அசாதாரணமான அரசியல் சூழல் நிலவும் தமிழகத்தில், அடுத்தாண்டு தேர்தலை நோக்கியே அனைத்து எதிர்க் கட்சிகளும் விமர்சனங்களை அள்ளி வீசுகின்றன. ஆளும் கட்சியும் அவற்றிற்கு எதிராக சாதனைகளின் பட்டியல்களை வெளியிட்டும், பேசியும் வருகின்றது. விமர்சனங்களின் மையத்தில் மின்சாரம் இருக்கிறது. மக்களுக்கு உண்மையை உரைக்கும் பொறுப்பு நமக்குண்டு. நான்காண்டுகளில் மின்சாரத்துறையில் நடந்தது என்ன?

power grid 4502011ம் ஆண்டுத் தேர்தல் முடிவுக்கு “மின்சாரப் பற்றாக்குறை” முதல் காரணமாக இருந்தது. பதவியேற்ற பொழுதும், அதனை அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அரசு பல வாக்குறுதிகளையும் அறிவிப்பையும் வெளியிட்டது. இதுபற்றிய மக்களின் விமர்சனங்கள் தொடர்ந்திருந்தன. கடந்த ஆண்டின் இறுதியில் வந்த கட்டண உயர்வின் போதும், இது பெரிய அளவுக்கு இருந்தது. இந்த கோடை மின்சாரப் பற்றாக்குறையில்லை என்ற நிலையோடு முடிந்திருக்கிறது. அரசு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக பெருமைபட்டுக் கொள்கிறது. இந்நிலையில் மின்சாரம் குறித்து அரசு சரியானத் தீர்வைக் கண்டுள்ளதா என்பதே நம் ஆய்வுக்குரியதாகும்.

2011ம் ஆண்டின் போது, தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை, அதாவது கோடை காலமான ஜனவரி தொடங்கி, மே மாத முடிவு வரையிலான காலத்தில் நிலவிய பற்றாக்குறை – தோராயமாக 2800 மெகாவாட் ஆகும். நாளொன்றுக்கு 70 மில்லியன் யூனிட் பற்றாக்குறை நிலவியது. அரசு இருக்கும் உற்பத்தியில் 25 விழுக்காட்டை சென்னை நகருக்கு மட்டும் ஒதுக்கிவிட்டு எஞ்சிய மின்சாரத்தையே மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழங்கியது. இது மாநிலத்தின் பிற பகுதிகளில் 45 விழுக்காடு பற்றாக்குறையாக பிரதிபலித்தது. குறிப்பாக கிராமப் பகுதிகளும் விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே விநியோகத்தில் இருந்த பாகுபாடு, இதனை மேலும் மோசமாக்கியது.

2012ம் ஆண்டு, பற்றாக்குறை மேலும் விரிவடைந்தது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே பற்றாக்குறை கடுமையானது. 31.10.2012 அன்று ‘டிசம்பர்/2013ல் பற்றாக்குறைத் தீர்ந்து விடும்’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் உறுதியளித்தார். அத்துடன் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாகவும் கொள்கை அறிவிப்பையும் வெளியிட்டது அரசு. ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் 13,14,15 ஆண்டுக்குள் சூரிய ஒளி மின்சாரம் பற்றாக்குறையை தீர்த்துவிடும் என்பதுபோல் அறிவிப்பு, மக்களை சமாதானப்படுத்த முயற்சித்தது. அதே நேரத்தில், அரசு கையிலிருந்த நான்கு எரிக் காற்று நிலையங்களில், மூன்று மோசமாக பழுதடைந்து மாதக்கணக்கில், பழுது நீக்கப்படாமலும் இருந்தது.

2013ம் ஆண்டு, மின்சாரக் கொள்முதல் என்றிருந்தாலும், பற்றாக்குறையென்பது 2000 மெகாவாட் அளவிலேயே தொடர்ந்தது, அரசு பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வரவும், கொள்முதல் செய்யவும் மின் தொடர் இல்லை என மத்திய அரசையே குற்றம் சாட்டி வந்தது.

2014ம் ஆண்டிலும், பற்றாக்குறையென்பது 1200 மெகாவாட்டாக குறைந்திருந்தது. இது தேர்தல் காலம் என்பதும், புதிய உற்பத்தியும், கொள்முதலும், இதனை சாத்தியமாக்கியது.

கோடையில் கடுமையாகும் பற்றாக்குறை ஜுன் தொடங்கி செப்டம்பர் இறுதி வரையிலான காலத்தில் இல்லாது போகும். தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக காற்றாலை உற்பத்தி 3000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறையை இட்டு நிரப்பும் சில நேரங்களில் இது தேவைக்கு அதிகமாகவும் இருந்தது. மழைக்காலம் என்பதாலும் புனல் மின் நிலையங்களின் நீர்த்தேக்கம் உயர்வதாலும், கோடை வெப்பம் குறைவதால் உண்டாகும் மின் தேவை குறைவும் பற்றாக்குறையை சந்திக்கக் கூடியதாக இருக்கும்

இந்தியாவில் உள்ள மொத்த காற்றாலைகளின் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழகத்தில் இருக்கின்றன. 7200 மெகாவாட் நிறுவு திறன், காற்று காலத்தில் 3000 மெகாவாட்டுக்கு மேலாக உற்பத்தி செய்கின்றன. இந்த நான்கு மாத காலத்தில் அரசின் எந்த முயற்சியும் தேவைப்படாமலே, இந்தப் பற்றாக்குறையை காற்றாலை உற்பத்தி இட்டு நிரப்புகிறது

அதுபோன்றே அக்டோபர் தொடங்கி, டிசம்பர் வரையிலான காலத்தில், தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை தொடர்கிறது. இது தண்ணீர்த் தேவை, விவசாயத்திற்கான மின்சாரத் தேவையை குறைக்கிறது. டிசம்பர்-ஜனவரியில் நிலவும் பனிக்காலம், மின்தேவையைக் குறைத்து விடுகிறது. ஆக இயற்கைச் சூழலும் பருவ மாறுதலும், ஆண்டில் எட்டு மாத கால மின் தேவையை வேறுவிதமாக சமாளிக்கின்றன. இந்த எட்டு மாத காலத்தில் அரசின் முயற்சி ஏதும் தேவைப்படுவதில்லை எனவே அரசின் முன் இருந்த பிரச்சனையெல்லாம். கோடை மின்தேவையைச் சந்திப்பதே. அதாவது எஞ்சிய நான்கு மாதப் பிரச்சனையை எதிர்கொள்வதாகும். அரசின் செயல்பாடுகளை எடை போட வேண்டுவது என்பது

1) கோடை மின் தேவை

2) எதிர்காலத் திட்டங்கள் -------- என்ற இரண்டில் மையம் கொள்கிறது.

மாநிலத்தின் மின்சாரத் தேவையென்பது, மாநில அரசின் உற்பத்தி, நடுவண் அரசு மின்நிலையங்களிலிருந்து வரும் உற்பத்திப் பங்கு, தனியாரிடமிருந்து கொள்முதல் என மூன்று வகையாகிறது

. தனியாரிடமிருந்து என்பது காற்றாலை, சுய உற்பத்தியாளர்கள், ஒப்பந்ததார தனியாளர்கள், வணிக உற்பத்தியாளர்கள், சந்தையிலிருந்து அவ்வப்போது நாள் கணக்கில் கொள் முதல் செய்யப்படும் மின்சாரம் ஆகியவை அடங்கும்.

2011ம் ஆண்டு தொடங்கி, மாநில அரசின் உற்பத்தியும், நடுவண் அரசிடமிருந்து வரும் உற்பத்தியும், மாநிலத்தின் தேவையில் 65 சத அளவுக்கு இருந்தன. இது 32, 33 என்றோ சற்று வேறுபட்டோ இருந்தன. எஞ்சிய 35 சத அளவுக்கான மின்சாரம், தனியாரிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது.

இதுதான் தமிழக மின்சார உற்பத்தி மற்றும் மின் தேவை பற்றிய பொதுவான நிலையாகும். மின் உற்பத்தியில் ஏற்படும் தற்காலிக இடர்பாடு, போன்றவை இதில் அவ்வப்போது வேறுபாடுகளை உண்டாக்கின. அது போன்றே காற்றுக்காலம் இல்லாதபொழுதும், இருந்த குறைந்த அளவான காற்றாலை உற்பத்தியும், சில நாட்களுக்கு கை கொடுத்தன. இவைகள் நடைமுறையில் ஏற்பட்ட தற்காலிக வேறுபாடுகளாகும்.

தமிழகத்தின் மின்சார நெருக்கடியென்பது 2008ல் தான் வெளிப்பட்டது. 1989ல் துவங்கப்பட்டு 1996ல் முடிவடைந்த வடசென்னை 3x210=630 மெகாவாட் நிலையங்களுக்குப் பிறகு புதிய உற்பத்தி நிலையங்களை மாநில அரசு திட்டமிடவில்லை. இதற்கு நடுவண் அரசு கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கையே காரணமாக இருந்தது. எனினும் 1999ல் இதில் மாற்றம் செய்யப்பட்டு, மாநில அரசும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டன. எனினும், ஒப்பந்தம் செய்து கொண்ட தனியார் நிலையங்களே நடைமுறைக்கு வந்தன. தமிழகத்தின் எரிக்காற்று வளம் பாதிக்கு மேல் தனியருக்கு வழங்கப்பட்டது. மாநில அரசு 396 மெகாவாட் அளவுக்கே இந்த மிக மிகக் குறைந்த விலையுடைய, மின் உற்பத்தியை செய்தது. ஆனால் தனியார் எரிக்காற்று நிலையங்கள் 491 மெகாவாட் அளவுக்கு உயர்ந்திருந்தது. இந்த உற்பத்தி தவிர வேறு பெரிய திட்டங்கள் எதுவும் அரசு 1999க்குப் பின்னர் முன்னெடுக்கவில்லை. 2005, 2006, 2007ம் ஆண்டுகளில் நல்ல பருவமழையின் காரணமாக புனல் மின் உற்பத்தி, எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

2008ல், பருவக்காற்று பொய்த்துப் போய், புதிய தொழில்களினால் தேவையும் கூடியதால், மின் வெட்டு அமுலாகியது. ஆனால் 2008ல், மாநில அரசு, சுய உற்பத்தியாக 1800 மெகாவாட்டும், NTPC, NLCயுடனான கூட்டு முயற்சியாக 1500 மெகாவாட்டிற்கும் திட்டத்தை தொடங்கியது. திட்டத்தை தொடங்குவதென்றால், அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டி நிறுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதைத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் 3,300 மெகாவாட் சுய உற்பத்திக்கான முயற்சிகளை 2008-ம் ஆம் ஆண்டில் மாநில அரசு மேற்கொண்டது.

 2800 மெகாவாட் பற்றாக்குறை வழங்கிய வாய்ப்பில் மே-2011ல் ஆட்சிக்கு வந்த அரசிடம், உடனடியாக பற்றாக்குறையைச் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதனுடன், நெய்வேலியில் கட்டுமானத்திலிருந்த 500 மெகாவாட் திட்டத்தில் 225 மெகாவாட் மாநிலத்திற்கு 2011-ல் கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. கீழ்க்காணும் பட்டியல்., இதனைத் தெளிவுபடுத்தும். அத்துடன் ஒப்பந்தம் மேற்குறித்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவதற்கான காலம் 39 மாதங்களே .NTPC யுடனான 1041 மெகாவாட் கூட்டு முயற்சியைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் விரிவாக்கத் திட்டங்களே. இந்த இடங்களில் முன்னதாகவே மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தன. எனவே, தண்ணீர், சாம்பல் கையாளுதல், நிலக்கரி கொண்டுவருவதற்கான துறைமுக வசதி அனைத்தும் செயல்பாட்டில் இருந்தன. NTPC திட்டத்திற்கு கூட துறைமுக வசதியும் தண்ணீர் வசதி, சாம்பல் கையாளுதல் போன்றவையும் இருந்தன. இதனைக் கவனத்தில் கொண்டே அரசின் செயல்பாட்டைக் கணக்கிட வேண்டும்.


வ. எண்
திட்டத்தின் பெயர் உற்பத்தி திறன் (மெகாவாட்) வேலை துவங்கிய நாள் ஒப்பந்தப்படி உற்பத்தி துவங்கப்பட வேண்டிய தேதி உற்பத்தி துவங்கிய தேதி.
1 வடசென்னை இரண்டாம் திட்டம் 2x600=1200 18/02/2008 23/05/2011

I-20/03/2014

II-08/05/2014

2 மேட்டூர் மூன்றாம் திட்டம் 1x600=600 25/06/2008 25/09/2011 13/10/2014
3 வல்லூர் NTPC கூட்டு முயற்சி

2x500=1000

1x500=500

13/08/2007

28/07/2009

I-10/2010

II-03/2010

III-09/2012

29/11/2012

25/08/2013

26/02/2015

4 தூத்துக்குடி NLC கூட்டு முயற்சி 2x500=1000 13/05/2008

I-06/2013

II-03/2012

இன்னமும் உற்பத்தி தொடங்கவில்லை

ஆனால் நடந்தது என்னயென்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். முதல்வர் சட்டமன்றத்தில் இத்திட்டங்கள் பற்றி குறிப்பாகப் பேசியுள்ளார். ஆனால் புதிய திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு முயற்சியே எடுக்கவில்லை என்ற முடிவுதான் எஞ்சுகிறது. 39 மாத காலம் கடந்து சில மாதங்கள் வேண்டுமானால், நடுவண் ஆணையம் வழங்குவதுபோல்-6 மாதங்கள் தள்ளிப் போகலாம். அப்படி வழங்கப்பட்டாலும் 2012 கோடையில், சுய உற்பத்தியாக 1800 மெகா வாட்டும், கூட்டு முயற்சியில் 750 மெகாவாட்டும் கிடைத்திருக்க வேண்டும். 2012லேயே 2015ல் இருக்கும் நிலையை தமிழகம் எட்டியிருக்க முடியும்.

ஆனால் 2012லும் நடக்கவில்லை; 2013லும் நடக்கவில்லை; 2014லும நடக்கவில்லை.; ஏன் என்பதற்கான காரணத்தைத்தான் அரசு மக்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது; மார் தட்டிக் கொள்ள அல்ல…

2012லும் 2013லும், 2014லும் முடங்கிப்போன சிறு, குறுந்தொழில்கள், அதன் பணியாளர்கள், உரிமையாளர்கள், நாட்டின் உற்பத்தி, மக்களின் சொல்லொண்ணாத் துயரம், இவற்றிற்கு மாநில ஆளும் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், இதே காரணங்கள் தாம் 2011 அரசியல் மாற்றத்திற்கு காரணமானவை. கடந்த அரசின் கையில், தற்போதைய அரசுக்கு இருந்தது போன்ற வாய்ப்புகள் இல்லை என்பதும் உண்மைதானே.

அதுமட்டுமல்ல. எதிர்காலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் அரசு என்ன பணியினைச் செய்திருக்கிறது என்பதனையும் பார்க்க வேண்டும். 2011ம் ஆண்டின் ஜனவரியிலேயே எண்ணூர் 600 மெகா வாட் விரிவாக்கத் திட்டம், வட சென்னை (காட்டுப்பள்ளி) சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் 2x800 மெகாவாட் திட்டம், உடன் குடி2*800, உப்பூர் 2*800மெகாவாட் என 5400 மெகாவாட்க்கான ஆரம்பப் பணிகளான அனுமதியெல்லாம் பெறப்பட்டிருந்தன. மாநில அரசு, நிதி ஒதுக்கி, திட்டங்களைத் துவங்கிட வேண்டிய நிலையிலேயே 5/2011-ல் இருந்தது.

மாநில அரசு எண்ணூர் விரிவாக்கத் திட்டத்தை 600 மெகாவாட் என்பதற்குப் பதிலாக 660 மெகாவாட் என 03/2012-ல் எனத் திருத்தியது. ஏனெனில் 2011 ஜனவரியில் இருந்த ஆட்சி ஒப்பந்தப் புள்ளி கோரும் நிலையில் இத்திட்டம், இருந்தது. தேர்தல் அறிவிப்பால் நின்று போயிருந்தது. ஓராண்டு காலம் தாழ்த்தி திருத்திய திட்டத்தை மேலும் இரண்டரை ஆண்டுகாலம் தாழ்த்தி 2014ல் தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2015ல் இதனைத் துவக்கப் போவதாக இதே அரசு சொன்னது. ஆனால், 2019-ம் ஆண்டே இது துவங்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

600 மெகாவாட் திட்டத்தை 660 மெகாவாட்டாக திருத்திய அரசு, உப்பூர், காட்டுப்பள்ளி, உடன்குடி திட்டங்களை, 800 மெகாவாட் என்பதற்குப் பதிலாக 660 மெகாவாட் அலகாக மாற்றியது. இதனால் 840 மெகாவாட் திட்ட அளவிலேயே குறைந்தும் போனது.

2012-ல் வேலை துவங்கப்பட்டிருக்க வேண்டிய காட்டுப்பள்ளித்திட்டம், 2015-ல் தான் வேலையைத் துவங்கப் போகிறது.

அதுபோன்றே 2012-ல் துவங்க வேண்டிய உடன்குடி திட்டம் இனிமேல் தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 5400 மெகாவாட்களுக்கான திட்டங்களின் துவக்கப்பணியில் 1980 மெகாவாட் அளவுக்கே துவங்கப்பட்டுள்ளன. அத்துடன் திட்ட அனுமதியில் 840 மெகாவாட் திருத்தத்தினால் குறைந்தும் போனது.

ஆனால், 3300 மெகாவாட் அளவுக்கு நாள் முழுவதும், ஆண்டுமுழுவதுமாக, தனியாரிடமிருந்து கொள்முதலுக்கு நீண்டகால (15 ஆண்டுகள்) ஒப்பந்தத்தினைச் செய்துள்ளது. கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.4.91 என்று சொல்லப்பட்டாலும், உண்மை விலையென்பது ரூ.6/-ஐ எட்டக்கூடும். ஏனெனில் 4.91 என்பது சராசரி (levellised) விலையாகும். ஆனால், சந்தைவிலை கடுமையாக குறைந்து வருவதாக நடுவண் மின்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். இந்திய மின்சாரப் பங்குச் சந்தை 09/06/2015 அன்று வெளிட்டுள்ள விலையைப் பார்த்தால் இது உண்மையென்றே தோன்றுகிறது

நாள் முழுவதுக்குமான விலை (Round the clock-RTC) இது,

பிற நான்கு, மண்டலங்கள்   ரூ2.26/யூனிட்

(வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு)

தெற்கு (S1) (கர்நாடகம், ஆந்திர, தெலுங்கானா)          -ரூ3.59/யூனிட்

தெற்கு (S2) (தமிழ்நாடு, கேரளம்)        -                        ரூ5.55/யூனிட்

நாட்டின் ஐந்து மண்டலங்களில், தெற்கு மண்டலத்தை இரு பிரிவுகளாக்கியுள்ளனர்.

நீண்டகால கொள்முதல் விலையைவிட S2வில் விலை அதிகம் போல் தோன்றலாம். உண்மையில் இது மின்சாரத்தின் விலையில் அடக்கமாகியுள்ள பிற விலைகளே. தெற்கு மண்டலம், பிற மண்டலங்களுடன் தற்போது இணைக்கப்பட்டுவிட்டது. பாதைகளிலும், சோலப்பூர்/ ரெய்ச்சூர் முதல்பாதையாக (765 KV) துவங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது பாதையும் துவங்கப்பட்டுவிட்டால், பிற மண்டலங்களில் நிலவும் 2.26/யூனிட் என்பது தமிழ் நாட்டுக்குச் சாத்தியமே. அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் இன்று வணிக மின் உற்பத்தி நிலையங்கள் என ஓர் ஆண்டுக்குள்ளாக 5000 மெகாவாட் கிடைக்கக் கூடும். தேசிய அளவில் விலை கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டிலேயே இதே விலைக்கு நாம் கொள்முதல் செய்யமுடியும். அத்துடன் 15 ஆண்டுகால கொள்முதல் என்பது புதிய உற்பத்தி நிலையங்கள் துவங்கும் பொழுது தேவையாக இருக்க முடியுமா? என்று சொல்ல முடியாது.

எல்லாவற்றையும் விட தென் மேற்கு பருவக்காற்று காலத்தில் உற்பத்தியாகும் 3000 மெகாவாட்க்கு மேலான காற்றாலை உற்பத்தியை என்ன செய்வது என்பதுதான் இந்த கொள்முதல் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய பிரச்சனை ஆகும். மரபுசாரா மின்சாரமான இந்த உற்பத்தியை நாம் முழுமையாகப் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், கொள்முதல் மின்சாரமான 3300 மெகாவாட் இந்த நான்கு மாத காலத்தில் இதனை உபரியாக்கிவிடும். அத்துடன் கொள்முதல் மின்சாரத்தின் விலை காற்றாலை மின்சாரத்தை விடவும் அதிகம். காற்றாலை மின்சாரத்தினை வாங்கிக்கொண்டு, ஒப்பந்தம் செய்யப்பட்ட மின்சாரத்தினை நிறுத்தினால், கொள்முதல் செய்யாத காரணத்திற்காக யூனிட்க்கு ரூ.3.72/- தரவேண்டும். இது ஒப்பந்த சாரமாகும். ஆக மின்சாரத்தின் விலை (3.12+3.72=6.84) ரூ.6.84 ஆக மாறிவிடும். இந்த 3,300 மெகாவாட் நீண்டகால கொள்முதல் என்பதே, இந்த நான்காண்டு காலத்தில் கூடியிருக்கும் தேவை, மின் பற்றாக்குறையாக மாறி, அடுத்த தேர்தல் களத்தைப் பாதிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்தைத்தான் கொண்டது. மின்சாரத்தின் விலை குறித்தோ எதிர்கால கட்டண உயர்வு குறித்த எந்த அக்கறையும் காட்டவில்லை. மின் பற்றாக்குறையோ, கட்டண உயர்வோ எதுவாயினும், தேர்தலுக்கு முன்னதாக வந்துவிடக் கூடாது என்பதே குறிக்கோளாகத் தெரிகிறது.

மின்சாரப் பற்றாக்குறை என்பதும் மின் கொள்முதல் என்பதும் மிகப்பெரிய ஊழலுக்கும், அரசியல் மூலதனத்திற்கும் உதவுகிறது. இதுபற்றி பெரிய பட்டியலைத் தர முடியுமென்றாலும், இரு உதாரணங்கள் இதனைத் தெளிவுபடுத்தும்.

GMR, 196 மெகாவாட் நிலையம், ஒப்பந்த சாரத்தின் கீழ் வரும் தனியார் மின் உற்பத்தியாளர். இந்நிலைய மின்சாரத்தின் விலை ரூ.12/ ஆகும். ஒழுங்குமுறை ஆணையம் இந்நிலையம் மற்றும் மூன்று நிலையங்களிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டாமென 2012லேயே உத்திரவிட்டுள்ளது.

ஆனால் இந்த விலைக்கே வாரியம் தொடர்ந்து கொள் முதலைச் செய்தது. GMR சென்னையின் மையத்தில் உள்ளதால், மின் அழுத்தத்தைப் பராமரிக்க தேவைப்படுவதாக ஆணையத்திடம் தெரிவித்தது. இந்த ஜனவரியிலிருந்து இதனிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இன்று சாத்தியமான இந்த நிலை 2012-ல் கூட சாத்தியமானதுதான். ஊழல் மட்டுந்தான் இந்தக் கொள்முதலுக்கு ஒரே காரணம்.

இரண்டாவதாக, 2012-ல் 6833 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து, ரூ.6.28-6.40க்கு கொள்முதல் செய்ய வாரியம் தீர்மானித்தது. ஆணையம், நமது தலையீட்டினால், இந்த விலையை அனுமதிக்கவில்லை. இதில் சில கடந்தகால உண்மைகளும் அடங்கும். 2009ம் ஆண்டிலிருந்தே இதே விலைக்கு (ரூ6.40/யூனிட்) கொள்முதல் செய்யப்பட்டது. 2011ல் தேர்தல் முடிந்தவுடன், இது ரூ.5.05/யுனிட் என குறைந்தது. மீண்டும் 2012-ல் 6.40க்கு உயர்ந்துகொண்டது. இதன் பின்னணியை உங்கள் யூகத்திற்கு விடுகிறோம்.

ஆணையம் மறுதலித்தவுடன், ஒரு நீதிமன்ற வழக்கும், உத்திரவும் வந்தது. நீதிமன்ற வழக்கில் ரூ.640க்கு வாங்க வாரியம் உண்மைகளை மறைத்தது. ரூ.6.40க்கு வாங்கவே துடித்தது. எனினும், நமது தலையீட்டின் காரணமாகவே இது ரூ.6.40க்குப் பதிலாக ரூ.5.50க்கு நிலைப்பெற்றது.

இது மின்சாரத் தேவை, மின்வெட்டு என்ற இரு அளவுகளின் அடிப்படையிலேயே, கடந்த நான்காண்டு ஆட்சி காலத்தில் நடந்ததை இங்கு ஆய்வு செய்துள்ளோம். மின் கட்டணம் வாரியத்தின் கடன் என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நான்காண்டு காலத்தில், மின்சாரம் குறித்த மேலே சொன்ன காரணங்களுடன் அரசின் நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதும், அரசின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்பதுமே நாம் மக்கள் முன்வைக்கும் முடிவாகும்.

- சா.காந்தி

Pin It