dalit woman seshasamuthiram

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி மக்களின் மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலமும் வருவதற்கு எதிராகக் கடந்த 14.8.2015 ஆம் தேதி இரவு ஆதிக்க சாதியினராக அப் பகுதியில் உள்ள வன்னியர் சாதி வெறியர்களால் திட்டமிட்டு மாரியம்மன் கோயில் தேர் எரிக்கப்பட்டும் மேலும் வீடுகள் தீவைத்தும் எரிக்கப்பட்டுள்ளது. சுமார் இருநூறுக்கும் மேல் ஆதிக்க சாதியினர் திரண்டு வந்தும் ஆட்களை அழைத்துவந்தும் இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தக் கலவரத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஏழு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. தலித் கிராம மக்கள் பக்கத்து கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த 2011 முதல் தங்களின் மாரியம்மனுக்கு தேர் செய்து விழா எடுக்க தலித் மக்கள் முயன்று வந்துள்ளனர். 2012ல் தேர் செய்யப்பட்ட போதும் அது பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அப்பகுதி ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. சுதந்திர தினத்தன்று அரசு அதிகாரிகள் காவல்துறையினர் உதவியோடு தேர் இழுக்க தலித் மக்கள் முடிவு செய்திருந்த நிலையில் முந்தைய நாள் இரவில் தேர் எரிக்கப்பட்டது ஒரு திட்டமிட்ட சாதி வெறிச் செயலாகும். பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவத்திற்கு முந்தைய தினம் கள்ளக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தே இந்த தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் சேஷசமுத்தரத்தில் நடைபெற்றுள்ளதாக கருதுகின்றனர்.

சமூக நல்லிணக்கத்திற்கும் மக்களின் சமாதான வாழ்வுக்கும் ஆதரவாய் செயல்படவேண்டிய அரசியல் கடப்பாடு உள்ள பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சியானது சமீப காலமாக தலித் மக்களை பொது எதிரியாக சித்தரித்து பிற சாதியினரின் வாக்குகளையும் வன்னியர் சாதி வாக்குகளையும் பெற முயற்சிக்கும் அரசியலை செயல்படுத்துகின்றது. பிற்பட்ட ஆதிக்க சாதியினரை தலித் மக்களுக்கு எதிராக அரசியல் களத்தில் ஒருங்கிணைக்க முயலுகின்றது. இந்தப் போக்கு சமூக நல்லிணக்கம் பாதிக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடரவும் வழிவகை செய்கின்றது. மேலும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கைகளை வெளிப்படையாக செயல்படுத்தவும் இந்தப் போக்கு துணை போகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரியில் பெற்ற வெற்றியின் பின்னனியில் இளவரசன் -திவ்யா இணையரின் காதல் திருமணம் மற்றும் தலித் காலனி எரிப்பு அதனைத் தொடர்ந்து சாதி துருவமயமாக்கல் என்ற பிற்போக்கு வெறி இருந்தது. இதே போன்று மேற்கு தமிழகத்திலும் சாதி மறுப்பு காதலர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சமீபத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் என்பவரை இதுவரை கைது செய்யக்கூட காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தின் மேற்கு மண்டல ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர் கவுண்டர் வாக்கு வங்கியினை கருத்தில் கொண்டு இந்த மெத்தனப் போக்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தென் மாவட்டங்களில் சாதி வெறிக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதில் தலித் மக்கள் பலியாக்கப்படுகின்றனர்.

அரசு என்ற அமைப்பு சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக சட்டத்தின் ஆட்சி கூறுகின்றது. தேர்தல் நெருங்க நெருங்க சாதிய முரண்கள் தூண்டப்பட்டு மக்களின் மீது திணிக்கப்படும் சாதி வெறி அரசியலை தடுக்கவேண்டிய கடப்பாடு தமிழக அரசுக்கு உண்டு. ஆளும் அரசு சாதி வெறிக்கு எதிராக மென்மையாக நடந்து கொள்ளுவதால் அது எந்தப் பலனையும் பெற முடியாது என்பதே தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தல் காட்டிய பாடம். சனநாயக சமூகத்தின் அடிப்படை வேரினை அழிக்கும் இந்த செயல்பாடுகளை தடுக்க அரசு முன் வரவேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும், சமத்துவத்துடனும் எந்த அச்ச உணர்வின்றியும் வாழும் சமூகமே சனநாயக சமூகம். அந்த சமூகத்தை உத்திரவாதப்படுத்துவதே அரசின் முதல் கடமையாகும். ஆனால் அரசு 144 குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் தடை விதித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக சனநாயக ஆர்வலர்கள் சென்று ஆறுதல், நம்பிக்கை கூறவும், மேலும் கள ஆய்வு செய்யும் சூழல்களையும் தடுத்து வருகின்றது. பிரச்சனைகளை மூடி மறைப்பதால் தீர்வுகள் ஏற்படாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் கிராமத்தில் போய் சந்திக்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்திரவினை உடனே விலக்கிக் கொள்ள வேண்டுகின்றோம். சமூக நல்லிணக்கத்திற்காக சாதி வெறிக்கு எதிராக தொடர் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும், தேர்தலை மையப்படுத்தி எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிடப்பட்டு வரப்போகின்ற சாதி மோதல்களை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், பாதிக்கப்பட்ட சேஷசமுத்திர கிராம மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதோடு அம் மக்களின் தேரை பொது சாலைகளில் இழுத்துச்சென்று சனநாயக, சமூக கண்ணியத்தை அரசு உத்தரவாதப்படுத்தவேண்டும் என்றும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

- பேரா.சரஸ்வதி, தலைவர் & ச.பாலமுருகன் மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL)

Pin It