தங்களை ஆதிக்க சாதியின் நிலைக்கு உயர்த்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களில் பள்ளர்கள் மட்டுமல்ல, சக்கிலியர்களும் தங்களை அருந்ததியர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டனர். அருந்ததியர் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன?

வானத்தில் நட்சத்திரமாக இருக்கும் பத்தினி தெய்வம் அருந்ததியின் வாரிசுகள் நாங்கள் என்று கூறிக் கொள்ளும் விதமாகதான் தங்களை அருந்ததியர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள்

சமீபத்தில் வன்னியர் சமூக மாநாட்டில், வன்னியர்கள் அனைவரும் சிவன் பார்வதியின் குழந்தைகள். அக்னியில் இருந்து வந்தவர்கள் என்று பெருமைபடக் கூறினார்கள். ஆசாரி சமூகத்தினர் தங்களை விஸ்வகர்மா என்று வடமொழிப் பெயருடன் அழைப்பதை பெருமையாக கூறிக் கொள்கின்றனர். இதற்கு ஆதாரமாக, மகாபாரதத்தில் தங்கள் சமூகம்தான் தேர் செய்து கொடுத்தது என்கி்ன்றனர்.

கோனார், இடையர், ஆயர் என்று அழகிய தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்பட்ட சமூகத்தினர், யாதவர் என்கிற வடமொழிப் பெயரை பெருமையாக இட்டுக் கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல இடைநிலை சமூகங்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சத்திரியர் என்று சேர்த்துக் கொள்வதை பெருமையாக கருதுகின்றனர்.

சாதிப் பெயர் மாற்றம் என்கிற செய்தி உணர்த்தும் உண்மையை நாம் ஆராய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் சாதிப் பெயர் சமஸ்கிருத உச்சரிப்புடனும் வானுலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அதன் விளைவே, இந்திரகுலம், அருந்ததியின் வாரிசுகள், சிவன் பரம்பரை என்று அவர்கள் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இந்த மனநிலை என்பது பகுத்தறிவு சிந்தனையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறது. புரட்சியிலிருந்து அவர்களை தள்ளிப் போகச் செய்கிறது. ஆகவே, அமித்ஸாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் இந்த சமூகங்களை கைப்பற்றிக் கொள்ள வசதியாக இருக்கிறது.

சாதிப் பெருமிதத்தின் முதற்படி பெயர் மாற்றம். அதுவும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயர். அடுத்தநிலை இந்துத்துவ அமைப்புகளுடன் ஒன்றிணைவது. அதுதான், தேவந்திரகுல வேளாளர் மாநாட்டில் நடைபெற்றது. இந்துத்துவ மனநிலையின் வெளிப்பாடுதான் இடஒதுக்கீட்டை மறுப்பது. அதுதான் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் அரசியல்

பள்ளர் அரசியலும் பாஜகவும்

முதுகளத்தூர் கலவரம், காவல்துறை அடக்குமுறைக்குப் பலியான தாமிரபரணி சம்பவம், கொடியன்குளம் சம்பவம், மீனாட்சிபுரம் கலவரம், உத்தபுரம் சுவர் பிரச்சனை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு என பள்ளர் சமூகத்தின் மீது அரசும், சாதிய அமைப்பும் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் ஏராளம்.

இந்த சம்பவங்கள் நடந்தபோதெல்லாம், பாதிக்கப்பட்ட பள்ளர்கள் பக்கம், இடதுசாரிகளும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளும்தான் நின்றனர். அப்போதெல்லாம் வாய்மூடி வேடிக்கைப் பார்த்த பாஜக, தற்போது பள்ளர்களை தேவந்திர குல வேளாளர்கள் என்று தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

உத்தபுரம் சுவர் பிரச்சனையில் வெள்ளாளர்கள், பள்ளர்களை ஊருக்குள் வரக்கூடாது என்று கூறினார்களே, அப்போது பள்ளர்கள் ஆண்ட பரம்பரை என்று கூறி, அவர்களை ஊருக்குள் கூட்டி வந்ததா பாஜக? அந்தப் பிரச்சனையில், பள்ளர் சமூக மக்களுக்கு ஆதரவாக நின்ற இடதுசாரிகளை கலவரக்காரர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தினார்கள் இந்துத்துவா அமைப்புகள். பள்ளர் சமூகத் தலைவர்களை கல்லைக் கொண்டு எறிந்த இடைநிலை சாதியினரை பாஜக தடுத்ததா? யார் பக்கம் நின்றது பாஜக? தாமிரபரணி ஆற்றில் பள்ளர்களின் சடலம் மிதந்த போது, காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து பாஜக அறிக்கை விட்டதா?

. சமீபத்தில் பரமக்குடி கலவரத்தில் 7 பள்ளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பள்ளர்களை சுட்டுக் கொன்ற அரசையும், காவல்துறையையும் கண்டித்து பாஜக அறிக்கை விடுத்ததா?

பள்ளர், பண்ணாடி, காலாடி, குடும்பர் உட்பட 7 சாதிகளை இணைத்து தேவந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்பதை அமித்ஸா பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறார். சாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். இதே அமித்ஸா பள்ளரையும், பார்ப்பனரையும் ஒன்றாக இணைத்து ஒரே சாதியாக அறிவிப்பாரா? கள்ளரையும், பள்ளரையும் ஒரே சாதியாக இணைத்து கள்ளரும், பள்ளரும் ஒரே சாதி, ஆகையால் இருவரும் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று அறிவிப்பாரா? இப்படி ஒரு கோரிக்கையை பள்ளர் அமைப்புகள் முன்வைத்தால், அமித்ஸா மதுரைக்கு வந்திருக்க மாட்டார். ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி பதறியிருப்பார். இந்து துவேசிகள் என்று பள்ளர் அமைப்புகளை சாடியிருப்பார். ஆனால், பள்ளர் அமைப்புகள் முன் வைத்த கோரிக்கை என்ன? தங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது. இந்துத்துவ அமைப்புகளுக்கு உற்சாகம் தரும் கோரிக்கையல்லவா இது! அதனால்தான், இந்தியாவிற்கே தேவந்திரகுல வேளாளர்கள் முன்னோடி என்று புகழாரம் சூட்டுகிறார் அமித்ஸா. எல்லா சாதியினரும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களாகவே மனமுவந்து சொல்லிவிட்டால், இடஒதுக்கீடு முழுமையாக ஒழி்ந்துவிடும். அப்போது பாஜகவின் கனவு நிறைவேறிவிடும்.

பள்ளர்களுக்கான எந்தப் பிரச்சனையை பாஜக கையில் எடுத்திருக்கிறது? எப்போது கையில் எடுத்திருக்கிறது? பள்ளர்கள் இசுலாத்தி்ற்கு மதம் மாறியபோது, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தது பாஜக. தற்போது பள்ளர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் போது துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. இங்குதான் பாஜகவின் சனாதன அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு மறுப்பும், இடஒதுக்கீடு எதிர்ப்பும்

தற்போது குஜராத் படேல் சமூகத்திற்கு வருவோம். படேல் சமூகம் முற்படுத்தப்பட்ட சமூகம். இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்த சமூகம். அரசியல், பொருளாதார நிலைகளில் முன்னிலையில் இருக்கும் சமூகம். தற்போது, தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லிப் போராடாமல், சாதி அடிப்படையில், இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லிப் போராடுகிறார்கள்.

பட்டியல் சமூகத்தினருக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டால், எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று ஹரிதிக் படேல் பேட்டியளிக்கிறார். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டக்காரர்களின் கோரிக்கையை முன் வைக்கிறார். ஆக, இந்தப் போராட்டம் பாஜகவின் இடஒதுக்கீடு எதிர்ப்புக் கொள்கையை முன்னெடுக்கும் போராட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருபுறம் முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தை வைத்து, இடஒதுக்கீடு எதிர்ப்பு அரசியல் செய்கிறது. மறுபுறம் தாழ்த்தப்பட்ட சமூகமான பள்ளர் சமூகத்தை வைத்தே இடஒதுக்கீடை மறுக்கச் செய்கிறது. தன்னுடைய இந்துத்துவக் கருத்தியலை மக்களிடம் கொண்டு சென்று, அதனை மக்களே கோரிக்கைகளாக முன்வைக்கும்படி செய்து, அரசியல் செய்யும் சாதுர்யத்திற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

- ஜீவசகாப்தன்

Pin It