2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அலிபூர் மத்திய சிறை பதற்றத்துடன் காணப்பட்டது. சிறையின் வெளியே 100 அடிக்கு வாகனங்கள் நிறுத்தவோ, பயணிக்கவோ தடை செய்யப்பட்டிருந்தது. 83 வயதான நட்டா மல்லிக் என்ற காவலாளி அவர் மகனுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகிறார். முன்னிரவு தனக்குப் பிடித்த உணவினை உண்டுவிட்டு, எப்பொழுதும் தன்னுடனே இருக்கும் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் தனஞ்சய் சட்டர்ஜி., அன்று அவனின் 42 வது பிறந்து நாள்., காளி பக்தனான சட்டர்ஜி குளித்து முடித்து காளி பூஜை செய்து விட்டதன் பின் தூக்கு மேடைக்கு கொண்டு வரப்பட்டான்.

தூக்கிலிட நட்டா மல்லிக் கலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்த சட்டர்ஜி "உங்களை நான் மன்னித்து விட்டேன், உங்களை அந்த கடவுள் காப்பாற்றட்டும், என் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், நான் இங்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் தான் பூர்ணிமாவை மணந்தேன், அவள் வாழ்க்கை சோகம் நிறைந்து விட்டது, அவளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்." என்று கூறியவாறு தூக்கு மேடையில் ஏறி நின்றான். அவன் முகத்தில் கருப்புத் துண்டை கட்டியவுடன், மல்லிக் அவன் காதில் 'நான் எனக்கான கடமையை செய்கிறேன். நீ என்னை மன்னித்து விடு' என்று கூறி தூக்குக் கயிறை இழுத்தார். கைகளும் கால்களும் கட்டிய நிலையில் சட்டர்ஜியின் உடல் அரை மணி நேரம் தொங்க வைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டதை 7.30 மணிக்கு சிறை அதிகாரிகள் சட்டர்ஜி இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள்.

அவனின் சொந்த ஊரான பன்கூரில் மயான அமைதி நிலவுகிறது. அவனின் வயதான தாயும் தந்தையும் நிலை குலைந்து போகிறார்கள். அவனின் மனைவிக்கு கைம்பெண்ணிற்கான சடங்குகள் நடக்கிறது. இரு பிரிவுகளாய் பிரிந்த வங்காளத்தில் ஒரு புறம் சட்டர்ஜியின் மரணம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம் மரண தண்டனை தேவையா என்ற வாதங்களும் போராட்டங்களும் நடக்கிறது. சட்டர்ஜியின் உடல் மறுநாள் காலையில் ஹிந்து சடங்குகள் படி எரியூட்டப்படுகிறது.

1990 மார்ச் 15 ஆம் தேதி பள்ளி முடித்து அடுக்கு மாடி குடியிருப்பிலுள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் பதினான்கு வயதான சிறுமி ஹிதல் ப்ரேக். அவள் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அக்குடியிருப்பின் செக்யூரிட்டி தனஞ்சய் சட்டர்ஜி அவளை அடித்து காயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, பின் அவள் கழுத்தைச் சுற்றி கயிறைக் கட்டி இறுக்கி கொன்றான், இதை அடுத்து அலிபூர் குற்றவியல் நீதி மன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்காக ஆயுள் தண்டனையும், கொலைக்காக தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, கல்கத்தா உயர் நீதி மன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கல்கத்தா ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 161 கீழ் ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு, தண்டனைகளை குறைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டர்ஜியின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1994 ஆண்டு குடியரசுத் தலைவரிடம் அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 72 கீழ் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கிடையே கல்கத்தா நீதி மன்றத்தில் மரண தண்டனைக்கு இடைகாலத் தடை வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.

எல்லா குற்றவியல் மேல முறையீடுகளும் தள்ளுபடியான நிலையில் ஒன்பது ஆண்டுகள் அலிபூர் மத்திய சிறைக் காவலில் வைக்கப்பட்டான் தனஞ்சய். 2003 ஆம் ஆண்டு இடைக்கால தடை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2004 ஜூன் மாதம் 25 ஆம் தேதி சட்டர்ஜியை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான ஆயுத்தப் பணிகளையும் கல்கத்தா அரசு மேற்கொண்டிருந்த நிலையில், சட்டர்ஜியின் தம்பி, மனைவி, பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்புகள் குடியரசுத் தலைவரிடம் இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சட்டர்ஜியுன் மனைவியும், பெற்றோரும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கல்கத்தா பத்திரிக்கையாளர் சங்கம் முன் தர்ணாவில் ஈடுப்பட்டனர். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. அப்துல் கலாம் அவர்கள் கல்கத்தா அரசின் நிலையைக் கேட்டறிந்தார். அன்று கல்கத்தா மாநில முதலமைச்சராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). திரு. புத்ததேவ் பட்டச்சார்யா குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதில் உறுதியாக இருந்தார். ஆனால் பல்வேறு சமூக நல அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். 2004 ஆண்டு ஆகஸ்ட் 14 தனஞ்சய் சட்டர்ஜியை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சுமார் எட்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த இந்தியா, எல்லா தளத்திலும் வளர்ச்சி அடையுமென்று நம்பிக்கை ஒரு புறமிருக்க, இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திடாமலும் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க எந்த ஒரு முயற்சி எடுக்காமலும் இருப்பது இந்தியாவின் வளர்ச்சியை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்வது என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது. மரண தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்றும், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டைனகளே தீர்வென்றும் பலர் கூறுவதை கவனித்தால் பாலியல் குற்றத்திற்கு குற்றவாளி மட்டுமே பொறுப்பு என்ற நிலைப்பாட்டை அறிய முடிகிறது.

பாலியல் குற்றங்கள் இரு வகையானது. ஒன்று கலாச்சார ரீதியாக பெண்கள் மேல் திணிக்கப்படும் அடக்குமுறையின் தாக்கத்தாலும், ஆண் ஆதிக்க சமூகத்தின் தாக்கத்தாலும் விளையும் குற்றங்கள்; மற்றொன்று கட்டுப்படுத்த முடியாத காம உணர்ச்சியினால் ஏற்படும் குற்றங்கள். பெரும்பாலும் பாலியல் குற்றங்கள் முதல் வகை சார்ந்ததாகவே இருப்பது இச்சமுகத்தின் ஆண் ஆதிக்கத்தனத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது .

1990 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையும் கொலையும் செய்த தனஞ்சய் சட்டர்ஜி என்ற குற்றவாளிக்கு 2004 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. அப்படியென்றால் 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நடக்கவே இல்லையா? அல்லது பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளனவா என்றால் இல்லை என்பது தான் பதில். மரண தண்டைனையால் குற்ற எண்ணிக்கையைக் குறைத்து விட முடியாது என்று பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான மகஷ்வேதா தேவி கூறியதைப் போல, மரண தண்டனைகள் வழியாக குற்றங்களைக் குறைத்து விட முடியுமென்றால் அது நடவாது என்பதற்கு 2004-லிருந்து நடந்த பாலியல் வன்கொடுமை குற்றங்களே சான்று. இச்சம்பவம் நடைபெற்ற மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று வரை அதிக அளவில் பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் மரண தண்டனை என்பது வெறும் பூச்சாண்டி காட்டும் வேலை தான்.

பெண்கள் எல்லா இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் நான்கில் மூன்று பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது என்றாலும் உண்மை இதுவே.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,210,193,422. இதில் ஆண்கள் 623,724,248; பெண்கள் 586,469,174. அதாவது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள். இதில் 2011-ல் பெண்களுக்கெதிராக நடந்த பதியப்பட்ட குற்ற எண்ணிக்கைகள் 2,28,650. கலாசார, பொருளாதார ரீதியிலான அடக்குமுறையினாலும், மத, சாதிய அடக்குமுறையினாலும் பதியப்படாத பாலியல் குற்ற வழக்குகள் எண்ணில் அடங்கா. பதியப்பட்ட வழக்குகளிலும் பதவி, பணம், அந்தஸ்த்து, சாதி, மதம் போன்ற காரணங்களினால் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வைக்கப்படுகின்றனர்.

பாலியல் குற்றத்தில் ஈடுபடும் எல்லா குற்றவாளியும் தனக்குத் தகுந்த தண்டனை வழங்குவார்கள் என்று தெரிந்து குற்றத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு விதமான ஆவேச மனநிலையில் குற்றங்களைப் புரிகின்றனர். அச்செயல் குற்றமென தெரிந்தும் அதிலிருந்து "எப்படியாவது" தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் குற்றத்தைச் செய்கின்றார்கள். சட்டத்தைப் பற்றியான கவலையோ, தண்டனைப் பற்றியான கவலையோ அவர்களுக்கிருப்பதில்லை. அப்படியென்றால் குற்றம் என்று தெரிந்த செயலுக்கு தண்டனை வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு வர என்ன காரணம்? சீரான சட்ட வழிமுறைகள் இருந்தும் சட்டம் ஒழுங்கு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தண்டனைகள் வழங்க இந்திய தண்டனைச் சட்டம் தொடங்கி பல்வேறு சிறப்புச் சட்டங்கள் இருக்கின்றன. இச்சட்டங்கள் எல்லாம் தண்டனை மட்டும் வழங்க இருக்கிறதேயொழிய குற்றங்களைக் குறைக்க இச்சட்டங்களில் எந்த விதமான வசதிகளும் இல்லை. தண்டனைச் சட்டங்கள் ஒரு செயலை குற்றமென்று கூறி, அக்குற்றத்திற்கான தண்டனை மட்டுமே வழங்குகிறதே தவிர, அக்குற்றங்களைக் குறைக்க எந்த ஒரு திட்டத்தையும், செயலாக்கத்தையும் வழங்குவதில்லை. சிறப்புச் சட்டங்களின் மூலம் நியமிக்கப்படும் ஆணையங்கள் வெறும் பெயர் அளவிலேயே உள்ளனவே தவிர செயல் வடிவிலில்லை.

பெண்களின் உடை, பெண்களின் நடத்தை என்று சில ஆண்கள் தங்கள் வக்கிர புத்தியை மறைத்துக்கொள்ள பிதற்றாமல், உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான தீர்வினைத் தருவதே பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வழியாகுமே தவிர, மரண தண்டனையோ ரசாயனம் மூலம் ஆண்மை நீக்குதலோ இதற்கான தீர்வாய் நிச்சயமாக அமையாது.

பெண்களின் பாதுகாப்பே! தேசத்தின் பாதுகாப்பு!

- ஹரிணி நாகராஜ், சமுக மாற்றத்திற்கான பெண்கள் இயக்கம்

Pin It