“அண்மையில் நடந்து முடிந்த 2015 – 2016 மருத்துப்படிப்பு நுழைவுத் தேர்வின் முடிவில் தமிழக அரசு தற்சமயம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் தங்களுக்கு மதிப்பெண் மற்றும் சில தகுதிகள் இருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்க உத்திரவிட வேண்டும்” என்று கோரி லோகேஸ்வரி, ஸ்ருதி மற்றும் 6 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். (தினமணி நாளேடு - 11.8.2015)

மண்டல் கமிசன் பரிந்துரை மீது நடைபெற்ற வழக்கில் (இந்திரா சஹானி – எதிர் - இந்திய அரசு) 16.11.1992ம் நாள் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் மத்திய மாநில அரசுகள் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகையை அமுல்படுத்தி உத்தரவிடும்போது 50%க்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச வரம்பு விதித்திருப்பதை பலர் அறிந்திருக்கலாம்.

மண்டல் கமிசன் வழக்கில் மேற்படி தீர்ப்பு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீடு சலுகை என்ன?

அ) பட்டியல் வகுப்பினர் - (எஸ்.சி.) - 19%
ஆ) மலைவாழ் மக்கள் - (எஸ்.டி.) - 2%
இ) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் -(எம்.பி.சி) - 20%
ஈ) பிற்படுத்தப்பட்டவர்கள் - (பி.சி) - 28%
உ) பொதுப்பிரிவு சாதியினர் - (உயர்சாதியினர்) - 31%

தமிழ்நாட்டில் கல்வியில் பொதுப்பிரிவு உயர்சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட 31% இடங்கள் போக மற்ற சாதியினருக்கு (எஸ்.சி & எஸ்.டி உட்பட) வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு 69%. இந்த 69% இட ஒதுக்கீடு, மேற்படி உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விதிக்கப்பட்டிருக்கும் 50% உச்சவரம்பிற்கு மேலிருப்பதால் 69% இடஒதுக்கீடு சலுகை சட்ட விரோதமானது என்று அறிவித்து, தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - என்பது தான் 8 மாணவர்கள் தாக்கல் செய்திருக்கும் வழக்கின் சாரம்.

வி.பி.சிங் அரசு மண்டல் கமிசன் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த போடப்பட்ட உத்தரவில் இடஒதுக்கீடு – எஸ்சி. – 15%, எஸ்.டி – 7.5%, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27% என்று தான் இருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விதித்து 50% உச்சவரம்பைத் தாண்டவில்லை. ஆனால் அதற்கு முன்பே சில மாநிலங்களில் 50%மேல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு 69%, கர்நாடகா 70%, ஆந்திரா 68%, கேரளா 59%, ஒடிசா 62%, மராட்டிய மாநிலம் 63% மற்றும் சில வட மாநிலங்களில் 50%க்கு மேல்தான் இடஒதுக்கீடு சலுகை நடைமுறையில் இருந்தது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு நடைமுறை செல்லாது என்று தாக்கல் செய்து சீரியசாக நடத்தி வரும் வழக்கையும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் உற்று நோக்க வேண்டும்.

தமிழகத்தில் பி.சி. - 28%, எம்.பி.சி. – 20% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் இளைஞர்கள் 69% இட ஒதுக்கீட்டு சலுகையைப் பயன்படுத்தித்தான் அரசு அதிகாரிகளாக நீதிபதிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பேராசிரியர்களாக பதவிகள் பெற்று, அதன்மூலம் சமூக அந்தஸ்து பெறமுடிந்தது. இந்த இடஒதுக்கீடு உரிமையை அனுபவிப்பவர்கள், அதற்கு மூலகாரணம் “தந்தை பெரியார்” என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.

69% இடஒதுக்கீடு உரிமையை பாதுகாத்துக் கொள்ள தங்களது இயற்கையான நேச சக்திகள் - தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரையும் (இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தினர்) இணைத்துக் கொண்டு போராட வேண்டிய பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் விழிப்புணர்வு பெறாமல், வழிதவறிச் செல்வது துரதிருஷ்டவசமானது.

சில சுயநல சாதித் தலைவர்களின் வலையில் வீழ்ந்து, சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களைப் படுகொலை செய்வது, தலித் குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்துவது, சொத்துக்களை சூறையாடி கொள்ளையடிப்பது, சுடுகாட்டுப் பாதையைக் கூட மறிப்பது, தேனீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை ஆதரிப்பது, தேர்த்திருவிழாக்களை நடத்தவிடாமல் தடுப்பது, கோவிலுக்குள் நுழைய தடைவிதிப்பது, பொதுப் பாதையில் சுவரெழுப்பி தடுப்பது ஆகியவற்றிலிருந்து பிற்படுத்தப்பட்ட சாதி இளைஞர்கள் விலகி நிற்பதுடன், தனது சாதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது.

- கே.சுப்ரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்

Pin It