பொதுமக்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அப்பாவி மக்கள் கலவரத்தில் பாதிக்கப்படும் பொழுதும், பெண்களுக்கெதிரான வழிப்பறி, சங்கிலி பறிப்பு என்று ஏற்படும் ஆபத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பதே இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஆனால், உயர்தர பாதுகாப்பை இந்திய அரசு கலவரக்காரர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் பண முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் அரசின் செலவில் வழங்கி வருகின்றது.

z category securityநாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் இன்னும் நாட்டில் முக்கியத்துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு வழங்கக்கூடிய இசட் பிரிவு பாதுகாப்பை மோடியின் அரசு, தாங்கள் யார் யாருக்கெல்லாம் விரும்புகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் வழங்குகிறது.

ஆனால், சாமான்ய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது “எனது அரசு சாமான்ய மக்களுக்கான அரசு” என்று சொன்னார். ஆனால், “கலவரக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுக்குமான அரசு” தான் இங்கு இருக்கின்றது.

இன்னும் கூடுதலாக சொன்னால்,

“கலவரக்காரர்களுக்கும், கொலைக்காரர்களுக்கும் நல்ல காலம்.

சாதாரண மக்ககளுக்கு கெட்ட காலம்.”

உள்துறை அமைச்சகம்தான் மிகவும் முக்கியமான நபர்களுக்கு வழங்கப்படும் எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் ப்ளஸ் ஆகிய பாதுகாப்பு அமைப்புகளில் எதை வழங்க வேண்டும் என்று முடிவு செய்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு பிரிவுகள் இசட், இசட் ப்ளஸ், ஒய் மற்றும் எக்ஸ் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் 22 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

‘இசட் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பில் 36 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் 11 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு பணியில் 2 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

இசட் மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு என்பது நாட்டின் இரண்டாவது உயர்நிலை பாதுகாப்புப் பிரிவுகளாகும். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் இருபது காவலர்கள் சூழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்புக்கு முப்பத்தைந்திலிருந்து எண்பது காவலர்கள் வரை சூழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள்.

இந்த பாதுகாப்புத் துறைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் ஒதுக்கப்படுகின்றது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்த பாதுகாப்புத் துறைகள், அவர்கள் விரும்பும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கிலே செயல்பட்டு வருகின்றது.

* ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு. 190 பயிற்சி பெற்ற மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை மற்றும் உயரடுக்கு சிறப்பு பாதுகாப்பு குழு (குகுஎ) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

* உத்தரபிரதேம் முஸாபர் நகர் கலவரத்தின் சூத்திரதாரிகளான, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. க்கள் சுரேஷ் ராணா மற்றும் சங்கிட் சோம் ஆகிய இருவருக்கும் அரசின் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இவர்கள் இரண்டு பேருமே முஸாபர் நகர் கலவர வழக்கில் சிறை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* அரசியல் லாபங்களுக்காக தொடர்ந்து வெறுப்பு பேச்சின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதிக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரைச் சுற்றி எப்பொழுதும் 11 துணை இராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசின் ஆதரவுடன் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு நாட்டின் இரண்டாவது உயர் பாதுகாப்பு அளித்துள்ளது.

ஒரு தனி நபருக்கு முக்கியமான அரசியல் தலைவருக்கு வழங்கப்படக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

* தற்போதைய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு “இசட் ப்ளஸ்” பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எஃப். கமாண்டோக்கள் எப்பொழுதும், இவர் வீட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

நாட்டின் உயரிய பாதுகாப்பு பிரிவுகளை சட்டம் வரையறுத்துள்ளவர்களுக்கே வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகின்றனர். கிரிமினல் வழக்கு உள்ளவர்களுக்கும், கலவரத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர்களுக்கும், கொலைகாரர்களுக்கும், அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது சட்டவிதிமுறைகளுக்கு முரணானதாகும் என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் சாமான்ய மக்களுக்கான பாதுகாப்பு முறைகள் எப்படி உள்ளது என்றால், 761 பேருக்கு ஒரு காவலர் என்பதுதான் நிலை. அரசு ஆவணங்களின் அடிப்படையில், காவலர் பணியிடங்களில் 22 சதவீதம் நிரப்பப்படாமல் உள்ளது என்பதும் வேதனையான விஷயம். இதிலும், பல்வேறு ஊர்களில் மக்கள் தொடர்பு கொள்வதற்கான காவல்நிலையங்கள் இல்லை. இதனால், பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு கொடுக்கக்கூடிய சூழல் இல்லாமலும் போகின்றது.

ஒவ்வொரு வருடமும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சாமான்ய மக்களின் நிலை இவ்வாறு இருக்க, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ உயர் பாதுகாப்பு!!

- நெல்லை சலீம்

Pin It