மதுவை ஒழிப்பதற்காகவே இந்த மானுடப் பிறவி எடுத்த ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் மதுவிலக்குப் போராட்டத்தை தங்களிடம் இருந்து மற்ற அரசியல் கட்சிகள் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டதால் துயரத்தின் விளிம்பில் இருக்கின்றார்கள். இந்தப் பிரச்சினையை வைத்தே முதலமைச்சர் ஆகும் தன்னுடைய ஆசையில் மண் விழுந்துவிட்டதால் அன்புமணியும், அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த ராமதாசும் தங்களுடைய சாதிவெறி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள்.

 anbumani 293விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள சேஷசமுத்திரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருவிழாவின் போது சாமி ஊர்வலமும், தேரோட்டமும் பொதுப்பாதை வழியே செல்வதற்கு அங்குள்ள வன்னிய சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டு 16/08/2015 அன்று திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

 சாதிவெறியைத் தூண்டிவிடுவதிலும் அதை ஓட்டுக்களாக மாற்றுவதிலும் கைதேர்ந்த அன்புமணி திருவிழாவுக்கு முந்தைய தினம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சாதிய நெருப்பை பற்றவைத்து விட்டுப் போய் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பல வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன; தலித் மக்கள் மிகக் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளனர்; சாமி தேரும் கொளுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு முன்தயாரிப்போடு இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டிருக்கின்றது. முதலில் மின்மாற்றியை உடைத்து மின்விநியோகத்தை நிறுத்தி இருக்கின்றார்கள். பின்பு பெட்ரோல் குண்டுகளை வீசி அனைத்தையும் கொளுத்தி இருக்கின்றார்கள். தர்மபுரியில் அரங்கேற்றப்பட்டது போல திட்டமிட்டு அவர்களது சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன.

 இதிலே பொறுத்துக்கொள்ள முடியாத செய்தி என்னவென்றால் இந்த சம்பவத்திற்கு ராமதாசு கண்டனம் தெரிவித்து இருப்பது தான். மகனிடம் கொளுத்துவதற்கு கொள்ளியைக் கொடுத்து அனுப்பிவிட்டு அணைப்பதற்கு தண்ணியை எடுத்துக்கொண்டு பின்னாலேயே போகின்றார் ராமதாசு. தானொரு அரசியல் பச்சோந்தி மட்டும் அல்ல, கீழ்த்தரமான சதிகாரர் என்பதையும் அவர் நிரூபித்து இருக்கின்றார்.

 ”தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான அம்மன் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பியதால் அதற்கான தேரையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே வாங்கிக் கொடுத்துள்ளார்கள்” என்று கூறுகின்றார் ராமதாஸ். அப்படி என்றால் தேரை வாங்கிக் கொடுத்த அவர்களே அதை கொளுத்துகின்றர்கள் என்றால் அவர்களைத் தூண்டிவிட்டது யார்? நிச்சயமாக அது அன்புமணிதான்.

 2016 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் ஒரு குடிகாரனைப்போல கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து இருக்கின்றன. எப்படியாவது அதிகாரத்தை வென்றெடுக்க வெறியோடு அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். போன சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முட்டை போட்ட மாதிரி இந்த முறை ஆகிவிடக்கூடாது என்பதற்காக வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்கள் ஓட்டு வங்கியை நிலைப்படுத்திக்கொள்ள தங்களுடைய வழமையான சாதி வெறி அரசியலை கையில் எடுத்து இருக்கின்றார்கள். சேஷசமுத்திரத்துடன் இவர்கள் இதை நிச்சயம் நிறுத்தப்போவது கிடையாது.

 ஒவ்வொரு முறை இப்படி தலித்துகளுக்கு எதிராக கலவரம் நடக்கும் போதும் அரசு கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிணையில் வரத்தக்க பிரிவுகளிலேயே கைது செய்கின்றது. பெரும்பாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்வது கிடையாது. அப்படி கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அந்த சாதி வெறியர்கள் தண்டிக்கப் பட்டிருந்தால் ஓரளவாவது தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களின் ஓட்டைப் பெறுவதற்காக ஆளும் அரசுகள் எப்போதும் இதை செய்வது கிடையாது. மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சில்லரை நிவாரணங்களை வழங்கி அவர்களின் வாயை அடைப்பதையே வழக்கமாக செய்துகொண்டு இருக்கின்றன.

 இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அன்புமணியும், ராமதாசும் மாறி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் பல சாதியக் கொலைகளுக்கும், சாதிக்கலவரங்களுக்கும் மூளையாக இவர்களே இருக்கின்றார்கள். எப்படி பாஜக ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிராக முஸ்லீம்களை முன்நிறுத்தி தன்னுடைய மதவாத அரசியலை செய்கின்றதோ அதே போல அனைத்து ஆதிக்கச்சாதிகளுக்கும் எதிராக தலித்துகளை முன்நிறுத்தி தன்னுடைய சாதியவாத அரசியலை செய்துகொண்டு இருக்கின்றது பா.ம.க. எப்படி பாஜக இந்திய அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் சக்தியோ அதே போல பா.ம.க தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் சக்தி. இதை நாம் தமிழக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். பா.ம.க போன்ற வலதுசாரி சாதிய சக்திகளை அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரணியில் திரள வேண்டும். இல்லை என்றால் இன்னொரு தர்மபுரியோ, மரக்காணமோ, சேஷசமுத்திரமோ நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

- செ.கார்கி

Pin It