மோடி இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்று ஒரு வருடம் ஆகிவிட்டது. மோடி அலை என்ற வார்த்தையை அனேகமாக இப்போது எல்லாம் எங்கும் கேட்கமுடிவதில்லை. திருவிழா முடிந்தவுடன் சுவடு தெரியாமல் காணாமல் போகும் பக்தர்களைப் போல தேர்தல் திருவிழாவில் மோடியைக் கடவுளாக்கி பக்திப்பிரச்சாரம் செய்த அவரது பக்தகோடிகள் பலர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தன்னை ஒரு மோடி ஆதரவாளன் என்று யாராவது தெரிந்துகொண்டால் எங்கே தன்னுடைய மானம் போய்விடுமோ என்று பயப்படும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது.

 modi 380இந்த ஒரு வருடத்தில் இந்திய நாட்டின் பிரதமர் என்ற பெயரில் வலம்வரும் மோடி என்ற நபர் என்ன சாதித்தார், என்ன சாதிக்கவில்லை என்றுமட்டும் பேசுவது மிக அபத்தமாக எனக்குப் படுகின்றது. ஏனெனில் அது ஓர் ஏமாற்று வேலை. முழு பூசணிக்காயை சோற்றிலே மறைக்கும் செயல். ஆனால் அதைத்தான் ஊடகங்கள் தற்போது செய்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுவதன் மூலம் நடந்து முடிந்த ஒரு பெரிய இனப்படுகொலையின் சூத்திரதாரியை அதில் இருந்து தப்பவைக்கும் முயற்சியை அவை செய்கின்றன. போன பாராளுமன்றத் தேர்தலின்போது பெருமளவில் பணம் வாங்கிக்கொண்டு மோடி என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்கிய ஊடக விலைமாந்தர்கள், மோடிக்கு சாதகமாக மக்கள் மனநிலையை கட்டியமைத்தனர். மோடியின் குற்றத்தைப் பற்றி பேசுவது வளர்ச்சிக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டது. நடந்ததை மறந்துவிட்டு நடக்கப்போவதைப் பற்றி பேசுவோம் என்று சில நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்தனர்.

முற்போக்கு அமைப்புகளின் போராட்டங்களை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுக்கு வளர்ச்சி தேவைப்பட்டது. கடந்த காங்கிரசு ஆட்சியால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த கோடானகோடி இந்திய மக்களுக்குத் தங்களை காப்பாற்றிக்கொள்ள அந்த சமயத்தில் ஒரு ரட்சகன் தேவைப்பட்டான். அவன் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அவர்களை காங்கிரசு தள்ளியிருந்தது. இந்த சமயத்தில் தான் குஜராத் வளர்ச்சியைப் பற்றிய கட்டுக்கதைகள் திட்டமிட்ட முறையில் இந்தியா முழுவதும் சங்பரிவாரங்களால் பரப்பப்பட்டிருந்தன. பிள்ளையார் பால் குடித்ததை நம்பும் இந்திய மக்கள் இதையும் அவ்வாறே நம்பினர் விளைவு பா.ஜ.க கூட்டணி 336 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 எந்த வளர்ச்சியை முன்நிறுத்தி வெற்றி பெற்றார்களோ அந்த வளர்ச்சி என்பது பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி என்றோ, இந்திய தரகு முதலாளிகளின் வளர்ச்சி என்றோ அப்போது பெரும்பான்மையான சாமானிய இந்திய மக்களுக்குத் தெரியவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சில்லறை வர்த்தகத்துக்கு இந்திய சந்தையை திறந்துவிடுவார் என்றோ, ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய தரகு முதலாளிகளுக்கும் தருவார் என்றோ அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்த போதிலும் அவை மக்கள் மன்றத்தில் பெரிதாக எடுபடவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற பார்வை இந்திய கார்ப்ரேட் ஊடகங்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு அவை இந்திய மக்களின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கின்றன. CPI, CPI(M) போன்றவை மக்களுக்கு உபதேசம் செய்யும் தார்மீகத்தகுதியை இழந்து, எந்த மாதிரியான கழிசடைக் கட்சிகளுடனும் தொகுதி உடன்படிக்கை செய்துகொள்ளும் பிழைப்புவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது. கம்யூனிசம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் அங்கே இல்லை.

 பா.ஜ.கவின் முக்கிய வேலைகளில் ஒன்று பார்ப்பனிய சித்தாந்தத்தை அதன் வீரியம் குறையாமல் மேல் இருந்து கீழ் திணிப்பது, அதன் மூலம் தங்களுக்கான ஒரு கருத்தியல் தளத்தை நிரந்தரமாக கட்டியமைப்பது. அப்படி கட்டியமைப்பதால் என்ன பயன்? நிறையவே இருக்கின்றது, சிறுபான்மையினரை இந்தநாட்டின் வந்தேறிகளாகக் காட்டுவது, பார்ப்பனிய சனாதான இந்துமதத்தின் சாதிய மேலாண்மையை மக்கள் மனதில் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்து தருவது.

 மோடியின் ஆட்சியில் நீங்கள் இந்தியாவில் இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக ராமனை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லை என்றால் நீங்கள் விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். அதுமட்டும் அல்ல ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்கின்றார், இந்தநாடு இந்து நாடு, இங்கே உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள், ஒருவர் முஸ்லீமாகவோ, கிறித்தவராகவோ இருக்கலாம். அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே, அவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

 முசாபர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேசும்போது “முசாபர் நகரில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்” என்றார். அதே போல பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிரிராஜ்சிங் ”இந்துக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும்” என்றார். இவை எல்லாம் இந்திய சிறுபான்மை மக்களுக்கு விடப்படும் நேரடியான சவால்கள் ஆகும்.

 ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக இந்துத்துவா கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன. அதை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும் என்று அச்சுறுத்தப்படுகின்றனர், ஏற்றுக்கொள்ளாதவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. மோடி ஒரு இளம்பெண்ணை வேவுபார்த்ததை அம்பலப்படுத்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா மீது ஐந்து ஊழல்வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. குஜராத் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றம் வரை சென்று போராடிய தீஸ்தா சேதல்வாத் மீது நிதிமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுப்ரமணி சாமியை பற்றி செய்தி வெளியிட மறுத்ததற்காக தி இந்து பத்திரிக்கையில் இருந்து சித்தார்த் வரதராஜன் நீக்கப்பட்டார். மோடியின் இந்துமத வெறியை அம்பலப்படுத்தி நிகழ்ச்சி நடத்தியதற்காக சன் டீவில் இருந்து வீரபாண்டியன் நீக்கப்பட்டார். தாலிபற்றிய நிகழ்ச்சியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக வாசலில் குண்டு போடப்பட்டது. தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திய தி.க தோழர்கள் மீது இந்துமதவெறி கும்பல்கள் தாக்குதலைத் தொடுத்தன. கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியைச் சேர்ந்த பெண்களை இழிவு படுத்துவதாகக் கூறி எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு எதிராக பல்வேறு இந்துமதவெறி அமைப்புகள் போராட்டம் நடத்தி அவரை மிரட்டி நாவலை திரும்பப் பெறவைத்தனர்.

 இந்தியாவில் இனி நீங்கள் யோசிப்பதாக இருந்தால்கூட இந்துயிஸ்ட்டாகத்தான் யோசிக்கவேண்டும் இல்லாமல், நீங்கள் கம்யூனிஸ்ட்டாகவோ, அம்பேத்கரிஸ்டாகவோ, பெரியாரிஸ்டாகவோ யோசித்தால் உங்களது வாழ்வதாரமே கேள்விக்குள்ளாக்கப்படும்.

 மோடி என்ற இனப்படுகொலையாளன் தற்போது பிரதமர் என்று அழைக்கப்படுகின்றார். எனவே பிரதமரின் செயல்பாடுகளை பற்றித்தான் நாம்பேச வேண்டுமே தவிர இனப்படுகொலையாளனைப் பற்றி அல்ல என்ற முடிவிற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குஜராத்தில் இனப்படுகொலை நடந்ததே தெரியாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. அந்தச் சமூகம் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்பில் லைக்குகளுக்காக உயிர் வாழும் சமூகம். அந்தச் சமூகம் மோடியை தனது வழிகாட்டியாகப் பார்க்கின்றது.

 தன்மீது சுமத்தப்பட்டுள்ள கசாப்புக்கடைக்காரன் என்ற முத்திரையை கலைவதற்காகவும் தன்னை அரியணையில் அமரவைத்த கார்ப்ரேட்டுகளின் நலனைக் காப்பாற்றவும் மோடி உலகம் முழுவதும் பறக்கின்றார். அந்த நாடுகளின் தலைவர்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்கின்றார், மாணவர்களை சந்தித்து உரையாடுகின்றார், அந்நிய முதலீட்டாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றார், அவர்களிடம் மறக்காமல் சொல்கின்றார் ‘இந்தியாவில் நிலம் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது’ என்று. நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும், மோடி கவனமாக காய் நகர்த்துகின்றார், தன்னுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவர் விளம்பரமாக மாற்றுகின்றார், இதன் மூலம் அவரைப் பற்றி மட்டுமே அனைவரையும் பேசவைக்கின்றார். எதுவரை மோடி இதை செய்வார் என்றால் தன்மீதான கசாப்புக்கடைக்காரன் பிம்பத்தை மாற்றும் வரையிலும் கடைசி விவசாயி சாகும் வரையிலும் செய்வார்.

 மோடி ஒரு வருடம் அல்ல இன்னும் எத்தனை வருடங்கள் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சி நிச்சயம் மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கும். இந்திய மக்களின் ரத்தமும்,சதையும், எலும்புகளும் தங்கத்தட்டிலே வைத்து பெரும்முதலாளிகளுக்கு படையலாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். பெரும்முதலாளிகளுடனும், வர்த்தக சூதாடிகளுடனும் ‘செல்பி’ எடுத்த பிறகு மோடியின் பொருளாதாரக் கொள்கைகளாலும், இந்துமதவெறி பாசிசத்தாலும் மாண்டுபோன கோடானகோடி இந்திய மக்களின் பிணங்கள் இந்தியாவெங்கும் கிடக்கும். தன்னுடைய வெற்றியைப் பறைசாற்றிக்கொள்ள மோடியின் ‘செல்பி’ பயணம் அடுத்து பிணங்களுடன் தொடரும். ஏனென்றால் மோடி சாதாரண மனிதர் அல்ல, அவர் ஹிட்லர், முசோலினி, ராஜபக்சே வரிசையில் போற்றிப் புகழத்தக்க மாமனிதர்!

- செ.கார்கி

Pin It