"பெண்சிசுக் கொலை தொடர்ந்தால் இரண்டுகோடி ஆண்கள் எதிர்காலத்தில் பெண்துணை இல்லாமல் வாழவேண்டிவரும்" இது சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையம் சொன்னது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி ஆண்பெண் விகிதாச்சாரம் (0-6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு) 1000 ஆண் பிள்ளைகளுக்கு 914 பெண்குழந்தைகள் மட்டுமே ஆகும். இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய வித்தியாசம் இதுவாகும். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி 937 பெண்குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ரஷ்யாவில் 1000 ஆண்களுக்கு 1165 பெண்களும், பிரான்சில் 1056 பெண்களும், ஜப்பானில் 1054 பெண்களும் உள்ளனர்.இந்தியாவைப் பொருத்தவரை தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் பெண்களின் விகிதாச்சாரம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 1000 பெண்குழந்தைளுக்கு 1280 ஆண்கள் இருக்கின்றனர். இது முறையே அரியானாவில் 1190 ஆண்களும், பஞ்சாப்பில் 1170 ஆண்களும் உள்ளனர். தமிழகத்தில் 1060 ஆண்கள் உள்ளனர்.

இத்தகு வித்யாசத்துக்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஸ்கேன் மூலம் ஆணா பெண்ணா என பரிசோதனை செய்து பெண் எனில் கருக்கலைப்பு செய்வது, பெண்சிசுக்களை இரக்கமில்லாமல் கொலை செய்வது என நீளும்இந்த பட்டியல் வேதனைமிகுந்த பல கதைகளைக் கொண்டது. ஹரியான போன்ற வட மாநிலங்களில் பெண்குழந்தைகள் அதிகம் கொல்லப்படுவதாகவும், பாலியல் தேவைக்கென அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களைக் கடத்திக்கொண்டுபோய் கொடுமைப்படுத்துவதாகவும் அந்தப் பகுதி பற்றித் தெரிந்த நமது தோழர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

இந்த விஷயத்தில் வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் சற்று தேவலாம்தான் என்றாலும், தருமபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் இன்றைக்கும் சிசுக் கொலைகள் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாலைஓரங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளிலோ, முட்புதர்களின் ஊடே நாய்களால் சேதப் படுத்தப்பட்ட நிலையிலோ, அவசர கதியில் சிதைமூட்டப் பட்டு பாதி வெந்தும் வேகாமலும் கிடக்கும் பெண் சிசுக்கள் குறித்த செய்திகள் அடிக்கடி இன்றைக்கும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்தபடியேதான் இருக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 90 ஆம் ஆண்டுகளின் இறுதிவாக்கில் ஆண்டுக்கு 1000 த்துக்கும் மேலான பெண்சிசுக்கள் படுகொலை செய்யப் பட்டதாக கூறும் புள்ளி விவரங்கள், அண்மைக்காலத்தில் கொஞ்சம் குறைந்திருப்பதாக உணர்த்தினாலும், நடைமுறையில் அவை வெறும் ஏட்டளவிலான புள்ளி விவரங்களே.

சிசுக்கொலைக்கு கடுமையான தண்டனை உண்டு என்ற பயம் மக்களுக்கு ஏற்பட்டவுடன் கொலைசெய்யும் முறையை மக்கள் மாற்றிக் கொண்டதே புள்ளிவிவரம் குறையக் காரணமென துறையில் உள்ள மருத்துவ நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கள்ளிப்பாலும், கார்நெல்லும் இப்போதெல்லாம் பழைய கதைகளாகி விட்டன. அடர்த்தியான துணியை நனைத்து குழந்தை மீது போர்த்துவது, பாலை ஊற்றிவைத்திருக்கும் பாத்திரத்தில் குழந்தையின் தலையை அப்படியே மூழ்கடித்துக் கொல்வது , நாட்கணக்கில் பாலே புகட்டாமல் பட்டினி கிடக்க விட்டுவிடுவது போன்ற புதிய நடைமுறைகள் இப்போது புழக்கத்துக்கு வந்துவிட்டன. இந்த நடைமுறைகளால் மரணத்தை கொலை என ருசுப்பிப்பது கடினம். இதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே திருட்டுத்தனமாக ஸ்கேன் சென்டர்களும், கருக்கலைப்புக் கூடங்களும் காசுக்கு கொலைசெய்யும் வேலையை கச்சிதமாக செய்கின்றன. காவல் துறைக்கு இது தெரிந்தும் லஞ்சம் கடமையின் கண்ணை குருடாக்கி விடுகின்றன.

தருமபுரியில் ஆண்பெண் விகிதாச்சாரம் 1000த்துக்கு 878ஆகும். தேசிய அளவில் அது 914 ஆக இருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். சிசுக்கொலைகள் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றனவே தவிர ஆண்பெண் விகிதாச்சாரம் சமனை நோக்கி பயனிப்பதாகக் காட்டவில்லை.

தருமபுரியில் மட்டும் அரசு தொடங்கிய தொட்டில் குழந்தை திட்டத்தில் இதுவரை 1431 குழந்தைகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இக்குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கல்வி, எதிர்காலம் போன்றவை கேள்விக்குறியாகவே இருக்கிறன. இந்த திட்டத்தின்மூலம் சுமார் 13000 குழந்தைகளுக்கு உயிர் பிச்சையை அம்மா கொடுத்துவிட்டதாக நமது எம்ஜீஆர், மக்கள் குரல் போன்ற துதிபாடும் பத்திரிக்கைள் பெருமைப் பட்டுக் கொள்கின்றன.பாசமிகு குழந்தையை வளர்க்க வக்கற்று அரசிடம் ஒப்படைக்கும் அவலத்துக்காக எந்த அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, சம்பவத்தில் ஈடுபடுவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது என அரசினைப் பொருத்தவரை, இந்த விஷயம் யந்திர கதியிலேயே பார்க்கப்படுகிறது. இது ஓர் "சமூக நோய்" என்பது குறித்தோ, இதில் பெண்டிமைத்தனத்தோடு சமூக பொருளியல் அம்சங்கள் இரண்டறக் கலந்திருப்பது குறித்தோ, எந்தவிதமான புரிதலும் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. மாவட்டத்தின் முன்னாள் ஆட்சித்தலைவர், மகளிர் சங்கங்களுக்கான ஓரு கூட்டத்தில் சிசுக் கொலை குறித்து பேசும் போது இப்படிச் சொன்னார்.... "சனியனுங்களே! ஏன் பெண் குழந்தைகள இப்படி கொல்லுறீங்க.. ரஜினி கமல் எல்லாம் பொண்ணுங்களத்தான் வளக்குறாங்க, நாட்ட ஆளும் அம்மாவும், நானுங்கூட பெண்கள் தான். நாளக்கி ஒங்க பிள்ளைகளும் எங்களப்போல வருவாங்க இல்ல..." அரசு அதிகாரிகளின் புரிதல் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

பகுதியில் தொடர்ந்து நிலவும் கடுமையான வறட்சியும், அன்றாடத் தேவைகளுக்கே அல்லாடும் சூழலும், அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளும், மயக்கமூட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்ற அத்தியாவசியப் பண்ட்களின் விலைவாசியும், வருங்காலத்தின் மீது மக்களுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன. இந்த அச்சம் தனது செலவினங்களை குறைத்துக் கொள்வதில் தொடங்கி பெண்சிசுக் கொலைவரை நீள்கிறது. நாம் இப்படிச் சொல்வதால் கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக 'சட்ட மேதைகள்' சிலர் சண்டைக்கு வருகிறார்கள். நான் சுட்டவருவது 'நோய் முதல்நாடி' என்பது பற்றியே ஒழிய கொலையாளிகளை நல்லவர்களாக சித்தரிக்க அல்ல.

பெண்கள் குடும்பத்துக்கான பாரம் என்ற கருத்தாக்கமும், "பெண்ணைப் பெத்தவன் நெருப்பை மடியில் கட்டிவைத்திருக்கிறான்" என்ற பழைமை வாதப் போக்கும், சடங்கு மற்றும் சீர் செய்வது உள்ளிட்ட இந்துத்துவ பெண்ணடிமை வக்கிரங்களும் இவற்றை இன்னும் வீரியமாக்குகின்றன.

இவற்றிற்கான வேர்களைத் தேடாமல், பொருளியல் தொடர்பான நெருக்கடிகளைக் குறைக்க அரசு நீண்டகாலக் கடன்உள்ளிட்ட பாரிய நடவடிக்கை எடுக்காமல் நிச்சயம் வெறும் சட்டத்தாலும், தண்டணையாலும், மட்டுமே இதற்கு தீர்வு கிடைத்துவிடாது.

எனக்குத்தெரிந்த குடும்பம் தனக்கு மூன்றாவதாய் பிறந்த பெண்குழந்தையை கொலைசெய்து எரித்துவிட, ஊரில் வேண்டாத நபர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். விளைவு குடும்பமே சிறைக்குப்போனது. எஞ்சிய இருகுழந்தைகளும் உணவில்லாமலும், பள்ளிக்குப்போகாமலும் அல்லாடிய கதை மிகமிக சோகமானது. மேலும் கைதான அவர்களை பிணையில் எடுக்கக்கூட ஆளில்லாத அவலமும் நடந்தது.

கண்மூடித்தனமான தண்டனைகளாலும், விழிப்புணர்வு பிரச்சாரம் என்னும் பேரில் நடக்கும் கூத்துக்களாலும் இந்த பிரச்சனைக்கு என்றைக்கும் தீர்வு காணவே முடியாது.

1. மக்களின் அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பை உயர்த்துவதற்கான நீண்டகாலக் கடன்களை வழங்குவது, கிராமப்புறங்களில் உற்பத்தியை ஊக்குவிக்க கூடுமாவரை மானியங்களை தாராளமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம்.

2. பெண்டிமைத்தனமான இந்துத்துவ பண்பாட்டை எதிர்த்து கலாச்சார ரீதியிலான பிரச்சாரங்கள், தெரு நாடகங்கள் உள்ளிட்ட வலுவான கலை படைப்புகளை உருவாக்கி மக்களிடம் கொண்டுபோதல் (என்.ஜி.ஓ க்கள் செய்வது போலல்ல)

3.முறையான, மானுடப் பற்றோடு பிரச்சனையை அனுகி சட்டங்களை கையாளுதல்.

4. கருச்சிதைவு செய்வது, ஸ்கேன்மூலம் பரிசோதனை செய்து பாலினம் அறிய உதவுவது ஆகியவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

என இவைகளை முறையாகவும், இணையாகவும் நடத்துவது அவசியம். இவைகள் உடனடியாக நடைமுறைப் படுத்தாமல் போனால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் 2 கோடி என்ன அனேக ஆண்களின் திருமணத்துக்கு பெண் கிடைக்காது என்பது மட்டுமல்ல பாலியல் அத்துமீறல்கள் புற்றீசல் போலப் பெருகிவிடும் என்பதுதான் உண்மை.

//எனக்காக
அந்தக் கள்ளிமரங்கூட
கண்ணீர் வடிக்கிறது
தாய் தரா பாலை
அது தருகிறது.//

- பாவெல் இன்பன்

Pin It