படைப்பாளி ஒரு போதும் நிம்மதியாக இருப்பதில்லை....

writer 238அவனின் பகல்கள், இரவுகள், அந்திகள், அதி காலைகள்.. எல்லாவற்றுக்குள்ளும் தொலைந்து கொண்டேயிருக்கின்றான்..... அல்லது கிடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றான்.. நட்சத்திரங்கள் தின்று, செரித்தாலும் செரிக்காவிட்டாலும் நிலவையும் பிடித்து தின்னும் சாகச உரையாடல்களை வீதி முழுக்க இறைத்துச் செல்லும் அவனை ஏதாவது ஒரு குழந்தை 'லூசு மாமா' என்பதை தவிர்க்கவே முடிவதில்லை....தவிர்த்தலின் வீரியத்தில் அவன் முகம் சாய்வதில்லை.... சாய்ந்த எதிலுமே அவனின் சாயல்கள் இருப்பதில்லை.... இருப்பவைகளில் இருந்துவிடுவதில் இல்லாத ஒன்றை இருத்திக் கொண்டே இருக்கின்றான்...

காட்சிகளின் கோர்வைகளையெல்லாம் தனி தனியாக பிரித்து பார்க்கும் பிழைகளின் வழியாகவே அவனின் காட்சி இருக்கிறது... கவிதைக்குள் கரைபவன்.. கற்பனைக்குள் சிறகடித்து ஒரு ஓவியமாக வெளி வந்து விடுகிறான்... சிறு பிள்ளையில் கிறுக்கலில் நிரம்பிக் கிடக்கும் வண்ணப் பென்சில்களின் முனையாக உடைந்து கொண்டேயிருக்கிறது அவனின் சிறுகதைகள்... யாருமற்ற வெளிகளில் சிறு புல்லென வளர்ந்து காய்ந்து வளர்ந்து காய்ந்து மிதி பட்டு... தலை ஆட்டி... இருந்தும் இல்லாமலும்..உணர்ந்தும் தெரியாமலும்..... ஒரு தொடர்கதையின் களத்தில் ரத்தம் சொட்டும் பேராவலோடு கை தட்ட தேடும் ஓசைக்குள் ஊமையின் அழுகையாகிக் கொண்டே தவழுகின்றான்... அவனின் மலையெங்கும் உடைந்து பறக்கும் நெருப்புக் குழம்புகள்.. அதிலும் வழிந்து ஓடுவது அவனின் பிரிந்த காதலின் முத்தமாகக் கூட இருக்கலாம்.. அல்லது எதிர் வீட்டு முதிர்கன்னியின் மாதக் கண்ணீராய் இருக்கலாம்...ஆனாலும் அவன் அது பற்றிய எதுவிலும் ஏதும் அறியாத எதுவாகவோ கடந்து கொண்டே இருக்கின்றான்.... மூங்கிலின் இசை அறிந்த வண்டுகளின் துளைகளை கையோடு கொண்டு செல்கின்றான்..... மனதோடு கொண்டு தருகின்றான்...

படைப்பாளி ஒரு போதும் நிம்மதியாக உறங்குவதில்லை....

அவனின் தூக்கங்கள் சிறு பூச்சியின் இரைச்சல்களாகவே இருக்கின்றன.... இமை மூடும் கண்களில் தனை மூடாத வார்த்தைகள் முன்னும் பின்னும் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டும்.. மன சுவற்றுக் கரைகளை கழுவிக் கொண்டும்... கவிதைகளின் பித்து நிலைக்குள் மாய முகமூடிகளை கிழித்துக் கொண்டுமே பிறல்கின்றன... இரவுக்குள் இரவுகள் தேடும் அர்த்த வானத்தின் சிறகடிப்பை காது குளிர கேட்கவும்.. அதே காது கிழிய கதறவும் அவனால் முடிகின்றது... ஓர் ஆடைக்கும் பல நிர்வாணத்துக்கும் வேறுபாடுகள் தேவை இல்லாத அவனின் ஜன்னல்கள் திறந்து கிடக்க, எப்போதும் போல வந்து போகும் காமப் பறவையின் சிறகுகளை உடைத்துக் கொண்டே அல்லது விசிறிக் கொண்டே அவனின் மாயத் தூக்கம் இருக்கிறது.. பின்னிரவு எழுந்துலவும் தகவல்களை எந்த நாயும் குரைத்தே சொல்கின்றன... உரைத்தும் உரைக்காத காலடிகளை நிழல்களாக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது அவனின் சிந்தனைகள்...

வேகமாய் ஓடிக் கொண்டு இருக்கும் அவனின் குதிரையை கல் குதிரை ஆக்கி விட்டு சிறிது ஓய்வெடுக்க யோசித்த தருணத்தில் யானைகளின் படையோடு வரலாறு படிக்கவும் நீண்டு விடுகிறது அவனின் பெருமூச்சு..... ஆழ்ந்த நிசப்தங்களின் வழியாக அவன் தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.... பலத்த சுழற்காற்றுகள் உள் புகுந்து சதா நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது...நிகழ்வுகளின் எதிர்மறையோடு... நேர்மறை கண்களை அவன் கசக்கி எறிந்து கொண்டே அடுத்த பக்கம் திருப்புகின்றான்... உயிருள்ள எதுவும் அவனின் பாலத்தில் உடைந்து ஓடும் பெரு வெள்ளமாகிப் போவதை அவன் பல போது எழுத்துக்களில் கொண்டு வருவதில்லை... கண்டு விட்டு போவதை விட ஓவியம் வேறன்ன என்று தத்துவம் பேசும் ஏதாவது ஒரு தருணத்தில் சிறிது பசியோடு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விடுகிறான்....சுருள சுருள மிரளும் வரிகளோடு வீரியக் காற்றை துணைக்கழைத்து வந்து மீண்டும் ஏதாவது படைத்து விடுகின்றான்....படித்தும் விடுகின்றான்.... இரண்டும் அற்ற மரணம் கூட மாயை என்பதில் அவன் ஒரு புழு.... அல்லது... வானம்... அல்லது.... நீலம்....மாயை ஒன்றுமே இல்லை.. அது நிஜம் என்பதில் நேற்று கூட சத்தியம் செய்தவன் தான்.. நாளையும் செய்வான்.......செய்கின்றான்...

படைப்பாளி ஒருபோதும்...ஓய்வதில்லை...

நிகழ்தலின் இரவுக்குள் அவன் ஒரு கணம் முன்னும் பின்னும் மாறி மாறி நேரத்தை மாற்றி அமைக்கின்றான்.... அமைத்த நேரமெல்லாம் அவனுக்கு போதாமல் மீண்டும் மீண்டும் ஒளி சிதைத்து அல்லது விதைத்து தேடும் தொலைதல் பற்றி சிறுகுறிப்போடும் பெரும் அழுகையின் விக்கலோடும் சிரிக்கின்றான்... ஆறுதல் தரும் எதுவும் உண்டு, கொண்ட தர்க்க வீதிகளில் ஓர் உடைந்து போன எரியாத வெளிச்சமாகவும் அவன் தேடல் பாதியாகிறது...... நித்திரை தவிர் என்பது தாரகமந்திரம் என்பதாக அவனும் அமர்ந்து சிலபோது மறதிகளின் கைபிடித்தலோடு காத்துக் கொண்டிருக்கும் யோனிகளின் செதில்களென ஒரு இரவுக் காட்டை தேடியே, துலாவிய கண்களை கசிய விட்டே உஷ்ணம் குறைக்கின்றான்...

யாருமற்ற யாவும் அவனாவது போல அவனையும் யாருமற்றதாகி, சொல்லிக் கொண்ட அற்புதப் பார்வையின் பின்பக்கம் கிழிந்து தங்கும் உடைதலின் கண்ணீரோடு ஒரு ஏக்க மூச்சு ஒரு அழகியுடையது... நிறமற்ற பெண்ணையே அவன் சுகிக்கிறான்.. இதழற்றவளை விரும்பினாலும் முத்தமற்றவளை அவன் ஒரு போதும் தாங்குவதில்லை....ஆனாலும் எங்கும் தேங்குவதில்லை....

அவன் மொழி கூர்ந்தே கிடைக்கிறது... அவன் குறி விடைத்தே நிற்கிறது.... அவனின் ரோமக் கால்களின் சப்தம் திடும் திடும் என பதிந்து கொண்டே நகருகின்றன..உற்று நோக்கும் அவன்தான் பலபோது கண்டும் காணாமலும் கதறுகின்றான்.. வெட்டவெளியில் புகை வண்டியின் பயணத்தை எட்டிய விழிகளின் திரும்புதலோடு நெற்றி வலிக்க வலிக்க, ஒரு குண்டு தொண்டை அடைக்க நா வறண்டு வேடிக்கை பார்க்கின்றான்... பார்ப்பது எல்லாமே வேடிக்கை ஆனபின் செத்தாலும் சிரிக்கின்றான்.. சிரித்தாலும் அழுகிகின்றான்.. அழுதாலும் முறைக்கின்றான்.... முறைத்தாலும் பதைக்கின்றான்.... பதைத்தாலும் புதைகின்றான்.. புதைத்தாலும் விதைகின்றான்..... விதைத்தாலும் எழுகின்றான்.. எழுந்தாலும் எழுதுகின்றான்... எழுத எழுத படித்துப் புரளும் சக்திகளை அவன் சங்கிலி முடிச்சு போல அவிழ்ந்து கொண்டே போட்டும் இடுகிறான்.....சக்கரம் சுழலும் நாற்காலியில் சுற்றி சுற்றி நகரும் சிறுபிள்ளையின் பின் பக்கத்தை ஆசையோடு காண்கின்றான்.. யாருமற்ற நிலைக்கண்ணாடியில் நின்று நோக்க முடியாத போது ஜன்னல் திறந்து வைத்துக் கொண்டு பார்ப்பவரின் கவனம் அற்று கிடக்கின்றான்... வக்கிரம் சுமந்த பெண் ஒருத்தியின் சாயலை தண்ணீர் இறைக்கும் கிணற்றுக்குள் பெரும் கல் ஒன்றைப் போட்டுக் கலைக்கின்றான்... எதிர் வரும் எதுவும் பின் வரும் என்று முகம் திருப்பாமலே முகம் பார்க்கின்றான்.....

நிறங்களின் நீட்சியாகிறான்....

நிறங்களின் நிறம் பிரித்து வர்ண மழையின் தேகத்தோடு அவன் நீராடி விளையாடும் தொலைவில் சில போது கைகளில் மாட்டியும் கொள்கின்றன நிலவுகள்... ஆம், அவன் காட்டில் காணும் துகள் எல்லாம் நிலவாகும் சாத்தியமும்... அவன் பாட்டில் நட்சத்திர பொழிவுகள் அலையாகும் சத்தியமும்... மாறி மாறி வசைபாடும் தெரு முக்கு சண்டையில் தூக்கிக் கட்டிய கெண்டங்கால் சேலையின் உள் பரப்பின் சுவாசத்தோடு ஈர வாசனையின் நுகர்வில் காணும் மொழி எங்கும் சிவப்பு பூசி மஞ்சளாகும் அவன், வர்ணங்களின் சாயலை சுமந்தே திரிகின்றான்...திரிவதில் திரியாவதும் விழியாவதும்.. வழியாகிக் கிடப்பது தான் அதிசயம்... ஆத்மம்...

அவன் சொல் நீண்டு கொண்டே போகின்றன.... அவனின் நீட்சி மாண்டு கொண்டே போகின்றன... திறக்கும் காதுக்குள் கதவு செய்து கொண்டு பூட்டிக் கொள்ளும் முன் முயற்சியில் பின் கதவுகள் திறந்து கொள்ளும் அதிசயங்களையும் அவனே சமைக்கின்றான்.....முடிந்த பக்கங்களின் இடைவெளியை இல்லாத காகிதத்திலும் நிரப்பிக் கொண்டே இருப்பதில் வழிந்து ஓடும் காயங்களில் அவனே உருகி அவனே உறைந்து அவனே இல்லாமலும் போகின்றான்.. இருப்பதும் இறப்பதும்... அவன் செய்வதால் படைப்பவனின் திமிருக்குள் கொஞ்சம் எட்டித்தான் நிற்கிறது அவனின் பார்வை.. உணர்ந்து கொண்டே இருப்பதில் ஒட்டவும் முடியாமல் திட்டிக் கொண்டே இருப்பவர்களை வெட்டவும் முடியாமல் கருணைக்குள் கடவுள் கொண்டு கடவுளுக்குள் சாத்தான் கொண்டு உண்பதை வாந்தி எடுத்து உண்கின்றான்..... படித்தவன் செய்தாத விதி ஒன்றை படிக்க படிக்க செய்வதில் படித்தும் படிக்காத புதிருக்குள் புதிராகினான்... திறவாத கோலின் தீர்க்க தரிசனத்துள் மீண்டும் ஒரு செடி முளைக்கும்.... விதையும் அவனே...

காலங்களை சுமந்து கொண்டே திரிகின்றான்,.... யட்சிகளையும் நீலிகளையும் மோகினிகளையும் ஆராதிக்க அலைகின்றான்.. காடுகளின் ஊடாக ஒரு ஒற்றையடிப் பாதையை அழித்துக் கொண்டே போகின்றான்...பால்ய தெருக்களின் சாயல்களை திரும்ப திரும்ப ஏதாவது ஒரு கதையில் ஒரு கிணற்று மேட்டிலிருந்தே ஆரம்பிக்கின்றான்.. எல்லாக் காலங்களிலும் எல்லாக் காலங்களையும் விதைத்து அறுவடை செய்யுமாற்றலை சற்று அதிகமாகவே பிரயோக்கின்றான்.... அவன் விளையாடும் மார்புக் காம்புகளின் நினைவுகளில் ஒரு காதலியும் பிற காதல்களும் அடுக்கு நிலைக்குள் ஆள் மாறாட்டம் செய்து கொள்கின்றன... சொல்லுதலைப் போலவே செய்தலும் அவனுக்கு கை வந்த கலை... சொல்லாமலே போய்விடுவதிலும் அவன் செருப்புகளைக் கொண்டாடித் தீர்க்கின்றான்....பொய்மைக்கும் உண்மை செய்வதில் நீண்டு உயர்ந்து நிற்கும் வாடையின் தூரத்தில் யாரோ அசைக்கும் கைக் காட்டுதல் ஒன்று அக்கறையோடு நலம் கொண்டே விசாரிக்க, விழி சுருக்கி சிரிக்கின்றான்..... அசரீரியின் ஆத்மா திருப்தியோடு அவன் மீண்டும் மீண்டும் எழுதுகின்றான்... படிக்கின்றான்... படைக்கின்றான்...... நிழல் விதைக்கின்றான்.... சிற்பம் செதுக்குகின்றான்.... யாருமற்ற வெளியை அவன் எழுத்தில் அவன் எண்ணத்தில் மாற்றிக் கொள்வதில் அதே 'லூசு மாமா' ஒலிகள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருப்பதில்தான் அவன் புன்னகையும் இருக்கின்றது...

படைப்பாளி ஒரு போதும் நிம்மதியாக இருப்பதில்லை.... நிம்மதிக்குள் இருக்கும் நிழலை சுரண்டித் தின்பதில் அவன் ஒரு முதலாளித்துவவாதி...... சமதர்மம் தேடும் பாவி..... ஆனாலும்.. அத்து மீறவும் ஆட்கொள்ளவும் அவனுள் ஒரு வேதாளமும்.. நூறு கடவுள்களும்... ஒன்றன் பின் ஒன்றாக முகமூடி மாட்டிக் கொண்டே இருக்கின்றன...

எல்லாமே எல்லாமாகினும் அவனுள் கொண்ட இரவுகளில் கீற்றும் துகளும் இருக்கும் போதும் அவன் கொண்ட இருண்மைக்குள் ஆயிரம் சூரியன்கள் எழுந்த போதிலும்.. அவனின் நிம்மதிக்குள் ஒரு கல் உருண்டு கொண்டே இருக்கின்றது, அது அடுத்த படைப்பின் அஸ்திவாரமாக இருக்கலாம்... அது அப்படித்தான்.. அவனும் அப்படித்தான்...அது இப்படியாகவும் இருக்கலாம்...உண்மைகளின் நெருக்கம் சுடுவது போல ஒரு உறைபனி நெடுங்கனவுக்குள் இருப்பதை கடந்தும் அல்லது கடக்க விட்டும்..... இரண்டுக்கும் இடையில் தலை விரித்துக் கிடக்கும் கற்பனைகளில் பசி எது என்ற கேள்வுக்குள் உடல் புதைத்தும் விழித்தே கிடக்கும் அவன்...நானாகவும் இருக்கலாம்....

- கவிஜி

Pin It