கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

தற்போதைய தமிழக அரசின் அந்நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பாகும். சி.பி.ஐ(எம்). கட்சி இன்றுவரை தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுடன் உறவு வைத்துக் கொண்டுள்ள கட்சி.

ஆய்வின் அவசியம்

கூட்டணியில் இருந்து கொண்டே அதற்குத் தலைமை தாங்கும் கட்சியை எதிர்த்துச் செயல்படும் அளவிற்கு இப்பிரச்னைக்கு அக்கட்சி முக்கியத்துவம் தருகிறதென்றால் அதனை நிச்சயமாக ஆய்வு செய்வது மிகவும் அவசியம்.

அக்கட்சி தவிர ம.க.இ.க. போன்ற அமைப்புகளும் கூடச் சமச்சீர் கல்விக்கு ஆதரவாகப் பெருங்குரல் எழுப்புகின்றன. அந்த அமைப்பின் பாரம்பர்யத்தைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அது சமச்சீர் கல்வியை விமர்சிப்பவர்களை, அதாவது அது அமலாகாமல் நின்றுவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை என்று கருதுவோரைப் பார்ப்பனியத்தின் ஆதரவாளர்கள் என்று குறைவின்றி வசை பாடுகிறது.

ஆனால் கல்வியின் மூலமே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உத்திரவாதப் படுத்த முடியும் என்று கருதும் மத்தியதர வர்க்க மற்றும் கீழ்த்தட்டு மத்தியதர வர்க்கப் பெற்றோரில் பலர் சமச்சீர் கல்வி என்ற பெயரில் மெட்ரிக்குலேசன் கல்வியை அரசுப் பள்ளிக் கல்வி அளவிற்குத் தரம் குறைப்பதால் என்ன பயன்? அவ்வாறு செய்வதால் தற்போது தங்கள் பிள்ளைகளுக்குக் கிட்டும் ஓரளவிலான வேலை வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமே என்ற கவலையில் உள்ளனர்.

அப்படியிருந்தும் இடதுசாரிகள் என்று அறியப்படும் சக்திகளின் ஆதரவை மிக அதிகம் பெற்றிருப்பதாக இந்தச் சமச்சீர் கல்விக் கொள்கை உள்ளதால் அதை மிகத் தெளிவாக ஆய்வு செய்து அது குறித்த விஷ‌யத்தில் மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியது நமது இதழைப் போன்றதொரு இடதுசாரி இதழின் சீரிய கடமையாகும்.

சமச்சீர் கல்விக்கான பரிந்துரையைச் செய்யுமாறு முந்தைய தி.மு.க. அரசால் கேட்டுக் கொள்ளப்பட்ட முத்துக்குமரன் கமிட்டியின் அறிக்கை அதன் முழு வடிவில் நமக்கு எங்கும் கிடைக்கவில்லை.

அதுகுறித்த மற்றவர்களின் கருத்துக்களும், அக்கமிட்டிக்கு அதனை ஆதரிக்கும் சிலரால் கொடுக்கப்பட்ட கல்வி குறித்த கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களுமே நமக்குக் கிடைத்துள்ளன.

அவற்றில் உள்ள கருத்துக்களே சமச்சீர் கல்வியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளப் போதுமானவை என்ற அடிப்படையில் அவற்றை மையமாக வைத்து ஒரு ஆய்வினை காலகட்டத்தின் அவசியம் கருதி மேற்கொள்வது நமக்கு அவசியமாக உள்ளது.

தேவை மற்றும் அவசியம்

சமச்சீர் கல்வியின் ஆதரவாளர்கள் அது கொண்டுவரப்படுவதன் தேவை மற்றும் அவசியத்தை வலியுறுத்தி முன்வைக்கும் கருத்துக்களை முதற்கண் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி தற்போது செகண்டரி போர்டு ஆஃப் எஜீகே­ன், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என நான்கு வகைக் கல்வி முறைகள் உள்ளன.

முதன்முதலில் பள்ளிக் கல்வியை மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1978-ம் ஆண்டு கைவிட்ட நிலையில் மெட்ரிக்குலேசன் கல்விமுறை 34 பள்ளிகளில் மட்டும் கொண்டுவரப் பட்டது. அது படிப்படியாக அதிகரித்துத் தற்போது அனைத்துப் பெற்றோரும் அக்கல்வியின் பக்கம் ஓடும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

தற்போதைய கல்விமுறை மனப்பாடம் செய்வதை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. எனவே அது சலிப்பும் அலுப்பும் தட்டுவதாக இருக்கிறது. அதாவது தற்போதைய கல்விமுறையில் கற்பிக்கப்படுவது ஏராளமாக இருக்கிறது; ஆனால் கற்றுக் கொள்வது மிகவும் குறைவாக இருக்கிறது.மாணவர்களின் முதுகு கூன் விழும் அளவிற்கு புத்தகச் சுமை இதனால் அவர்கள் மீது ஏற்றப்படுகிறது. அது மிகவும் குறைக்கப்பட வேண்டும்.

எனவே கல்வி என்பது அனைத்து வி­யங்களையும் பாடப் புத்தகத்தில் எழுதி மாணவர்கள் அதைக் கற்பதைக் கட்டாயமாக்கி விடுவதாக இருக்கக் கூடாது. மாணவர்களையும் சிந்திக்க வைப்பதாக அது இருக்க வேண்டும். எனவே அடிப்படை விதிகள் போன்றவற்றை மட்டும் மாணவர் களுக்குப் புகட்டி அதையயாட்டி அவர்களைச் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப் படுவதால் அதன் மேல் மக்களுக்கு ஒரு மோகம் உருவாகியுள்ளது. மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தரமான கல்வி கிட்டுவதாக நம்பப் படுகிறது. ஆனால் தரம் என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொருத்தமான அளவுகோல் எதுவும் இல்லை.

கல்வியாளர்களின் அனுபவம் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் உருவான பொதுவான கருத்து மாணவர்கள் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், கற்கவும் உகந்த மொழி தாய் மொழி என்பதையே முன்வைக்கிறது. அத்துடன் ஆங்கிலமும் ஒரு மொழியாக வேண்டுமானால் கற்பிக்கப் படலாம். முழுக்க முழுக்க ஆங்கில வழியில் கற்பது மாணவர்கள் சுயமாகச் சிந்திப்பதைத் தடுத்துவிடும். மெட்ரிக்குலேசன் கல்வி நிலையங்களில் குறிப்பாக மிக அதிகமான வீட்டுப் பாடங்கள் கொடுக்கப் படுகின்றன.

இவ்வாறு சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் கூடுதல் பாடத் திட்டங்கள்; அதையும் தாண்டி வீட்டிலும் தங்கள் நேரத்தைத் தங்களது விருப்பப்படி செலவிட முடியாதவாறு வீட்டுப் பாடச் சுமை இவையனைத்தும் சேர்ந்து மாணவர்கள் விளையாடவோ, குழந்தைப் பருவத்திற்குரிய விதத்தில் அவர்களது நேரத்தைச் செலவிடவோ முடியாத கொடுமையான நிலையில் அவர்களை வைத்திருக்கிறது.

எனவே வீட்டுப் பாடங்களுக்காக மாணவர் செலவிடும் நேரம் ஒரு நாளைக்கு அரைமணி நேரத்திற்கு மேலானதாக இருக்கக் கூடாது.

இதையயல்லாம் சரி செய்வதற்கு உள்ள ஓரே வழி இந்த நான்கு வகைக் கல்வி முறைகளையும் ஒழித்து ஓரே கல்விமுறை கொண்டுவர வேண்டும். அதைத் தவிர சி.பி.எஸ்.இ. மற்றும் நவோதயா பள்ளிக் கல்விமுறை இவை இரண்டு மட்டுமே இருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ. கல்விமுறை கேந்திரிய வித்தியாலயா வோடு முடிந்துவிட வேண்டும். வேறு பள்ளிகளில் அம்முறை அறிமுகம் செய்யப்படக் கூடாது.

கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவர்களது சிந்திக்கும் திறனை வளர்க்க 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும்.

பள்ளிக் கூடங்கள் அனைத்தும் விளையாட்டுத் திடல்கள், சோதனைச் சாலைகள், கணிணி வசதி, நூலகங்கள் ஆகிய அனைத்து வசதிகளையும் கொண்டவையாக இருக்க வேண்டும்.

பாடத் திட்டங்கள் மாநில அளவில் கூட தயாரிக்கப்படக் கூடாது. மாவட்ட அள வுகளில் கூட மக்களின் வாழ்க்கை முறை கள் வேறுபட்டவையாக இருப்பதால் மாவட்டத்திற்கு மாவட்டம் கூட வேறு பட்ட கல்விப் பாடத்திட்டம் இருக்க வேண்டும். அவை வாழ்க்கை சார்ந்தவை யாக இருக்க வேண்டும். அப்பாடத் திட்டங்கள் மாவட்ட அளவுகளில் திறமைபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும்.

மேற்கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே ஒரே கல்விமுறை அதாவது சமச்சீர் கல்விமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்ற வகையில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வந்துள்ள பரிந்துரைகளும் கருத்துக்களும் உள்ளன.

இனிய விருப்பங்கள்

இதிலிருக்கக் கூடிய வி­யங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருக்கும் ஒருசில கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை யாக இல்லாவிடினும் அடித்துக் கூறப்படுபவையாக உள்ளன. அவற்றைத் தவிர பிற அனைத்துக் கருத்துக்களும் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளே.

ஆனால் கருத்துக்கள் அவை முன்வைக்கப்படும் கால கட்டத்தின் சமூக அமைப்பின் அடிப்படையைக் கணக்கில் கொண்டு முன் வைக்கப்படா விட்டால் அவை சிலரது இனிய விருப்பங்களாக இருக்குமே தவிர பொருத்தமுடையவையாக ஆகாது.

இதில் கூறப்படும் பாடத்திட்டம் குறித்த வி­யம் போர்ட்டோ ரிகோ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த இவான் இலிச் என்பவரால் எழுதப்பட்ட பள்ளிகளே இல்லாமல் கல்வி வழங்கும் முறையினை (De-Schooling) ஒத்ததாக உள்ளது.

அதுதவிர மற்ற அனைத்து விஷ‌யங்களும் ஒரு முன்மாதிரி சமூகத்தில் -அதன் மொழியும் கூட உலகின் அனைத்து உயர் விஞ்ஞானம், தொழில் நுட்பங்களையும் எளிதில் கற்கும் வகையில் வளர்ச்சியடைந்த ஒன்றாக இருக்கும் நிலையில்- குழந்தைப் பராமரிப்பும் கல்வியும் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறிருப்பதை வலியுறுத்துபவையாக உள்ளன.

ஆனால் நமது சமூகம் ஒரு முன்மாதிரி சமூகமல்ல. எடுத்துக்காட்டாக இன்றைய நமது சமூகத்தின் பல அடிப்படைக் கோளாறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இன்றுள்ள சமூகமே நிரந்தரமாக இருக்கப் போகும் ஒன்று என்று வைத்துப் பார்த்தால் கூட வீட்டுப் பாடங்களை அரைமணி நேரம் என்ற அளவிற்குக் குறைத்தால் பிள்ளைகளின் மீதி நேரமனைத்தும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்தான் கழியும்.

எனவே இக்கருத்துக்களை மையமாகக் கொண்ட கல்வியை பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமூகத்தில் வர்க்கச் சார்பற்ற அரசு ஒன்று இருக்கும் போது மட்டுமே அமல்படுத்த முடியும். ஆனால் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் வரலாற்று ரீதியாக ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருந்து கொண்டிருக்கும் சமூகம்.

அது வர்க்க பேதம் கொடூரமாகத் தலைவிரித்தாடும் சமூகம். அது வர்க்க பேதமற்ற நிலையை நோக்கிச் செல்ல எந்த வகையிலும் அனுமதித்து விடக்கூடாது என்ற அடிப்படையில் அனைத்துவகைச் சீரழிவுகளுக்கும் ஆளும் வர்க்கத்தாலும், அதன் கைபாணமாகச் செயல்படும் அரசுகளாலும் ஆட்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகம்.

இந்நிலையில் நமது கருத்து, சிந்தனை ஆகிய அனைத்துமே இப்போதுள்ள சீரழிவினைக் காட்டிலும் கூடுதலான சீரழிவுகளுக்குச் சமூகத்தை இட்டுச் செல்லக் காத்திருக்கும் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் ஆட்சியாளர்களின் சதித் திட்டங்களைப் புரிந்து கொள்வதும் அதனை அம்பலப்படுத்துவதும் முடிந்த அளவிற்குச் சீரழிவைத் தடுப்பதும் என்பதாகவே இருக்க வேண்டுமே தவிர ஒரு உன்னதமற்ற சமூகத்தில் உள்ள கல்விமுறை எப்படி உன்னதமானதாக இருக்க வேண்டும் என்று நடைமுறைக்கு உதவாத வகையில் பிதற்றுவதாக இருக்கக் கூடாது.

நடுநிலை அரசல்ல

அதைச் செய்வதில் முதல் படியாக ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் வாழும் இந்த அமைப்பை ஆட்சி செய்வது அனைத்து வர்க்க பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு நடுநிலை அரசல்ல. எனவே இது முனைப்புடன் கொண்டு வரும் எந்தத் திட்டத்திலும் ஆளும் முதலாளி வர்க்க நலன் கருதும் நோக்கம் இருக்கும். ஆனால் அந்த நோக்குடன் கூடிய திட்டங்களை இவை ஒளிவுமறைவின்றி அமல் செய்தால் மக்கள் எதிர்ப்பு அவற்றிற்கு எதிராகப் பொங்கி எழும்.

அதற்குப் பயந்து பல உயர்ந்த கருத்துக்களை முன்னிறுத்திக் குழப்பியே தங்களுக்குச் சாதகமானவற்றை அமல் படுத்துவது இந்த வர்க்கச் சார்பு அரசுகள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் யுக்தி. அதனைப் பல மாநில அரசுகள் பல விதங்களில் செய்கின்றன.

மேலும் ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்பைக் கொண்டு வருவது அத்தனை எளிய வி­யமல்ல. ஆளப்படும் வர்க்கத்தால் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்படும் ஜீவமரணப் போராட்டங்களின் மூலமே அதனைக் கொண்டுவர முடியும்.

ஆனால் ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகளும், அவற்றால் அமைக்கப்படும் அரசுகளும் அதனை மூடிமறைத்துத் தற்போதுள்ள அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டே சமத்துவ சமூக அமைப்பைக் கொண்டு வந்துவிட முடியும் என்று காட்ட முயல்கின்றன.

நாடக மேடையல்ல

அவ்வாறு கொண்டு வருவதற்குச் சமூகம் நாடக மேடையோ அல்லது திரையரங்கோ அல்ல. ஏனெனில் நாடகங்களிலும் திரைப் படங்களிலும் தான் அனைத்துச் சிக்கல்களும் நீங்கி ஒரு மகிழ்ச்சியான முடிவு வருவது மிக எளிதாக நடக்கும்.

நாம் திரைப்படங்கள், நாடகங்கள் எனக் குறிப்பிடுவது ஆளும் வர்க்கத்திற்குத் தேவையான பொய்யான உணர்வு நிலையை மக்களிடம் ஏற்படுத்த விரும்பும் தன்மைவாய்ந்த நாடகங்களையும், திரைப்படங்களையுமே.

அத்தகைய தன்மை வாய்ந்த திரைப் படங்கள், நாடகங்களை முன்னிலைப் படுத்துவதில் மும்முரமாக இருந்த நம்மை இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சியினர் அதே பாணியில் சமூக அரங்கில் அரங்கேற்றிய நப்பாசை நாடகங்கள் தான் சமத்துவ புரம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, கண்ணொளித் திட்டம் போன்றவை. அந்த பாணியில் கொண்டு வரப்பட்டதாகத் தவிர வேறு எந்த சரியான நோக்கையும் கொண்டதாக இந்தச் சமச்சீர் கல்வியும் இருக்க முடியாது.

பிச்சைக்காரர் மறுவாழ்வு, கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவை சமூகத்தின் ஒரு பகுதியினரை மட்டும் குறித்தவை. சமத்துவபுரம் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வரப் போவதாக அக்கட்சியும் அதன் ஆட்சியும் கூறினாலும் அது நகைப்பிற் குரியதாகவே அனைவராலும் பார்க்கப் பட்டது.

ஆனால் அத்திட்டங்களைப் போலன்றி இந்தச் சமச்சீர் கல்வித்திட்டம் உண்மையிலேயே மக்கள் அனைவரையும் பாதிக்க வல்லதாக ஆகிவிட்டது. ஆனால் இது வாழ்க்கைப் பிரச்னை என்பதால் அரசின் இத்திட்டத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் கொடுக்கவில்லை.

மெட்ரிக்குலேசன் கல்வி சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் தரம் குறைக்கப் பட்டால் சி.பி.எஸ்.இ. பக்கம் போவோம் என்பதாகவே மக்களின் அணுகுமுறை இருக்கிறது. மக்கள் என்று நாம் குறிப்பிடுகையில் கல்வியின் மூலமே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உறுதி செய்யப்படும் என்று கருதும் மக்களையே நாம் குறிப்பிடுகிறோம்.

இப்போதுள்ள தரமாவது பராமரிக்கப்பட வேண்டும்

எனவே தற்போது உண்மையான விஞ்ஞானபூர்வ அறிவு, குழந்தைகளின் அனைத்துத் திறமைகளையும் வளர்ப்பது ஆகிய அடிப்படைகளிலான கல்வி கிட்டுவதற்கான சூழல் ஏற்றத்தாழ்வு நிறைந்த இச்சமூகத்தில் இல்லை.

அந்நிலையில் மக்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி முறையை அந்தப் பின்னணியில் மட்டுமே ஆராய வேண்டும். அதன் மையமான குறிக்கோள் இப்போதுள்ள கல்வித் தரமும் இனிவரும் திட்டத்தால் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதாகவே இருக்க வேண்டும்.

ஆங்கில வழியில், மனப்பாடம் செய்வதை மையமாகக் கொண்டதாகவே இருந்தாலும் அரசுப் பள்ளிகளில் இருப்பதைக் காட்டிலும் தரமான கல்வி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டால் அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்குரிய மக்களின் உரிமை ஒருபோதும் பறிக்கப்படக் கூடாது; ஒரு நல்ல அரசு முதல் கட்டமாக அவற்றின் தரத்திற்கு அரசுப் பள்ளிகளைக் கொண்டு வந்து அங்கு மட்டுமே பயில முடிந்த நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கும் இப்போதிருப்பதைக் காட்டிலும் தரமான கல்வி கிட்டும் வாய்ப்பினை ஏற்படுத்த முயல வேண்டும். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் முறைகேடாகப் பணம் பிடுங்குகின்றன என்றால் அரசு அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வாய்ப்பந்தல் அரசுகள்

இதைச் செய்யாமல் இந்தச் சூழலில் அமுல்படுத்தவே முடியாத பல உயர்ந்த கருத்துக்களை முன்னிறுத்தி, சமச்சீர் கல்விக்கான பரிந்துரையில் எந்தப் பகுதியினை -வாய்ப்பந்தல் மட்டும் போடுவதில் வல்லவராக உள்ள ஆட்சியாளர்கள் அமல்படுத்த முன் வருவார்களோ - அந்தப் பகுதியை மட்டும் அமல்படுத்தக் கோருவது மெட்ரிக்குலேசன் கல்வி முறையின் மூலம் தற்போது கிட்டிவரும் ஓரளவு தரமான கல்வியையும் தரங்குறைப்பதாகவே அமையும். அந்த அடிப்படையில் இப்பிரச்னையை அணுகுவதே சரியானதாக இருக்கும்.

பொதுவாக நாம் தரமான கல்வி என்று கூறும்போது நாம் அதன் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் தன்மையையும் மனதிற்கொண்டே பேசுகிறோம்.

கல்விமுறை உருவானதே சமூக உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு தான். இன்றிருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு பல உன்னதப் போக்குகளையும் அம்சங்களையும் கொண்டதாக ஆரம்ப காலத்தில் இருந்த தாராளவாதக் கல்விமுறை கூட எந்த வகையான சமூகத் தேவையும் நோக்கமும் இன்றி உருவாக்கப் பட்டதல்ல.

அது எந்திரத் தொழில் உற்பத்தி முறையும் அதன் உந்து சக்தியாக முதலாளித்துவ சமூக அமைப்பும் உருவானபோதே அதற்குச் சேவை செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது.

ஒரு வர்க்கத்தின் உற்பத்தித் தேவைக்காக அக்கல்வி முறையை உருவாகிய போது அதன் பக்க விளைவாக பல்வேறு வரவேற்கத் தகுந்த அறிவு சார்ந்த வி­யங்களும் உருவாயின.

அதாவது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்குத் தேவையான தொழில் நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், கணக்கியலாளர்கள் ஆகியோரை உருவாக்கிய அதே வேளையில் சமூகம் பழைய நிலவுடமைத் தளைக்குள் மீண்டும் போய்விடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவம் புகுத்திய பல பகுத்தறிவு ரீதியானவையும் மக்களுக்கிடையில் இருக்கும் குறுகிய போக்குகள் எவ்வாறு தேவையற்றவை, மதங்கள் முன் வைக்கும் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பகுப்பாய்வுடன் ஒத்துப்போக முடியாதவை என்பன போன்ற கருத்துக்களையும் அக்கல்வி உருவாக்கியது.

தாராளவாதக் கல்வி

மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடியின்றி வளரும் தன்மை கொண்டதாக இருந்தவரை இந்தத் தாரளவாதக் கல்விமுறை பிரச்னைகள் ஏதுமின்றி வளர்ந்தது.

ஆனால் இந்த முதலாளித்துவத் தொழில் உற்பத்தி முறையோ மக்களின் வாங்கும் சக்தியைச் சூறையாடுவது. அதனால் சந்தை நெருக்கடி உருவாவதைத் தவிர்க்கவே முடியாது.

அவ்வாறு அடிக்கடி தோன்றிய நெருக்கடிகளின் காரணமாக புதிதாகத் தொழில் வளர்ச்சி உருவாவது தடைபட்டுப் போனது. இருக்கும் தொழில்களும் அவ்வப்போது மூடப்படும் சூழ்நிலைக்குச் சென்றன. இதன் காரணமாகவே படித்து வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கல்வி கற்றவன் யோசிப்பான்

அந்நிலையில் அறிவு ரீதியாகத் தங்களை தயார் செய்து கொள்ளாத தொழிலாளர்கள் நாம் ஏன் வேலை வாய்ப்பின்றி அவதிப் படுபவர்களாக இருக்கிறோம் என்பதை உணர முடியாதவர்களாக இருந்தனர்.

ஆனால் தங்களை அறிவு ரீதியாகத் தயார் செய்து கொண்ட படித்தவர்கள் தாங்கள் உழைக்கத் தயாராக இருந்தும் தங்களிடமுள்ள திறமைக்குச் சமூகத்தில் தேவை இருந்தும் வேலையின்மை குறித்து கல்வியறிவற்றவரைப் போல் விதியை நொந்து கொண்டு எதுவும் செய்யாதவராக நாம் ஏன் இருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினர்.

எனவே அந்நிலையில் கல்வியின் மூலம் தோன்றிய இந்த அபாயத்ç உணர்ந்து முதலாளித்துவ அரசாங்கங்கள் கல்வி யைக் கட்டுப்படுத்த விரும்பின. அவை உயர் கல்வியில் முதலில் கை வைத்தன. நமது நாட்டின் பல்கலைக் கழக மானியக் குழு புதிதாகக் கல்லூரிகள் திறப்பதற்குத் தடை விதித்தது.

ஆனால் ஆரம்பக் கல்வியிலிருந்து அரசுகள் அவற்றின் கரங்களை முழுமையாக உடனடியாக எடுக்க முடியவில்லை. எடுத்தால் அது மக்களின் கண்களில் பளிச்செனப் பட்டுவிடும் என்பதால் அதைப் பல்வேறு விதங்களில் செய்யத் தொடங்கின.

அவற்றில் ஒன்று கல்விக்கான அரசின் செலவினத்தை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்திவிட வேண்டும் என்பது. அதைச் செய்தால் பெருகிவரும் மக்கட் தொகைக்கேற்ப கல்விகற்க முன்வருவரை உள்ளடக்க முடியாதவையாக அரசுக்கல்வி நிலையங்கள் ஆகிவிடும்.

புதிய கல்விக் கொள்கை

எனவே மத்திய அரசு அதையயாட்டிய பல பரிந்துரைகளை அப்போது அது அறிவித்த புதிய கல்விக் கொள்கை ஆவணத்தின் மூலம் வெளியிட்டது.

அதன் ஒரு பரிந்துரை கல்விக்கு உதவ முன்வரும் வசதிபடைத்தவரையும் கல்வி நிலையங்களை நடத்தப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும். அதன் மற்றொரு பரிந்துரை அரசாங்கம் வழங்கும் கல்வி முழுக்க முழுக்க தொழில்நுட்பத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது வாழ்க்கைக்குத் தேவைப்படும் மெருகூட்டும் பொதுஅறிவுத் தன்மைகள், விஞ்ஞானபூர்வப் போக்குகள் இல்லாததாகக் கல்வி இருக்க வேண்டும் என்பதாகும்.

எப்போதுமே சுரண்டல் வர்க்கங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஆட்சியாளர்கள் சுரண்டல் வர்க்கத்தின் நலனை மனதிற்கொண்டு சில வி­யங்களை அறிமுகம் செய்கையில் அவ்வி­யங்கள் அறிமுகம் செய்யப்படுவதன் உண்மை நோக்கம் மக்களுக்குப் பட்டு விடாதவாறு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல உயர்ந்த வி­யங்களை அந்நோக்கங்களுக்குச் சாதகமாகத் திரித்தும் புரட்டியும் கூறியே அவற்றை முன் வைப்பர்.

கல்வி வேலைக்கே

அந்த அடிப்படையில் தான் இந்திய அரசு அறிமுகம் செய்த மேற்கூறிய நோக்கங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கை படிப்பு வேலைக்கானதல்ல அது அறிவினைப் பெறுவதற்காகவே- அந்த அறிவினைப் பயன்படுத்திச் சுயமாகத் தொழில் செய்து மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே- என்ற கருத்தை முன் வைத்தது. இதற்கு மாறாக மனித இனத்தின் வளர்ச்சி குறித்த ஆய்வு மனிதகுலம் இயற்கை சக்திகளைக்

கூட்டாக எதிர்த்துப் போராடி அதன் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கிய காலகட்டத்தில் கூட்டு உழைப்பிற்குத் தேவை என்ற அடிப்படையில் மொழி உருவாகியது; அதன்பின் வர்க்க அடிப்படையிலான சமூக அமைப்புகள் தோன்றிய போது ஆளும் வர்க்கங்களின் உற்பத்தி நோக்கங்களுக்கு உதவும் வகைகளிலான கல்வி அமலுக்கு வந்தது; வர்க்க அடிப்படையிலான சமூக அமைப்புகளின் உச்சகட்டமாக முதலாளித்துவம் நவீன எந்திரத் தொழிலுற்பத்தி முறையைக் கொண்டு வந்தபோது அதன் உற்பத்திக்கு உதவக் கூடிய வகையில் அனைவருக்கும் கல்வி என்ற கண்ணோட்டம் உருவானது என்பதையே உணர்த்துகிறது. இவ்வாறு கல்வி எப்போதுமே சமூக உற்பத்தியோடு அதாவது வேலை வாய்ப்போடு தொடர்புடையதாகவே இருந்துள்ளது.

அந்த அடிப்படையில் இன்றைய இந்திய முதலாளித்துவ சமூக அமைப்பில் மிகப் பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் கல்வி வேலைக்கானதாகவே உள்ளது. அதை வழங்கத் திராணியற்றுப் போய் நிற்கும் வர்க்கம் அது திராணியற்றுப் போய்விட்டது என்பதைக் கருத விடாமல் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக கல்வி அறிவுக்கானதே தவிர வேலைக்கானதல்ல என்ற கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

கட்டாயத் தேர்ச்சி

முதலில் மாணவர்களின் மனநிலையை உற்சாகத்துடன் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் செய்வதாகக் கூறி 1 முதல் 8 வகுப்புகள் வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி, அதாவது தேர்வுகளில் வெற்றி பெறவில்லை என்பதற்காக அவர்களை நிறுத்தி வைக்கக் கூடாது என்ற திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருந்தது.

அதன் காரணமாகத் தேர்வில் வெற்றி என்பது இல்லாமல் அனைவரும் 1 முதல் 8-ம் வகுப்புவரை தேர்ச்சி பெறும் முறை அமலுக்கு வந்தது.

கட்டாயத் தேர்ச்சி முறை இல்லாத காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தவர்கள் ஓரிருவர் என்ற எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுடைய மனநிலைப் பாதிப்பையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு நாங்கள் இருக்கிறோம் என்று பாவனை காட்டி அரசினர் இதைக் கொண்டு வந்தனர்.

இது குறித்து மக்கள் கோரிக்கை எதுவும் கூட முன்வைக்கப் படவில்லை. கோரிக்கை வைத்து உயிரைக் கொடுத்து மக்கள் போராடும் பல வி­யங்களில் மசிந்து கூடக் கொடுக்காத இந்த அரசு தாமாகவே இதைச் செய்தது என்றால் அதற்குக் காரணம் என்ன என்று பார்க்க வேண்டுமல்லவா?

இந்த சமூக அமைப்பில் உழைக்கும் வர்க்க அணிகளிடமும் கூட நேர்மையாக உழைப்பது அதே சமயத்தில் தங்களது உரிமைகளை வலியுறுத்துவது போன்ற சமூக மதிப்புகளின் பராமரிப்பு வற்புறுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் குறைவாக உழைத்துக் கூடுதலாக ஊதியம் பெறத்துடிக்கும் முதலாளித்துவக் கூறு அவர்களிடமும் கட்டாயமாக வளரும்.

ஆனால் சமூகத்திற்குத் தேவையான பொருளுற்பத்தியை நடத்தும் தனியார் துறையில் தொழிலாளரை அவர்களிடம் வேலை வாங்கும் முதலாளிகள் அவ்வாறு ஏமாற்றவிட மாட்டார்கள்.

ஆனால் கல்வி அப்படிப் பட்டதல்ல. இரண்டாவது கல்வியின் மூலமாக மக்களிடம் சென்று சேர வாய்ப்புள்ள அறிவு ஆட்சியாளர்கள் பேணிப் பாதுகாக்கும் மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குச் சவால் விடக்கூடியது.

அதனால் அறிவைப் புகட்டும் கல்விக்கு ஆட்சியாளர்கள் முழுமனதுடன் செலவிடவில்லை. கல்விக்கான முதலாளித்துவத்தின் தேவை குறைந்திருந்த காலத்தில் அதற்கு வேண்டா வெறுப்புடனேயே செலவு செய்தனர்.

அந்நிலையில் அக்கல்வியின் மூலமாக உண்மையான அறிவு என்பது மாணவர்களுக்குக் கிட்டாமல் போனால் அதனால் ஆட்சியாளர்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை. மாறாக அதனை ஒரு மறைமுக வரப் பிரசாதமாகவே அவர்கள் கருதினர்.

ஆசிரியர் மனநிலை

இந்த நிலையில் 1 முதல் 8-வது வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெறும் விதத்தில் வகுப்பறைகளில் சிரத்தையயடுத்துக் கற்பிக்கிறார்களா என்று கண்காணிக்கும் போக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

அதனால் நாம் கற்பித்தாலும் கற்பிக்காவிட்டாலும் 8-வது வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் தேர்ச்சி நிச்சயம்; மேலும் நாம் கற்பிக்கிறோமா என்று உண்மை சிரத்தையுடன் பார்க்கும் போக்கும் அரசிடம் இல்லை என்ற எண்ணத்தில் 1 முதல் 8-வது வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் தரம் குறித்து உரியமுறையில் கவலைப்படாததாக ஆசிரியர் சமூகம் ஆகிவிட்டது. இது ஓரிரு நாட்களில் நிகழவில்லை; படிப்படியாக நிகழ்ந்தது.

அரசின் நிலை

மாணவர்களின் நலனுக்காக என்ற பெயரில் அறிவுக்கானதே கல்வி, கட்டாயத் தேர்ச்சி போன்றவற்றைக் கொண்டுவந்த அரசுகள் தங்களது மேல்மட்ட நிர்வாகத்தை நடத்துவதற்குத் திறமை பெற்ற அறிவாளிகள் மற்றும் மொழிப் புலமை பெற்றவர்கள் வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிட வில்லை.

எனவே அதற்காக நவோதயா கல்வி முறையை புதிய கல்விக் கொள்கையின் மூலம் அறிமுகம் செய்தன. இரண்டு வகைக் கல்வி என்பது அங்குதான் முக்கியமாகத் தொடங்கியது.

அதாவது அறிவுக்காக என்ற பெயரில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களை மட்டும் உருவாக்கும் அரசுப் பள்ளிக் கல்வி. அரசின் உயர்மட்ட நிர்வாகத்தில் வேலை பெறுவதற்காக மாவட்டத்திற்கு ஒன்று என்று உருவாக்கப்பட்ட நவோதயா பள்ளிக் கல்வி என்ற இரண்டு வகைப் பள்ளிக் கல்வியின் தொடக்கம் இவ்வாறு தான் ஏற்பட்டது. நவோதயாக் கல்வியில் போதனா மொழி ஹிந்தியும் ஆங்கிலமுமாக மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப் பட்டதால் அப்போதைய தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தமிழகத்தில் நவோதயாக் கல்விமுறை அமலுக்கு வரவில்லை.அது திறந்துவிட்ட வழியில்தான் மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் கல்வி முறைகள் வளரத் தொடங்கின.

கல்வியின் மூலம்தான் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று கருதிய பெற்றோர் மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினர். அதனால் இப்பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

அதாவது வர்க்கங்களால் பிளவுபட்ட இந்த சமூக அமைப்பில் எந்தத் தொழிலிலும் மூலதன வலு இருந்தாலொழிய நாம் சோபிக்க முடியாது என்ற நிலையில் இச்சமூகத்தில் விலைபோகும் திறமையை தன்னிடம் வளர்த்து அதை வாங்க வேண்டிய தேவையும் அவசியமும் உள்ள அரசு அல்லது தனியார் முதலாளிகளைக் கண்டுபிடித்து அதனை விற்றாகவேண்டும்.

அதுவே வாழ்வதற்கு உள்ள ஓரே வழி என்பதை ஏதோ ஒரு வகையில் உணர்ந்து கொண்ட பெற்றோர் இதுபோன்ற கல்வி நிலையங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினர். இந்தப்போக்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மிக அதிகமாகத் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

ஏனோ தானோ மனநிலை

அரசுப் பள்ளிகளில் இருப்பது போல் சிரத்தையற்ற கற்பித்தலும் கட்டாயத் தேர்ச்சியும் இக்கல்வி நிலையங்களில் இல்லை.

வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற விதத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இங்கு கற்பிக்கப்பட்டது. எனவே இக்கல்வி நிலையங்களுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரிடமும் செல்லும் மாணவரிடமும் கல்வி குறித்த ஏனோ தானோ என்ற மனநிலை இல்லை.

அதாவது 8 வகுப்பு வரை எதுவும் கற்காதிருந்தாலும் கூட தேர்ச்சி பெற்று வந்துவிடலாம் என்ற வகையில் அரசுப் பள்ளிகளில் படித்து வந்த மாணவரிடம் இந்த ஏனோ தானோ மனநிலை நிறைய இருக்கிறது.

நான் படித்திருக்கிறேன்; என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன்; எனக்கு வேலை தர வேண்டியது சமூகம் மற்றும் அரசுகளின் கடமை என்று நினைக்கும் எண்ணப்போக்கு அவர்களிடம் ஏற்பட வாய்ப்பில்லாததான ஒரு சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

ஆனால் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சிரத்தை எடுத்துப் படிக்கும் மாணவருக்கும் படிக்க வைக்கும் பெற்றோருக்கும் இத்தகைய எண்ணம் அதாவது நாம் படித்திருக்கிறோம் என்ற எண்ணம் மாணவரிடமும், சிரத்தையயடுத்துச் சிறந்த கல்வியை நாம் நம் பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களது பெற்றோரிடமும் ஏற்படும் வாய்ப்பும் சூழலும் பெரிதும் உள்ளன.

உருவாகி வளர்ந்து வரும் இந்தப் போக்கு ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியது. எனவேதான் அவர்கள் தேவைப்படும் எண்ணிக்கையில் புதிய பள்ளிகளைத் திறக்காமல், இருக்கும் பள்ளிகளுக்கும் தேவைப்படும் எண்ணிக்கையில் ஆசிரியர் நியமிக்காமல் பள்ளிகளில் ஆதார வசதிகளை மேம்படுத்தாமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் அவர்கள் நியமித்த கமிட்டியின் பரிந்துரைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதாகக் கூறி பாடத் திட்டங்களை வெகுவாகக் குறைத்து போட்டித் திறனற் றவர்களாக மாணவரை ஆக்கும் இந்த சமச்சீர் கல்வியை அரசுப் பள்ளிகளோடு பிற அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிமுகம் செய்துள்ளனர்.

அதனால்தான் மனப்பாடம், பாடச்சுமை என அரசுப் பள்ளி மாணவரிடம் வலியுறுத்தப்படாத அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் மட்டுமே பெரிதும் வலியுறுத்தப்படக் கூடிய வி­யங்களை ஒட்டுமொத்த மாணவர் பிரச்னைகளாக இதன் ஆதரவாளர்களான நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

அரசின் உள்நோக்கம்

நிபுணர்களின் பரிந்துரைகளான கல்விச் செலவினங்கள் முழுமையாக அரசால் ஏற்கப்பட வேண்டும். அனைத்துக் கல்வி நிலையங்களும் அரசினால் நடத்தப் படுபவையாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தை அரசு ஆமோதிக்கவும் இல்லை; ஆமோதிக்கப் போவதுமில்லை.

ஒருபுறம் தனியாரிடம் தேங்கிக் கிடக்கும் மூலதனத்திற்கு வடிகாலாகக் கல்வியில் தனியார் மயம் உருவாக வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. ஆனால் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் பாடத் திட்டங்கள் தன்னம்பிக்கை ஊட்டுபவையாக இருந்துவிடக் கூடாது. அரசுப் பள்ளிகளில் இருப்பதைப் போல் கையொப்பம் மட்டும் இடத் தெரிந்தவராக ஏறக்குறைய அந்த மாணவர்களையும் உருவாக்குவதாகவே இருக்க வேண்டும் என்பதே அரசின் உள்நோக்கமாக உள்ளது.

அந்த நோக்கத்திற்கு உகந்த வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கல்வி குறித்த பல்வேறு உயர்ந்த வி­யங்களை கமிட்டிகள் அமைத்து அவற்றை உரத்துக் கூற வைத்து அவற்றில் கூறியுள்ளவற்றில் பொருளாதார ரீதியில் அரசைப் பாதிக்கும் எதையும் செய்யாமல் தனது உள்நோக்கத்திற்கு உகந்தாக இருக்கும் பரிந்துரைகளை மட்டும் ஒருங்கிணைத்து இந்த சமச்சீர் கல்விக் கொள்கையை அரசு அறிவித்துள்ளது.

சுயதொழில் மனநிலை

இத்திட்டத்தைப் பரிந்துரைக்கும் கமிட்டி கூறியுள்ளவற்றைக் கூர்ந்து நோக்கினால் அதில் கூறப்பட்டுள்ள சுய சிந்தனையை வளர்ப்பது, தாய் மொழி மட்டுமே பயிற்று மொழி போன்றவற்றின் மூலம் அரசு கூற வருவது மாணவர்கள் வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டிராமல் அவர்கள் சுயமாகத் தொழில் செய்ய முயல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

அந்த அடிப்படைகளில் இக்கொள்கை மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை ஒத்ததாகவே உள்ளது. அதாவது நமது சமூகத்தில் சொந்தமாகத் தொழில் செய்ய வாய்ப்புகள் பொங்கித் ததும்புவது போலவும் அதைப் பயன்படுத்தி அனைவரும் பெரும் பணக்காரர்களாக ஆவதற்கு உள்ள வாய்ப்பினைப் புறக்கணித்து அடிமை வேலையினைத் தேடி அலைகிறார்கள் என்பது போலவும் இத்திட்டத்தை முன் மொழிபவர்கள் ஜம்பமாகத் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

நமது நாட்டில் பயன்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தனியார் உபரி மூலதனம் அனைத்துத் தொழில்களிலும் பாய்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் நானும் சுயமாகத் தொழில் செய்யப் போகிறேன் என்று தொழில் ஆரம்பித்தவர்களில் பலர் கைமுதலை இழந்து, வங்கிக் கடன்களைத் தலைமேல் சுமந்து பெருங்கடனாளிகளாகவே அலைந்து கொண்டுள்ளனர்.

விதி வாதம்

ஆனால் அவ்வாறு சுயதொழில் செய்யப் புகுந்து கையைச் சுட்டுக் கொண்டவர் களிடம் ஆட்சியாளர் எதிர்பார்க்கும் ஒரு வி­யம் தலை தூக்கியுள்ளது.

அதாவது அவர்களிடம் தாங்கள் கற்ற கல்விக்கு அரசு வேலை தரவில்லை என்ற ஆதங்கம் பெருமளவு இல்லை. நமக்கு நேரம் சரியில்லை; நாமும் என்ன வெல்லாமோ செய்து பார்க்கிறோம் ஒன்றும் ஈடேற வில்லை என்ற விதிவாத மனநிலையே மேலோங்கியுள்ளது. அதாவது அவர்களது பார்வை அரசிற்கு எதிராகத் திரும்பாதிருக்கிறது.

ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைச் செவ்வனே செய்யும் நிபுணர்கள்

சமச்சீர் கல்வியைப் பரிந்துரைத்த நிபுணர்களுக்கு இந்த சமூகத்தின் நிலை அறவே தெரியாதா?

கல்வி இச்சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கானதாகத் தான் இருக்க முடியும் என்பதையே அவர்கள் புரியாதவர்களா? அவர்கள் கல்வியில் தனியார் மயம் உருவாவதற்கும் அது இன்று பெரிதாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிவகுத்தது இந்த அரசுகள் தான் என்பதையும் அவை கல்விக்காக நிதி ஒதுக்குவதில் காட்டிய தயக்கம் தான் தனியாரின் ஆதிக்கம் கல்வியில் தலை விரித்தாடக் காரணம் என்பதையும் அறியாதவர்களா?

அரசுகள் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர், கணிணி வசதி உட்பட அனைத்து வசதிகளும் நிறைந்த, சோதனைச் சாலைகள், தேவைப்படும் அளவிற்கு நூல்களைக் கொண்ட நூலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பள்ளிகளாக நமது பள்ளிகள் ஆகப் போகின்றன என்று உண்மையிலேயே இவர்கள் நம்புகிறார்களா?

நிச்சயமாக அறிவும் அனுபவமும் கொண்ட யாரும் அப்படி நம்ப மாட்டார்கள். இருந்தாலும் கூட இனிப்பு தடவப்பட்ட வி­த்தை உருவாக்கி மக்களுக்கு வழங்கும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் அவர்கள் அதை அவர்களது எஜமானர்களின் உள்ளக் கிடக்கைக்கு உகந்த வகையில் செய்கிறார்கள்.

வர்க்கப் பார்வையின்றி சமூக நிகழ்வுகளைப் பார்க்கும் அவர்களின் இத்தகைய கூட்டுப்புழு அணுகுமுறையை ஒரு வகையில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாங்கள் சமூக மாற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் எங்களுக்கு வர்க்கப் பார்வை உள்ளது என்று கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் எவ்வாறு வர்க்கப் பார்வையற்ற அந்த வெற்று அறிவு ஜீவிகளைப் போல் இவ்வி­யத்தைப் பார்க்கின்றனர் என்பது நம்மைக் குழப்பும் முக்கியக் கேள்வி.

வர்க்கப் பார்வையைக் கொண்டவர்கள், கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டாலும் இவர்கள் உண்மையில் வர்க்கப் போராட்டப் பாதையைக் கைவிட்டவர்களாக ஆகிவிட்டனர். அதனால் ஜாதிய வேறுபாட்டை முன்னிலைப்படுத்தி அடிப்படையில் இந்த அமைப்பை மாற்றாமல் அதனை அப்படியே வைத்துக் கொண்டு ஒட்டுப்போட்டுப் பராமரிக்கவே விரும்புகின்றனர். அந்த அரசியலைத் தொடர்ந்து நடத்துவதில் உலகமயமும் நவீன தாராளவாதமும் இவர்களுக்குப் பெரும் சிக்கலைத் தோற்றுவித்து விட்டது. பெருகிவரும் தனியார் மயம் ஜாதிய இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காது அதன் சுரண்டலுக்குத் தேவைப்படும் தரம், தகுதி ஆகியவற்றையே பணி நியமன வி­யங்களில் கருதுகிறது.

அதற்குத் தேவைப்படும் தகுதியும் தரமும் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்ட கல்வியிலும், மெட்ரிக்குலேசன் கல்வியிலும் இருப்பதால் அவற்றைப் பெற்றிருக்கும் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் வேலைக்குச் சேர்ப்பதாக உலகமயப் பின்னணியில் தலைதூக்கியிருக்கும் தனியார் துறை ஆகிவிட்டது. அது இக்கட்சிகள் எந்த ஜாதிய சக்திகளைத் தங்களது பின்புலமாக ஆக்கித் தங்களது அரசியலை முன்னெடுக்க விரும்பினவோ அந்த ஜாதிய சக்திகளிடம் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. அந்த அதிருப்தியே இக்கட்சிகளை வழிநடத்தி, அறிவைக் கட்டுப்படுத்த விரும்பும் ஆளும் வர்க்க அரசோடு சமச்சீர் கல்விக் கொள்கைப் பிரச்னையில் கைகோர்க்கச் செய்துள்ளது.

வர்க்க உள்நோக்கம்

அதனால்தான் இங்கு நடைபெறுவது அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவான அரசமைப்பல்ல. இந்த அரசுகள் ஒன்றைக் கொண்டு வந்தால் அதில் நிச்சயம் வர்க்க உள்நோக்கம் இருக்கும் என்பதை மறந்து போயுள்ளனர்.

அதனால்தான் இவர்களுடைய போராட்டம் அரசுப் பள்ளிகளில் ஆதார வசதிகளைக் கூட்டவும், ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முறையான கற்பித்தலை உறுதி செய்யவும் அரசை வலியுறுத்தாமல் (முந்தைய) அரசின் சதிகளோடு ஒத்துப் போவதாக உள்ளது.

அதுதான், தான் எதுவும் செய்யாமல் ஓரளவு தரமுள்ளதாக இருக்கும் மெட்ரிக்குலேசன் கல்வியையும் அரசுப் பள்ளிக் கல்வி அளவிற்கு தரம் குறைக்கும் முந்தைய அரசின் உள் நோக்கத்திற்கு நிபந்தனை இன்றி துணைபோகும் நிலைபாட்டை எடுக்க இவர்களை உந்தித் தள்ளியுள்ளது.

ஆங்கிலத்தையும் கற்க முடியும்

இவ்வாறு ஆளும் வர்க்கச் சதியோடு ஒன்றிவிட்ட இந்த அமைப்புகள் உயர் விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் சிறப்பாகக் கற்பிக்கும் அளவிற்கு நமது தாய்மொழி வெளிப்படையாகவே வளர்ச்சியடை யாத ஒன்றாக இருக்கும் நிலையில் தாய்மொழி வளர்ச்சிக்கும் கலைச் சொல்லாக்கத்திற்கும் உதவக் கூடிய விதத்தில் ஆங்கில மொழி வழியிலும் தேவைப்படும் பாடங்களைக் கற்கலாம் என்பதை வலியுறுத்துவதை விடுத்து எதையும் எப்போதும் எங்கேயும் தாய் மொழியில் மட்டும் தான் கற்க முடியும் என்ற குருட்டுத் தனத்தைப் பரப்புகின்றன.

பல்வேறு மொழிகளையும் கற்கும் திறன் குறைந்தபட்சம் 13 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் உண்டு. மொழிகளை முறையாகக் கற்பித்தால் வேற்று மொழியைக் கூட குழந்தைகள் நல்ல முறையில் புரிந்துகொள்ள முடியும் என்ற விஞ்ஞானபூர்வ கருத்திற்கும் ஒரு முக்கியத்துவமும் தராதிருக்கின்றன.

இரட்டை வேடம்

ஆனால் இந்த அமைப்புகளின் தலைவர்கள் பாமரர்களுக்கு மட்டும் இத்தகைய பாமரத்தனத்தைக் கொண்டுவரும் கருத்துக்களைக் கூறிவிட்டுத் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக்குலேசன், ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ. கல்வி முறைகளில் படிக்க அனுப்புகின்றனர்.

ஏசுநாதர் ஒரு விபச்சாரியைத் தண்டிக்கத் துடித்த கூட்டத்திடம் கூறிய விதத்தில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பவர் மட்டுமே சமச்சீர் கல்வியை ஆதரித்துப் பேசலாம் என்று கூறினால் இவர்களில் 90 சதவீதம் பேர் வாயடைத்துப் போய் விடுவர்.

எனவே கல்வி குறித்த பல உன்னதமான கருத்துக்கள் உறுதியுடன் அமலாக்கப் படுவதற்கு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாகும் வரை பொறுத்திருந்தே தீர வேண்டும். பொருளாதார ரீதியாக சமச்சீரற்ற சமூக அமைப்பில் உண்மையான சமச்சீர் கல்வி ஒருபோதும் வர முடியாது.

அதுவரை ஆட்சியாளர்கள் போடும் சமச்சீர் வேடத்தை அம்பலப்படுத்துவது ஒன்றே சமூகமாற்ற சக்திகளின் நோக்கமாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் இந்த சமச்சீர் கல்வி என்பது அனைவரையும் அரசை நோக்கிக் கேள்வி எழுப்ப முடியாத கையெழுத்துப் போட மட்டும் தெரிந்தவராக்கும் அரசின் மோசடித் திட்டம் என்பது மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

Pin It