இந்தியாவிற்குள் தனது பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு வந்த மோடி அரசு அதன் கொடும் கரங்களை மியான்மர் வரை நீட்டி இருக்கின்றது. தீவிரவாதத்தை ஒழிப்பதாக சொல்லி ஒரு வேட்டை நாயைப்போல மூன்றாம் உலக ஏழைநாடுகளை கடித்து குதறும் பெரியண்ணன் அமெரிக்காவின் ஆசிய அடியாளான சின்னண்ணன் இந்தியா தனது முப்பெரும் இராணுவத்தின் பலத்தை ஏழை நாடான மியான்மருக்கு புரியவைத்திருக்கின்றது. அந்த நாட்டின் அனுமதி இல்லாமல் உள்ளே புகுந்து 38 பேரை கொன்றுபோட்டிருக்கின்றது. மோடி புகழ்பாடும் சில ஊடகங்கள் உண்மை நிலவரம் என்ன என்று கூட தெரியாமல் இதை 50 என்றும் 100 என்றும் எழுதி தங்களது கொலை வெறிக்கு ஏற்ப பிணங்களின் எண்ணிக்கையை உயர்த்தி எழுதிக் கொள்கின்றன.

 கடந்த நான்காம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சான்டெல் மாவட்டத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டதில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சுட்டது யார் என்று இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, வேறு எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆனால் இதை நிச்சயம் தனி நாடு கோரி போராடும் பிரிவினைவாதிகள் தான் செய்திருப்பார்கள் என்று முன்முடிவு செய்து இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றது இந்தியஅரசு. கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் இதுவரை வெளியிடப் படவில்லை இதில் இருந்தே இந்திய இராணுவத்தின் யோக்கியதையை தெரிந்துகொள்ளலாம். ஆனால் இதில் கலந்துகொண்ட இராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. முகத்தை மறைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் வீரமுகத்தை காட்டிக் கொண்டிருக் கின்றார்கள்.

 இந்திய இராணுவவீரர்களின் உயிர்மேல் மோடிக்கு உள்ள அக்கறையை நினைத்து இந்திய நடுத்தரவர்க்கம் பூரித்துபோய் கிடக்கின்றது. ஆனால் சற்றேறக்குறைய 850 இராணுவ வீரர்கள் 2006 ல் இருந்து 2013 வரை தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இது தீவிரவாதிகள் என்று இந்திய அரசாங்கம் சொல்லும் நபர்களால் கொல்லப்பட்டவர்களை விட மிக மிக அதிகம். அதிலும் தற்கொலை செய்துகொண்ட மிகப்பெரும் பாண்மையான இராணுவ வீரர்கள் இராணுவத்தில் கீழ்மட்ட பதவியில் இருப்பவர்கள். தொடர்ச்சியான பணிச்சுமையாலும், ஆரோக்கியாமான உணவு இல்லாததாலும், போதிய மருத்துவ வசதி இன்மையாலும் உயர் இராணுவ அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையாலும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலான நபர்கள் துணை இராணுவ படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட இராணுவவீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நமக்குத் தெரியவில்லை.

 இந்திய அரசு இராணுவ வீரர்களை அதிலும் குறிப்பாக கீழ்நிலை இராணுவ வீரர்களை நாயைவிட கேவலமாகவே எப்போதும் நடத்தியிருக் கின்றது. இத்தனை இராணுவ விரர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்வதை விட இவர்களை அரசே கொன்றிருக்கின்றது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். இதை எல்லாம் நாம் எதற்காக சொல்கின்றோம் என்றால் பிரச்சினையின் உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகதான். 20 இராணுவ வீரர்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மியான்மர் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு சாக்கே ஒழிய இராணுவ வீரர்களின் மீதான அன்போ, அக்கறையோ அல்ல. இந்திய அரசின் உண்மையான நோக்கம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது. ஒன்று தனிநாடு கோரி போராடும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த அத்தனை அமைப்புகளையும் அச்சுறுத்துவது மேலும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் போடப்பட்டிருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிரான அந்த மக்களின் போராட்டத்தையும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சக்திகளையும் மரணபயத்தில் ஆழ்த்துவது. மற்றொன்று மியான்மர் மீதான தாக்குதலை காரணம் காட்டி தங்களுடைய மதவாத அரசியலுக்காக பாகிஸ்தானை மிரட்டுவது.

 இந்த தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ‘இது பாக் உட்பட தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அண்டை நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை’ என வெளிப்படையாகவே கூறி இருக்கின்றார். மோடி அரசின் இந்த அயோக்கியத்தனத்தை எந்த ஊடகங்களும் கண்டிக்கவில்லை மாறாக இதை மோடி அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக சித்தரிக்கின்றன. மேலும் சில மாமா ஊடகங்கள், நடவடிக்கை சரிதான் ஆனால் அதை இப்படி வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிப்பது மிகப்பெரிய தவறு, இராணுவ நடவடிக்கைகள் இரகசியமாக இருக்கவேண்டும் அதை விளம்பரப்படுத்தக்கூடாது என்று வேசித்தனமாக கோபித்துக்கொள்கின்றன. புதிதாக வாங்கிய கோட்டில் இருந்து கோவணம் வரை அத்தனையும் விளம்பரமாக மாற்றும் மோடியால் எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு சும்மா இருக்கமுடியும்!

 இந்திய இராணுவ வீரர்களின் மரணத்திற்காக இந்திய மக்களாகிய நாம் ஒருபோதும் அனுதாப படவேண்டிய அவசியமில்லை. அந்நிய நாடுகளின் தாக்குதலில் இருந்து இந்திய மக்களின் உயிர்களையெல்லாம் காப்பாற்றிவைத்திருப்பது இந்திய இராணுவம்தான் என்று நாம் நினைத்தால் அதைவிட வேறு அபத்தம்வேறு ஒன்றுமில்லை. தன் சொந்தநாட்டு மக்களையே மனிதாபிமானமற்ற முறையில் கொலைசெய்யும் ஒரு கேடுகெட்ட குற்றக்கும்பல் தான் இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் மேன்மையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தண்டகாரணிய காடுகளில் போய் கேளுங்கள் அப்படியே காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் உங்களின் இரத்தம் நிச்சயம் உறைந்துவிடும். லட்சக்கணக்கான இந்திய மக்களின் இரத்தத்தைக் குடித்த இரத்தக்காட்டேரிகள்தான் இந்திய இராணுவம் என்பதை உணர்வீர்கள்.

 இந்தியா முழுவதும் நடத்தப்படும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்களில் கலந்துகொள்ளும் பெரும்பாலான இளைஞர்கள் உண்மையான நாட்டுப்பற்றோடெல்லாம் அதில் கலந்துகொள்வது கிடையாது. வேலை வாய்ப்புகள் சுத்தமாக அற்றுப்போய்விட்ட ஒரு கையறு நிலையில் உயிரை பணயம் வைத்தாவது தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இராணுவத்தில் போய் சேர்கின்றார்கள். அப்படி சேருமவர்கள் கிராமமான முறையில் பயிற்றுவிக்கப் படுகின்றார்கள். தங்களது உயரதிகாரிகள் சொல்வதை ஏன் எதற்கு என்று கேள்விகேட்காமல் உடனே செயல்படுத்தக்கூடிய ஒரு மனித எந்திராமாக அவர்கள் மாற்றப்படுகின்றார்கள். அப்படி கேள்வி கேட்கும் இராணுவ வீரர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இராணுவத்தில் இருக்கும் ஒரு உயரதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சகம் இப்படியாக சொல்கின்றது “போ, போய் அந்த தண்டகாரணிய காடுகளில் இருக்கும் அந்த பழங்குடி இன நாய்களை சுட்டுத்தள்ளு, அவர்களுடைய பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்து அப்படியும் போகவில்லையா அவர்களது வீடுகளை தீ வைத்து கொளுத்து. அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளார்கள் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்” என்று. இதை ஆணையாக ஏற்ற அந்த உயர் அதிகாரி தன்னுடைய கீழ்நிலை ஊழியர்களுக்கு உத்தரவிடுகின்றார். “போ போய் அவர்களை அந்த இடத்தில் இருந்து காலிசெய், என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள் இது என்னுடைய ஆணை” என்று. இப்படித்தான் மத்திய இந்தியாவின் காடுகளிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இராணுவம் தன்னுடைய அத்துமீறலை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றது. இப்படியாக அரசு தன்னுடைய வர்க்கநலனை காப்பாற்றிக்கொள்ளவும் தனக்கு படிஅளக்கும் உலக எசமானர்களின் மனதை குளிர்விக்கவும் தன்னாட்டு இராணுவத்தை தன்னுடைய மக்களுக்கு எதிராகவே ஏவிவிடுகின்றது. இதைத்தான் மார்க்ஸ் அன்றே சொன்னார் “சமுதாயத்தில் இருந்து உதித்தெழும் அரசு அச்சமுதாயத்திற்கு மேலும் மேலும் தன்னை அயலானாக்கிக் கொள்கிறது” என்று.

 இராணுவ வீரர்களின் தற்கொலையோ அல்லது அவர்களின் மரணமோ நமக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் சொந்த நாட்டு மக்களை கொல்லும் இவர்களின் மீது எந்தவிதமான அன்போ, பாசமோ, கருணையோ நம்மிடம் இல்லை ஆனால் ஒவ்வொரு மாவோயிஸ்டுகளின் மரணமும், நக்சல்பாரிகளின், பகுத்தறிவாதிகளின் மரணமும், சமூக செயல்பாட்டாளர்களின் மரணமும் நமக்கு வலியை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் இந்தச் சமூகம் அவர்களால் தான் பிழைத்துக் கிடக்கின்றது.  இராணுவவீரர்களின் மரணத்திற்காக இந்த அரசு நம்மை வருந்தச் சொல்கின்றது. அதற்காக துக்கம் கடைபிடிக்கச் சொல்கின்றது. அப்படி இல்லை என்றால் உங்களை மாவோயிஸ்ட் என்றோ, நக்சலைட் என்றோ சமூகவிரோதி என்றோ முத்திரை குத்தி உங்களை ஒழித்துக்கட்டப் பார்க்கின்றது. அரசு உங்களுடைய நிலங்களை பிடுங்கிக்கொள்ளலாம், இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் உங்களை வலுக்கட்டாயமாக இருத்திவைக்க முயற்சிக்கலாம், உங்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களைக் கொண்டுவரலாம் அதை நீங்கள் வாய்மூடி மெளனமாக ஆதரிக்கவேண்டும் எதிர்த்துக் கேள்விகேட்டால் அரசு இப்படித்தான் சொல்லும் ‘நீ எங்களோடு இருக்கின்றாய் இல்லை என்றால் நீ தீவிரவாதியோடு இருக்கின்றாய்’!

- செ.கார்கி

Pin It