தென் இந்திய நல உரிமைச் சங்க, அதாவது ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அக்டோபர் மாதம் 5,6 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில்) நெல்லூரில் நடத்தப்படப் போகின்றது. இம்மகா நாடானது 1927-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் மதுரையில் கூட்டப்பட்ட பிறகும், அதே வருஷம் மத்தியில் கோயமுத்தூரில் விசேஷ மகாநாடாகக் கூட்டப்பட்ட பிறகும், சுமார் இரண்டு வருஷம் கழித்து இப்போது கூட்டப்படுகின்ற தென்றாலும், இவ்வியக்கத்தலைவர் திரு.பனகல் அரசர் காலமாகி சுமார் 9 மாதத்திற்குப் பிறகு தலைவர் தேர்தலையே முக்கியக் காரியமாய்க் கொண்டு கூட்டப்படுகின்றதாகும்.
தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமானது ஆதியில் மக்களின் எல்லா சமூக சமத்துவத்தையும், சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும்.
எனினும் இவ்வியக்கம் வெற்றி பெற்றால் இந்தியாவில் சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் உயர்வு பெற்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விடுமே என்ற ஆத்திரத்தால் பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்தின் கொள்கைகளை திரித்துக் கூறி, இவ்வியக்கத்தினிடம் பாமர மக்களுக்கு துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து இவ்வியக்கத் தலைவர்களுக்கும் பலவித தீங்குகள் செய்து மிக்கத் தொல்லை விளைவித்து வந்தார்கள்; வருகிறார்கள்.
ஆன போதிலும் இவ்வியக்கத் தலைவர்கள் எதற்கும் பயப்படாமல் உறுதியுடன் நின்று இயக்கத்தை அழியவிடாமல் காப்பாற்றி வந்ததுடன் அதன் மூலம் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியையும் ஊட்டிவந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வியக்கம் வெறும் அரசாங்க உத்தியோகத்தை மாத்திரம் கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட உத்தியோக வேட்டை இயக்கம் என்றும். தேசத் துரோக இயக்கம் என்றும், சர்க்கார் தாசர்கள் இயக்கம் என்றும் எவ்வளவோ தூற்றப்பட்டும் தென்னிந்தியாவிலுள்ள
பாமர மக்களினுடையவும் மற்றும் பொது ஜனங்களுடையவும் செல்வாக்கையும் மதிப்பையும் பின்பற்றுதலையும் பெற்று விளங்கி வருகின்றது. இதற்கு உதாரணம் வேண்டுமானால் தென்னாட்டில் சட்டசபை மந்திரிகள் முதல் ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் தலைவர்கள் ஆகியவர்களும், கிராம பஞ்சாயத்து கூட்டுறவு முதலிய சாதாரண ஸ்தாபனங்களும் இவ்வியக்கம் ஏற்படுத்தப் படுவதற்கு முன் எல்லாம் பார்ப்பன மயமாகவே இருந்ததானது, இப்போது இவ்வியக்கத்திற்குப் பிறகு பார்ப்பனரல்லாதார்கள் அதாவது மகமதியர்கள் கிறிஸ்துவர்கள் ஆதிதிராவிடர்கள் ஆகிய எல்லோரும் அவரவர்கள் ஜனத் தொகை விகிதாச்சாரப்படிக்கு இல்லையானாலும் சற்றேறக் குறையவாவது பங்கு பெற்று ஆதிக்கம் பெற்றிருப்பதே போதுமானதாகும்.
இதிலிருந்து அரசாங்க தயவிலேயே இந்த இயக்கம் இருப்பதாக நமது எதிரிகள் சொல்லுவது எவ்வளவு புரட்டு என்பது இனிது விளங்கும்.
எப்படியெனில், அரசாங்கத் தயவால் அரசாங்க உத்தியோகம் மாத்திரம் தான் கிடைக்குமே ஒழிய தேர்தலில் பொது ஜன ஓட்டுக்கள் பெற்று அடையும் படியான பதவிகள் பெற ஒருக்காலமும் முடியவே முடியாது.
அன்றியும் இவைகள் தாராளமான பொதுஜன ஆதரவும் அனுதாபமும் இருந்தால் தான் கிடைக்கும். எனவே இவ்வியக்கம் இப்படிப்பட்ட பொதுஜன தேர்தல் ஸ்தாபனங்களைப் பெற்று அந்த ஸ்தாபனங்களையெல்லாம் கைப்பற்றி இருப்பதிலிருந்தே பொது ஜன ஆதரவு முழுவதும் இவ்வியக்கத்திற்கு இருப்பது தானாக விளங்கும்.
ஆகவே ஜஸ்டிஸ் இயக்கம் அதன் எதிரிகள் சொல்வதுபோல் சர்க்கார் தாசர் இயக்கமாயிருந்தால் இவ்வித பொதுஜன ஆதரவு கிடைத்திருக்குமா என்பதையும் இவ்வளவு பொது ஸ்தாபனங்களைக் கைப்பற்றி இருக்குமா என்பதையும் யோசித்தால் அறிவாளிகளும் யோக்கியர்களும் இதை சர்க்கார் தாசர் இயக்கம் என்று சொல்ல ஒரு போதும் முன் வரமாட்டார்கள்.
சென்னை மாகாணத்து 25 ஜில்லா போர்டுகளில் உள்ள 25 ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளும் இது சமயம் பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கின்றார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தாலூக்கா போர்டு பிரசிடெண்டுகளும் நூற்றுக்குத் தொண்ணூறு முனிசிபல் சேர்மென்களும் நூற்றுக்குத் தொண்ணூறு மேல் கண்ட ஸ்தாபன அங்கத்தினர்களும் பார்ப்பனரல்லார்களாகவே இருக்கின்றார்கள்.
பார்ப்பனரல்லாதார் என்பதிலும் இவ்வியக்கத்தின் கொள்கைப்படி இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முகமதியர்கள் ஆதிதிராவிடர்கள், ஐரோப்பியர்கள் ஆகிய எல்லா மதவகுப்புப் பிரிவுகளும் சற்று ஏறக்குறைய எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் பெற்றும் இருக்கின்றார்கள்.
இவ்வியக்கத்திற்குப் பிறகு ஆதிதிராவிடர்களும் மற்றும் பிற்பட்ட வகுப்பார்களும் குறிப்பிடத் தகுந்த அளவு அரசியலிலும் சமுதாயத்திலும் முன் வந்திருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது. மற்றும் இவ்வியக்கம் தோன்றி பார்ப்பனரல்லாத மக்களைத் தட்டி எழுப்பி அவர்களது சுயமரியாதை உணர்ச்சியை கிளப்பிவிட்டிருக்காதிருந்தால், சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மக்களை ஊக்கப்படுத்தாமல் இருந்தால், இன்றைய தினம் சென்னை ஹைகோர்ட்டு ஜட்ஜிகளில் நான்கு கனவான்களும் சென்னை சர்க்கார் நிர்வாக சபையில் இரண்டு கனவான்களும், மந்திரிகளில் இரண்டு கனவான்களும், ரெவினியூ போர்ட் மெம்பர்களில் ஒரு கனவானும் இடம் பெற்று இருக்க முடியுமா என்பதை யோசித்தால் இவ்வியக்கத்தின் பலன் இனிது விளங்கும்.
மேலும் இவ்வியக்கமானது சர்க்காரிடம் அரசியல் சுதந்திரம் கேட்பதிலும் அதன் மூலம் கிடைத்ததைப் பெற்று, அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் திருப்தி உண்டாகும்படி அவைகளை நடத்திக்காட்டி மேற் கொண்டும் சுதந்திரம் கேட்பதிலும் இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திற்கும் சமூகத்திற்கும், இயக்கத்திற்கும் இவ்வியக்கம் எந்த விதத்திலும் பிற்பட்ட தல்லவென்றே சொல்லுவோம்.
மற்றும் வெள்ளைக்கார அரசாங்க மேற்பட்டு 150 வருஷ காலத்தில் நமது பார்ப்பனரல்லாத மக்களில் எவ்வளவு பேர் படித்திருந்தார்களோ அந்த எண்ணிக்கையை ஒரு பத்து வருஷத்தில் நமது இயக்கம் இரட்டிப்பாக்கி இருக்கின்றது.
பெண்கள் விஷயத்திலும் அது போலவே கல்வி விஷயத்தில் பன்மடங்கு அதிகமாக்கி இருக்கின்றது. இவைகள் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
இவ்வியக்கமானது ஏற்பட்டு 10 வருஷ காலத்திற்குள் இவ்வளவு பலனையும் சகலத் துறைகளிலும் முன்னேற்றத்தையும் கொடுத்து எவ்விதத்திலும் அசைக்க முடியாமல் மேற் போய்க் கொண்டிருப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் மற்ற காரணங்கள் எல்லாவற்றையும் விட ஒரே ஒரு காரணம் தான் மிகமிக முக்கியமானதாகும் என்போம்.
அதென்னவெனில் இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர விடாமல் வெகு ஜாக்கிரதையாக கவனித்துப் பாதுகாத்துக் கொண்டு வந்ததும் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று இவ்வியக்க விதிகளில் ஒரு விதியை முக்கிய விதியாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதுமேயாகும்.
இவ்வியக்கம் தோற்றுவித்த தலைவர்களை இவ்வியக்க சம்பந்தமாக எதற்காகப் போற்ற வேண்டுமென்றால் இவ்வியக்கம் ஆரம்பித்தபோதே பார்ப்பனர்களை இதில் சேர்க்கக் கூடாதென்று கருதியதற்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சேர்த்துக் கொள்ளாதிருக்கும்படி சட்டம் செய்ததற்கும் தான் முக்கியமாய் போற்றிப் பாராட்ட வேண்டும்.
இப்படிப்பட்ட அருமையான ஒரு காரியம் இப்போது சில தலை வர்கள் என்பவர்களால் மாற்றப்படப் போவதாகத் தெரிய வருவதைக் கண்டு நாம் மிகவும் வருந்துகின்றோம்.
இவ்வளவு காலம் இவ்வளவு எதிர்ப்பையும் சமாளித்து நிலைத்து இவ்வளவு உச்ச ஸ்தானம் பெற்று முற்போக்கடைந்து வரும் இவ்வியக்கத்திற்கு இப்போது பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தத் தலைவர்கள் என்பவர்கள் வேறு எந்தக் காரணத்தைக் கொண்டு பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாக சொல்ல வந்தாலும், பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்தால் அன்றே இந்த இயக்கம் தோல்வி அடைந்துவிட்டது.
செத்து போய் விட்டது என்பதை மாத்திரம் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இப்போது இந்த மகாநாட்டில் தலைவர் யார் என்பதைப் பற்றிய கவலை சிறிதும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம், ஏனெனில் எந்தத் தலைவர் வந்தாலும் பொது ஜனங்களை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் ஒன்றையும் செய்து விடமுடியாது. ஆதலால் அதைப் பற்றி அதிகக் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால், பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற விஷயம் நிறைவேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆபத்தான பிரச்சனை வருகின்ற முக்கியமான காலத்தில் இம்மகாநாடு தெலுங்கு நாட்டில் கூடுவது நமக்கு மிக்க பலவீனமென்றே தோன்றுகின்றது.
ஏனெனில் தெலுங்கு நாட்டு மக்களுக்கு இவ்விஷயம் அவ்வளவு தூரம் கவலைப்படத்தக்கதாக இல்லை. அவர்களுக்கு இன்னும் சரியானபடி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயம் அர்த்தமானதாகவே சொல்வதற்கில்லை. இதற்கு முக்கிய உதாரணம் என்னவென்றால். ஆந்திரதேசத்தில் இன்னும் காங்கிரசுக்கு மதிப்பும் ஆதரவும் இருப்பதேயாகும்.
காலம் சென்ற தலைவர் பனகல் அரசர் மதுரை மகாநாட்டில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்ததும் கோயம்புத்தூர் மகாநாட்டில் பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேரவேண்டும் என்கின்ற தீர்மானம் கொண்டு வந்ததும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் விஷயத்தின் உண்மைத் தத்துவத்தை உணராததேயாகும்.
காரணம், என்னவெனில், மத சம்பந்தமான வலையில் சிக்கியிருந்ததுடன் புராணங்களிலும், மூடப்பழக்க வழக்கம் ஆகியவைகளிலும் அவருக்கு குருட்டு நம்பிக்கை இருந்து வந்ததேயாகும். அன்றியும் அவர் தன்னை க்ஷத்திரியர் என்று நம்பிக் கொண்டிருந்தவர்! ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தை உணர்ந்த பிறகும் பார்ப்பனரல்லாத வாலிபர் இயக்கத்தின் தத்துவத்தை உணர்ந்த பிறகுமேதான் பார்ப்பன பார்ப்பனரல்லாத வித்தியாசத்தையும் அறிந்ததுடன் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு தக்க காரணங்கள் இருப்பதையும் ஒருவாறு உணர்ந்தார்.
ஆந்திர தேசத்து பார்ப்பனரல்லாதார்கள் இனியும் மதசம்பந்தமான புராணங் களிலும் குருட்டு நம்பிக்கைகளிலும் ஈடுபட்டவர்களாவார்கள். எவ்வளவுக் கெவ்வளவு குருட்டு நம்பிக்கையிலும் புளுகுப் புராணங்களிலும் ஈடுபட்டிருக்கின்றார்களோ; அவ்வளவுக் கவ்வளவு அவர்களை மேதாவிகள் என்றும் பெரியவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மதசம்பந்தமாய் எப்படி அவர்கள் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டு பார்ப்பனர்களையும் அவர்களது கட்டுப்பாடான சூட்சி இயக்கங்களையும் வழிகாட்டியாகவும் ஆதாரங்களாகவும் கொண்டு பின்பற்றுகின்றார்களோ; அதேபோல் அரசியல் விஷயத்திலும் குருட்டு நம்பிக்கை உடையவர்களாகி அவர்களது கட்டுப் பாடான கொள்கைகளிலும் சூழ்ச்சி இயக்கங்களிலும் நம்பிக்கை வைத்து அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றார் கள்.
எனவே மூடநம்பிக்கைகளிலிருந்தும், கண்மூடி பின்பற்றும் குருட்டு நடவடிக்கைகளிலிருந்தும் என்று ஆந்திர தேசத்தார்கள் விடுதலை பெறுகின்றார்களோ அன்றுதான் அவர்கள் பார்ப்பனர்களின் மதப்புரட்டுகளிலிருந்தும் அரசியல் புரட்டுகளிலிருந்தும் விடுதலையடைய முடியும். ஆதலால் அது வரையில் நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தார்களை பின்பற்றுவது மறுபடியும் குழியில் போய்விழுவதையே ஒக்கும்.
பத்துப் பன்னிரண்டு வருஷமாக எவ்வளவோ ஆபத்துக்களினிடை யிலும் தொல்லைகளினிடையிலும் காப்பாற்றப்பட்ட இந்த அருமையானதும், ஒப்பற்றதானதும் இன்றியமையாததானதுமான இயக்கத்தை நெல்லூரில் சாவடிக்காமல் காப்பாற்ற வேண்டியது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களின் முக்கிய கடமையாகும்.
இந்த பத்து வருஷகாலமாய் இவ்வியக்கத்தை தோற்றுவித்து அதிலேயே இரவும் பகலும் உழைத்து வந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட இந்த நான்கைந்து வருஷமாக இவ்வியக்கத்தில் மேல் மினுக்கியாய் கலந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி அதிகமாகத் தெரியக் கூடும் என்றும் எப்படி உபதேசம் செய்ய யோக்கியதை உண்டாகும் என்றும் சில நண்பர் நம்மை கேள்வி கேட்கலாம். அது சரியான கேள்வியேயாகும்.
ஆனாலும், அதைப் பற்றி நாம் இங்கு அதிகம் விவரிக்கும் வேலையில் ஈடுபடாமல் நமக்குச் சிறிதளவாவது பாத்தியமுண்டு என்று பொதுவாக சொல்லிக் கொள்வதுடன், எந்தக்காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால் இவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டதுபோல் இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதியாய்ச் சொல்லுவோம்.
பார்ப்பனரல்லாத தலைவர்களில் சிலர் இவ்வியக்கத்தில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கு பல விதமான அரசியல் காரணங்களைச் சொல்லி நம்மை வசப்படுத்த முயற்சிக்கக் கூடும். அரசியல் காரணங்களே நமக்கு முக்கியமல்ல. அன்றியும் பார்ப்பனர்களுக்குள்ள அரசியல் பங்கை மோசம் செய்ய வேண்டும் என்றும் நாம் சொல்வதில்லை. நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதமில்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கைக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். அரசியலில் நன்மையான காரியங்களுக்கு அவர்களுடன் ஒத்துழைக்கவும் அவர்களது ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராயிருக்கின்றோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் நமதியக்கத்தில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளாததாலேயே அரசியல் தத்துவம்கெட்டுப் போவதாயிருந்தால் நமக்கு அதைப் பற்றி சிறிதும் கவலையில்லை. அவர்கள் இல்லாமல் அரசியலைக் கைப்பற்ற முடியுமா முடியாதா என்பதை ஒரு கை பார்த்துவிடலாம்.
வெள்ளைக்காரன் இல்லாமல் அவர்களுடைய சம்பந்தமே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தலாம், நடத்த வேண்டும் என்கின்ற கொள்கை உடையதான காங்கிரசில் சேர வேண்டும் என்று கருதுகின்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள், பார்ப்பனர்கள் இல்லாமல் அவர்களைச் சேர்க்காமல் அரசியலை நடத்த முடியாது.
அரசியலைக் கைப்பற்ற முடியாது என்று சொல்ல வருவார்களானால் அதை நாம் எப்படி நம்பவோ ஏற்கவோ முடியும் என்று கேட்கின்றோம். அன்றியும் 12 வருஷ காலமாக இந்தக் கொள்கையுடனேயே இந்த மாகாணத்தில் எவ்வளோ எதிர்ப்புக்கிடையில் அரசியலை சரிவர நடத்தியாய் விட்டது. அன்றியும் இந்த மாகாணத்தைப் போல் இந்தியாவில் வேறு எந்த மாகாணமும் அரசியலை நடத்தவில்லை என்கின்ற பெருமையும் பெற்றாய்விட்டது.
இதற்கு விரோதமாய் இருந்த இயக்கங்களின் சமூகங்களின் ஆதிக்கங்களையெல்லாம் அடக்கியுமாய் விட்டது.
இன்னிலையில் இனி வரப்போகும் காலத்தில் இதற்கு மேற்கொண்ட எதிரியும் சூட்சியும் யாராலாவது செய்ய முடியும் என்று நினைப்பதற்கில்லாத மாதிரியான எதிர்ப்பை அனுபவித்து தேர்ச்சியும் பெற்றாய் விட்டது.
எனவே இனி எதற்காக பயப்படவேண்டும் என்பது நமக்கு புலனாகவில்லை. ஆகை யால் இது விஷயத்தில் இனி விவாதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. தமிழ்நாட்டு மக்கள் நெல்லூர் மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாக தாராளமாய் ஆயிரக்கணக்காய் செல்ல வேண்டியதும், அங்கு சென்று இவ்விஷயத்தை தலைகாட்டாமல் ஒரே அடியாய் அடிக்க வேண்டியதும் தவிர வேறு எவ்வித யோசனையும் செய்ய வேண்டியதில்லை என்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இப்போது அலட்சியமாய் ஏமாந்து இருந்துவிட்டு பிறகு கவலைப்படு வதிலேயோ, அப்படி மீறித் தீர்மானிக்கப்பட்டு விட்டால் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பதிலேயோ எவ்வித புத்திசாலித்தனமும் ஏற்பட்டுவிடாது. ஏனெனில், இப்போதே அந்தத் தொல்லை ஏற்படாமல் தடுக்க சவுகரியமான வழி இருக்கும்போது அதைவிட்டு நாளைக்கு ஒருவழியைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று கருதுவது மிக்க மதியீனமான காரியமாகும்.
கடைசியாக நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டால் அது தென் இந்திய நலவுரிமைச் சங்கத்தை மாத்திரம் பாதிப்பதென்பதல்லாமல் சுயமரியாதை இயக்கத்தையும் பார்ப்பனரல்லாத வாலிபர் இயக்கத்தையும் சிறிதாவது பாதிக்காமல் போகாது என்பதே.
மேற்கண்ட இவ்விரண்டு இயக்கங்களிலும் பற்றுள்ளவர்களும் நெல்லூர் மகாநாட்டுக்குச் சென்று பார்ப்பனர்களை சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுவதுடன் மேற்கண்ட இரண்டு இயக்கக் கொள்கைகளையும் அதாவது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் வாலிப இயக்க கொள்கைகளையும் இதில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
நெல்லூர் மகாநாட்டில் ஜில்லா வாரியாக ஓட்டு எடுக்கப்படுமாதலால் ஒவ்வொரு ஜில்லாவிலும் நூற்றுக்கணக்கான அங்கத்தினர்கள் இப்பொழுதே தங்களை அங்கத்தினர்களாக பதிவு செய்து கொண்டு கூட்டம் கூட்டமாக வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே.
(குடி அரசு - தலையங்கம் - 22.09.1929)