காவேரி நதிநீர் - வஞ்சிக்கப்பட்ட தமிழகம் - 1

தமிழகத்தின் நீர் சேமிப்பு:

 தமிழகம் 1924க்கு முன்பிருந்தே 15.2 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசனம் பெற்று வந்துள்ளது என்பதை நடுவர்மன்றம் தனது தீர்ப்பில் ஏற்றுக் கொண்டுள்ளது. 1972ல் அமைக்கப்பட்ட காவேரி உண்மை அறியும் குழு(CFFC), 1928வாக்கில் இந்தப் பழைய பாசனங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) முதல் 1972 வாக்கில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) வரை ஆய்வு செய்து தரவுகளை வழங்கியுள்ளது (பார்வை: தொகுதி-5, பக்: 33)

mettur dam 400 அத்தரவுகளின்படி காவேரி டெல்டா பகுதியிலும், கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியிலும் சேர்ந்து சுமார் 10.7 இலட்சம் ஏக்கரில், 1928க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 55 டி.எம்.சி நீரை தமிழகம் மிச்சப்படுத்தி உள்ளது. இவை டியூட்டியை மேம்படுத்தி, டெல்டா உயரத்தைக் குறைத்து மிச்சப்படுத்தப்பட்டதாகும். மீதி உள்ள சுமார் 4.5 இலட்சம் ஏக்கரில் குறைந்த பட்சம் 25 டி.எம்.சி நீர் மிச்சப் படுத்தப்பட்டிருக்கும். எனவே தமிழகம் 1928 முதல் 1972க்குள், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக்(டெல்டா) குறைத்து, மொத்தமாக 80டி.எம்.சி பாசன நீரை மிச்சப்படுத்தி இருக்கிறது எனலாம்.

 இந்த நீரை மட்டும் கொண்டு விரிவாக்கப்படும் பாசனப் பரப்புகள் அனைத்தும் விதி எண் 10(xii) இன் கீழ் வருகிறது. நாம் இந்த மிச்சப்படுத்தப் பட்ட பாசன நீரைக் கொண்டு 1,28,000 ஏக்கரில் நெற்பயிரும், 78,500 ஏக்கரில் புன்செய்ப்பயிரும், ஆக மொத்தம் 2,06500 ஏக்கர் பரப்பில் பாசனம் செய்துள்ளோம். இவை அனைத்துமே தகுதி அடிப்படையில் மூன்றாம் பிரிவின் கீழ் நடுவர் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை(தொகுதி-4, பக்: 110, 111). அவைகளுக்கு மொத்தம் தேவைப்படும் பாசன நீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 22+7 = 29 டி.எம்.சி. ஆகும். இவை முன்பு சொன்னவாறு மூன்றாம் பிரிவில் இருந்து, 1924 ஒப்பந்தத்தில் உள்ள விதிஎண் 10(xii) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாம் பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும். விதி எண் 10(xii) பற்றிய முழு விபரம் இணைப்பு-1 இல் தரப்பட்டுள்ளது.

3) தகுதி அடிபடையில் அங்கீகரிக்கப்பட்ட பாசனப்பயிர்பரப்பு:

 மூன்றாம் பிரிவில் உள்ள சிறு பாசனத்திட்டம் என்பது 1924 ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றின் சிறுபாசனத் திட்டங்கள் மட்டும் தகுதி அடிப்படையில் முன்பு போல் மூன்றாம் பிரிவில் ஏற்றுக்கொள்ளலாம். நடுவர் மன்றத்தால் தகுதி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பிற பரப்புகள் நியாயமானதாகவோ, முறைப்படியானதாகவோ இல்லை. ஆகவே மூன்றாம் பிரிவில் அங்கீகரிக்கப்பட்டப் பிற பரப்புகள் அனைத்தும் நிராகரிக்கப் படவேண்டும். அதன்பின் மூன்று பிரிவுகளையும் கணக்கிட்டால் கீழ்க்கண்டத் தரவுகள் கிடைக்கும். நடுவர் மன்றம் இவ்வாறு அங்கீகரிப்பதன் மூலமே தமிழகத்திற்கு ஓரளவு அது நியாயம் வழங்கியதாக ஆகும்.

பாசனப்பரப்புப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டது அங்கீகரிக்கப்படவேண்டியது.

(இலட்சம்  ஏக்கரில்)

தமிழ்நாடு

கர்நாடகம்

தமிழ்நாடு

கர்நாடகம்

1)1924க்கு முந்தையது 15.19 3.44 15.19 3.44
2)1924 ஒப்பந்தப்படி 6.20 7.24 8.26 4.52
3)தகுதி அடிபடையில் 3.32 8.17 1.26 1.26
மொத்தம் 24.71 18.85 24.71 9.22
           

இதர நீர் வளங்கள்:

 நதி நீர் கோட்பாடுகளை வழங்கிய 1966ஆம் ஆண்டைய ஹெல்சிங்கி விதியில், ஒவ்வொரு வடிநில அரசினுடைய இதர நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்பது ஒரு முக்கியக் கோட்பாடாகும். காவேரி நீரை மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்கும்போது இந்த விதியை கணக்கில் கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும். தமிழகத்தின் மொத்த நீர்வளம் என்பது காவேரியின் மூலம் கர்னாடகம் வழங்குவதையும் சேர்த்து மொத்தம் 1500 டி.எம்.சி க்கும் குறைவாகவே உள்ளது.

 அதே சமயத்தில் கர்னாடகத்தின் நீர்வளமோ 3400 டி.எம்.சி க்கும் மேலாக உள்ளது. கர்னாடகத்தின் மக்கள்தொகை தமிழகத்தின் மக்கள் தொகையைவிடக் குறைவு ஆகும். அதனால் வருடா வருடம் கிடைக்கும் தனிநபர் நீர் அளவு என்பது தமிழகத்தைவிட 2.5 மடங்குக்கும் அதிகமாகும். அதன் தரவுகள் வருமாறு,

பொருள் தமிழகம் கர்னாடகம் குறிப்பு
மொத்த நீர்வளம் (டி.எம்.சி) 1500 3400  
மக்கள்தொகை(கோடியில்) 6.24 5.3 2001(census)
தனிநபர் நீர் அளவு(கனஅடி) 24000 64000 2.67மடங்கு

 எனவே கர்னாடகா தனது காவேரி வடிநிலத் தேவையை பிற நீர் வள ஆதாரங்களின் மூலம் மிக எளிதாகப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். ஆனால் தமிழகம் ஒரு பற்றாக்குறை மாநிலம் ஆகும். அது தனது குறைந்தபட்ச தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

 உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழகம் மிக மிகப் பற்றாக்குறையோடு தான் உள்ளது. உலக மக்கள் தொகை இன்று சுமார் 700கோடி. உலக நீர்வளம் சுமார் 48000 கன கி.மீ. தமிழகத்தின் மக்கள் தொகையோ இன்று சுமார் 7கோடி. தமிழகத்தின் நீர்வளமோ சுமார் 43 கன கி.மீ. தான். அதாவது உலக மக்கள் தொகையில் 100ல் ஒருபங்கு உள்ள தமிழகம், உலக நீர்வளத்தில் 1100ல் ஒரு பங்குக்கும் குறைவாகவே கொண்டுள்ளது.

 அதாவது சராசரி உலக மனிதனை விட 11ல் ஒரு பங்குக்கும் குறைவான நீர்வளம் கொண்டவனாக ஒரு சராசரித் தமிழன் உள்ளான். ஆகத் தமிழகம் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு பற்றாக்குறை மாநிலம் ஆகும். எனவே இவைகளைக் கணக்கில்கொண்டே காவேரிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

பாசனம் பெறாத வறட்சிப் பகுதிகள்:

 தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப்பரப்பு 44000 ச.கி.மீ. எனில் கர்னாடகத்தின் வடிநிலப்பரப்பு 34000 ச.கி.மீ. ஆகும். தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப்பரப்பில் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 51 இலட்சம் ஏக்கர் ஆகும். கர்னாடகத்தில் உள்ள காவேரி வடிநிலப்பரப்பில் அதன் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 42 இலட்சம் ஏக்கர் ஆகும். நடுவர் மன்றத் தீர்ப்புப் படி தமிழகத்தில் சுமார் 22 இலட்சம் ஏக்கரும் கர்னாடகத்தில் 19 இலட்சம் ஏக்கரும் பயன்பெறுகிறது.

 காவேரி வடிநிலப் பரப்பில் தமிழகத்தில் மீதியுள்ள சுமார் 29 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்தில் மீதியுள்ள சுமார் 23 இலட்சம் ஏக்கரும் மழையை நம்பியுள்ள, பாசனம் பெறாத மிகவும் வறண்ட பகுதியாகவே உள்ளது. ஆனால் தமிழகத்தின் காவேரி வடிநிலப்பரப்பின் அனைத்துப்பகுதிகளும் பாசனம் பெற்று விட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசனம் பெறாத பயிரிடும் நிலப்பரப்பான 29 இலட்சம் ஏக்கர் பரப்பில் பெரும்பகுதி மிக மிக வறட்சியான தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்புர், கருர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

 இந்த 29 இலட்சம் ஏக்கரில், சுமார் ஒரு 10 இலட்சம் ஏக்கர் பரப்பு மிக மிக வறட்சிப் பகுதியாக உள்ளது. அந்த 10 இலட்சம் ஏக்கர் பரப்புக்காவது வருடம் ஒரு புன்செய்பயிர் பாசனம் செய்யத்தக்க வகையில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தி ஆகவேண்டும். கர்னாடகம் தனது காவேரி வடிநிலப்பரப்பில் உள்ள பாசனம்பெறாத பகுதிகளின் நீர்த்தேவையை தன்னிடம் உள்ள இதர நீர் வளங்களிலிருந்து பூர்த்தி செய்து கொள்ளமுடியும். ஆனால் தமிழகத்தால் அப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலாது. எனவே இவைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டே காவேரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

வாழ்வாதாரம்- வருடம் ஒரு பயிர்:

 நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் வருடம் ஒருமுறை ஒரு விவசாயி ஒருபுன்செய் பயிராவது பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்பதை பல முறை சொல்லி உள்ளது. இதைக் காரணம்காட்டித்தான் தமிழகத்தின் இருபோக நெல் சாகுபடியை அது அனுமதிக்கவில்லை. வருடம் ஒரு புன்செய் பயிர் என்பதை காவேரி வடிநிலப் பகுதியில் உள்ள அனைத்து வறட்சிப் பகுதிகளின் விவசாயிகளுக்கும் வழங்குவதை நடுவர் மன்றம் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். அனைவருக்கும் வழங்க இயலாது எனும்பொழுது மாநிலவாரியாக பாசனம் பெறாத பரப்பின் அடிப்படையில், விகிதாரச்சார முறையில் நீரைப் பிரித்து வழங்கியிருக்க வேண்டும்.

 ஆனால் கர்நாடகம் விதிகளை மீறி கட்டிய பாசனத்திட்டங்களை தகுதி அடிப்படையில் (அதாவது வருடம் ஒருமுறை ஒரு விவசாயி ஒருபுன்செய் பயிர் பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்ற அடிப்படையில்) ஏற்பதாகக் குறிப்பிட்டு 7 இலட்சம் ஏக்கருக்கு மேல் அங்கீகரித்துள்ளது. மேலும் 2.72 இலட்சம் ஏக்கரை டியூட்டியை மேம்படுத்தி நீரை மிச்சப்படுத்தி பாசனம் செய்ததாக அங்கீகரித்துள்ளது. இவைகளை ஏற்றுக் கொள்ள இயலாது.

 எனவே அனைவருக்கும் சம பங்கு வழங்கும் விதத்தில், 1924க்கு முந்தைய பரப்பு, 1924 ஒப்பந்தப்படியான பரப்பு ஆகிய இரண்டைத் தவிர பிறவற்றை மாநிலவாரியாக மீதியுள்ள பாசனம்பெறாத பரப்பின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் பிரித்து, வருடம் ஒருமுறை ஒரு புன்செய் பயிர் செய்வதற்கான பரப்பையும் அதற்குரிய பாசன நீரையும் வழங்கவேண்டும். அதன்படி கணக்கிட்டால் தமிழகத்திற்கு சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய் பரப்பும், 43 டி.எம்.சி நீரும் அதிகம் கிடைக்கும். கர்நாடகாவிற்கு 34 டி.எம்.சியும் கேரளாவிற்கு 15 டி.எம்.சியும் குறையும். இவை பற்றிய முழு விபரம் இணைப்பு-2 இல் வழங்கப்பட்டுள்ளது.

1924க்கு முந்தைய கோடைகால நெற்பயிர்:

 1924க்கு முந்தைய பாசனத்தில் இரு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் கோடைகால நெற்பயிர் பயிரிடும் பரப்பு 56000 ஏக்கர் ஆகும். இவை அனைத்தையும் நடுவர்மன்றம் புன்செய் பயிராக மாற்றியுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் 40,000 ஏக்கர் பரப்புக்கு வருடம் முழுவதும் கரும்பு பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பல நூற்றாண்டுகளாக இருபோக நெற்பயிர் செய்து வந்த அவர்களது பாரம்பரிய உரிமை பாதுகாக்கப் படவேண்டும். அவர்களது பயிர்க்காலத்தை ஜுன்-1 முதல் ஜன-31 வரை என மாற்றியமைத்து அவர்கள் இருபோகம் நெற்பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு 4.862 டி.எம்.சி. நீர் தேவைப்படும்.

 சேத்தியாத்தோப்பு:

 1924க்கு முன்பிருந்தே மிக நீண்டகாலமாக சேத்தியாத் தோப்பு அணைகட்டு பாசனத்துக்கு, 37,900ஏக்கருக்கு உதவியாக(supplementation) 2அடி நீர் உயரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி காவேரி வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ளது என்பதற்காக அதன் பாரம்பரிய உரிமையை நீக்க முடியாது. பல நாடுகளில் பல இடங்களில் வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ள பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்படுகிறது. மேலும் தமிழகம் நீர்பற்றாக்குறை மாநிலம் என்பதால் அந்த 37900 ஏக்கருக்கும் உரிய நீர் திரும்பத் தரப்பட வேண்டும். அதற்கு 3.29 டி.எம்.சி நீர் தேவை.

தமிழகத்தின் மொத்தத் தேவை:

 காவேரி நடுவர் மன்றம் முன்பே ஒப்புதல் வழங்கிய 24.71 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 419 டி.எம்.சி. நீர் தேவை. சமபங்கு உரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கப்படும் சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய் பயிர் பரப்புக்கு 43 டி.எம்.சி. நீர் தேவை. கோடைகால நெற்பயிருக்கு 4.86 டி.எம்.சி. நீரும், சேத்தியாத் தோப்புக்கு 3.29 டி.எம்.சி. நீரும் தேவை. எனவே மொத்தமாக 419+43 +4.86+3.29= 470.15 (அ) 470 டி.எம்.சி. நீர் தேவை.

 தமிழகத்திற்கு புதிதாக 51 டி.எம்.சி. நீர் தேவைப் படுகிறது. கர்னாடகா 34 டி.எம்.சி. நீரும், கேரளா 15 டி.எம்.சி. நீரும் தந்தால் 49 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பொதுப்பங்கில் இருந்து 2 டி.எம்.சி. நீர் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் தேவையான 51 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுவிடும். பொதுப்பங்கில் இருந்து எடுக்கும்பொழுது தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றுக்கு தலா 1 டி.எம்.சி. நீர் குறையும். அப்பொழுது ஒட்டுமொத்தத்தில் தமிழகத்திற்கு 50 டி.எம்.சி. நீர் அதிகமாகவும், கர்னாடகத்திற்கு 35 டி.எம்.சி. நீர் குறைவாகவும் கிடைக்கும். அப்பொழுது நமது கணக்குப்படி தமிழகத்துக்கு 469 டி.எம்.சி. நீரும், கர்னாடகத்துக்கு (270-35) 235 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 15 டி.எம்.சி. நீரும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும். இதுவே நியாயமான முறையான பகிர்வு ஆகும்

 தமிழகம் டியூட்டியை மேம்படுத்தி, நீர் உயரத்தை(டெல்டா) மிச்சப் படுத்தி சேமித்த சுமார் 80டி.எம்.சி. நீரில், 29 டி.எம்.சி. நீர் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது. மீதி 51 டி.எம்.சி. நீர் பயன்படுத்தப் படவில்லை. அதுதான் நமக்குத் திருப்பித் தரப்படுகிறது.

மத்திய அரசின் நிலைபாடு:

 மத்திய அரசு ஆரம்பம் முதல் காவேரி பிரச்சினையை நியாயமான முறையில்தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு செயல்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. தமிழகம் 1970 ஆம் ஆண்டு முதல் பலமுறை காவேரி நடுவர் மன்றத்தை அமைக்கச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 1990ல் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர்மன்றத்தை அமைத்தது.

 நடுவர்மன்றம் 1990ல் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதனை எதிர்த்து கர்னாடக அரசு தனது சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய இறையாண்மையை மீறும் இச்செயலை கூட மத்திய அரசு கண்டிக்கவோ, அதற்குரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. பின் 2007ல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால் அதனை முறைப்படி உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டிய மத்திய அரசு, தமிழக அரசு பலமுறை கேட்டும் வெளியிட வில்லை. 2013 இல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிட்டது. மத்திய அரசு செய்யவேண்டிய சிறிய விசயத்திற்குக் கூட வழக்கு மூலமே உத்தரவு வாங்கவேண்டியதுள்ளது. எனவே ஆரம்பம் முதல் மத்திய அரசு கர்னாடக மக்களுக்கு ஆதரவாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது எனலாம்.

காவேரி நடுவர் மன்றத்தின் நிலைபாடு:

 காவேரி நடுவர்மன்றம் மாநில அரசுகளுக்கிடையே ஒரு சமரச முடிவை எட்டவே விரும்பியுள்ளது. கலகக் கண்ணோட்டத்தில் செயல்படும் கர்னாடக அரசுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டதன் காரணமாக, கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்த தமிழகத்துக்கு உரிய நியாயம் வழங்கப் படவில்லை. பொதுவாகப் பலவிதங்களிலும் நீரை மிச்சப்படுத்தி கர்னாடகமும் கேரளமும் கேட்டிருந்த அதிக அளவான புதிய பாசனத் திட்டங்களுக்கு நீர் வழங்கி அவைகளைத் திருப்திப் படுத்தவே நடுவர் மன்றம் முயன்றுள்ளது. நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத்தீர்ப்பு என்பது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அநீதி என முன்பே குறிப்பிட்டோம். அதன் பின்னரும் நடுவர் மன்றம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றே கூறலாம்.

 நடுவர் மன்றம் முன்பே இருக்கிற பாசனத்திட்டங்களுக்கு உரிய நீரை வழங்கவோ, அவைகளுக்கான நீரை உறுதிப்படுத்தவோ முயலவில்லை. உரிய நீரை வழங்குவதும், நீரை உறுதிப்படுத்துவதும் மிகமிக முக்கியம் என்பதையும் அது உணர வில்லை. கர்னாடகம் 3400 டி.எம்.சி நீர்வளம் கொண்டிருப்பதையோ, தமிழகம் ஒரு பற்றாக்குறை மாநிலமாக இருப்பதையோ, தமிழகத்தில் 29 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம் பெறாது வறட்சி நிலையில் இருப்பதையோ, அதில் 10 இலட்சம் ஏக்கர் மிக மிக வறட்சியான பகுதியாக இருப்பதையோ, 1990ல் 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்பை அதிகரிக்கக் கூடாது என தான் சொல்லி இருந்ததையோ கருத்தில் கொள்ளாமல், கர்னாடகாவின் சுமார் 7 இலட்சம் ஏக்கர் பரப்புக்கான புதிய பாசனத் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

 விதி எண் 10(xii) இன் கீழ், டியூட்டியை அதிகப்படுத்தி, பாசன நீர் உயரத்தைக் குறைத்து, நீரை மிச்சப்படுத்தி பாசனப்பரப்பை விரிவாக்குவதில் தமிழகமே உரிமை கொண்டாட முடியும். ஆனால் நடுவர் மன்றம் விதி எண் 10(xii) என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழகத்தின் உரிமைகளை மறுத்துவிட்டு, கர்னாடகம் கேட்காமலேயே 2.72 இலட்சம் ஏக்கர் பரப்புக்கு, 23.19 டி.எம்.சி நீரை வழங்கியுள்ளது. பயன் படுத்தப்பட்ட பாசன நீரில் இருந்து தான் நீரை மிச்சப்படுத்த முடியும். அதைத்தான் விதி எண் 10(xii) குறிப்பிடுகிறது. “பயன்படுத்திக் கொண்டுள்ள நீரைச் சிறிதுகூட அதிகரிக்காது” - “without any increase of the quanity of water used” என்று விதி எண் 10(xii) இல் உள்ள இறுதி வரிகள் குறிப்பிடுகின்றன(தொகுதி-1, பக்: 40).

 அதாவது விதி எண் 10(xii) இல் உள்ள கடைசி வரியின் கடைசிச் சொல் water used என்றுதான் இருக்கிறதே ஒழிய water use என இருக்கவில்லை ஆனால் நடுவர் மன்றம் water use எனத் தவறாகப் புரிந்துகொண்டு, இனிப் பயன்படுத்தப் போகும் பாசனத்திட்டத்துக்கு நீரை மிச்சப்படுத்தியதாகச் சொல்லி 23.19 டி.எம்.சி நீரை கர்நாடகத்துக்கு வழங்கியுள்ளது. கர்நாடகத்துக்கு நீரை வழங்கும்பொழுது விதி எண் 10(xii) குறித்துப் பேச வந்த நடுவர் மன்றம், விதி எண் 10(xii) இன் இறுதிச்சொல்லை water used என்பதற்குப் பதில் water use என்றுதான் தவறாகப் பயன்படுத்தியுள்ளது(பகுதி-4, பக்: 135).

 ஆனால் விதி எண் 10(xii) இன் படி, பயன்படுத்தப்பட்ட பாசன நீரில் இருந்து 80 டி.எம்.சி நீர் வரை மிச்சப்படுத்திய தமிழகத்துக்கு எதனையும் நடுவர் மன்றம் வழங்கவில்லை. இது தமிழகத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் அநீதி ஆகும். ஆகவே பலவிதங்களிலும் கர்னாடகாவைத் திருப்திப் படுத்தவே நடுவர் மன்றம் முயன்றுள்ளது எனத் தோன்றுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் பல பறிபோகியுள்ளது எனலாம்.

இறுதியுரை:

 1924 ஒப்பந்தத்தில் இருந்த சில முக்கிய உரிமைகள் பறி போயுள்ளன. அவை அனைத்தையும் திரும்பப்பெற முடியாது எனினும், ஓரளவாவது நமது உரிமைகள் மீட்கப்பட்டாக வேண்டும். இன்றைய நடுவர் மன்றத்தீர்ப்பில் நாம் குறைந்தபட்சம் 50 டி.எம்.சி நீரை இழந்துள்ளோம். அதையாவது நாம் மீட்டாக வேண்டும். நியாயப்படியும், நீதிப்படியும், நடுவர்மன்றக் கோட்பாடுகளின்படியும் அவை நமக்கு வழங்கப்பட்டாக வேண்டும். ஆனால் இவைகளை நமது ஒற்றுமையின் மூலமும் வலிமையான போராட்டங்களின் மூலமும் மட்டுமே பெற முடியும். ஒப்பந்தங்கள் மூலமும், தீர்ப்புகள் மூலமும் இவைகளைப் பெறுவது போலவே, அவைகளை நடைமுறைப்படுத்தி கர்னாடகத்திடமிருந்து உரிய காலத்தில் உரிய அளவு நீரைப் பெறுவது என்பது மிக முக்கியம்.

 நீர்பிரச்சினை குறித்த சர்வதே எல்சிங்கி விதிகளில் உள்ள இதர நீர்வள ஆதாரங்களையும், பண்டைய பயன்பாடுகளையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்பதும், ஒரு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பொழுது மற்றொரு மாநிலம் அதிகம் பாதிக்கப்படக்கூடாது என்பதும் மிகமிக முக்கியமான, தமிழகத்திற்கு இன்று தேவைப்படுகிற விதிகளாகும். 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் பாசனம் மட்டும் செய்யவில்லை, காவேரி நதியில் வணிகக் கப்பல்களை ஓட்டி வணிகம் செய்தோம், உள்நாட்டு மீன் வளத்துக்கு ஒரு ஆதாரமாகக் காவேரி நதி இருந்தது.

 வருடம் முழுவதும் நீர் ஓடி நமது குடிநீர் தேவைகளையும், இதர குடும்பத், தொழில் தேவைகளையும் அது பூர்த்தி செய்து வந்தது. இவையெல்லாம் பண்டையகாலம் முதல் இருந்த வந்த நமது பயன்பாடுகள் என்பதையும், தமிழகத்துக்கு அதிக பாதகம் செய்து கர்னாடகம், கேரளம் ஆகியவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடாது என்பதையும் எல்சிங்கி விதி மூலம் அறிய முடிகிறது. எனவே நாம் இதுபோன்ற சர்வதேச விதிகளை நமக்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டியது அவசியத் தேவை ஆகும்.

 விவசாய அமைப்புகள் ஒன்றுசேர்வதும், தங்களது சுயநலங்களை மறந்து ஒட்டுமொத்த தமிழக உரிமைக்காகப் போராடுவதும், பிற வணிக, தொழில்துறை அமைப்புகளை ஒன்றினைத்துக் கொள்வதும், பல்வேறு பொதுநல அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெறுவதும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் அமைப்புகளையும் இணைத்துக் கொள்வதும் அவசியம். நமது ஒன்று திரண்ட போராட்டம் தான் வெற்றியைத் தேடித்தரும். ஆகவே ஒன்று திரள்வோம்! போராடுவோம்! காவேரியை மீட்டெடுப்போம்! தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்போம்!

குறிப்பு: இணைப்பு-1, 2, 3ல் முறையே விதிஎண் 10(xii) , சமபங்குநீர், காவேரி நதிநீர் தரவுகள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. .

- கணியன் பாலன், ஈரோடு.

Pin It