தமிழ் மகளிர் தாலி அணிந்தமை பற்றிய வாத விவாதங்களும், பட்டி மன்ற சர்ச்சைகளும் சூடு பிடித்துள்ள இவ்வேளையிலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தாலி அணிதல் பற்றிய வரலாற்று உண்மைகள் நம் முன் கொட்டிக்கிடக்கின்றன அவற்றை சீர் தூக்கிப் பார்த்து உண்மையை ஊருக்குச் சொல்வது நமது சந்ததிகள் முறையான கலாச்சார பாதையில் பயணிக்க ஏதுவாகும்.

தமிழர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இன்று, நேற்று வந்ததல்ல. பன்னெடுங்காலத்திற்கு முன்னமே நம் முன்னோர்களின் பட்டறிவினால் உருவானதாகும். மனிதன் தோன்றி நாகரீக வளர்ச்சியடைந்த படிநிலை வளர்ச்சியின் போது நாடு காவலுக்காக எழுந்த போர்ச்சமூகத்தில் குழந்தைப்பேறு ஊக்குவிக்கப்பட்டது. இடைக்காலகட்டத்தில் பேரரசுகள் உதயமானதால் ஏற்பட்ட படைகளின் பெருக்கம் இதற்கு தூபம் போட்டது. இக்காலத் தில்தான் பிள்ளைப்பேறுக்கும் பெண்களின் மார்பகங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக தமிழர்கள் கருதினர். பழந்தமிழகத்தில் பிள்ளைப்பேற்றினை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களே, தாம் திருமணம் செய்ய விருக்கின்ற பெண்ணுக்கு வரதட்சணையை கொடுத்தனர். இதனை “முலைவிலை” என்று அழைத்தனர். இதுவே பின்னர் வடமொழியில் ஸ்ரீதனம் என்றாகி சீதனம் என்று திரிந்தது. ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் முலைவிலை பற்றிய விரிவான குறிப்பை தருகிறார். இந்த அடிப்படையில்தான் வளமையின் குறியீடாக மார்பில் தாலி அணியப்படுவது சிறப்பானதாக கருதப்பட்டு அணியப்பெற்றது. மேலும் தத்துவார்த்த ரீதியிலான கற்பிதங்கள் தாலி அணிவது தொடர்பாக இதன் பின்னரே எழுந்தது. அங்கீகரிக்கப்பட்ட உறவின் அடையாளச் சின்னமாகவே தாலி இவ்வேளையில் கருதப்பட்டது.

சங்க காலத்திற்குமுன்னரே தாலிப் பனையின் ஓலையினை சுருளாக நூலில் கட்டி ஆண்மகன் மணப்பெண்ணிற்கு அணியும் வழக்கம் இருந்தது. ஆதலால்தான் தாலி ஓலையை தந்த மரத்திற்கு தாலிப்பனை என்ற பெயரே இன்றளவும் வழங்கப்படுகிறது. மங்கலநாண் அணிகின்ற வழக்கத்தை பொறுத்தமட்டில் சங்க காலத்தில், கடலோடிகளான மீனவர் தம் மனைவிமார்கள் சுறாவின் எலும்பிலான தாலியினை அணிந்திருந்தனர். கடல் வணிகம் செய்து பொருளீட்டிய வணிகர்களான நானாதேசிகள் (நான்கு திசைகளுக்கும் சென்று வியாபாரம் செய்தவர்கள்) குல பெண்கள் பொன்தாலி சூட்டியிருந்தனர். தாலி என்பது காலந்தோறும் பல்வேறு பொருள்களில் வழங்கி வந்தமையத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஐம்படைத்தாலி, புலிப்பல்தாலி, நவரத்தினதாலி, மணித்தாலி, எயிற்றுத் தாலி, போன்றவையை பருவ அடிப்படையில் அணியப்பட்டு வந்தமையை பரவலாக தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.

கண்ணகி திருமணத்தின் போது நிகழ்ந்த சடங்கினை இளங்கோவடிகள் குறிப்பிடுகையில் “அகலுள் மங்கல அணி எழுந்தது” என்னும் சொற்றொடரில் குறிக்கிறார். மங்கல அணி என்பதைக்கொண்டு தாலி கட்டியதாக கூறிவிட முடியாது என்கின்றனர் திராவிட வரலாற்றாளர்கள். ஆனால் கோவலன் தன்னை விட்டு பிரிந்து மாதவியிடம் வாழ்ந்தபோது ‘மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்று கூறி கண்ணகி தாலி அணிந்ததை இளங்கோவடிகளே உறுதி செய்கிறார். சங்க நூலான புறநானூற்றில் “ஈகையரிய இழையணி மகளிர்’ என்னும் வரிகள் மற்ற அணிகளைத் தானமாக தரலாம், அலங்காரம் தேவையற்ற காலங்களில் அவற்றை நீக்கி விடலாம். ஆனால் தாலி மட்டும் கழுத்தை விட்டு நீங்காது என்ற கருத்தினையே உணர்த்துவதாக கூறலாம். சிலப்பதிகாரத்திலேயே வருகின்ற மற்றொரு பாடல் தாலி அணியும் வழக்கம் காணப்பட்டதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்கிறது. கண்ணகி, கோவலனது திருமணத்திற்காக பொன் உருக்கிய செய்தியினை சிலப்பதிகாரம்,

‘தரவுருக்கப் பொன்னிடவே தக்க கணிதரையழைத்து
வரைவிலிப்போ முகூர்த்தமிட மிக்க பசும்பொன் –வாங்கிக்
கரமதனாற் தான்நிறுத்துக் கடுகவர் கையோழுத்தார்
கொடுத்த பசும்பொன் வாங்கிக் குடைபிடித்தே
எடுத்தாங்கே பாளமாக இயல்பாகவே நீட்டி
அடுத்தங்கே தக்குகொட்டி ஆவதான பணிகள் செய்து’
எனக் கூறக் காணலாம்.

அதேபோல சங்க இலக்கியமான புறநானூற்றில் இடைக்குன்றூர் கிழார் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனை போர்க்களத்தில் எதிரிகளை போர்க்களத்தில் கொல்லாது, அவர்தம் மனைவிமார்கள் நாணம் கொண்டு இறந்து போகுமாறு அவரவர் ஊர்வரையிலும் துரத்திச் சென்று கொன்றான். இந்நிகழ்வினை கூறும் ‘மாண் இழை மகளிர் நாண’ என்னும் பாடலிலும் தாலி பற்றிய குறிப்பு வருகிறது. சங்கப்புலவர் நக்கீரர் பாடிய நெடுல்வாடையில் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனை போரின்பொருட்டு பிரிந்த அவனது மனைவி கோப்பெரும்தேவி, நெடுஞ்செழியனை பிரிந்த காரணத்தால் அணிகலன்கள் எதுவும் அணியாமல், அலங்காரம் செய்யாமல், மகரக்குழை அணிந்த காது வெறுமையாக இருக்க, குழையணிந்த வடுவுடன் வண்ணம் தீட்டப்படாத ஓவியமாக காட்சியளித்த நிலையிலும் தன் நெஞ்சில் குத்துகின்ற தாலியை அணிந்திருந்தாள் என்று வர்ணிக்கிறது (அடிகள் 136-147).
இம்மட்டுமன்றி பல்லவர் காலம் தொட்டு தமிழர்கள் பின்பற்றிவந்த தேவதாசி முறையில் தாலி அணியும் வினோத வழக்கமும் காணப்பட்டது.

பருவமடையாத .பதினோரு வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமே தேவதாசி முறையாகும். கோயில் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவர்களை தேவரடியவர், கணிகையர், கோயில் பெண்டுகள், தளிச்சேரிப்பெண்டுகள், பதியிலார், கோயில் அணங்குகள் என்றெல்லாம் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இம்முறையின்படி கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் பெண்கள் சீரிய சடங்குகளுடன் உறவினர் புடைசூழ கோயிலுக்கு அர்பணிக்கப்படுவர். இச்சடங்குகளுக்கு ஆகும் செலவினை மற்றும் மன்னனோ அல்லது ஊர் சபையோ ஏற்றிருந்தனர். இந்நிகழ்வின் போது கோயிலின் சார்பாக பெண்ணை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு கோயிலின் அர்ச்சகர் (தலைமை பூசாரி) பொட்டுத்தாலி என்ற தாலியை சிறுமிக்கு அணிவிப்பார். சைவ ஆலயங்களுக்கு உரிய தேவதாசிகள் பொட்டுத்தாலியில் சூலத்தையும் வைணவ ஆலயங்களைச் சேர்ந்தவர்களாயின் சங்கு, சக்கரதையும் அடையாளமாக கொண்டிருந்தனர். இம்முறை பக்தி இயக்க காலத்தில் அதாவது பல்லவர்கள் காலத்தில் (கி.பி ஆறாம் நூற்றாண்டு) தோற்றம் பெற்று பின்னர் சோழர்களால் ஏற்றமும் பெற்றது.

தாலி அணிகின்ற வழக்கம் தொடக்கத்தில் குடும்ப மகளிருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கணிகையர்களை புனிதப்படுத்தும் நோக்கில் குடும்ப மகளிரைப் போன்று தாலி அணிய அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய மாற்றம் நிகழ்ந்த வேளையில்தான் சைவ ஆலயங்களைச் சேர்ந்த தாலி அணிந்த தேவதாசிகளை சிவமங்கலி என்னும் பெயரில் அழைத்தனர் இதுவே நாளடைவில் குடும்ப பெண்களையும் குறிக்கும் வகையில் சுமங்கலி என்றானது. தீர்க்க சுமங்கலி என்ற சொல்லாடலிலும் மறைபொருளாக தேவதாசிகளையே தமிழ்ச்சமூகம் அழைத்தது.

ஆண்டாள் திருமணத்தின்போது தாலி அணிகின்ற வழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே என்ற ஐயம் எழலாம். தாலி அணிகின்ற வழக்கம் அனைத்து சமூகத்தினாராலும் கட்டாய அணிகலனாக எப்போதுமே அடையாளப்படுத்தப்படவில்லை. அவரவர் வழக்கத்திற்கேற்ப தாலி அணிவதில் விதி விலக்குகளும் இருந்தன. சோழர் கல்வெட்டுகளில் பெண்கள் தங்களது பொன்தாலியை திருக்கோயில் ஸ்ரீபண்டாரத்தில் அடமானம் வைத்து பணம் பெற்று சோழப்பேரரசுக்கு நிலவரி செலுத்தியதாக செய்திகள் உள்ளன.

தாலி பொன்னில் செய்யப்பெற்ற காலத்திற்கு பின்னரே தமிழர்கள் தத்தம் சமூகத்திற்குரிய குலக்குறி அடையாளங்களையும் மங்கல நாணில் பொறித்துக் கொண்டனர். மரம், விலங்குகள், பிறைச்சந்திரன், குன்றினைக்குறிக்கும் முக்கோண வடிவம் போன்றவையெல்லாம் இன மரபின் அடையாளமாக பொறிக்கப்பட்டன.

தாலி அணியும் வழக்கம் பற்றி நாம் தொல்லியல் சுவடுகளை தேடுகின்ற அதே நேரத்தில் தற்போதைய வடிவத்திலான தாலி கிடைக்கவில்லை என்றாலும் அதற்காக தமிழர்கள் தாலி அணியும் வழக்கத்தை பின்பற்றவே இல்லை என்று கருதுதல் அறியாமையே. பண்டைத்தமிழர் திருமணச் சடங்கில் பாசிமணிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு மணப்பெண்ணிற்கும் அணிவிக்கப்பட்டது. தமிழக அகழாய்வுகளில் எண்ணற்ற அளவில் பாசிமணிகள் கிடைத்துள்ளதைக்கொண்டு இவ்வுண்மையை உணரலாம். திராவிட இனக்கிளை வழியினராக கருதப்படுகின்ற முண்டா இன மக்களிடம் இன்றும் தாலி மணிக்கற்களைக் கொண்டும் பாசியினைக் கொண்டும் திருமணச்சடங்கில் பயன்படுத்தப்படுவதைக் கொண்டு இதனை உறுதி செய்து கொள்ளலாம். தமிழ்ச்சமூகம் சிலவற்றில் பவளம், பாசிகள் போன்றவற்றை ஒவ்வொரு திருமண ஆண்டு எண்ணிக்கை கூடும்போதும் அதற்கு தக்கவாறு பாசிமணிகளை அதிகரித்து அணிகின்ற வழக்கம் தற்காலத்திலும் தாலி பெருக்குதல் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது.

உண்மை இவ்வாறிருக்க சங்க காலம் அதனை தொட்டு வந்த பிற்காலத்திலும் ஏறாத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பின்பற்றி தமிழ்க் கலாச்சாரத்தில் இரண்டற கலந்து விட்ட மங்கலநாண் ஏதோ சமீபத்தில் ஏற்பட்ட வழக்கமாக கூறுவது வரலாற்றை புறந்தள்ளுவது போன்றதாகும்.

- இல.கணபதி முருகன், இயக்குநர். திராவிட வரலாற்று ஆய்வுக்கழகம், துணைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Pin It