hardik patel

 குஜராத்தில் படேல் சாதி மக்களின் இட ஒதுக்கீடு போராட்டம் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு வேளை இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாகக் கூட இருக்கலாம்!.

 இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே எள்ளி நகையாடும் அளவுக்கு படேல்களின் போராட்டம் அமைந்திருக்கின்றது. குஜராத் மக்கள் தொகையில் 12 சதவீதம் உள்ள படேல் இனமக்கள் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளில் எந்த வகையில் மோசமாக உள்ளனர் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

 குஜராத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்த படியாக உயரிய சாதி அந்தஸ்தும், பொருளாதார நிலைமையில் பார்த்தால் சூரத்தின் வைர வியாபாரத்தின் பெரும்பகுதியை கட்டுப்படுத்துபவர்களாகவும், குஜராத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மிக அதிக அளவு வைத்திருப்பவர்களாகவும் அமெரிக்கா போன்ற பெரும் முதலாளித்துவ நாட்டில் பல உணவு விடுதிகளை சொந்தமாக நடத்துபவர்களாகவும் உள்ளனர். அரசியலில் கூட குஜராத்தில் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மொத்தமுள்ள 120 எம்.எல்.ஏக்களில் 40 எம்.எல்.ஏக்கள் படேல் சாதியை சேர்ந்தவர்கள். 26 எம்.பிக்களில் 5 எம்.பிக்கள் படேல்கள். குஜராத்தின் முதலமைச்சர் ஆனந்திபென் கூட படேல் சாதியைச் சார்ந்தவர்தான்.

 இப்படி எல்லா நிலைகளிலும் வலுவாக உள்ள படேல் சாதி மக்கள் தங்களை ஒ.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதும், 27 சதவீத இடஒதுக்கீடு கேட்பதும் உள்நோக்கம் உடையதே!. எங்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் வேறு யாருக்கும் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று அந்தப் போராட்டத்தின் முன்னணியாளர்கள் சொல்வதில் இருந்தே அவர்களின் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரிகின்றது.

 ஏற்கெனவே தலித் மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடியவர்கள் தான் இந்த படேல் சாதி மக்கள். தற்போது தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது என்பதே அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்காக தான். குஜராத் போன்ற இந்து பாசிசத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் இப்படி ஒரு பெரிய போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவாரங்களின் ஆதரவு இல்லாமல் நடத்த முடியாது.

 பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இந்தப் போராட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்க்கா போன்ற இடங்களில் குண்டுவைத்துவிட்டு அதை முஸ்லீம்கள் தலையில் போட்டு அரசியல் ஆதயாம் அடைய நினைத்த பாசிஸ்ட்டுகள் தான் இவர்கள்.

 மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட சாதிமக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தபோது அதற்கு எதிராக மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள். இவர்களின் நோக்கம் எப்படியாவது எதைச் செய்தாவது இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதுதான். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவாரங்களின் சதி நிச்சயம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் தொகையில் 85 சதவீதம் உள்ள தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதமே உள்ள பார்ப்பனக் கூட்டம் சதி வேலைகளில் ஈடுபடுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தும் படேல் அமைத் அந்தோலன் சமிதி(PAAS) அமைப்பின் தலைவர் ஹர்திக்படேல் (22) என்ற விஷக்கொடுக்கைப் பற்றி ஊடகங்கள் பெருமைபொங்க எழுதுகின்றன. இது போன்ற லட்சக்கணக்கான ஹர்திக் படேல்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றார்கள். நீங்கள் தமிழ்நாட்டிலேயே கோவில் திருவிழாக்களிலும், திருமண விழாக்களிலும், வைக்கப்படும் கட்டவுட்களிலும், போஸ்டர்களிலும் பேருக்குப் பின்னால் சாதிவால் முளைத்த ஆதிக்க சாதி இளைஞர்களைப் பார்க்கலாம். பண பலமும் அரசியல் பலமும் கைகூடும் போது இதில் இருந்து ஹர்திக்படேல்கள் முளைத்தெழுவார்கள்.

 ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் போராட்டத்தை கி.வீரமணி போன்றவர்கள் ஆதரித்து இருப்பது தான். “…. இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய படேல் சமூகத்தினர் இன்று இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகின்றனர். மகாத்மா காந்தி பிறந்த குஜராத்துக்கு பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் சென்றுள்ளதையே படேல் சமூகத்தினரின் போராட்டம் உணர்த்துகின்றது” என்று கூறும் வீரமணி அவர்கள் நாளை பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினாலும் இதே கருத்தை சொல்வாரா? என்று தெரியவில்லை.

 சீத்தாராம் யெச்சூரி போன்றவர்கள் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைமைகளே படேல்களின் இந்தப் போராட்டத்துக்கு மூலகாரணம் என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் பொருளாதாரம் நல்ல வளமாக இருக்கும் போது இட ஒதுக்கீட்டை எதிர்க்கலாம், தலித்துகளை கேவலப்படுத்தலாம், அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம், பொருளாதாரம் கொஞ்சம் சுமராக இருந்தால் இட ஒதுக்கீடு கேட்கலாம் அப்படித்தானே!

 நாம் ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குஜராத்தில் படேல் சாதி மக்கள் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஆதிக்க சாதிகளும் புதிய பொருளாதார கொள்கைகள் புகுத்தப்பட்ட பின் ஒருபக்கம் அந்த சாதியில் இருக்கும் குறிப்பிட்ட சில பேர் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி இருப்பதும் மற்றவர்கள் ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டிகளாக மாறி இருப்பதும் உண்மை. இதை வைத்து அவர்கள் இட ஒதுக்கீடு கேட்பதை நாம் ஆதரிக்க முடியாது. சமூக தளத்தில் தன்னை ஆதிக்க சாதியாக வெளிக்காட்டிக்கொண்டு பொருளாதார தளத்தில் தனக்கு இட ஒதுக்கீடு கேட்பது நேர்மையற்ற செயலாகும். அவர்களின் உண்மையான நோக்கம் ஏற்கனவே தலித்துகளுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதிமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்ற இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் சதிச் செயலில் ஈடுபடுவதே ஆகும்.

 குஜராத் எப்போதும் வரலாற்றில் ஒரு சோதனைச்சாலையாகவே இருந்து வருகின்றது. அது இந்துமதவெறியின் கொடுங்கோன்மையை நிரூபிப்பதாக இருந்தாலும் சரி, உலகமயமாக்கலை மற்ற மாநிலங்களை விட தீவிரமாக அமல்படுத்துவதாக இருந்தாலும் சரி, அல்லது தற்போது நடந்துவரும் போலியான இட ஒதுக்கீட்டுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி.

- செ.கார்கி

Pin It