1911 ஜூன் 17. மணியாச்சி இரயில் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் ஆஷ் அவர்களை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரின் சட்டைப் பையில் இருந்த கடிதம் கொலைக்கான காரணத்தை மொழிந்தது....

Vanchinathan"ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து துவம்சம் செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் , தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்......."

சமீபத்தில் கடந்துபோன வாஞ்சியின் நினைவுநாளில் முகநூலிலும், பத்திரிக்கை வாயிலாகவும் பலர் இது குறித்து கருத்து சொன்னார்கள். ஆஷ் கொலைக்கு முன்பு வரை வாஞ்சி ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போட்டவனில்லை என்றும், அவனொரு கோமாளி என்றும், மனநிலை பிறழ்தவன் என்றும், வாஞ்சி பார்ப்பனர் என்பதாலும், ஸனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்தவர் எனபதாலும் அவர்மீது வசையம்புகள் சகட்டுமேனிக்கு ஏவப்பட்டன. பதிலாக ஏதோ ஆஷ் சாதி சமத்துவப் போராட்டத்தின் பிதாமகன் போலவும் , அவரின் மறைவு ஈடுசெய்ய முடியா இழப்பு போலவும் காட்சி படுத்தப் பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய் ஆஷ்க்கு வீரவணக்கம் கூட சொல்லப் பட்டு விட்டது.

உண்மையில் கொலையான ஆஷ் யார்?

1908 ல் ஐ. சி .எஸ் தேர்வில் தேர்வு பெற்று, சென்னை மாகாணத்தில் நிர்வாகத்திலும், பிறகு தூத்துகுடிக்கு உதவி கலெக்டராகவும் பணியமர்ந்த ஆஷ் தொடக்கம் முதலே ஏகாதிபத்தியத்தின் சிறப்பு மிகுந்த கை கூலியாகத்தான் இருந்தார். வ.உ.சி யையும் , சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்தவர்.

* குற்றால அருவியில் காலை இரண்டு மணிநேரம் வெள்ளையர் மட்டும் குளிக்க நேரம் ஒதுக்கியது.... (சாதி சமத்துவம் வெள்ளையர்க்கு பொருந்தாது போல!?)

*திருநெல்வேலி தாக்குதலில் நால்வர் கொல்லப் பட்டபோது விஞ்சுக்கு பக்க பலமாக இருந்தது.....

* வ. உ. சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்தில், அதை முடமாக்கும் நோக்கில் கெடுபிடிகளைத் தொடர்ந்தது.....

* தேசிய இயக்கத்தின் அங்கத்தினரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது...

....என ஆஷின் ஏகாதிபத்திய விசுவாசமும், நிறவெறியும் நீள்கிறது. அப்போதைய பத்திரிக்கைகள் 'நவீன இரணியன்' என பெயர் சூட்டும் அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்திருக்கிறது. (நவீன இரணியன் எனும் பட்டத்துக்கு சூழலைப் பொருத்தி புரிந்து கொள்ளாமல் இரணியனுக்கு முற்போக்கு முலாம் பூசுவது அபத்தமானது.) ஆஷின் மறைவு குறித்து கண்ணூர் சிறையில் இருந்த வ. உ. சி யிடம் சொல்லப் பட்டபோது சாந்தி மார்க்கத்தில் நம்பிக்கை கொண்ட வ. உ. சி யே தகவல் சொன்ன சிறை மருத்துவரைப் பார்த்து இப்படி சொன்னாராம்..." நல்லதோர் செய்தி நவின்றாய்,நீ நலம் பெருவாய்" .

பொதுவாக நான் வாஞ்சி போன்றோரை குற்றமற்றவர்களாகவோ, கம்யூனிஸ்டுகளாகவோ, தியாக சீலர்களாகவோ குறிப்பிடவில்லை. ஆனால் அப்போதைய சுழலில் அவர்களின் செயல்பாட்டில் எவ்வளவுதான் பிற்போக்குத் தனம் மலிந்திருந்தாலும், அதனால் வெல்லப்பட முடியாது என்றாலும் கூட அவர்களின் பாத்திரம் முற்போக்கானது என்பதையே குறிப்பிட விரும்புகிறேன்.

காலனியாட்சியில் இந்திய சமூகத்தில் எத்தகு முற்போக்கான மாற்றங்கள் ஏற்படுவதாக இருந்தாலும்_ அது சாதி சமத்துவ கருத்தாக இருந்தாலும் கூட_ காலனியாட்சி தூக்கி வீசப்பட வேண்டிய முன்நிபந்தனை இருந்தது. அன்றைய இந்திய உழைக்கும் மக்களின் பிரதான முரண்பாடாக ஏகாதிபத்தியத்துக்கும் மக்களுக்குமான முரண்பாடு இருந்தது.

சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியை சுக்கு நூறாக்கி, நிழக்கிழமை உள்ளிட்ட பிற்போக்கு அம்சங்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு, சாதிஆதிக்கத்தை ஏகாதிபத்தியமே அன்றைக்கு பாதுகாத்தது. எனவேதான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எல்லாவகையான போரட்டங்களோடும் நாம் கை கோர்க்கிறோம்.

வாஞ்சி உள்ளிட்ட நபர்களிடம் மலிந்திருந்த இந்துத்துவ சனாதன போக்குக்கான அடிப்படையைக் கூட இன்னொரு தளத்திலிருந்து நோக்குவது சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன்.

இந்தியர்களின் ஆட்சியதிகாரத் தகுதி குறித்து மார்க்ஸ் முல்லர் எழுதுகிறார்......

"இந்தியர்கள், தத்துவங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். அரசியலிலும், பொருளியலிலும் அவர்களுக்கு அந்த அக்கரை கிடையாது. தேசிய உணர்ச்சி என்பதே இந்திருக்குத் தெரியாது"

இதேபோல செனார்ட் 1898ல் குறிப்பிடுகிறார்.... "இந்தியா ஒருபோதும் தன்னை ஒரு நாடு அல்லது சுதந்திர உணர்வுடைய பகுதி என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை"

வெளிநாட்டு வரலாற்றியல் ஆய்வாளர்கள் இந்தியர்களுக்கு சுயேட்சையான ஆளும் தன்மையே கிடையாது என்றும், காலம் முழுவதுமே வந்தேரிகளால் ஆளப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டு சிப்பாய் கலகத்துக்கு பிறகான இந்திய தேசிய விடுதலை இயக்கத்தை முளையிலேயே நசுக்கிட விளைந்தனர். இதன் எதிர் வெளிப்பாடுதான் புராதன இந்தியாவை புனிதமாக்கும் போக்கும், அர்த்தசாஸ்த்திரம் உள்ளிட்டவற்றை வேதமாக்கும் போக்கும். உண்மையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீசும் காவி வாடைக்கு இந்தப் பின்னணியில்தான் நாம் பொருள் கொள்ளவேண்டும்.

மேலே குறிப்பிட்டது போலவே இத்தகு சாகசவாதப் போராட்டங்கள் எத்தகு வெற்றியையும் ஈட்டி விட முடியாது என்றாலும், அந்த சூழலில் அது முற்போக்கு பாத்திரம் வகிப்பதே!. இதை புரிந்து கொள்ளாமல் பார்ப்பனர், பிள்ளை என கூறு போடும் செயலால் எந்த பிரயோசனமும் இல்லை.

இறுதியாக..... வாஞ்சி உள்ளிட்டோரை நாம் நினைவு படுத்த வேண்டியதன் காரணம் வரலாற்றை மெய்யாக உரைத்தல் மட்டுமல்ல.... மாறாக சாதிக்க வேண்டிய இந்திய விடுதலைக்கான வர்க்க அணிசேர்க்கையை சரியாக புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியமும் அதில் அடங்கி உள்ளது.

- பாவெல் இன்பன்

Pin It