amit shah 372

ஆகஸ்ட் 6ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்கள் மதுரையில் நடைபெற்ற தேவந்திரகுல வேளாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். பட்டியல் சமூகத்தில் இருக்கும் சாதிகளில் குறிப்பிட்ட 7 சாதிகளை இணைத்து தேவந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும் என்கிற கோரிக்கையை வரவேற்ற அமித்ஷா அதற்கான முயற்சியை எடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

தமிழ் இந்து பத்திரிக்கையில் இந்த செய்தியைப் படித்தபோது, மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாடார், ரெட்டியார், யாதவர், நாயுடு, தேவர் போன்ற சமுதாயத் தலைவர்கள் சேர்ந்து, தேவந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சமூகங்கள் அனைத்தும் தனித்தனி சமூகமாக இருக்கிறது. அது மட்டுமல்லமால், அந்த சமூகங்கள் அட்டவணைப் பட்டியலில் இருக்கின்ற சாதிகளும் கிடையாது. அப்படி இருக்க, அவர்கள் எதற்காக இப்படி ஒரு விசித்திரமான கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.

ஆங்கில தினசரியான டைம்ஸ் ஆப் இந்தியாவில் தென்தமிழகத்தில் உள்ள தலித் சமூகங்கள் அனைத்தையும் இணைப்பதற்காக இந்த விழா எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இந்த இரண்டு செய்திகளும் உண்மைக்கு முரணான செய்திகள் என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.

தேவந்திர குல வேளாளர் சமூகம் என்பது தென்தமிழகத்தில் அடர்த்தியாக இருக்ககூடிய பள்ளர் சமூகம். அவர்கள், தங்களை பள்ளர் என்று அழைக்கக் கூடாது என்றும், தங்களை மள்ளர் மற்றும் தேவந்திர குல வேளாளர் என்கிற பெயர்களில் மட்டுமே தங்களை அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கின்றனர். பள்ளர், பண்ணாடி, காலடி, குடும்பர் என்று உட்பிரிவுகளாக பிரிந்து நிற்கிற ஏழு சாதிகளையும் இணைத்து தேவந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. ஆனால், ஊடகங்களில் இந்த விவரங்களுடன் வெளிவரவில்லை. தென்தமிழகத்தில் உள்ள தலித் சமூகங்கள் என்று ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் பறையரும், அருந்ததியரும் இருக்கிறார்கள். அவர்கள் தேவந்திர குல வேளாளர் அரசியலுக்குள் வரமாட்டார்கள். அந்த மக்களிடம் இந்த கோரிக்கையும் இல்லை.

அடுத்தப்படியாக பாஜகவின் அரசியலை நாம் கவனிக்க வேண்டும். முக்குலத்தோர் தென்தமிழகத்தில் இந்துத்துவ கருத்தியலை உள்வாங்கியவர்களாக இருந்தாலும், அவர்களின் வாக்குகள் பாஜகவிற்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அதிமுகவிற்கு சாதகமாகவே முக்குலத்தோர் வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில், பட்டியல் சமூகத்தில் அடர்த்தியாக இருக்கக்கூடிய பள்ளர் சமூகத்தை பாஜக குறி வைக்கிறது. ஏனென்றால், அரசியல்ரீதியான பிரதிநிதித்துவம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் அந்த சமூகத்திடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை பாஜக குறிவைக்கிறது.

மேலும், சாதிப் பெருமை பேசுவதையும், தங்களை உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வதையும் அமித்ஷா பாராட்டுகிறார். பட்டியல் சமூகத்திலிருந்து தங்களை விடுவித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் அமித்ஷாவிற்கு உவப்பாகவே இருக்கிறது. இடஒதுக்கீடு வேண்டாம், சாதிப் பெருமை வேண்டும் என்று ஒரு சமூகம் சொல்வதை பாஜகவின் இந்துத்துவ அரசியல் வரவேற்கிறது.

ஏற்கனவே, தென்கோடியிலுள்ள நாடார் சமூகத்தினரை இசுலாமியர்களின் வணிக சூழலை காரணம் காட்டி தன்வயப்படுத்தியிருக்கிறது பாஜக. வடதமிழகத்தில் பறையர்களை தன் வயப்படுத்துவதை விட வன்னியர்களைத் தன் வயப்படுத்த முயற்சிக்கிறது. பாமகவின் சமீபத்திய சாதிப் பெருமித அரசியல், சத்திரியப் பரம்பரை அரசியல் பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறது. ஆகவே, பறையர்களை பாஜக தற்போது கண்டுகொள்ள வில்லை.

தென்தமிழகத்தில் பள்ளர்களின் சாதிப் பெருமித அரசியலும், வடதமிழகத்தில் வன்னியர்களின் சாதிப் பெருமித அரசியலும் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அந்த உணர்வினை தனக்கான வாக்கு வங்கியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.

பாஜக அரசியல் தேவந்திர குல வேளாளர்களுக்கு பலன் அளிக்குமா?

தேவந்திர குல வேளாளர் சமூகம், அரசிற்கு எதிரான எண்ணற்ற போராட்டக் களங்களை சந்தித்த வரலாறுகளை தன்னகத்தே கொண்டது. முதுகளத்தூர் கலவரம், கொடியன்குளம், தாமிரபரணி கலவரம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் என அரசு மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளை சந்தித்த சமூகம்.

இந்த போராட்டக் களங்களைப் பற்றி பாஜகவின் கருத்து என்ன? அமித்ஷா இந்த மாநாட்டில் இந்தப் போராட்டங்களில், உயிர் துறந்த தீரர்களைப் பற்றிப் பேசினாரா? என்பதை கவனிக்க வேண்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் தேவந்திர குல வேளாளர் சமூகங்கள் இருக்கும் தொகுதிகள் மிகக் குறைவு. இந்த புள்ளிவிவரம் அமித்ஷாவிற்கு தெரியுமா?. தேவந்திர குல வேளாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பற்றி எதுவும் பேசாமல், சாதியை உயர்த்திக் காட்டுகிறேன் என்கிற வார்த்தை மாலங்களை மட்டும் அமித்ஷா அள்ளித் தெளித்திருக்கிறார். தேவந்திர குல வேளாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களுக்கான மாநாட்டினை நடத்தியிருக்கிறார்கள்.

ஆண்ட பரம்பரை அரசியல் பேசும் சமூகங்களை பாஜக எளிதில் ஈர்த்துவிட முடியும். அந்த வகையில், அந்த சமுகத்திலுள்ள நடுத்தர வர்க்க மக்களை வென்றெடுக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய உணர்வும், சமுக நீதி சிந்தனையும் கொண்ட உழைக்கும் தேவந்திர குல வேளாளர் மக்களை அகண்ட பாரத அரசியல் வென்றெடுப்பது சாத்தியமில்லை.

- ஜீவசகாப்தன்

Pin It