சில நியாயமான நிபந்தனைகளுடன் கூடிய பேச்சு-கருத்து சுதந்திரத்தை நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19 (1)அ நமக்கு வழங்குகிறது. இது அடிப்படைஉரிமையாகும். 

1927-ம் ஆண்டு: இந்திய தணிக்கைச் சட்டம் பிரித்தானிய ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. மகமது நபி அவர்கள் தகாத பெண் உறவுகள் கொண்டிருந்தார் என்பதைச் சொல்லும் ஒரு புத்தகம் வெளியானது. இது இஸ்லாமியர்களிடையே பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இப் புத்தகத்தை வெளியிட்டவர் இசுலாமியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளரை இசுலாமியர் மாவீரனாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, சாதி, மத உணர்வுகளைப் புண்படுத்துவோரை மூன்று ஆண்டுகள் வரை தண்டிக்கும், பிணை விடாத் தன்மையுடையதான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295A கொண்டு வரப்பட்டது. இது தான் இந்திய தணிக்கை சட்டத்தின் அடிப்படை!

1930-ம் ஆண்டு:இந்தியப் பெண்கள் கடும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை தரவுகளுடன் நிறுவியது “இந்தியத் தாயின் முகம்”(The face of mother India) எனும் புத்தகம். இதன் ஆசிரியர் காதரீன் மேயோ. இவரை “கழிவு நீரோடை ஆய்வாளர்”என்று மகாத்மா காந்தி கடுமையாகச் சாடினார்.

1950-ம் ஆண்டு: “இராமன் மறு வாசிப்பு”(The Rama Retold) எனும் புத்தகம், ”இராமன் ஓர் ஆணாதிக்க சிந்தனையாளன்; இராவணன் கல்வி கேள்விகளில் சிறந்தவன்; இசை மேதை; இவன் பேரழகில் மயங்கியே, சீதை இவன் பின் சென்றாள்” எனக் கூறியது. இப் புத்தகத்தின் ஆசிரியர் ஆப்ரே மெனன்(Aubray menon). மதச் சார்பற்ற-சமதர்ம கொள்கையுடையவர் எனக் கருத்தப்பட்ட அந்நாள் தலைமையமைச்சர் சவகர்லால் நேருவே இப்புத்தகத்தை தடை செய்தார். பின்னாட்களில் அரசியல் ஆதாயம் கருதியே இப் புத்தகத்தை தடை செய்ததாக நேரு அவர்களே ஆப்ரே மெனனிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார். தசரா திருவிழாவின் போது தில்லியில் இராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை ஈண்டு நினைவு கூறவும்!

1970-ம் ஆண்டு:இந்திய துணைக் கண்டத்தில் வறுமையும், கையூட்டும் தலை விரித்தாடுவதை சொல்லும் ஒரு திரைப் படத்தொடர். இதனை இயக்கியவர் லூயிஸ் மாலே(Louis Malle). இதை பி. பி. சி. வானொலி ஒலிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பி. பி. சி. வானொலி இங்கிலாந்தில் ஒலிபரப்பியது. இதனால், சினமுற்ற அந்நாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் பி. பி. சி –யை இந்தியாவினின்று வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153A கொண்டுவரப்பட்டது. இதன் படி சாதி, மதங்களுக்கிடையே பகைமையை வளர்ப்போரை 3 ஆண்டுகள் வரை தண்டிக்க முடியும்.

1975-ம் ஆண்டு: இந்திரா காந்தி அம்மையாரின் நெருக்கடி நிலை அறிவிப்பைத் தொடர்ந்து, செய்தி ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு ஆளாயின. தமிழ் நாட்டில் “உடன் பிறப்பு மடலை”தலைப்புச் செய்தியாக வெளியிடும் முரசொலி நாளிதழ் “வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது” என்பதை அந்நாளில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. பாரதி பாடுகின்ற “இம் என்றால் சிறை வாசம், ஏன் என்றால் வனவாசம்” எனும் கொடிய ஆட்சி கோலோச்சியது.

1988-ம் ஆண்டு:சல்மான் ருஷ்டி:இவரின் “சாத்தனின் வரிகள்”(Satanic verses)மகமது நபியை இழிவு படுத்துகிறது; எனவே, இதனை தடை செய்ய வேண்டுமென்று உலகெங்குமுள்ள பெரும்பான்மை இசுலாமியர் கூக்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பலநாடுகளில் இது தடை செய்யப்பட்டது.

எஃப். எம். ஹுசைன்: இந்திய பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தார் எனச் சொல்லி இந்த முது பெரும் ஓவியர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன; தாங்கொண தொடர் துன்புறுத்தல் காரணமாக இப் புகழ் பெற்ற ஓவியர் இந்தியாவினின்று வெளியேறினார். ”இந்திய நாட்டின் நவீன ஓவிய கண்காட்சி மையத்தின் தலைவரான பெரோஸ் கோத்ரஜ், அபுதாபியில் இருந்த ஹுசைனை இந்தியாவுக்கு திரும்புங்கள் என அழைப்பு விடுத்தார்!அதற்கு ஹுசைன் “என் கைகள் நொறுக்கப்பட்டால், நான் ஒன்றும் அற்றவனாவேன்” என்று வருத்தத்தோடு பதிலிறுத்தார்.

வென்டி டொனிகர்: இவரின் “இந்துக்கள்- ஓர் மாற்று வரலாறு”(Hindus- an alternative history) எனும் புத்தகம், இந்து மதத்தைப் பற்றி உண்மையற்ற தகவல்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்லி இந்துத்வ கல்வி அமைப்பான “ஷிக்ஷா பாச்சோவ் அண்டோலன் சமிதி” இவர் மீது 2010-ல் வழக்குத் தொடுத்தது. இந்த அமைப்பும், இப்புத்தக வெளியீட்டு நிறுவனமான பெங்குவினும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தன. ”இனி மேல் இப்புத்தகத்தை வெளியிடுவதில்லை மற்றும் விற்காமல் எஞ்சியிருக்கும் படிகளை கூழாக்குவோம்” என்று நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இவ் வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. ”உங்கள் நாட்டுச் சட்டம் மூன்று ஆண்டுகள் தண்டனைக்கு வழி செய்கிறது(இ. த. பி. 295A). எனவே தான் நாங்கள் உடன்படிக்கை செய்ய நேரிட்டது” என பெங்குவின் நிறுவனம்பதிலளித்தது.

மகாத்மா காந்தி: ஜோசப் லெலிவெல்ட் தன்னுடைய புத்தகத்தில், மகாத்மா காந்தி தன்னினச்சேர்க்கை கொண்டிருந்தார் என எழுதியுருந்தார். இதை 2011-ம் ஆண்டு குஜராத் அரசு தடை செய்தது.

2012-ல் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதை இசுலாமிய மதக்குருக்கள் வன்மையாக எதிர்த்தனர். இவ்வச்சுறுத்தலைத் தொடர்ந்து, ருஷ்டியும் தன் பயணத்தை இரத்து செய்தார். இந்த அச்சுறுத்தலை அனில் சட் கோபால், இர்பான் ஹபீப் போன்றவர்களைக் கொண்ட சஃப்டர் ஹஷ்மி அறக் கட்டளை கடுமையாகக் கண்டித்தது.

தஸ்லிமா நஸ்ரின்: புகழ் பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான இவரை இசுலாமிய அடிப்படை வாதம் ஓட, ஓட, விரட்டிக் கொண்டிருக்கிறது!இவரின் தலைக்கு விலை குறிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்தில் நடந்த உள் அரங்க கூட்டத்தில், இவர் மீது இசுலாமிய அடிப்படை வாதிகள் செருப்புக்களை வீசி கடுமையான தாக்குதலை நடத்தினர். வங்க தேசத்திலிருந்து துரத்தப்பட்ட இவர் மேற்கு வங்க மாநிலத்தில் புகலிடம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். இடது ஆட்சி இருந்த போதிலும், பழமை வாத இசுலாமியர்களின் தொடர் அழுத்தத்தால், தஸ்லிமா அங்கு தொடர்ந்து வாழ்வதற்குஅனுமதி மறுக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு, சவகர்லால் நேருவோ, இடது ஆட்சியாளர்களோ எவரும் விதிவிலக்கல்ல.

வங்க தேசத்தில் கருதுரிமைக்காக இன்னுயிர் ஈத்தோர்: வங்க தேசத்தில் சுதந்திர-மதச்சார்பற்ற-அறிவியல் சிந்தனையாளர்கள் குறி வைக்கப்பட்டு தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப் பட்டியலில் ராஜிப் ஹைதர், எ. கே. எம். ஷைஃபூர், ரகுமான், அவ் ஜித் ராய், வாஷிகர்ஆ, ரகுமான் பாபு, அனந் பிஜாய் தாஸ் ஆகியோர் உள்ளனனர். இவர்களில் கடைசியாகக் கொல்லப்பட்ட அனந்த பிஜாய் தாஸ் “ஜுக்டி” எனும் அறிவியல் இதழின் ஆசிரியராக இருந்தவர்; நாத்திக சிந்தனையாளர். இவர் உயிருடன் இருந்த போது, தஸ்லிமா நஸ்ரினின் துணிச்சலை வியந்து எழுதிய கவிதையின் ஒரு சில வரிகள்:

“குற்றமற்றவர்களின் குருதி சொட்டும் கூச்சமற்ற வாள்கள் எங்கும்!
அவர்களின் சினம் கக்கும் மத-அரச கட்டளைகளை மீறினால்,
எத்திசை புகினும் உங்கள் தலை கொய்யப்படும்!
இருப்பினும் , எங்கோ யாரோ ஒருவர் அறிவு வெளிச்சத்தை கொளுத்துகிறார்!
இப் புரட்சித் தீ, அழுகி முடை நாற்றமெடுக்கும் நம்பிக்கைகளையும்,
சடங்குகளையும், புனித நிறுவனங்களையும் சாம்பல் மேடாக்குகிறது!
இவ்வறிவு வெளிச்சம் அச்சமின்றி தொடர்ந்து பயணிக்கிறது!
யாவரும் புகழாரம் சூட்டுகிறார் தஸ்லிமாவுக்கு,
ஆம்! தஸ்லிமா, உங்களுக்கு எம் செவ்வணக்கம்!

ஏழைப் பங்காளரும், பகுத்தறிவாளருமான மராட்டிய கோவிந் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கரின் படுகொலைகள்:

இவர் செய்தித்தாள் விற்பவராக இருந்து; பியூனாக-ஆசிரியராக-சிவாஜி பல்கலைக் கழக பேராசிரியராக-மராட்டிய மாநில சி. பி. அய். கட்சியின் செயலராக-தேசிய செயற் குழு உறுப்பினராக உயர்ந்தவர். அமைப்பற்ற வேளாண் பட்டாளிகள், வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள், பால் உற்பத்தியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், குடிசை வாழ் மக்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர். சில குறிப்பிட்ட கொள்கைகளினால் நாட்டு மக்களிடையே சி. பி. அய். கட்சி செல்வாக்கை இழந்தது என விமர்சித்தவர்.

மதவாத வலது சக்திகளை கடுமையாகச் சாடியவர்; இட ஒதுக்கீடு, சாகு மகராஜ், மார்க்சியம், உலகமயமாக்கல் எனும் தலைப்புகளில் புத்தகங்கள் படைத்துள்ளார். இவருடைய "சிவாஜி யார்? (Shivaji-Kon Hota) எனும் மராட்டிய மொழி குறும் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது; சிவாஜி எல்லா மதங்களையும் நேசித்து, மதித்த, மதசார்பற்ற மாமனிதன் என்று ஆதாரங்களுடன் ஆணித்தரமாக இதில் குறிப்பிட்டுள்ளார். சிவாஜியின் பெயரால் மதவெறியை விதைத்து, வளர்ப்பதை கடுமையாக சாடியுள்ளார்.

நாதுராம் கோட்சேவுக்கு புகழாரம் சூட்டுவோரை அண்மையில் சிவாஜி பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்தார்; இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தன: அவற்றை இவர் பொருட்படுத்தவில்லை. பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கருடன் ஒருங்கிணைந்து செயல் பட்டார்; தாபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மறைவைத் தொடர்ந்து, கோவிந் பன்சாரே மூட நம்பிக்கைக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்தார். இச் சூழலில் பன்சாரேயும் சுடப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த 20-02-2015 அன்று உயிரிழந்தார்.

மாதொருபாகனும், திருச்செங்கோடு பெருமாள் முருகனும்:

மகா பாரதம்:விசித்ர வீரியன் நோய்க்கு(மலட்டுத் தன்மை அல்லது பாலியல் நோயாக இருந்திருக்கும்) ஆளாகி புத்ர பாக்யம் இல்லாது இறந்து விட்டான். என்வே, வியாசர் மூலம் விசித்ரவீரியன் இரு மனைவியரும் மற்றும் வேலைக்காரியும் மூன்று பிள்ளைகளைப் பெற்றனர். அவர்களே திருதராஷ்ட்ரன், பாண்டு, விதுரன். இதில் பாண்டுவுக்கும் அதே நிலை. எனவே பாண்டுவின் மனைவி குந்தி, யமன். வாயு, இந்திரன் ஆகியோர் மூலமாக, முறையே, தர்மன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரும், பாண்டுவின் மற்றொருமனைவி மாத்ரி அஸ்வினி தேவதைகளின் மூலம், நகுலன், சகாதேவன் ஆகியோரும் பிறந்தனர். பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியை மனைவியாகக் கொண்டனர்: பாகவத புராணம்: தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆயர் குலப் பெண்களின் ஆடைகளை மரக்கிளையில ஒளித்து வைத்து விளையாடிய கண்ணபிரானுக்கும், "பதினாறு வயதினிலே" திரைப்படத்திலே- மயிலு, மயிலு இன்னும் கொஞ்சம் என்று சொல்லும் கால்நடை மருத்துவருக்கும், என்ன வேறுபாடு? இறைச்சாயத்தை தவிர!

மேலே சொன்னவர்கள் எல்லாம் முனிவர் மற்றும் தெய்வாம்சம் உடையவர்களால் பிள்ளைகளைப்பெற்றுக் கொண்டனர். எனவே பெருமாள் முருகனும் காளியின் மனைவி பொன்னாள் திருவிழா நாளில், இரவில் ஒரமாக ஒதுங்கி, அர்த்தநாரீஸ்வரன் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்தாள் என்று எழுதியிருந்தால் குறிப்பிட்ட சமுதாயம் பூரிப்படைந்து பொன்னாளை "தெய்வமாக்கியிருக்கும். சாதி-மத பெருமைகள் எல்லாம் பாசிசத்தின் கூறுகள்!

பச்சை எழுத்துக்களும்-புலியூர் முருகேசன் மீதான தாக்குதலும்:

சாதி, மத, ஆணாதிக்க, பெரு முதலாளிய ஆதிக்க சக்திகளின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டோரின் வலிகளின் பதிவுகள் பச்சையாகத்தான் இருக்கும்; தெய்வீகச் சாயப் பூச்சுக்கள் இருக்காது! பாலியல் எண்ணங்களைக் கிளர்ச்சியுறச் செய்து, மனங்களை கெடுக்கும் எழுத்துக்கள் என சொல்லப்பட்டவைதான் கீழ்க்காணும் புதினங்கள்:

அருந்ததிராயின் "தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்"(The God of Small things):

தங்களைப் புண்படுத்திவிட்டதாகவும், பாலியல் விரசங்கள் இருப்பதாகவும் சொல்லி , கொதித்தெழுந்து நீதி மன்றம் சென்றனர் கேரள சிரியன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்தோர்; இதை வெற்றிகரமாக எதிர் கொண்டார் அருந்ததி ராய்; இந் நாவலே புக்கர் விருதையும் ஈட்டியது.

சிஸ்டர் ஜெஸ்மெயின் "ஆமென்" நாவல் கேரள கத்தோலிக்க திருச்சபை பாதிரிகளின் காமக் கொடூரங்களையும், கன்னிப் பெண் துறவிகளின் ஓரினச் சேர்க்கைகளையும் பச்சையாகவே பதிவு செய்திருக்கும். அனைத்து தடைகளையும் தாண்டியதே இந் நாவல்.

கமலா சுரைய்யா(தாஸ்)வின் 'என்ற கத"(My story) எனும் புதினமும் பாலியல் விரசமுடையது எனும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது; "என் வலிகளின் வெளிப்பாடுதான் என் எழுத்துக்கள்" என்றார் கமலா சுரைய்யா.

திருநங்கை ரேவதியின் "வெள்ளை மொழி" திருநங்கை கல்கியின்"குறி அறுத்தேன்" முதலிய புத்தகங்கள் உண்மைகளை முகத்தில் அடித்தாற் போல் சொல்வன; "சே-சே- இப்படியா எழுதுவது? என்று பண்பாட்டுக் காவலர்கள் முகஞ்சுளிப்பார்கள்! இவர்களையெல்லாம் புறம் தள்ளிக் கொண்டே விளிம்பு நிலை மாந்தரின் இலக்கியம் பயணிக்கும்.

புலியூர் முருகேசனின் "நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்" எனும் சிறு கதைபெருங்குடி கூட்டத்தின் ஒரு குடும்பத்தில் திருநங்கையாகப் (மூன்றாம் பாலினம்) பிறக்கிறான் சுப்ரமணி; இவன் தந்தை வசதி மிக்கவர்; பல பெண் தொடர்புகள் உடையவர்; மகனை ஏச்சுக்கும், பேச்சுக்கும், பாலியல் வன் கொடுமைக்கும் ஆளாக்குகிறார்; அவனுக்கு மணமுடித்து, மருமகளை தன் காம இச்சைக்கு நாளும் ஆளாக்குகிறார்.

" என் பெருமைமிகு குடியில் எனக்கு இப்படி ஒரு மகனா!"என்ற எண்ணம் ஒரு புறம்; மற்றொரு புறம் சொந்த மகனையே காமக் கருவியாக பயன் படுத்துவது. இவ்வாறான, முடை நாற்ற மனமுடைய தகப்பனின் போலிப் பெருமையையும், காமக் கொடூரத்தையும்-அவனுக்குரிய தண்டனையையும் வெளிப்படுத்துகிறது; புறக்கணிக்கப்பட்ட, கடும் அவமானத்துக்கு ஆளான, ஓர் மூன்றாம் பாலினத்தின் குரலாகவே ஒலிக்கிறது இச் சிறுகதை!

"பாலியல் இச்சையை தூண்டுவதைக் காட்டிலும் சமூக அக்கறையின் வீச்சு அதிகமுடையது"என்று சொல்லும் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கள் பல உண்டு:பூலன் தேவி திரைப்படம்(Bandit queen) வழக்கு என அப் பட்டியல் நீளும்; விரிவு கருதி விடப் படுகிறது. முரண்பட்ட கருத்துக்கள் இருப்பின், சட்ட வழிகளின் வாயிலாக தீர்வுகள் காணுவதை விடுத்து, எழுத்தாளனை தாக்குவதும். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் சனநாயகத்தை சீர் குலைக்கும். அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி அடிமைகளாக இல்லாமல் துணிந்து சனநாயகத்துக்காக குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

லெஸ்லியின் “இந்தியாவின் மகள்” (India’s daughter):

தில்லி கற்பழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பி. பி. சி. யின் ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று போலி கௌரவவாதிகள் பெரும் கூச்சலிட்டனர்; காவி அரசும் துள்ளிக் குதித்து உடனே தடை செய்தது; இணையத் தள உலகில் இது போன்ற தடைகள் வெறும் நூல் வேலிகளே!

தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பிரிவு 66A வை செல்லாது என அறிவித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு: சட்டக் கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்காலின் மனு உள்பட 10 மனுக்கள் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66 A பிரிவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. இவற்றுள் பி. யூ. சி. எல் சார்பான மனுவும், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சார்பான மனுவும் அடங்கும். இதன் சார்பாக மூத்த வழக்குரைஞர் சஞ்சய் பரிக் மற்றும் வழக்குரைஞர்கள் அபர் குப்தா, கருணா நந்தி ஆகியோர் வாதிட்டனர். இக் கொடுஞ் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சொல்லி உச்ச நீதி மன்றம் நீக்கறவு செய்துள்ளது. இது சனநாயக சக்திகளுக்கு கிடைத்த வெற்றி!

கருத்து சுதந்திரத்துக்காக உயிர் நீத்த ஈகிகளை நினைவில் ஏந்தி, கருத்து சுதந்திரத்துக்கான தொடர் போராட்டத்தை தொய்வின்றித் தொடர்வோம்!

- து.சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், கோவை மாவட்ட பி. யூ. சி. எல். செயலர்.

Pin It