கடந்த மே மாதம், திருச்சி மண்டலத்தில் தமிழகப் பொதுப்பணித்துறையில் நீர்ஆதார மேலாண்மை பிரிவில் பணியாற்றும் அதன் தலைமைப் பொறியாளர் திரு. அசோகன் தனது செயல்பாட்டின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்குக் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும், ‘இந்த ஆண்டு பருவமழை நன்றாக பொழிய வேண்டும்’ என்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடத்தச் சொல்லி சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். அதை எதிர்த்து மதுரை வழக்கறிஞர் திரு. இளங்கோ அவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். அதில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக சுற்றறிக்கை அனுப்பிய தலைமைப் பொறியாளர் திரு. அசோகன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

madurai High Court 560

“மழை வேண்டி சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடத்தச் சொல்லி தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வழியாக அறிவுறுத்தியது தவறா? சாமி கும்பிடச் சொல்வதெல்லாம் தவறு என்றால், எங்கே போவது? இதற்கெல்லாம் வழக்குப் போடுவார்களா? என்ன கொடுமை சார்?” என்று பலரும் அப்பாவியாக கேட்கிறார்கள்.

என்ன மனநிலையில் திரு. அசோகன் சாமி கும்பிடச் சொன்னார் என்பது முக்கியமல்ல. இதற்குப் பின்னால், அறிந்தோ அறியாமலோ கட்டியமைக்கப்படும் ‘மதவாதம்’ என்பதுதான் இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். அதற்காகத் தான் சட்ட நுணுக்கங்களை அறிந்து விழிப்பாயிருக்கும் வழக்கறிஞர். இளங்கோ இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.

உலக அரங்கில் இன்றுவரை இந்திய நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்ப்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமான சமய சார்பற்ற தன்மையே. நவம்பர் மாதம் 26, 1949 ல் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ‘சமயசார்பற்ற’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஏனெனில் ‘சமயசார்பின்மை’ என்பது நம் மக்களிடம் இயல்பாக இருக்கின்ற பண்பு. இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் தூக்கி நிறுத்துவதே இந்த சமயசார்பின்மைதான். நாட்டு மக்களிடையே இயல்பாக இருக்கின்ற ஒன்றை முகப்புரையில் கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் அன்று நிலவவில்லை.

ஆனால், அதன்பிறகு மக்களிடையே சில மதவெறி அமைப்புகள் தங்கள் தனிப்பட்ட அரசியல் நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து நடத்திய மதவெறி அரசியல், இந்தியாவில் வேரூன்றியிருந்த ‘வேற்றுமையில் ஒற்றுமை’, ‘பிற சமயங்களை அங்கீகரித்தல்’, ‘ஒருவர் மற்றவர் மதத்தை மதித்துப் போற்றுதல்’ போன்ற இயல்பானச் சூழலை மாற்றியமைத்தது. மதவெறி அமைப்புக்களின் இந்த நாசகார செயல்பாடுகளினால், சிறுபான்மையினர் கடுந்துயரங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், அரசியலமைப்புச் சட்டத்தின் 3 ஆவது பிரிவான அடிப்படை உரிமைகள் பகுதியில் இடம்பெற்றுள்ள 25 முதல் 30 வரையுள்ள உறுப்புகள் சுட்டிக்காட்டும் மத, மொழி சிறுபான்மையினருக்கான அடிப்படை உரிமைகளை மீண்டும் தெளிவாக அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சுட்டிக்காட்ட வேண்டியதன் அவசியத்தை ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். அதனால்தான், பாராளுமன்றம் 1976 ல் 42 ஆவது சட்டதிருத்தத்தின் மூலம், ‘சமயசார்பற்ற’ என்ற வார்த்தையை அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெறச் செய்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ‘சமயசார்பின்மை’க்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் வகையில், மத்திய அரசின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்தப்போக்கு மத்தியில் பா.ச.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்னும் வேகமாக எல்லாத் தளங்களிலும் நடந்தேறி வருகிறது. மெல்ல மெல்ல இந்தப்போக்கு மாநில அரசுகளின் செயல்பாடுகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சமயசார்பின்மைக்கு ஆபத்து என்றால் அது உண்மையில் ஒட்டுமொத்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தே என்பதை இன்னும் மக்கள் அனைவரும் உணரவேண்டும்.

இந்திய அரசின் மூன்று முக்கிய அங்கங்களான சட்டத்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை போன்றவற்றின் அதிகாரங்கள், கடமைகள், செயல்பாடுகளை நிர்ணயம் செய்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்தான். எனவே இந்த மூன்று அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மதிப்புகொண்டு அவற்றின் வழிகாட்டுதல்களை மிகுந்த கடமையுணர்வுடன் பின்பற்றி நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை அதன் தலையாய பண்புகளை பளிச்சென அடையாளங்காட்டுகிறது. அதில் இந்தியா, “இறையாண்மையுடைய, சோசலிச, சமயசார்பற்ற, சனநாயக, குடியரசு” என்று உறுதிபடத் தெரிவிக்கிறது. அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட அடிப்படை பண்புகளில் முக்கியமானதுதான் ‘சமயசார்பின்மை’. அதன் பொருள்,

“அரசுக்கு மதம் இல்லை. எல்லா மதங்களையும் அரசு சமமாக மதித்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு தனிப்பட்ட மதத்தையும் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவொரு செயலிலும் அரசு ஈடுபடக்கூடாது. மதம் வேறு, அரசு வேறு. மேலும், அரசு பதவிகளில் இருப்பவர்கள் உயர் மட்டத்திலிருந்து கடைநிலை அரசு ஊழியர்வரை மிகவும் கவனமுடனும், கண்ணியத்துடனும் அரசியல் அமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமயசார்பற்றத் தன்மையைக் கட்டிக்காக்கவும், கடைபிடிக்கவும் வேண்டும். எனவே, தமக்கு அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கும் அதிகாரத்தையும், சிறப்பு நிலைகளையும் எந்தவொரு அரசுத் தலைவரும், அரசு ஊழியரும் தங்களது தனிப்பட்ட சமய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது என்பது மதவாதமாகும். எனவே அது சட்டப்புறம்பானதுமாகும். அதேபோல், தாம் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் அரசு அலுவல்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஒருபோதும் புகுத்தக்கூடாது. தாம் நம்பிக்கை கொண்டிருக்கும் சமய அடையாளங்களையும், உருவங்களையும், தெய்வங்கள் பதித்த படங்களையும் தமது அலுவலகத்திலோ, பணியாற்றும் இடத்திலோ வைப்பதும், மாலைகள் சூட்டி வழிபாடு செய்வதும் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதாகும். இதுதான் அரசின் சமயசார்பற்ற தன்;மையின் பொருளாகும்.

ஆனால், நாட்டில் ‘சமயசார்பற்ற’ என்ற நிலை மெல்ல மெல்ல மறைந்து எல்லாத் தளங்களிலும், ‘சமயசார்பு’ என்பது வலுவாகத் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் முதல் உயரிய அரசுப்பதவிகளை அலங்கரிக்கும் பலரும் அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான ‘சமயச்சார்பற்ற’ நிலையை முற்றிலும் புறக்கணிக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. அரசு விழாக்களிலும், அதன் செயல்பாடுகளிலும், ‘பார்ப்பனீய வேதமதம்’ பிரதான இடத்தைப் பெற்று வருகிறது. பார்ப்பனீய இந்து மதத்தின் கூறுகள் அரசு நிகழ்ச்சிகளில் எவ்வித தடையுமின்றி நிகழ்த்தப்படுகின்றன. கல்வி நிறுவனங்களிலும் இந்த நிலை புகுத்தப்படுகிறது. பூமி பூஜை செய்தல், பெருதெய்வ ஆலயங்களுக்கு அரசுத் தலைவர்கள், உயர் பதவிகளை வகிப்போர், நீதிபதிகள், அமைச்சர்கள் போன்றோர் அரசுப் பிரதிநிதிகளாகவே சென்று வழிபடுதல் போன்றவை மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றன. கடைநிலை அரசு ஊழியர்வரை தாம் பணியாற்றும் அலுவலகங்களில் தாம் வழிபடும் தெய்வங்களின் படங்களைத் தொங்கவிடும் செயல் அதிகரித்துள்ளது. மாற்று சமயத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடன் பணியாற்றுகிறார்களே! ஏராளமான பொதுமக்கள் வந்து போகின்ற இடமே! என்ற எண்ணம் துளியும் இல்லாமல் மதவாதத்தில் ஊறித்திளைக்கின்றனர். அரசுப் பேருந்துகள், அரசுத்துறை நிறுவனங்கள் என்று எங்கு திரும்பினாலும், சமயம் சார்ந்த அடையாளங்கள், செயல்பாடுகள் நாளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. வீதிகள்தோறும், பொதுச்சாலைகள்தோறும் எங்கு திரும்பினாலும், அத்துமீறி கட்டப்பட்டுள்ள சிறு மற்றும் பெரிய ஆலயங்கள் சட்டப்புறம்பாக போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக அமைந்துள்ளன. நடுரோட்டை மறித்து அந்த ஆலயங்களுக்கு விழா எடுக்கப்படுகிறது. அப்போது பெரும் இரைச்சலுடன் ஒலி பெருக்கிகள் வைத்து பல நாட்கள் விழாக்கள் நடத்தி எல்லோருக்கும் பெரும் துன்பம் இழைக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டிய அரசு, தானே ஒரு பார்வையாளராகவும், பங்கேற்பாளராகவும் மாறிவிடும் கொடுமை. ஆக மொத்தத்தில், அரசியலமைப்புச் சட்டம் தீர்க்கமாக முன்வைக்கும் ‘சமயசார்பற்ற’ என்ற நிலை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

இச்சூழலில்தான், வழக்கறிஞர். இளங்கோ அவர்கள் தொடுத்துள்ள இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மதவாதத்தை தமிழக மண்ணில் பரவவிடாமல் காப்பதற்காகத்தான், 1968 ஆம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக அரசு எல்லா அரசு அதிகாரிகளுக்கும் இது குறித்து கவனமுடன் இருக்க வேண்டி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அரசு அலுவலகங்களிலும், அரசு ஊழியர்கள் தாம் பணியாற்றும் இடங்களிலும் தெய்வங்களின் படங்களைத் தொங்கவிடுவது, சமய அடையாளங்களை முன்வைப்பது, கோவில்களைக் கட்டுவது போன்றவற்றை தடுக்கவும், ஏற்கனவே அப்படி இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அரசுத்துறைத் தலைவர்களுக்கும் ஒரு உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் வழியாக அரசு அலுவலக வளாகத்திற்குள் ஆலயங்கள் கட்டுவதை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்குப்பிறகும் தமிழகமெங்கும் இருக்கின்ற அரசு அலுவலக வளாகங்களில் ஆலயங்கள் கட்டப்படுவது நிறுத்தப்படவில்லை.

அதன்பிறகு 2010 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி. இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு வழக்கில், தமிழக அரசுக்கு 1993 ஆம் ஆண்டைய மேற்சொன்ன அரசாணையை அப்படியே முழுமையாகக் கடைபிடிக்கச் சொல்லி உத்தரவிட்டது. அந்த சமயத்தில், அரசு அலுவலக வளாகத்திற்குள் கட்டப்பட்ட ஆலயங்களை அகற்ற முயற்சி எடுக்கப்பட்டது. சில நாட்களிலேயே அந்த முயற்சியும் கைவிடப்பட்டு இன்றுவரை அந்த உத்தரவும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

நாட்டில் வாழும் மக்கள் யாவரும் அமைதியாக வாழ வேண்டுமென்றால், பெருகிவரும் மதவாத ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பது மிக முக்கியப் பணியாகும். அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றான ‘சமயசார்பற்ற’ நிலையை பரவலாக்குவதும், வளர்த்தெடுப்பதும் அவசியம். இந்நாட்டில் பெருகிவரும் ‘மதவாத அரசியலைப் புரிந்து கொள்வதும், அதை எதிர்ப்பதும்தான் இன்றைய மக்களின் அரசியலாக இருக்க வேண்டும்” என்று குசராத்தில் மதவாத அரசியலை எதிர்த்து போராடிவரும் மனித உரிமைப் போராளி ‘தீஸ்டா செடால்வட்’ கூறுகிறார். அவரைப் போலவும், வழக்கறிஞர் இளங்கோவைப் போலவும் மக்கள் விழிப்படைவதும், மதவாத நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாயிருப்பதும் முக்கியம்.

- அ.சகாய பிலோமின் ராஜ்

Pin It