“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்”

              என்று கூறுகிறது, வள்ளுவனின் குறள்.

அதாவது, ஒருவரின் இறப்பிற்குப் பிறகு இவ்வுலகில் நிலைத்து நிற்பது, அவரின் புகழ் ஒன்றைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதுவே மேற்கண்ட குறளின் பொருளாகும். இதனை நம்மில் பலர் பரவலாக அறிந்தே வைத்திருக்கிறோம். வள்ளுவனின் இந்த குறளுக்கு, சமகாலத்தின் சாட்சியாய் காட்சியளிக்கிறார், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள்.

இந்தியாவின் தென்கோடி முனையில் பிறந்த அப்துல் கலாம், இந்தியாவையே அவர் பிறந்த மண்ணை நோக்கித் திருப்பியிருக்கிறார். அரசுப் பள்ளிக் கூடங்களில், தமிழ் வழியில் பயின்று விஞ்ஞானத் துறையில் கோலோச்சிய சிறப்பைப் பெற்றவர் கலாம். ஒரு எளிய குடும்பச் சூழலில் பிறந்து, வளர்ந்த கலாம், உலக வல்லாதிக்கத்தின் முகமாய் உருவாகி நிற்கும் அமெரிக்காவையே அதிர்வுக்குள்ளாக்கினார். தனது தனித் திறன்களால் இலட்சியத்தின் உச்சங்களை அடைந்த கலாம், அரசியலில் நேரெதிர் அணியில் இருக்கும் கட்சிகளின் ஒருமித்த குரலாய் முன்மொழியப்பட்டு, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராய் உருவெடுத்தார்.

palani shahan rameshwaram

குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த கலாம், தன்னுடைய எளிமையை எந்த இடத்திலும் மாற்றிக் கொள்ளாத மனிதராய் வாழ்ந்தார். குடியரசுத் தலைவரின் மாளிகையிலுள்ள ஆடம்பரங்களை அகற்றி, அதனுள் மக்கள் சென்று வர இயலும் என்கிற வரலாற்றை உருவாக்கினார். தனது பணிக் காலம் முடிந்ததும், எந்த சஞ்சலங்களற்றும் அவர் ஒரு பேராசிரியராக தன் வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஒருவர், விஞ்ஞான ரீதியில் இந்தியாவின் ‘ஏவுகனை நாயகன்’ எனும் சிறப்பைப் பெற்ற ஒருவர், பேராசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்ததும், “கனவு காணுங்கள்” என்று இளைஞர்களை நோக்கி கூறியதும், அவர் மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் கொண்டுள்ள அன்பையும், காதலையும் வெளிப்படுத்தியது. கலாமின் இந்த பண்பு, மாணவர்களின் மத்தியில் அவரை உயரத்திற்கு கொண்டு சென்றது. பெரும்பான்மை மாணவர்களினுடைய மனதிலும், இளைஞர்களினுடைய இதயத்திலும் கலாம் தனக்கென்ற தனித்துவமான இடத்தைப் பெற்றார். ஒரு கட்டத்தில் அவர், பல கோடி மாணவர்களின் ‘வழிகாட்டியாக அல்லது உந்துசக்தியாக’ மாறிப் போனார். எதிர்கால இதயங்களில் குடியேறிய கலாம், அவர்களின் மத்தியிலேயே தனது இறுதிக் காலங்களைக் கழிக்கத் தொடங்கினார். இளைஞர்களால்தான் இந்தியா வல்லரசாக முடியும் என்கிற கூற்றின் மீது அழுத்தமாய் நம்பிக்கை கொண்ட கலாம், அதற்காக தொடர்ச்சியாக இளைஞர்களின் மத்தியில் உரையாற்றிக் கொண்டே இருந்தார்.

அப்துல் கலாமின் சுயசரிதை நூலான, ‘அக்னிச் சிறகுகள்’ எனும் புத்தகம், இளைஞர்களின் மத்தியில் அதிவேகமாகப் பரவியது. காந்தியடிகளின் சுயசரியதை நூலான ‘சத்திய சோதனை’ என்கிற புத்தகத்திற்குப் பிறகு, இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட ஒரே சுயசரிதையாக அமைந்தது அக்னிச் சிறகுகள் மட்டுமே. அந்தளவிற்கு அக்னிச் சிறகுகள், இந்தியாவில் தீயெனப் பறந்தது. மாணவர்களையும், இளைஞர்களையும் வாசிப்பை நோக்கித் திருப்பியது அந்தப் புத்தகம். இதன் தொடர்ச்சியாய் அப்புத்தகம் மாணவர்களின் மனங்களில் குடிகொண்டது. கலாம், மாணவர்களின் நாயகனாய் மாறி நின்றார்.

எதற்காக கலாம், தனது இறுதிக் காலங்களை அதிகம் செலவிட்டாரோ, அந்தக் கொள்கையின் வேட்கையிலேயே அவரின் உயிர், அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டது. எந்த சமூகத்தை திரட்ட அவர் பேச்சை செலவிட்டாரோ, அந்த மாணவச் சமூகத்தின் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையிலேயே, அவர் ஓய்வைத் தழுவிப் போனார். கடந்த 27.07.2014 திங்கள் கிழமை, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், தனது 84-வது வயதில் மாரடைப்பால் இறப்பைத் தழுவிய கலாம், நம்மிடையே ஒரு கனவாகிப் போனார்.

ஒரு முஸ்லீமாகப் பிறந்து, இசுலாமிய சமயநெறிக் கொள்கையை ஏற்று வாழ்ந்த கலாம், எல்லா தரப்பு மக்களையும் வென்றெடுத்த பெருமைக்குரியவர். அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி எல்லோராலும் கொண்டாடப்பட்டாரோ, அதேபோல அவரின் இறப்பும் எல்லாத் தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமா நட்சத்திரங்களை நாயகர்களாக கொண்டாடும் இளைஞர் பட்டாளம், அப்துல் கலாமின் இறப்பை அறிந்து துடித்துப் போனது. மதுவின் பின்னாலும், சினிமாவின் பின்னாலும் அலையும் கூட்டம், அதனைவிட பன்மடங்காக, கலாமின் இறுதி ஊர்வலத்திற்குத் திரண்டது. திரண்டது மட்டுமல்ல, கண்ணீரைச் சிந்தியது.

27.07.2015 அன்றைய தினத்தில், கலாம் இறந்த செய்தி அறிந்த அந்த கணத்திலேயே, இந்தியா முழுமைக்கும் சோகம் பரவத் தொடங்கியது. இந்தச் செய்தியை தொலைக்காட்சியில் கண்ட உடன், சட்டென ஒரு அதிர்வை என்னால் உணர முடிந்தது. அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒரு மாணவனாய் எனது கல்லூரி நாட்களில், நான் அவரைச் சந்தித்து இருக்கிறேன். அவரின் உரையை நேரடியாக கேட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். அதுதான் நான் அவரை நேரில் கண்ட முதலும், இறுதியுமாக இருந்தது. கலாம் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் அதிகம் விமர்சனங்கள் கொண்டவன் நான். இருந்தும் அவரின் ஆளுமையைக் கண்டு அதிகம் வியப்புற்றிருக்கிறேன். அந்த ஆர்வம்தான், அவரை எப்படியும் இன்னொருமுறை சந்திக்க வேண்டும் என்றும், ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் என்னைத் தூண்டியது.

அதற்கான ஒரு வாய்ப்பாக, எதிர்வரும் 29.08.2015 அன்று, சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வின் செய்தி எனக்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின், ‘பவள விழா’ கொண்டாட்டத்தின் நிகழ்வு அது. இந்த நிகழ்வில் கலைஞர் கருணாநிதியும், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களும் மிக முக்கியஸ்தர்களாக பங்குபெற உள்ளதாக, அந்நிகழ்வின் அழைப்பிதழ் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். இதுதான் அந்த வாய்ப்பென கருதி காத்திருந்தேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசம், கலாம் அதற்குள் இறப்பைச் சந்தித்துவிட்டார். இனி அவரைச் சந்திக்க எந்த வழியுமில்லை என்கிற குறை, என்னை இராமேஸ்வரம் நோக்கி பயணிக்க வைத்தது. அந்தப் பயணத்தின் அனுபவங்களை முன்வைத்ததுதான் இக்கட்டுரை.

ஷில்லாங்கில் மரணித்த அப்துல் கலாமின் உடல், மறுநாள் காலை அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தி விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சார் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கலாமின் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பிரதமர், குடியரசுத் தலைவர் என பலரும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கலாமின் குடும்பத்தினரும், இராமேஸ்வரத்தின் மக்களும், கலாமின் உடலை அவரது சொந்த மண்ணில்தான் அடக்க செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருந்தனர்.

அவரின் உடல் இராமேஸ்வரம் வருமா, வராத என்கிற எதிர்பார்ப்பில் 28.07.2015 செவ்வாய் கிழமையின் மாலை நேரம் தொட்டுவிட்டது. பிரதமர் தொட்டு முக்கிய மத்திய அமைச்சர்களின் ஆலோசனைக்குப் பிறகு, கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்படும் என்றும், 30.07.2015 வியாழன்று, காலை அவரின் உடல் இராமேஸ்வரத்திலுள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்படும் என்றும், உறுதியான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. கலாம் இறந்த செய்தி அறிந்த நொடி தொட்டு, ஊடகங்கள் வேறெந்த செய்திகளையும் ஒளிபரப்பவில்லை. நேரலை விவாத நிகழ்ச்சிகளைக் கூட, செய்தி ஊடகங்கள் உடனடியாக கலாமிற்கான அஞ்சலி நிகழ்வாக மாற்றின. அதுதொட்டு கலாம் அடக்கம் செய்யப்படும் வரையிலும் அமைந்த ஒவ்வொன்றையும், நொடிக்கு நொடி காட்சிப்படுத்துவதில் தீவிரம் காட்டின செய்தி ஊடகங்கள்.

கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு வரப்படும் என்கிற செய்தி உறுதியானதும், நான் இராமேஸ்வரத்திற்கு புறப்படத் தயாரானேன். அதற்காக உள்ளூர் நண்பர்களையும், கருத்தியல் தோழர்களையும் அழைத்து அணிதிரட்ட முயற்சித்த வண்னம் இருந்தேன். போதிய அளவில் ஆட்கள் அணியாகவில்லை. கருத்தியல் தோழர்கள் பலருக்கும் அப்போது கலாமின் மீதான, அரசியல் விமர்சனங்கள் மட்டுமே மிகைந்து போயிருந்தன. ஆகையால் அவர்கள் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

நண்பர்கள் பலருக்கும் வரவேண்டும் என்று விருப்பம் இருந்தும், அவ்வளவு கூட்ட நெரிசலில் பார்க்க சாத்தியப்படுமா என்கிற எண்ணம் அவர்களை தடுத்துக் கொண்டிருந்தது. செவ்வாய் கிழமை இரவு 8 மணி வரை அதுகுறித்துப் பேசினோம். ஒன்றும் உருப்படியாக நகரவில்லை. இதன் தாக்கம் எனக்கே, செல்லலாமா, வேண்டாமா என்கிற நிலையை ஏற்படுத்தியது. அதேசமயம் சமகாலத்தின் ஒரு மிகப்பெரும் வரலாறு என்கின்ற ஒன்றும், அவரைக் காண்பது இதுவே இறுதி என்கின்ற ஒன்றும் என்னை இன்னொரு கோணத்தில் தூண்டிக் கொண்டே இருந்தது.

மறுநாள் காலை, 29.07.2015 அன்று, கலாமின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அந்தக் காட்சிகளை, தொலைக்காட்சியில் பார்த்த வண்ணம், யோசித்துக் கொண்டே இருந்தேன். சென்றுவிடலாம், இல்லை இல்லை இப்படியே தொலைக்காட்சியில் கண்டுவிடலாம் என்கிற ஊசலாட்டத்தின் மத்தியில்தான், திடீர் முடிவாக அமைந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. உள்ளூர் நண்பர் ஆசிக் என்பவரின் அழைப்புதான் அது. இராமேஸ்வரம் சென்றுவிடலாமா என்று நண்பர் கேட்டதும், துணைக்கு ஒருவர் கிடைத்துவிட்டார் என்கிற ஆறுதல் உடனே பயணத்தை உறுதியாக்கியது. தொலைபேசியில் பேசி முடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களின் பயணம் துவங்கியது.

சரியாக மதியம் 1:15-க்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பழனி கீரனூர் பகுதியில் இருந்து கிளம்பிய நாங்கள், மாலை 4 மணிக்கெல்லாம் மதுரை இரயில் நிலையத்திற்குள் சென்றுவிட்டோம். இராமேஸ்வரம் நோக்கிய இரயிலை சற்று தாமத்தினால் தவறவிட்டுவிட்டோம். அடுத்த இரயில் மாலை 6:30 மணிக்கு என்றனர். ஆகையால் உடனடியாக தாமதிக்காமல், பெரியார் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று, அங்கிருந்து பேருந்தில் ஏறி மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்றடைந்தோம். நாங்கள் சென்று இறங்கிய நிமிடத்தில், புறப்படத் தயாராய் இருந்தது, இராமேஸ்வரம் நோக்கிய ஒரு பேருந்து. மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கிய அதேவேகத்தில், இராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். சரியாக 5:20 மணிக்கு, மதுரையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டோம்.

மதுரையிலிருந்து நாங்கள் கிளம்பிய பேருந்து, 7:30 மணியளவில் இராமநாதபுரத்திற்குச் சென்று சேர்ந்தது. நாங்கள் சென்ற அந்தப் பேருந்து தொடர்ந்து இராமேஸ்வரம் செல்லாது என்று சொல்லி, அதில் இருந்த அத்தனை பேரையும் இறக்கிவிட்டனர். இறக்கிவிட்டவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து, வேறு பேருந்தில் ஏற்றிவிடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுப் போனது. பின்னர், இராமநாதபுரத்திலிருந்து வேறொரு பேருந்தில் இராமேஸ்வரம் நோக்கி பயணம் தொடர்ந்தது. இராமேஸ்வரத்தை நெருங்கியதும், கலாமின் உடலை அடக்கம் செய்யும் இடத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பதினை பேருந்தில் அமர்ந்தபடியே கண்டு நகர்ந்தோம்.

சரியாக 9:30 மணிக்கெல்லாம், இராமேஸ்வரத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். நாங்கள் சென்ற அந்த பேருந்து, கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே, அனைவரையும் இறக்கிவிட்டு, காலியாகவே பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது. ஏனெனில் பேருந்தினுள் இருந்த அனைவரும், கலாமைக் காண வந்தவர்களாகவே இருந்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக, கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தினுள் நுழைந்தோம். மக்கள் கூட்டம் எல்லா திசைகளிலும் அலைமோதிக் கொண்டிருந்தது. நாங்கள் பயணித்து வந்த எல்லா வழித்தடங்களிலும், அதனை எங்களால் காண நேர்ந்தது. அதேபோல, எல்லா ஊர்களிலும் கலாமின் இறப்பிற்கு அஞ்சலியைத் தெரிவிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அணிவகுத்துக் காணப்பட்டன. எல்லா தரப்பு கட்சிகளும், இயக்கங்களும், தொண்டு அமைப்புகளும், பேனர்கள் அடித்து வைத்திருந்ததை காண இயன்றது. வழிநெடுக கண்ட பரபரப்பைவிட, மிக அதிகமான பரபரப்பை, கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் காண முடிந்தது. அங்கே சென்றதும் உடலைக் காண முடியுமா என்கிற சந்தேகம் என்னில் வலுத்தது.

இரவு 8 மணியோடு பொதுமக்களுக்கான பார்வை முடிந்து போய்விட்டது என்றும், அதற்கு மேல் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும், எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றும், பலரும் ஆதங்கப்பட்டு, தடுப்பு கம்பங்களில் தொற்றிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் எப்படிக் காண முடியும் என்கிற மனப்பான்மையுடனே, கூட்டத்தில் நுழைந்து, புகுந்து முன்னேறிச் சென்றோம். எப்படியோ உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சென்றுவிட்டோம். ஆனால் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியைத்தான் காண முடிந்ததே தவிர, உடலையோ, முகத்தையோ பார்க்க இயலவில்லை. இந்தத் தொலைவில் இருந்தபடியே அவருக்கு, அஞ்சலி செலுத்தும்விதமாக மலர் வளையத்தை வைத்தோம். அத்தனை தொலைவிலும் மலர் வளையங்கள் குவிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு சிறிது நேரத்தில் அவரின் உடல் அங்கிருந்து, எடுக்கப்பட ஆயத்தமானது. சுற்றி இருந்த ஆயிரக் கணக்கானோர், அவர்களின் தேசபக்தியை காட்டும் வாசகங்களை எழுப்பினர். அந்த வாசகங்களில் உடன்பாடு இல்லாதவன் என்பதினால், நான் அதனை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அவர்களின் அந்த முழக்கம், அவர்களையும் மீறி தொடர்ச்சியாக எழுந்து கொண்டே இருந்தது. கலாமின் உடலை ஏற்றிய, இந்திய கப்பல் படையின் வாகனத்தில், விளக்குகள் பளிச்சிடத் தொடங்கின. அது புறப்பட ஆயத்தமானது. காவல்துறையினர், சுற்றி போடப்பட்டிருந்த தடுப்புகளை ஒட்டி கைகோர்த்து நின்றனர். அவர்களுக்கு முன்னதாக அதே மாதிரியாக, இன்னொரு அடுக்காக காவலர்கள் கைகோர்த்து, சங்கிலித் தொடராய் நகர்ந்து கொண்டிருந்தனர்.

வாகனம் புறப்படுகிறது என்று தெரிந்ததும், ஆர்வ மிகுதியில் நான் தடுப்புகளின் உட்புறமாக தலையைவிட்டு சிக்கிக் கொண்டேன். கூட்டத்தின் அழுத்தம் தாக்குபிடிக்க இயலாமல், உடனடியாக தலையை வெளியே எடுத்துக் கொண்டு, தடுப்புக் கட்டைகளை பலமாகப் பிடித்துக் கொண்டேன். கலாமின் உடலை ஏற்றிய வாகனம் நகரத் தொடங்கியதும், எனது செல்போனில் அதனை வீடியோ எடுக்கத் துவங்கினேன். வாகனம் மெல்ல நகர்ந்து, நாங்கள் நிற்கும் பகுதியைக் கடந்து சென்றது. அப்போதும் கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை மட்டுமே காண முடிந்தது.

கலாமின் உடல், சரியாக இரவு 10 மணிக்கெல்லாம் அவரின் இல்லத்தை நோக்கிச் சென்றுவிட்டது. அவர் இறந்து மூன்று நாட்கள் முழுமையாக கடந்துவிட்ட நிலையில்தான், அவரின் உடல் அவரின் இல்லத்திற்குச் சென்றது. கலாமின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதும். நாங்கள் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த, இடத்திற்குச் சென்று சிறிதுநேரம் அங்கு செலவிட்டோம். பின்னர் மெதுவாக அவரின் இல்லத்தை நோக்கி நடக்கத் துவங்கினோம்.

அந்த இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் நடந்து, அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தின் அருகில் சென்றுவிட்டோம். ஆனால் இல்லத்தினுள் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலைக் காண, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அவரின் இல்லத்திற்குச் செல்லும் வகையில் இருந்த மூன்று வழித்தடங்களும், காவல்துறையினரால் தடுக்கப்பட்டிருந்தன. திரண்டிருந்த மக்கள் கலாமின் உடலைக் காண வழிவகை செய்யும்படி, காவல்துறையினரிடன் கெஞ்சிக் கொண்டும், சிலர் வாக்குவாதம் செய்து கொண்டும் இருந்தனர். அந்த நிலையில் மணி சரியாக 11:30 இருக்கும், அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் திடீர் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

பெரும்பாலும் என்னைப் போன்ற இளைஞர் பட்டாளமே அங்கு அதிகம் திரண்டிருந்தது. கலாம் அவர்களின் உடலைக் காணவிட வேண்டி, திடீர் சாலை மறியல் அங்கு உருவானது. சிலர் அமரவும், எழுந்திரிக்கவும் என மாறி, மாறி அங்கு போராட்டம் சென்று கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அவற்றை அலட்டிக் கொள்ளாமல் ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டிருந்த நானும், நண்பரும், இதற்குமேல் அமைதியாக உட்கார்ந்திருத்தல் தேவையற்றது என்று கருதி, அந்த மறியல் கூட்டத்தினிடையே சென்று அமர்ந்து கொண்டோம்.

அவர்களின் மத்தியில் நானும் ஒருவனாய் கோஷமிடத் துவங்கினேன். எனது அருகில் இருப்பவர்களின் கரங்களைப் பற்றி அமரச் செய்தேன். ஏறத்தாழ எல்லோரும், சிலரின் கைகளைப் பற்றி இழுத்து அமரச் செய்து கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் செல்லச் செல்ல, கூட்டத்தின் மத்திக்குச் சென்று, உணர்வுப் பூர்வமாக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து கொண்டோம். அந்த சமயத்தில் கலாமின் இல்லத்தை நோக்கி வந்த மாவட்ட நீதிபதி ஒருவரின் வாகனத்தை, திரண்டிருந்த மக்கள் வழிமறித்து நிறுத்தினர். அவரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு இன்னும் கூடிப் போய், காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தத் துவங்கினர்.

காவல்துறையினரின் எந்தவித சமரசப் பேச்சுக்களுக்கு இடமற்றுப் போனது. தொடர்ந்து கூடிக் கொண்டிருந்த கூட்டத்தின் நெரிசலினால், முன்னனியில் நிற்பவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகினர். இதனால் அவர்கள் சமாளிக்க இயலாமல், காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளத் துவங்கினர். இந்த நிலையை அடைந்தப் பிறகுதான், காவல்துறையினர், கலாமின் உடலை காண அனுமதி அளிப்பதாகவும், வரிசையாக வருமாறும் கூறினர். இதனைக் கேட்டதும், கூட்டம் உற்சாக மிகுதியில், முன்பைவிட அதிக அழுத்தத்தோடு காவலர்களின் இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்துவிட்டது. தடுப்புகள் தள்ளிவிடப்பட்டதில், காவலர்கள் சிலர் கீழே தடுமாறி விழுந்த சோகமும் நடந்தது.

சட்டென முன்னேறிய கூட்டத்தை, இரண்டாவதாகப் போடப்பட்டிருந்த தடுப்புகளினால் சமாளித்தது காவல்துறை. பின்னர், அந்தத் தடுப்புகளை மெல்ல விலக்கி, அதன் வழியாக ஒருவர் பின் ஒருவராக செல்ல வழிவகைகளை காவலர்கள் ஏற்படுத்தினர். அந்தச் சம்பவம் நிகழ்ந்த பொழுது மணி இரவு 12 ஆகிவிட்டது. நானும், நண்பர் ஆசிக்கும் எப்படியோ முண்டியடித்து வரிசையில் முன்னனியை தக்கவைத்துக் கொண்டோம். மெல்ல வரிசையோடு, வரிசையாக நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம்.

நாங்கள் வரிசை கட்டிச் சென்று கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, அதிகப்படியான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுவிட்டனர். மக்கள் வரிசையைப் போல, காவலர்களும் வரிசை கட்டி நின்றனர். கலாம் அவர்களின் இல்லத்தை நெருங்கிவிட்டோம் என்பதை உணர்த்தியது, காலணிகளை கலட்டி ஓரத்தில் வையுங்கள் என்கிற அறிவிப்பு. காலணிகளை கழட்டி வைத்துவிட்டு சிறிது சென்றிருப்போம், உடனே அங்கு இன்னொரு குழு, அவரவர் கொண்டு வந்திருந்த உடைமைகளை கழற்றி வைத்துவிடச் சொல்லி உத்தரவிட்டுக் கொண்டே வந்தது. அப்படி எங்களின் உடமைகளும் வாங்கப்பட்டு ஓரத்தில் போடப்பட்டது. காலணிகளை கழற்றிவிட்டபோதே, அது எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்கிற கவலை தொற்றிக் கொண்டுவிட்டது. இப்போது உடமைகள் வேறா, என இருமடங்கு கவலையோடு கொஞ்சம் முன்னேறிச் சென்றோம்.

கலாம் அவர்களின் இல்லத்தின் கதவுகள் தென்பட்டன. அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டு, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்த இரும்புத் தடுப்புகளை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், எல்லோரது அலைபேசிகளையும் அணைத்து வைக்க உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர். கைகளில் வைத்திருந்த கேமராக்களை அணைக்கவும், அவைகளை உள்ளே வைக்கவும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருந்தனர். கலாம் அவர்களின் இல்லத்தின் கதவுகளை நெருங்கும் வரை இதே உத்தரவைச் சொல்லிக் கொண்டு நிறைய நபர்கள் வலம் வந்து சென்றனர். உள்ளே யாரேனும் புகைப்படம் எடுக்க முற்பட்டால், காவல்துறையினரின் அனுமதியோடு உங்களின் செல்போன்களையும், கேமராக்களையும் பறிமுதல் செய்துவிடுவோம் என்று மிரட்டல் வேறு. இவைகளையெல்லாம் கேட்டு கடந்து உள்ளே சென்றுவிட்டோம். அவரின் உடல் அருகாமையில் இருந்தது. அங்கும் வரிசையை சரி செய்து கொண்டிருந்தவர்கள், ஒவ்வொருவரின் கைகளையும் பரிசோதித்து, செல்போன் வெறுமனே கையில் வைத்திருந்தாலும் கூட வலுக்கட்டாயமாக உள்ளே வைக்க வைத்தனர்.

கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்ததற்கு, எதிர் திசையில் செலுத்தப்பட்டது மக்களின் வரிசை. வலது ஓரமாகச் சென்று, இடது புறம் திரும்பி, உடலின் அருகே சென்று பார்த்தபடியே நகர்ந்தது மக்கள் வரிசை. நாங்களும் இவ்வண்ணமே அவரின் உடலை நெருங்கிக் கடந்தோம். அந்த நொடிதான், ஒரு இறந்தவரைக் காணும் மனநிலையை என் மனது அடைந்தது. ஒருவித உணர்வு மேலோங்கி, அடங்கியது. மாநிறம் கொண்ட அவரின் முகத்தில், அடர் கருப்பு தொற்றியிருந்தது. கருத்து இருந்தால் கூட பரவாயில்லை, அந்த முகம் ஏதோ மணற்ச் சிற்பம் போல காட்சி தந்தது. அதில் இயற்கையற்று, செயற்கைத் தன்மைதான் தெரிந்தது. பதப்படுத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டியிலேயே வைக்கப்பட்டிருந்தவரின் உடல், எப்படி இவ்வளவு கருமையானது என்பதும், ஏன் இவ்வளவு செயற்கைத் தன்மையில் இருந்தது என்பதும், எனக்கு குழப்பமான மனநிலையையே ஏற்படுத்தியது.

kalam 344

அவரின் உடலைக் கண்டுவிட்டு கடந்ததும், உள்ளே வந்த வழியின் எதிர் திசையில் வெளியேற்றப்பட்டோம். அதன்பின்னர் வேகமாகச் சென்று எங்களது உடமைகளையும், காலணிகளையும் எடுத்துக் கொண்டு வந்து அங்கே அமர்ந்திருந்தவர்களின் அருகில் வைத்து காண்காணிக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் மீண்டும் வரிசையினுள் நுழைந்து, நடக்கத் துவங்கினோம். முன்னர் போலவே எல்லாவற்றையும் கடந்து, இரண்டாவது முறையாக, அப்துல் கலாம் அவர்களின் முகத்தை மிக நெருக்கமாகக் கண்டு கடந்தோம்.

இதன் பின்னர் வெளியே வந்த நாங்கள், காலணிகளையும், உடமைகளையும் பத்திரப்படுத்திக் கொண்டு, கலாமின் இல்லக் கதவுகளுக்கு நேராக சற்று தொலைவில் நின்று அவரின் உடல் வைத்திருந்த, அந்தப் பெட்டியை கவனித்துக் கொண்டிருந்தோம். அதன் பின்னர் அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டோம்.

இந்த நேரத்தில்தான், அருகிலிருந்த ஒருவரின் வாயிலாக யாகூப் மேமனுக்கு, தூக்கு உறுதியானதை அறிய நேர்ந்தேன். ஏற்கனவே இதயம் கனத்துப் போயிருந்தது, இப்போது மேமனின் செய்தி அதனை இன்னும் இறுக்கிப் போட்டது.

மேமனின் செய்தியை அறிந்த சோகத்தோடு, கலாமின் இல்லத்தைவிட்டு நகரத் தொடங்கினோம். நேரம் 2:45 இருக்கும். அருகில் ஏதேனும் தங்குவதற்கு அறை கிடைக்குமா என்று தேடிக் கொண்டு திரிந்தோம். ஏறத்தாழ எல்லாமுமே நிரம்பிவிட்டிருந்தன. அப்படிச் சுற்றிக் கொண்டிருக்கையில்தான், கலாம் அவர்கள் படித்த நடுநிலைப் பள்ளி ஒன்று கண்ணில்பட்டது. அந்தப் பள்ளியில் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட நாங்கள், மீண்டும் அறை தேட ஆரம்பித்தோம்.

அந்தப் பள்ளிக்கு அருகிலேயே ஒரு லாட்ஜ் எங்கள் பார்வைக்குப்பட்டது. உடனே உள்ளே நுழைந்து, அறை கேட்டோம். அறைச் சாவியை எடுத்து கையில் கொடுத்துவிட்டு, வருகை நோட்டில் விவரங்களைப் பதிவு செய்யச் சொன்னார் வரவேற்பு அறையில் இருந்தவர். நான் அதனை வாங்கி எழுதிக் கொண்டிருக்கையில், ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்து அறை இருக்கிறா என்று கேட்டார். இருந்த இறுதி அறையும் இப்போதுதான் நிரம்பியது என்று, லாட்ஜ் பணியாளர் கூறினார். கொஞ்சம் தாமதித்து இருந்தால் இதுவும் கிடைத்திருக்காது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அறையை நோக்கி நடந்துவிட்டேன்.

அறைக்குள் சென்று சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த நேரம், ஒருவர் ஜன்னல் வழியாக அழைத்துக் கொண்டிருந்தார். என்னவென்று கதவைத் திறந்து கேட்டபோது, வாட்ஸ்-அப்பில் சில புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த புகைப்படங்களைக் குறித்து, நான் சொல்லும் செய்தியினை டைப் செய்து கொடுக்க இயலுமா என்று கேட்டார். நானும் சரி என்று கூறினேன். உடனே எங்கள் அறைக்கு அடுத்துள்ள அவரின் அறையிலிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு வந்தார். கலாம் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம், அவரின் வீடு ஆகியவற்றின் அருகே அவர் நின்றிருந்த புகைப்படங்களை அனுப்பிவிட்டு, அவர் சொல்லியவைகளை அவருக்கு டைப் செய்து கொடுத்தேன்.

அப்போது பேசிக் கொண்டிருக்கையில்தான், அவர் பா.ஜ.க-வைச் சார்ந்தவர் என்பது தெரிந்தது. கோவை மாவட்ட பா.ஜ.க செயற்குழுவின் உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் தொடர்ந்தவர், அய்யா இறந்தது அறிந்து மூன்று நாட்கள் சாப்பிடவே இல்லை. இன்று இராமேஸ்வரம் வந்து இறங்கியதும்தான் சாப்பிட்டேன். ஏனெனில் அய்யா, யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று கூறினார் என்று ஏதோ விளக்கங்களையெல்லாம் சொன்னார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், அய்யாவின் உடலைக் கண்டுவிட்டு சோகம் தாங்க இயலாமல் சிறிது மது அருந்திவிட்டதாகவும், அவரே சொல்லிக் கொண்டார்.

அந்த மது மயக்கத்தில் அவர் பேசிய தேசபக்தி வார்த்தைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ‘காங்கிரஸ் இருந்திருந்தால் இப்படியெல்லாம் மரியாதை செய்திருக்க மாட்டார்கள். எங்கள் ஆட்சியால்தான், கலாம் அய்யாவிற்கு இவ்வளவு மரியாதை, அரசால் அளிக்கப்பட்டுள்ளது’ என்று பெருமையுடன் கூறினார். அப்படியென்ன மரியாதைகள் என்று சும்மா ஒரு கேள்வியை அவரிடத்தில், கேட்டுப் பார்த்தேன். ‘நாளை பிரதமரே நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி செய்தால் இதுவெல்லாம் நடக்குமா’ என்று மீண்டும் கேட்டார். அப்போது அவரை இடைமறித்து நான் பேசினேன்.

‘உங்கள் ஆட்சியோ, பிரதமரோ, இந்த நாடோ, அப்துல் கலாம் அவர்களை துளியும் மதிக்கவுமில்லை, சிறப்பிக்கவுமில்லை. மாறாக முற்றும், முழுவதுமாக அவமதித்துள்ளனர். அப்துல் கலாம் அவர்கள் ஒழிக்க வேண்டும் என்று கூறிய மரண தண்டனையை, நாளை யாகூப் மேமனுக்கு அளிக்க உள்ளது இந்திய அரசு. அதுவும், கலாம் அவர்களின் உடல் மண்ணிற்குள் செல்வதற்கு முன்பாகவே, இது நடக்கவுள்ளது. இதன்பிறகு, பிரதமர் நேரில் வருவதால் மட்டும், இந்த தேஷம் அப்துல் கலாமை மதித்தது என்றாகிவிடுமா’ என்று கேட்டேன். அவருக்கு தேஷ பக்தி தலைக்கேறிப் போய், ‘தீவிரவாதிக்கு தூக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். பின்னர் நானும் அறைக்குள் சென்று, உறங்கத் தொடங்கினேன்.

30.07.2015 வியாழன் காலை, 9 மணிக்கு மீண்டும் அறையைவிட்டு வெளியே கிளம்பினோம். லாட்ஜ் அருகிலிருந்த ஒரு இல்லத்தில், காலை உணவு கிடைத்தது. கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருந்ததால், ஒரு நாள் உணவகமாக அந்த வீடு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு உணவைச் சாப்பிட்டுவிட்டு, நேரே கலாம் அவர்களின் இல்லத்தை நோக்கி நடந்தோம். அவரின் உடல் அந்நேரம், அருகிலிருந்து மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு இசுலாமிய முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்டு, இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் தொழுகை வழிபாடு நடந்தது. இது முடிந்து, அவரின் உடல் அரசு மரியாதையுடன் வாகனத்தில், இறுதி ஊர்வலத்திற்காக ஏற்றப்பட்டது.

நாங்கள் வேகமாக முன்னே செல்ல திட்டமிட்டு, ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னர், அடக்கம் செய்யப்படும் இடத்தை நோக்கி நடந்தோம். அப்போது நாங்கள் சிறிது தூரம் சென்றிருந்த நிலையில், சாலையில் சிலர் சூழ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்னன் தொல்.திருமாவளவன் அவர்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டோம்.

ஆகையால் நேரே அவரைச் சென்று கண்டுவிட்டு, அவரோடு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர், அவரின் வாகனம் வர தாமதமாகிக் கொண்டிருந்ததால், அவர் நடக்கத் தொடங்கினார். அவரோடு இணைந்து நாங்கள், பேருந்து நிலையம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்றோம்.

பேருந்து நிலையத்தின் அருகே நாங்கள் சென்றிருந்த தருணம், முப்படைகளின் அணிவகுப்பு முன்னும், பின்னும் சூழ, அப்துல் கலாம் அவர்களின் உடல் ஊர்வலமாய் வந்து கொண்டிருந்தது. அதனால் அண்ணன் திருமாவளவன் உட்பட, எல்லோரும் சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்று மரியாதை செலுத்தினோம்.

ஊர்வலம் எங்களைக் கடந்து சென்றதும், சிறிது நேரம் கழித்து அந்த சாலையின் வழியாக வாகனங்களை காவல்துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் சற்று நிமிடத்தில், வந்த ஷஃபாரி வாகனத்தில் ஏறி, திருமாவளவன் அடக்கம் செய்யும் இடத்திற்கு கிளம்பினார். நாங்கள் அதன் பின்னால் சென்ற வாகனத்தில் பயணித்தோம்.

ஒரு எல்லைக்கு மேல், கூட்டம் நெருக்கிவிட்டது. எப்படியோ அடக்கம் செய்யும் இடத்தின் அருகில் சென்றுவிட்டோம். முக்கிய நபர்கள், தலைவர்கள் மட்டுமே அடக்கம் செய்யும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து மைதானம் தெரிந்தாலும், அங்கிருந்து எந்த ஒன்றையும் தெளிவாகப் பார்க்க இயலவில்லை. எல்லாம் அனுமானத்தில்தான் அறிந்து கொள்ள முடிந்தது. அதனால், அருகில் எங்கேனும் தொலைக்காட்சி கிடைக்குமா என்று தேட முற்பட்டு பின்னோக்கி நடக்கத் தொடங்கினோம். திரண்டிருந்த கூட்டத்தின் இறுக்கத்திலிருந்து, சற்று இடைவெளியான பகுதியை அடைய நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் பின்னோக்கி வர வேண்டியதாயிற்று.

thiruma palani shahan

அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது என்று கூறினர். எவ்வித வாகன வசதிகளுமற்று, நடந்தே பேருந்து நிலையத்தை அடைந்தோம். செல்லும் போதும், திரும்பும் போதும் வழியில் ஆங்காங்கே தன்னார்வத்தோடு, தண்ணீர் ஏற்பாடுகளை பலர் செய்திருந்தனர். சில வீடுகளின் வெளியில் குழாய் ஏற்பாடுகள் செய்து, குடி தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் வாகனங்களில் தண்ணீர் பாக்கெட்டுகளும், பாட்டில்களும் கொடுத்த வண்ணம் சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் பெருமளவு சோர்வுகளற்று நடக்க இயன்றது.

நாங்கள் பேருந்து நிலையத்தை அடைய நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையிலும், மக்கள் கூட்டம் ஓயாது அடக்கம் செய்யும் திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அடக்கம் செய்யும் இடத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னரே மக்கள் கூட்டம் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இருந்தும் மக்கள் செல்லும் காட்சி, தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

நாங்கள் ஒருவழியாக பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்த டீ கடை ஒன்றில் தஞ்சம் அடைந்தோம். அக்கடையில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அங்கு நின்று, உடல் அடக்கம் செய்யும் காட்சிகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்துல் கலாம் அவர்களின் உடல் முழுவதுமாக அடக்கம் செய்யப்பட்டுவிட்ட, அந்தக் காட்சிகளை கண்டுவிட்டப் பின்னர், நாங்கள் மெல்ல அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து அறைக்கு 3 கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

அறையை நோக்கி நடந்து கொண்டிருக்கையில், சாலையின் மத்தியில் சென்று கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தில் உணவுப் பொட்டலங்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். உடனிருந்த நண்பர் ஆசிக், அங்கு சென்று ஆளுக்கு இரு உணவுப் பொட்டலங்களை வாங்கி வந்தார். உணவுப் பொட்டலங்களும், தன்னார்வ அடிப்படையில் இலவசமாக அளிக்கப்பட்டன. இதுபோல், ஆங்காங்கே சில வாகனங்களில் வழங்கப்பட்டுக் கொண்டேதான் இருந்தன. அங்கிருந்து நேரே அறையை நோக்கி நடந்து, ஒருவழியாக அறையை அடைந்துவிட்டோம். அறைக்குள் நுழைந்ததும் சிறிது இளைப்பாறுதல்களை எடுத்துக் கொண்ட நாங்கள், சிறிது நேரத்தில் பொட்டலத்தைப் பிரித்து, சாப்பிடத் துவங்கினோம். மீதமிருந்த இரண்டு பொட்டலங்களை, இரவு உணவிற்கென்று எடுத்து வைத்துக் கொண்டோம்.

உணவு உண்ட பிறகு, உடனே அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டோம். மதியம் 1:30 மணி இருக்கும், நாங்கள் அவரின் இல்லத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். இல்லத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இல்லத்தின் வாயிலிலும், அதனையடுத்த சிறிய முகப்பு அறையிலும், வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டோம். அங்கு அப்துல் கலாம் அவர்களின் உருவப் படமொன்று பெரிய அளவில் சுவற்றில் மாற்றப்பட்டிருந்தது. அதன் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின்னர், அவர் இல்லத்தின் நுழைவுக் கதவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இதனையடுத்து சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு, ‘ஆபில்-காபில் தர்ஹா’ என்று சொல்லப்படும் இடத்திற்குச் சென்றோம்.

அந்த தர்காவில் இருந்து, நேரே அறையை நோக்கித் திரும்பிய நாங்கள், அறையை காலி செய்துவிட்டு, மாலை 4:30 மணியளவில், இராமர் பாதம் என்கின்ற இடத்தைக் காணச் சென்றோம். அங்கு சென்றுவிட்டு, மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்த நாங்கள், அங்கிருந்து பாம்பன் பாலம் நோக்கிப் பயணமானோம். 6:20 மணிக்கெல்லாம் பாம்பன் பாலத்தினை அடைந்த நாங்கள், அங்கு இரவு 7:20 வரை இருந்துவிட்டு, பாம்பன் தீவிலிருந்து, மதுரையை நோக்கிய பேருந்தில் ஏறினோம்.

மதுரையை நோக்கிய பேருந்துப் பயணத்திலேயே, நாங்கள் வைத்திருந்த உணவுப் பொட்டலங்களை பிரித்து, இரவு உணவை முடித்துக் கொண்டோம். சரியாக, 11 மணிக்கு மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தை வந்தடைந்தோம். அங்கிருந்து, பெரியார் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்று சேர்ந்தோம். பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடைப் பயணமாக, இரயில் நிலையத்தை அடைந்து, அங்கு நிறுத்திவிட்டுச் சென்றிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு, ஊர் நோக்கித் திரும்பினோம். நள்ளிரவு, 2:30 என்கிற நிலையில், நாங்கள் வீட்டை அடைந்தோம். பயணங்களின் அசதிகளால் அன்றைய இரவு உறங்கியது தெரியவில்லை.

ஒரு வரலாற்றுத் தருணத்தை கடந்த உணர்வு மேலெழுந்து நின்றது. எல்லாம் முடிந்து போனது. கலாம் கனவாகிப் போய்விட்டார். ஆனால் அவர் மீதான போற்றுதல்களும், அதன் வழியான நினைவுகளும் இன்னும் ஓய்ந்து போகவில்லை. இதே அளவில் அவர் மீதான விமர்சனங்களும், வீரியமாகப் பேசப்பட்டுக் கொண்டே உள்ளன.

எந்த ஒரு மனிதரும் விமர்சனங்களுக்கு, அப்பாற்பட்டவர்களில்லை. ஆனால் விமர்சனம், விமர்சனம் என்கிற எல்லையைக் கடந்து, காழ்ப்புணர்வாக மாறிவிடக் கூடாது. அப்துல் கலாமைப் பொருத்தவரையில் அவர் விமர்சனங்களைக் கடந்து, பல வழியில் பாராட்டுதலுக்குரியவராக இருக்கின்றார். நாம் அவரிடத்திலிருக்கும் நேர்மறைகளை கையிலெடுத்துக் கொண்டு களமாட முனைய வேண்டும்.

அவர் குடியரசுத் தலைவராக பணியாற்றிய காலத்தில், ஒரே ஒருவரின் கருணை மனுவைத்தான் நிராகரித்துள்ளார். ஆனால் 11 பேர் மீதான, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். மரண தண்டனைக்கு எதிராக எழுதியுள்ளார். கருத்தரங்குகளில் பேசியுள்ளார். அது தொடர்பான கூட்டறிக்கைகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.

யாகூப் மேமனை, தண்டனை என்கிற பெயரில் அரசு கொலை செய்திருக்கிறது. இதுவே இந்தியாவில் நிறைவேற்றப்படும் இறுதி, அரசக் கொலையாக இருக்க வேண்டும். மரணம் என்பது ஒரு தண்டனை அல்ல. சட்டத்தின் பெயரால் நிகழும், இந்தக் கொலையை, கலாமின் வார்த்தைகளை முன்வைத்து ஒழிக்கப் போராடுவோம். அதுவே அவருக்கு செய்யும் மிகச்சரியான அஞ்சலியாக இருக்க முடியும் என்கிற கருத்தை வலுவாக்குவோம்.

-              பழனி ஷஹான்

Pin It