புது தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற பத்தொன்பதாம் உலகப் புத்தகக் காட்சியில் (ஜனவரி 30- பிப்ரவரி 7) அங்கிங்கெனாதபடி எங்கும் புத்தகங்களாக மூச்சு முட்ட வழிந்து கொண்டிருந்தன. இந்தியாவின் எல்லா மொழிகளின் புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன.

 

இந்த பரந்து விரிந்த மைதானத்தில் நம்மூரில் நடக்கும் புத்தகக் காட்சிகள் போல் இல்லாமல் ஒவ்வொரு பிரிவாக அமைக்கப்பட்டிருந்தன. இப்படி பிரிக்கப்பட்ட பிரிவில் ஆங்கிலப் பதிப்பகங்கள், ஆங்கில புத்தக விநியோகஸ்தர்கள், சமூக விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப பதிப்பாளர்கள், வெளிநாட்டு பதிப்பாளர்கள், கல்வி நூல் வெளியிடும் பதிப்பகங்கள், ஹிந்தி மொழி பதிப்பாளர்கள், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பதிப்பாளர்கள், குழந்தைகள் நூல்கள் வெளியிடும் பதிப்பாளர்கள் ஆகியோர்களும் மற்றும் அசாமி, வங்களா, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், உருது, குஜராத்தி, ஆகிய மொழி சார்ந்த பதிப்பாளர்களுக்கும் இடம்பெற்றிருந்தனர். வெளிநாட்டுப் பதிப்பாளர் பிரிவில் அமெரிக்கா, பிரெஞ்சு, ப்ராங்போர்ட் புத்தகக்காட்சி, ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, உலக வங்கி, யுனஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் ஆகியோர்களும் இடம் பெற்றிருந்தனர்.

 

மேலும் இந்தப் புத்தகக் காட்சியில் நேரு எழுதிய புத்தகங்கள் கண் காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. தினசரி பல இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவைகளில் குறிப்பிட்டு சொல்லும்படியாக புத்தக வெளியீடு. ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டு பல்துறைசார்பில், விமர்சனம் செய்தல், புத்தக ஊர்வலங்கள், புத்தகங்களைப் பற்றிய பட்டறைகள், கதை சொல்லல் ஆகியவை நடந்தன.

 

தமிழ் மொழி பதிப்பாளர்கள் வரிசையில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், நியூ செஞ்சுரி புத்தகநிறுவனம், இடம் பெற்றிருந்தன.

தமிழ் பதிப்பாளர்களின் கடைகளுக்கு, தில்லி தமிழ் சங்க உறுப்பினர்களும், ஜவஹர்கலால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும் அதிகமாக வருகை தந்ததை பார்க்க முடிந்தது.

 

இந்தப் புத்தகக் காட்சியின் முதல் நாளில் நல்ல கூட்டம் இருந்தாலும் விற்பனை இல்லை என்பது பதிப்பாளர்களின் கருத்தாக இருந்தது. இதைப் பற்றி மத்தியப் பிரதேச ராஜகோபால் சன்ஸ் என்ற புத்தக விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி மீரா ஜோகரி கூறுகையில், இங்கு மக்களின் வருகை திருப்தியாக இருக்கிறது. இளம் வாசகர்களின் ரசனை மாறி இருக்கிறது. மேலும் அவர்கள் படிப்பதற்கு எந்தப் பிரயத்தனமும் படக்கூடாது என்று நினைக்கின்றனர் என்றார்.

 

மேலும் புனைகதை எழுத்தாளர்களுக்கு இந்தப் புத்தகக்காட்சி சரியான இடமாக இருந்தது என்று கூறலாம். நிறைய எழுத்தாளர்கள். தங்கள் எழுதிய புனைகதையை சமர்ப்பித்தார்கள். இதில் பேரா. நம்வார்சிங் எழுதிய புனைகதை தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுத் தொகையாக

ரூ. 51.000 வழங்கப்பட்டது. இந்தக் கையெழுத்து பிரதியை பரத்வாஜ் ஜன்த் என்ற நிறுவனம் பிரசுரிக்க உள்ளது.

 

பொதுவாக தாய் மொழியில் மொழி பெயர்ப்பு வரும் போது, நாம் எதிர்பாராத வாசர்ககள் புத்தகத்தை வாங்குவார்கள் என்பதை இந்த புத்தகக் காட்சியில் உள்ள அஸாமி மொழி நூல்கள் விற்பனையகத்தில் காண முடிந்தது.

 

சமூக நீதிக்கான அமைச்சரவையும், டாக்டர் அம்பேத்கர் பவுன்டேசன் அமைந்திருந்த விற்பனையகத்தில் அம்பேத்கரின் ஆங்கில நூல்களும், மற்ற இந்திய மொழியில் வெளியான நூல்களும் இடம் பெற்றிருந்தன.

 

இந்த உலகப் புத்தகக் காட்சியில் தமிழ் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் பேரா. பிபன் சந்திரா, பேரா. மிருதுளா முகர்ஜி, பேரா. ஆதித்தியா முகர்ஜி ஆகியோர் எழுதிய Modern India, India’s Struggle For independence and India Since Independence  என்ற நூலின் தமிழாக்கத்தை (என்.சி.பி.எச் வெளியீடு) முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் வெளியிட்டார்.

 

ஹிந்தி மொழி பதிப்பாளர்களை பொறுத்தவரையில் எந்த விதமான கவலையும் இல்லாமல் மொழிமாற்றம் செய்து புத்தகங்களை கொண்டு வருவதை பார்க்க முடிந்தது. உதாரணமாக சேத்தன் பகத்தின் one Night @ call center, Sangeet ka Jadvgar A.R.Rahman by Kanini Mathi, Mahayatra Gathas by Rangey Raga, Change we can believe in and the audacity of Hope by Barrack obama (Autobiography vol - 111) மற்றும் அமர்த்திய சென், பல்கிவாலா, சி. ரெங்கராஜன் ஆகியோர் நூல்களையும் சொல்லலாம்.

 

வங்காள மொழி பதிப்பகங்களில் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களும், வங்க மொழியிலே எழுதப்பட்ட நூல்களும் காணப்பட்டன. இங்கு குழந்தை நூல்களும் சத்தியஜித்ரே பேரன் ராய் சௌத்ரி நடத்தி வரும் குழந்தைகளுக்கான சந்தீஷ் இதழ் நல்ல வரவேற்பு இருந்ததை பார்க்க முடிந்தது.

டில்லியில் நடந்த உலகப் புத்தக்காட்சியை சுற்றி விட்டு வரும் போது நம்மூர் புத்தகக் காட்சிகள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் உண்மை.

- புத்தகம் பேசுது ஆசிரியர் குழு