modi poojaகொரோனா நோய்த் தொற்றைக் குணப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் திணறி வருகின்றன. மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட பல விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் எப்படியாவது நோய்க்கு மருந்து கண்டு பிடித்துவிட வேண்டும் என போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று உலகத்தைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை அறிவியலே ஏற்றிருக்கின்றது. இறுதி உண்மை என்பது விஞ்ஞானிகளால் அறிவியலால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்பதுதான். ஆனால் அறிவியலுக்கு எதிராக அதன் எல்லையை கேள்விக்குட்படுத்துபவர்கள் அதை ஒருநாளும் ஏற்றுக் கொள்வதில்லை.

அவர்கள் இன்னும் கடவுளின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றும் வல்லமையைப் பற்றியும் பரப்புரை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அது அவர்களின் உரிமை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் ஒருவன் தனிப்பட்ட முறையில் அறிவியலை நம்பாமல் நாசாமாய் போவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையும் அப்படியான நம்பிக்கைக்கு ஆட்படுத்தி அவர்களை அழிவை நோக்கிச் செலுத்துவதை திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை என்றுதான் சொல்ல முடியும்.

ஆனால் இப்படியான நம்பிக்கைகளை சமூகத்தில் விதைக்கும் யாரும் தான் கொண்ட நம்பிக்கைக்கு ஒரு போதும் நேர்மையாக இருப்பதில்லை. ஏசு அழைக்கின்றார் என்று அற்புத சுகமளிக்கும் கூட்டங்களை நடத்தும் நபர்கள் தான் சுகமற்றுப் போகும் போது அலோபதி மருத்துவத்திடமே சரணாகதி அடைகின்றார்கள்.

பல சாமியார்கள், யோகா குருக்கள் எல்லாம் பெரும் கார்ப்ரேட் மருத்துவமனைகளையும் நடத்தி வருகின்றார்கள். ஒரு பக்கம் மூட நம்பிக்கைகளைப் பரப்பி பணம் ஈட்டிக் கொள்கின்றார்கள். மற்றொரு பக்கம் அறிவியலை வைத்தும் பணம் ஈட்டிக் கொள்கின்றார்கள். மதத்தை விற்பனை செய்யும் சாமியார்கள் மட்டும்தான் இப்படி இருக்கின்றார்கள் என்றில்லை. அப்படியான நம்பிக்கையைக் களைந்து மக்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க கற்றுத் தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானிகள் கூட அப்படித்தான் இருக்கின்றார்கள்.

'கடவுள் சந்தை' என்ற நூலின் ஆசிரியரான மீரா நந்தா தன்னுடைய நூலில் “விஞ்ஞானிகள் மத்தியிலும் மத நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த 1100 விஞ்ஞானிகளிடையே (இவர்கள் எல்லாரும் அடிப்படை அறிவியல்களிலும், பொறியியலிலும், மருத்துவத்திலும் பிஎச்டி பெற்றவர்கள்) அமெரிக்காவிலுள்ள சமூக – கலாச்சார மதச் சார்பின்மை பற்றிய ஆய்வு நிறுவனத்தினர் (ஐஎஸ்எஸ்எஸ்சி) நடத்திய ஆய்வில் அவர்களில் 26 சதவீதத்தினர் ஒரு தனிப்பட்ட கடவுளின் இருப்பிலும், மற்றொரு 30 சதவீதத்தினர் தனிநபர் சாராத ஆன்மீக சக்தியிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏறத்தாழ 40 சதவீத இந்திய விஞ்ஞானிகள் கடவுள் அற்புதச் செயல்களைச் செய்கிறார் என்றும், 24 சதவீத விஞ்ஞானிகள் சிறப்பு தெய்வீக ஆற்றல் படைத்த ஆடவரும் பெண்டிரும் அற்புதச் செயல்களைச் செய்ய முடியும் என்றும் நம்பினர். 29 சதவீதத்தினர் கர்ம வினையிலும், இன்னும் 26 சதவீதத்தினர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். நாட்டில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் என்ற வகையில் அடங்கக் கூடிய பலரும் பொது வழிபாடுகளில் பங்கேற்றதோடு, அற்புதங்களைச் செய்யும் சாமியார்களைப் பின்பற்றினர்” என்கின்றார்.

இந்தியா விஞ்ஞானிகளின் நிலையே இப்படித்தான் என்கின்ற போது, இந்திய மக்களையும் முட்டாள்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யும் சங்கிகளை நாம் சொல்லவே தேவையிலை. கொரோனா தொற்று இந்தியாவில் ஆரம்ப நிலையில் இருந்த போது மோடி இந்திய மக்கள் அனைவரையும் கைதட்டச் சொன்னார். பிறகு நோய்த் தொற்று வேகமாக அதிகரித்த போது விளக்கு பிடிக்கச் சொன்னார்.

ஆனால் எப்படி காற்றில் கம்பு சுற்றினால் ஒன்றும் ஆகாதோ, அதே போல மோடியின் இந்த ஆன்மீக ஒருங்கிணைப்பும் சல்லி பைசாவுக்குக் கூட பயன் தரவில்லை. அது பயன் தராது என்பது மூளை வேலை செய்யும் எல்லோருக்கும் தெரியும், ஏன் மோடிக்கும் கூட தெரியும். ஆனால் கொரோனா ஊரடங்கால் பெரிதும் வாழ்வாதாரம் இழந்து, வாழ்வா சாவா போராட்டத்தில் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் மனதளவில் தான் அவர்களின் பக்கம் நிற்பதாக நம்ப வைக்க மோடிக்கு அந்த நாடகம் தேவைப்பட்டது.

நாட்டின் தலைமையே மக்களுக்குக் குரளிவித்தை காட்டினால் அதன் பரிவாரங்களைச் சொல்லவா வேண்டும்?. அவர்கள் தனது ஆன்மீக மூளையில் இருந்து அறிவியலுக்கு சவால் விடும் அற்புத சுகமளிக்கும் மருந்துகளை அறிவித்துக் கொண்டே இருந்தார்கள்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வலே மும்பையில் ‘கோ கொரோனா கோ’ என கோஷம் போட்டு வைரசின் காதை செவிடாக்கப் பார்த்தார். மாலோகன் குண்டு வெடிப்பு புகழ் பிரக்யாசிங் தாகூர், “தினமும் ஐந்து முறை அனுமன் சலிசா மந்திரத்தை சொல்லி வந்தால் உலகத்திலிருந்தே கொரோனா போய்விடும்” என கூறி உலக விஞ்ஞானிகளை எல்லாம் இந்தியாவைப் பார்த்து பிரமிக்க வைத்தார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷோ பசுவின் கோமியத்திற்கு கொரோனாவை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது என தனது ஆன்மீக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்ததை நடைமுறை மூலம் மெய்யாக்க வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர் நாராயண் சாட்டர்ஜி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவருக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தார். விளைவு கொல்கத்தா ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொல்கத்தா காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

Master cowஅசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்ரியா, மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்த உதவக்கூடும் என்று கண்டுபிடித்து மற்ற சங்கி ஆராய்ச்சியாளர்கள் வந்தடைந்த முடிவுக்கே அவரும் வந்தடைந்தார். அகில இந்திய இந்து மகாசபா டெல்லியில் ஒரு மாட்டுக் கோமிய விருந்தையே தடபுடலாக நடத்தி உலக விஞ்ஞானிகளுக்கு எல்லாம் பேதி கொடுத்தது. இன்னும் சில சங்கிகள் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டு கொரோனாவிற்குக் கண்ணாமூச்சி காட்டினார்கள். 

ஆனால் இந்திய வைராலஜிகல் சொசைட்டியின் டாக்டர் ஷைலேந்திர சக்சேனா பசு சிறுநீரில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதைக் காட்ட எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை எனக் கூறி சங்களின் ஆயிரமாண்டு பொய்யை மறுத்திருக்கின்றார்.

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 'பாபிஜி பப்பட்' என்னும் அப்பளம் ஒன்றை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து அது கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் என்று கூறி அதைத் தயாரித்தவர்கள் வெற்றி பெற நல்வாழ்த்துகளைக் கூறினார். தற்போது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Arjun Meghwal Bhabhi Ji Papadஇதிலே கவனிக்க வேண்டிய செய்தி பிஜேபியைச் சார்ந்த ஒருவரும் தான் கண்டறிந்து சொன்ன மருத்துவ முறைகளை பெயரளவுக்குக் கூட கடைப்பிடிக்கவில்லை என்பதோடு, அவர்கள் தங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட போது அலோபதி மருத்துவ சிகிச்சையையே முதன்மையாக நாடிச் சென்றார்கள் என்பதுதான். ஆனால் அதுகூட சிலருக்குப் பலனளிக்காமல் இறந்தும் போனார்கள். சங்கி என்பதற்காக கொரோனா வைரஸ் விட்டுவிடுமா என்ன?

purushothman priyadasசாமியார் புருஷோத்தம் பிரியதாஸ் என்பவர் தன் வாயில் லட்டை வைத்து அதை பக்தர்கள் சாப்பிட்டால் கொரோனா வராது எனச் சொல்லி பல பேருக்கு நோயைப் பரப்பியதோடு கொரோனாவால் செத்தும் போனார்.

ம.பி-யின் ரத்லம் மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்பவர் தன்னைச் சந்திக்க வரும் பக்தர்களுக்கு கையில் ஒரு முத்தம் தந்து ஆசி வழங்கி அனுப்புவதை தனது அடையாளமாக வைத்திருந்தார். மேலும் தான் முத்தம் கொடுத்தால் கொரோனா போய்விடும் என்றும் கூறி வந்தார். தற்போது அவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றார். இவர் தனது முத்தம் மூலம் 24 பக்தர்களுக்கு கொரோனாவைப் பரிசாக அளித்துச் சென்றிருக்கின்றார்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் மற்றும் பாஜக மூத்த தலைவரான மானிக்யாலா ராவ்வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எனப் பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றார்கள்.

இவர்கள் யாரும் மாட்டு மூத்திரம் குடிக்கவில்லை, மாட்டுச் சாணி திங்கவில்லை, அனுமன் சலிசா மந்திரத்தையோ, 'கோ கொரோனா கோ' என்று கொரோனா மந்திரத்தையோ சொல்லவில்லை. ஏன் அவர்களின் ஆன்மீக அடியாளான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆய்வு நிறுவனம் தயாரித்த, கொரொனில் மாத்திரைகளையோ, சுவாசாரி வடியோ சீண்டிப் பார்க்கக் கூட இல்லை.

தன்னுடைய உயிர் என்று வரும் போது அலோபதி மருத்துவத்தையும், அடுத்தவன் உயிர் என்று வந்தால் மாட்டு மூத்திரத்தை குடிக்கச் சொல்வதும்தான் சங்கிகளின் இரட்டை வேடம். அறிவியலால் மட்டுமே, விஞ்ஞானிகளால் மட்டுமே இந்த உலகை காப்பாற்ற முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும். எந்தக் கடவுளும் எந்த நோயில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியாது என்பதை கொரோனா செவிட்டில் அடித்தார் போல சொல்லிக் கொண்டு இருக்கின்றது.

"108 முறை 'நமோ நாராயணா' என்று சொன்னால் கொரோனா ஓடிவிடும்" என்று திருவாய் மலர்ந்தார் திருவில்லிப்புத்தூர் ஜீயர். ஆனால், நாராயணனையே தரிசித்தவர்களின் கதி என்னவானது தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்றால் மூடப்பட்ட திருப்பதி கோயிலில் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பதி கோயிலைச் சேர்ந்த முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவால் இறந்து போனதோடு ஜூலை 24-ம் தேதி ஒரு தேவஸ்தான ஊழியரும் கொரோனாவால் இறந்தார்.

அதே போல ராம ஜென்ம பூமியில் தினமும் பூஜைகள் மேற்கொண்டு வந்த பிரதீப் தாஸ் என்ற பூசாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, 16 பாதுகாப்பு அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. உயிரிழந்தோர் எண்ணிகை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் இந்தச் சாவுக்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கம் அதைப் பற்றிய எந்தவித அக்கறையும் இன்றி கடந்து சென்று கொண்டு இருக்கின்றது.

மக்களும் இவ்வளவு பெரிய பிரமாண்ட உயிரிழப்புகள் தினம் தினம் நடப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது போலத் தெரியவில்லை. ஒருபக்கம் உழைத்தால் தான் சோறு என்ற நிலைக்கு அரசு மக்களைத் தள்ளியதும், இன்னொரு பக்கம் மக்களிடம் ஆளும் வர்க்கம் திணித்திருக்கும் கடுமையான மூட நம்பிக்கைகளும் மக்களை பலி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. கார்ப்ரேட்களின் கைக் கூலியான ஆளும் வர்க்கமும், அதன் அடியாள் படைகளும் பரப்பும் மூட நம்பிக்கைகளில் இருந்து இந்த மக்களை விடுவிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மனித உயிர்களின் மீது மதிப்பு வைத்திருக்கும் முற்போக்கு இயக்கங்களிடமே இன்று உள்ளது.

- செ. கார்கி

Pin It