இந்தியாவில் பாசிச அபாயம்

மத்தியில் அல்லது மாநிலத்தில் உள்ள அரசுகள் பலநேரங்களில் பாசிசத் தன்மை கொண்டவையாகச் சித்தரிக்கப்படுகின்றன. அத்தகைய சித்தரிப்புக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முதலாவதாக, எந்த ஒரு ஒடுக்குமுறை அரசாங்கமும் பலநேரங்களில் பாசிச அரசாங்கம் என்று எளிதாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவதாக, சில நேரங்களில் முன் சிந்தனை எதுவுமின்றி, தாமே பாசிச முறையில் ஆளுகிற போக்கினைக் கொண்ட மிகமோசமான பிற்போக்கு சக்திகளுடன் கூட, பாசிச எதிர்ப்பு முன்னணிகளைக் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போதெல்லாம் புதிய சொல்லாக்கம், அதாவது “மதவெறி பாசிசம்.” என்ற சொல்லாக்கம் மிகவும் நாகரீகமானதாக ஆகியுள்ளது.

எந்த ஒரு அரசியல், பொருளாதார, அல்லது சித்தாந்தப் பகுப்பாய்வும் இல்லாமல், சிறுபான்மையினர் சமூகங்கள் மீது அடக்குமுறை அல்லது ஒடுக்குமுறை செலுத்தும் ஆட்சி மதவெறி பாசிச ஆட்சி என்று சித்தரிக்கப்படுகிறது. அத்தகைய நிகழ்வுகளில் கணக்குரீதியான ஓர் எளிய குறுக்குதல் நடைபெறுகிறது. இட்லர் மதச் சிறுபான்மையினரை – யூதர்களை நசுக்கினார். இட்லர் ஒரு பாசிசவாதி. இந்த மனிதர்கள் மதச் சிறுபான்மையினரை நசுக்குகிறார்கள், எனவே அவர்கள் பாசிசவாதிகள், பாசிசம் அல்லது பாசிச எதிர்ப்பு என்பது மத அல்லது மதச்சார்பின்மை சொல்லாக்கங்களில் சித்தரிக்கப்படுவது போல ஆகிறது.

உண்மையில், ஆழமான பகுப்பாய்வு இல்லாத அத்தகைய எளிய சித்தரிப்புக்கள், அனைத்து வகையான சந்தேகத்துக்குரிய சக்திகளுடனும் சேர்ந்து தேர்தல் கூட்டணிகளைக் கட்டியமைக்கும் கண்ணோட்டத்துடன் செய்யப்படுகின்றன. இ.பொ.க. (மார்க்சிஸ்டு), காங்கிரசைக் கூட சேர்த்துக்கொள்ளும், அல்லது குறைந்தபட்சம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைப்பதை ஆதரிக்கும் வகையில், அதன் கூட்டணியை விரிவாக்கத் தொடங்கிவிட்டது. அத்தகைய சூத்திரங்களின் முன்னனுபவங்கள் பற்றித் தர்க்கரீதியாகச் சிந்திக்காமல், கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் பலரும் கூட அவர்களை பின்பற்றினார்கள்.

அதனால், இ.பொ.க. (மார்க்சிஸ்டு) போல, கூட்டணிகளை விரிவாக்காவிட்டாலும், அதைப்பற்றிப் பேசினார்கள். எனவே, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் பண்பு பற்றிய ஒரு பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு முன்னதாக, முதலில் நாம் ‘பாசிசம்’ என்று அழைக்கப்படுவதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிப் பார்ப்போம்.

பாசிசம் என்பது ஒரு பருண்மையான வரலாற்றுச் சூழலில் தோன்றி வளர்ச்சி பெற்ற ஒரு குறிப்பான நிகழ்ச்சிப்போக்காகும். மேலும் அதற்கென்று சொந்தச் சித்தாந்தம், அரசியல், மற்றும் பொருளாதார அடிப்படைகள் இருந்தன. அது ஒருவகை ஒப்படைவுப் பண்பாட்டிற்கும் வழிவகுக்கிறது.

‘பாசிசம்’ என்ற சொல் ‘பாஸ்செஸ்’  (fasces) என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும், அதன் பொருள் ஒரு கோடரியைச் சுற்றிக் கட்டடப்பட்ட இரும்புக்கம்பிகளின் தொகுப்பு ஆகும். அது பழங்கால ரோமின் குடிமை நடுவர்களின் அதிகாரத்தின் சின்னமாகவும் இருந்தது. மக்கள் மீது தனது கட்சியின் அதிகாரத்தை நிறுவுவதற்காக முசோலினி இந்தச் சின்னத்தைத் தனது கட்சியின் சின்னமாக வைத்துக்கொண்டார்.

ஆனால் முசோலினி, இத்தாலி மற்றும் ஐரோப்பாவின், அல்லது அந்த வகையில் ஒட்டுமொத்த உலகின், அரசியல் அரங்கிற்குள் எப்படித் தோன்றினார்? பெனிடோ முசோலினி ஓர் அறிவார்ந்த இளைஞர், இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டில் அவர் இத்தாலிய சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். விரைவிலேயே அந்த சோசலிசக் கட்சியின் அமைப்பிதழான அவந்தியின் ஆசிரியராக ஆனார், மேலும் 1912 இலிருந்து 1914 வரை அதில் வேலை செய்தார். பின்னர் அவர் இத்தாலிய அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் பிரச்சனையில் கட்சியுடன் கருத்துவேறுபாட்டை வளர்த்துக்கொண்டார். அவர் அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, படையில் சேர்ந்தார்.

ஓர் அவமானகரமான தோல்விக்குப் பிறகு, அவப்பெயர் பெற்ற வெர்ஸெய்ல்ஸ உடன்படிக்கையின் திணிப்புக்குப் பிறகு, யுத்ததிலிருந்து திரும்பிய முசோலினி ஒரு கட்சியை உருவாக்கினார். யுத்தத்தால் தங்களுடைய பேராசைகள் சிதறடிக்கப்பட்டிருந்த, இத்தாலியின் ஏகபோக முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஒரு பிரிவினரும், ஆயுதங்களை ஏந்தத் தூண்டும் யுத்தவெறி அறைகூவலுக்குப் பின்னால் மக்களைத் திரட்டக்கூடிய ஒரு கட்சியை விரும்பினர். 1919 இல், இல் போபோலோ டி இடாலியா (ll popolo d’italia)  (இத்தாலி மக்கள்) என்ற அமைப்பிதழுடன் அவர் தனது பாசிசக் கட்சியைக் கட்டினார்.  முசோலினியின் கருத்துப்படி, பாசிசம் என்பது “வலதுசாரிகளின் பிற்போக்குக்குக்கும் இடதுசாரிகளின் அழிவுத் தன்மைக்கும் எதிராகத் தாக்குதல் தொடுப்பதற்கான இயக்கம்” ஆகும். இத்தாலியின் போர்க் கோடரியின் அறிக்கை 1`919 ஜூன் 6 அன்று, இல் போபோலோ டி இடாலியா இதழில் வெளியிடப்பட்டது. வெர்ஸெய்ல்ஸ  உடன்படிக்கையால் பறிக்கப்பட்டு, இத்தாலி இழந்த பெருமிதத்தை மீட்பதற்கான அழைப்பே அதன் அடிப்படை அறைகூவலாக இருந்தது.

மக்களின் பெரும் பிரிவினரின் ஆதரவை அந்தக் கட்சி பெற்றதில் வியப்படைய ஒன்றுமில்லை. அந்த ஆதரவின் அடிப்படையில், பாசிசத்தின் சித்தாந்தம் அரசின் எங்கும் மேலோங்கிய அதிகாரமாக முன்வைக்கப்பட்டது, தலைவரிடம் கேள்விக்கிடமற்ற விசுவாசம், அரசின் அதிகாரத்திற்கு குடிமக்கள் அனைவரும் தலைவணங்குவது, இல்லாவிட்டால் நசுக்கப்படுவது  நடந்தது. அரசு தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கான சீர்திருத்தங்களை எடுத்தது. இத்தாலியின் எல்லைகளுக்கு வெளியே தனது சந்தையை விரிவாக்க விரும்பிய பியட், போன்ற நிறுவனங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விதமாக ஒரு ஆதிக்க வெறிகொண்ட, யுத்தத்தை விரும்புகிற அரசு  முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் தீவிரமான பிரிவினர்க்கு சேவை செய்வது பாசிஸ்டுகளால் வளர்க்கப்பட்டது. கல்வி, பண்பாடு, ஆகியவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் தலைவருக்கு கேள்விக்கிடமற்ற வகையில் கீழ்ப்படிய வேண்டும் என்பதைப்  புரிந்துகொள்ளச் செய்யபட்டனர்.

இந்தக் கீழ்ப்படிதலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசின் படையுடன் கூடுதலாக,  கருஞ்சட்டைப் படை என்ற பெயரில் பாசிஸ்டுகளால் ஒரு தனிப்படை உருவாக்கப்பட்டது. இத்தாலி முழுவதும் சோசலிஸ்டுகள் அறிவித்திருந்த வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக முசோலினி டூரினிலிருந்து ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, ரோமை நோக்கி அணிவகுத்துச் சென்றார். இந்தச் செயல் முசோலினியை இத்தாலியின் ஏகபோக முதலாளிகளின் மிகவும் அபாயகரமான பிரிவின் உண்மையான பிரதிநிதியாகக் ஆக்கியது. அதேநேரத்தில், பொருளாதாரத்தின் ‘வளர்ச்சி’க்காக என்ற  போலியான அறைகூவலும், வேலையின்மைப் பிரச்சனையை தீர்ப்பதாகக் கூறிய வாக்குறுதியும் முசோலினியின் பின்னால் ஒரு மிகப்பெரிய வேலையற்றோர் பட்டாளத்தை அணிதிரட்டியது.

முசோலினி இத்தாலியில் பாசிசத்தை நிறுவிக்கொண்டிருந்த போது, அடால்ப் இட்லர் ஜெர்மனின் பவேரியா மாகாணத்தில் பலம் பெற்றுக் கொண்டிருந்தார். ஒரு குறுகிய காலத்திற்குள் இட்லர் நேசனல் சோசலிஸ்டெஷ் டாய்ஷே அர்பெய்டர் பார்டி (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி) யை, சுருக்கமாக, நாஜிக் கட்சியை உருவாக்கினார். அதன் அரசியலும் சித்தாந்தமும் முசோலினியின் பாசிசக் கட்சியுடையதைப் போன்றே இருந்தது, அத்துடன் கூடுதலாக யூதர்களின் மீதான தவிர வெறுப்பும் சேர்ந்துகொண்டது. இவ்விதமாக இட்லரின் நாஜிசம் இத்தாலியின் பாசிசத்தின் ஜெர்மன் வடிவமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலக்கட்டத்திலிருந்து, ஜெர்மன் படைகள் ஐரோப்பாவில் மிகவும் தீவிரமான தாக்குதல் பாத்திரத்தை வகித்தன, உலகெங்கும் மக்கள் இட்லரை பாசிசத்துடன் இனைத்துப் பார்த்தனர். 

ஜெர்மன் மக்களே உண்மையான ஆரியர்கள் அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள் என்று பொருள்படும் ஹெரேன்வாக (தலைமை இனம்) என்ற கருத்து இனவாத அடிப்படையிலான ஒரு மேலாதிக்க வெறியைத் தூண்டிவிட்டது. ஒரு பேரழிவுச் சூழலில், தொழிலாளர் வர்க்கச் சித்தாந்தமும் தொழிலாளர் வர்க்கத் தலைமையும் உழைக்கும் மக்களை அமைப்பாக்கத் தவறும்போது, அத்தகைய ஒரு சித்தாந்தம்  மக்களை ஆட்கொண்டுவிடும். அதேநேரத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் அனைத்துக் கருத்துக்களையும் காலடியில்போட்டு நசுக்கத் தயாராகிவிட்டிருந்த ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே உருவாகியது.

சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்டுக் கட்சி (போல்ஷிவிக்) யின் மத்தியக் குழுவின் பணி குறித்து கட்சியின் பதினேழாவது பேராயத்திற்கு அளித்த தனது அறிக்கையில், ஸ்டாலின் பாசிசத்தைப் பின்வருமாறு சித்தரித்தார்: “பாசிசம் யுத்தத்தை விரும்பும் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே இப்போது ஒரு நவநாகரீமான  பண்டமாக மாறியுள்ளது என்பது வியப்புக்குரியதல்ல. நான் பொதுவாக பாசிசத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை, மாறாக, முதன்மையாக ஜெர்மன் வகைப்பட்ட பாசிசத்தைக் குறிப்பிடுகிறேன், அது தவறாக தேசிய சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது, தவறாக என்பது ஏனென்றால், அதை மிகவும் தீவிரமாகப் பரிசீலித்துப்பார்த்தால் அதில்  அணுவளவு கூட சோசலிசம் என்பது இல்லை.

“இந்தத் தொடர்பில் ஜெர்மனியில் பாசிசத்தின் வெற்றி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் பலவீனத்தின் ஓர் அறிகுறி என்று கருதப்படுவதோடு மட்டுமின்றி, பாசிசத்திற்கு வழிவகுத்த சமூக ஜனநாயகம் தொழிலாளர் வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தன் விளைவாகவும் கருதப்பட வேண்டும்; அது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பலவீனமாகவும், முதலாளித்துவ வர்க்கம்  அதற்குமேலும் பழைய முறைமைகளான பாராளுமன்றவாதம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயக வழிகளில்  ஆளமுடியாது, அதன் விளைவாக அதன் உள்நாட்டுக் கொள்கையில் பயங்கரவாத முறைமைகளை நாட  நிர்ப்பநதிக்கப்படுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாக – ஒரு சமாதான பூர்வமான அயலுறவுக் கொள்கை அடிப்படையில் தற்போதைய அதன் சூழலிலிருந்து அதற்குமேலும் வெளிவர வழிகாண முடியாமல், ஒரு யுத்தக்கொள்கையை நாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகவும் கருதப்பட வேண்டும்.” (ஜே.வி.ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள், பெய்ஜிங், 1976, பக். 682).

துல்லியமாக் கூறுவதென்றால், ஏகபோக முதலாளித்துவத்தின் மிகவும் தீவிரமான பிரிவு, தான் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதற்கான அதன் சித்தாந்த, அரசியல், பொருளாதார வழிகளே பாசிசம் ஆகும். நாட்டிற்குள் அதன் பொருள், எதேச்சாதிகாரமாகவும் பயங்கரவாத முறையிலும் ஆட்சி செய்வதற்கு தலைவருக்கு முழுமையான அதிகாரம், அதேபோல அதன் அயலுறவுக் கொள்கையில் அதன் பொருள் யுத்தத்தின் மூலமாக உலகை மறுபங்கீடு செய்வதாகும்.

ஏறத்தாழ பாசிசத்தை நிறுவுவதற்கு சாத்தியமான வகையில் நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்து, அதாவது மத்தியில் முழுமுதல் அதிகாரத்தை நிறுவுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கு உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ எளிமையான பதில் எதுவும் இல்லை. இந்தியா ஒரு மோசமான சூழலையை எதிர்கொண்டுள்ளது. பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உலகமயமாக்கல் நிகழ்ச்சிபோக்கை உற்சாகத்துடன் வரவேற்பது படிப்படியாக குறைந்துகொண்டு வருகிறது. தொழில்துறைகள் ஒட்டுமொத்தமாக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. உற்பத்தித் தயாரிப்புப் பிரிவில் நெருக்கடி இன்னும் மோசமாக இருக்கிறது.

பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு தரும் புள்ளிவிவரங்கள் கூட, 30 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. அதன் பொருள், இந்திய மக்களில் 36 கோடி பேர் வறியவர்களாக உள்ளனர், அவர்கள் எப்படி உயிர் வாழ்கிறார்கள் என்பதே ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பட்டினிச் சாவு அன்றாடச் செய்தியாகிவிட்டது. உலகமயமாக்கலுக்கான – பன்னாட்டு நிதியம் – உலகவங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் முக்கூட்டு பரிந்துரைகள் அனைத்தும் பொருளாதாரத்தை மீட்பதற்குத் தவறிவிட்டன. இருப்பினும் அந்த முக்கூட்டு, அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அந்நிய நிறுவனரீதியான முதலீட்டுக்கும் பொருளாதாரத்தை மேலும் மேலும் திறந்துவிடுமாறு வலியுறுத்தி வருகின்றது ஆனால் உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மிகுதியாக முதலீடு செய்வதற்குத் தயங்கிக் கொண்டு, புதிய, புதிய நிபந்தனைகளை விதித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் மேம்பட்ட உள்கட்டமைப்பு, அதாவது மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தகவல்பரிமாற்ற வசதிகள், தடையற்ற மின்சாரம், மேம்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள், அமைதியான வேலை நிலைமைகள அதாவது தொழிலாளர் நலச் சட்டங்களில் (விரும்பியபடி ஆட்களை நியமித்துக்கொள்ளவும், நினைத்தால் வெளியேற்றவும்),  திருத்தங்கள்  இன்னபிறவற்றைக் கோருகின்றனர். அவற்றுடன் கூட, மலிவாகவும், எளிதில் கிடைக்கும் வகையிலும் நாட்டில் மூலவளங்களைக் கோருகின்றனர்.

ஏறத்தாழப் பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் ஏதாவதொரு வகையில் உலகமயமாக்கலை வழிபடக் கூடியவையாக மாறிவிட்டன. காங்கிரசிலிருந்து பா.ஜ.க. வரை, திரிணாமுல் காங்கிரசிலிருந்து இ.பொ.க.(மார்க்சிஸ்டு) வரை, அனைத்துமே பெரும் மூலதன முதலீட்டின் மூலமான “வளர்ச்சி” பற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கின்றன. 

மேலும் அவர்கள் அதிகாரத்தில் உள்ள இடங்களிலெல்லாம் மேலும் மேலும் சலுகைகளை வழங்குவதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இடது சாரிகள் என்று அழைத்துக்கொள்ளும் கட்சிகள் ‘மாற்று இருக்கிறது,’ ‘மனிதாபிமானத்துடன் கூடிய உலகமயமாக்கல்’ என்று மெலிதாக முனகிக்கொண்டு, அவர்கள் அதிகாரத்தில் உள்ள இடங்களில், இந்தக் கட்டத்தில் ‘வளர்ச்சி’ என்பது இந்திய, அல்லது அந்நியப் பெரும் பெருங்குழும நிறுவனங்களின் கூடுதல் முதலீட்டைக்  குறிக்கிறது என்று உரத்துக் அறிவிக்கின்றன, மேலும் அதன்மூலம் உழைக்கும் மக்களுக்குத் துரோகம் இழைக்கின்றனர். கம்யூனிஸ்டுப் புரட்சியாளர்கள் மட்டுமே விதிவிலக்காக உள்ளனர், ஆனால் தொழிலாளர் வர்க்கம் இத்தகைய ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலும் கூட, அவர்கள் அற்பக் காரணங்கள் கூறிப் பிளவுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்திய அரசியல் களத்தில் பாசிசம் வளர்ச்சி பெற்று வருவதற்கான களம் அமைக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்தியாவில் பாசிசம் வளர்வதற்கு ஓர் உள்ளார்ந்த தடை இருக்கிறது. இந்த நாட்டில், பெருமுதலாளித்துவ வர்க்கத்தினர் முழுமையாக சுதந்திரம் பெற்ற ஏகபோக முதலாளிகளாக இல்லை. அவர்கள் தமது இருத்தலுக்கும் வளர்ச்சிக்க்கும் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களை அல்லது அயல்நாட்டு நிதி நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தற்போது, பல ஏகாதிபத்திய வல்லரசுகள் சந்தையில் பெரும் பங்கினைப் பிடித்துக்கொள்ளப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகமயமாக்கலின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருந்துவரக் கூடிய, நாட்டை ஒரு நவ காலனியாக மாற்றுவதற்கு விரும்பும், ஒரே வல்லரசின் ஒற்றை மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்,  அப்படிச் செய்யும் முயற்சிகளுக்கு பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதில் சில இடர்ப்பாடுகள் இருக்கின்றன.

முழுவீச்சில் பாசிசத்தை நிறுவுவதற்கு, இந்திய ஆளும் வர்க்கங்கள், குறிப்பாக அவர்களில் மிகவும் தீவிரமான பிரிவினர், ஏகாதிபத்திய மூலதனத்தைச் சார்ந்திருப்பதை முற்றாக உதறித்தள்ள வேண்டியிருக்கும், அது ஏறத்தாழ சாத்தியமில்லை, அல்லது ஒரே ஒற்றை மேலாதிக்கத்தின் கீழ் வரவேண்டியிருக்கும், அதுவும் கூட ஒரு கடினமான தெரிவாகவே இருக்கும். ஆனால் ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு அரசு அனைத்து அதிகாரமும் பெற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. மேலும் அதற்காக இரும்புக்கரம் கொண்ட ஒரு சக்திவாந்த தலைவர் அந்த அரசை நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. பெருமுதலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினர், குறிப்பாக புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்ட காலக்கட்டத்திற்குப் பிறகு வானளாவ உயர்ந்துவிட்ட ஒரு பிரிவினர், அத்தகைய ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் இந்த வகையான ஆட்சி இந்திய வகைப்பட்ட ஒரு பாசிசத்தை வளர்த்துவிடும் என்பது தெளிவாகிறது.

பாரதிய ஜனதா கட்சி அண்மைப் பாராளுமன்றத் தேர்தல்களின் போது மேற்கொண்ட,  ஓர் ஆற்றல்மிக்க ஆரசு, ஓர் ஆற்றல்மிக்க கட்சி, ஓர் ஆற்றல்மிக்க தலைவர் என்ற பிரச்சாரம் எவ்வாறு ஒரு பாசிச அரசுக்கான அடிப்படைச் சூத்திரமாக இருந்தது என்பதைக் காணமுடிந்தது. அது ஒன்றும் யாருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. திரைமறைவில் ஆட்டுவித்த உண்மையான இயக்குனரான ஆர்.எஸ்.எஸ். க்கு ஒரு நீண்ட பாசிச ஆதரவு வரலாறு உண்டு.

“ஜெர்மனி இருந்த சூழ்நிலைமைகளில் நாஜிசம் ஜெர்மனியின் இரட்சகராக இருந்தது என்பது மறுக்கமுடியாதவகையில் நிரூபணமானது”. என்று விநாயக் தாமோதர் சாவர்கர் கூறினார். இருப்பினும், சாவர்கர் போலல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாட்டுத் தந்தையான கோல்வால்கர் பாசிசத்தை ஆதரிப்பதற்கு எந்தச் செயல்தந்திர முகமூடியையும் அணிந்துகொள்ளவில்லை.

“ஜெர்மன் இனப் பெருமிதம் தான் இன்றைய தலைப்புப் பொருளாக இருக்கிறது. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கு, ஜெர்மனி நாட்டிலிருந்து செமிடிக் இனங்களை -யூதர்களைக் - களையெடுத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இங்கு இனப்பெருமிதம் அதன் உச்சத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் அவற்றின் வேர்களுக்குச் செல்வது சாத்தியமற்று, ஒரே இனமாக ஒன்றுபடுத்தப்பட முடியும் என்று ஜெர்மன் காட்டியுள்ளது. அது இந்துஸ்தான மக்களுக்கு அதைக் கற்றுக்கொண்டு பயனடைவதற்கான ஒரு நல்ல படிப்பினையாகும்” என்று அவர் தெளிவாகவும் உரத்தும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “அன்னிய சக்திகளுக்கு இரண்டு வழிகள் தான் திறந்துள்ளன, ஒன்று தேசிய இனத்துடன் ஒன்றுகலந்து, அதையே பின்பற்றுவது, அல்லது அவர்களை தேசிய இனம் அனுமதிக்கும் வரை அதன் கருணையில் வாழ்ந்துவிட்டு, அதன் விருப்பத்தின்படி நாட்டை விட்டு வெளியேறிவிடுவது.”

இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பாசிசத்திற்கு மிகவும் பொருந்திப்போனது, இந்து மேலாதிக்க வெறியின் நாயகராகத் தோற்றம் பெற்றிருந்த நரேந்திர மோடியிடம், சிறுபான்மையினரை மட்டுமின்றி, அனைத்து வகையான எதிர்ப்புக்களையும், அவர் சொந்தக் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பு உட்பட, நசுக்கிவிடக் கூடிய, அழித்துவிடவும் கூடிய, திடசித்தமும் தந்திரமும் கொண்டிருந்த நரேந்திர மோடியிடம் அதன் தலைவரைக் கண்டுபிடித்தது. ஆனால் அவரை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்வார்களாக என்பது தான் பிரச்சனையாக இருந்தது.

இங்கும் கூட ஜெர்மன் பாசிஸ்டுகளிடமிருந்து பா.ஜ.க. எவ்வளவு பொருத்தமாகக் கற்றுக்கொண்டுள்ளது என்பதை ஒருவர் காணலாம். ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால், பெரும்பான்மையான மக்கள் அதை உண்மை என்று நம்பக்கூடிய ஒரு காலம் வரும் என்று பாசிஸ்டுகளின் அசாதாரணமான பிரச்சாரகரான கோயபல்ஸ் கற்றுக்கொடுத்துள்ளார். எதிர்கால பிரதமர் என்று மட்டுமல்லாமல், குஜராத் முன்மாதிரியில் “வளர்ச்சியைக் கொண்டுவரக் கூடிய ஒரு மனிதர்” என்றும் நரேந்திர மோடியை முன்னிறுத்துவதற்கு, ஓர் அயல்நாட்டு முகாமையை ஈடுபடுத்தி, அனைத்து வகையான ஊடகங்களையும் ப.ஜ.க. வளைத்துப் போட்டது.

ஆனால் உண்மையில் குஜராத் முன்மாதிரி என்பது என்ன? பெரும் எண்ணிகையிலான முதலாளிகளுக்கு, பெரும் சலுகைகள் அளிப்பதாகக் கூறி மோடி வெற்றிபெற்ற போதும் கூட, மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், குஜராத்தின் நிலை இந்திய மாநிலங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது, அதாவது எட்டு மாநிலங்களில் நிலைமை குஜராத்தில் விடச் சிறப்பாக உள்ளது. உடல் ரீதியான வாழ்க்கைத்தரம் குறித்த அட்டவணையில், அதாவது மக்களின் வாழ்க்கை நிலைமைகள பற்றிய உண்மையான அடையாளத்தைக் குறிக்கும் அட்டவணையில், குஜராத் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆனால் மோடி குஜராத்தைச் சொர்க்கமாக, வளர்ச்சியில் நாட்டின் முதல மாநிலமாக மாற்றிவிட்டார் என்பது போல ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர்.

அதன் விளைவாக, பா.ஜ.க. தேர்தல்களில் அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது. பெற்ற வாக்குகளின் விகிதம் அல்லது விழுக்காடு, பெற்ற இடங்களின் எண்ணிகையில் பிரதிபலிக்கவில்லை, ஆனால் இதுதான் இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம். பாராளுமன்ற ஜனநாயகத்தின் இருத்தலின் காரணமாக பாசிசத்தின் தோற்றம் அவ்வளவாகச் சாத்தியம் இல்லை என்று இந்தியாவில் சிலர் வாதிடலாம். இட்லரும் கூடத் தேர்தல்கள் மூலமாகத்தான் அதிகாரத்திற்கு வந்தார் எனபதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. சில அம்சங்களில், பா.ஜ.க. முசோலினிக்கு நெருக்கமாக இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி (இந்திய மக்கள் கட்சி) என்ற பெயரை எடுத்துக் கொள்ளலாம், முசோலினியின் கட்சி இல் போபோலோ டி இடாலியா (இத்தாலி மக்கள் கட்சி). இட்லரைப் போல அல்லாமல், பா.ஜ.க.வும் அதன் தொடக்க அவதாரங்களான இந்து மகாசபா, மற்றும் ஜன சங்கம் ஆகியவை சோசலிசத்தை ஒருபோதும் சொல்லளவில் கூட ஏற்றுக்கொண்டதில்லை. இங்கும் கூட அது முசோலினிக்கு நெருக்கமாக இருக்கிறது.

பா.ஜ.க.வின் முந்தைய ஆதரவாளர்கள் பெரும் வணிகர்களும், பெரும் நிலப்பிரபுக்களுமாக இருந்தார்கள். ஆனால் நரேந்திர மோடி அதன் ஆதரவாளர்களாக பெருமுதலாளிகளின் ஒரு பிரிவினைரையும் கொண்டுவந்துள்ளார். பெரும் முதலாளித்துவ வர்க்கம் முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கிறது, ஒரு பிரிவு அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவருகிறது. இது 26-5.2014 அன்று மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்களின் பட்டியலில் எடுத்துக்காட்டப்படுகிறது

1. ரிலையன்ஸ் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகேஷ் அம்பானி, அவரது மனைவி, இரண்டு மகன்கள்

2. அனில் அம்பானி, அவரது மனைவி, அவரது தாயார் (மோடி அவரது மனைவியையோ, தாயாரையோ  அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்பதைக் குறிப்பிடலாம்)

3. அசோக் இந்துஜா, இந்துஜா குழுமத்தின் தலைவர்

4. எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சசி ரூயா, பிரசாந்த் ரூயா

5. மிட்டல் சகோதரர்களான  சுனில், ராஜன், ராகேஷ்

6. அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி. இந்தத் தொழிலதிபர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தின் நேரடி ஆதரவுடன் பெற்றோலியம், கனிமங்கள், நீர், காற்று, மற்றும் எதைத்தான் இல்லை, நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதில் பெயர்பெற்றவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, அனைத்து எதிர்ப்புக்களையும் நசுக்கக்கூடிய  ஓர் இரும்புக்கரம் கொண்ட, எல்லையற்ற அதிகாரம் பெற்ற ஓர் அரசு மிகவும் பொருத்தமானது.

அத்தகைய சூழ்நிலைகளில், பாசிச அபாயம் ஊடும்பாவுமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டதும், கங்கா பூசையை மேற்கொண்டதும் இந்துத்வா சக்திகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பியுள்ளது. குஜராத் படுகொலைகளுக்கான அவரது பொறுப்பை அவர் உதறிவிட்டிருந்தாலும், அவர் உண்மையில் மாறிவிடவில்லை. ஆனால் இந்தியாவில் முழுமையான பாசிசத்தை நிறுவுவதற்கு சில புறநிலைத் தடைகள்  இருக்கின்றன.

ஒரு தீவிரமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுவருவதற்காக, புறநிலைச் சூழல் எப்படி மாறுகிறது என்பதைக் காத்திருந்து கவனித்துவர வேண்டியுள்ளது. மேலும் பா.ஜ.க.வுக்குள்ளேயே மிதவாத சக்திகள் இருக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். காசா மீது தாக்குதல் நடத்தும் இசுரேல் மீது கண்டனம் தெரிவிப்பதை மோடி அரசாங்கம் எதிர்க்கிறது மேலும் இந்த விடயத்தில் எந்த விவாதத்தையும் அது எதிர்க்கிறது. ஆனால் ஒரு துணை அமைச்சர் மேலவையில் விவாதத்திற்கு ஒப்புக்கொண்டார். அயலுறவுக் கொள்கையில் நரேந்திர மோடி இதுவரை முந்தைய ஆட்சியாளர்களின் நிலையிலிருந்து இதுவரை விலகிச்செல்லவில்லை.

மறுபுறம், பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் காங்கிரஸ், இ.பொ.க.(மார்க்சிஸ்டு), திரிணாமுல் காங்கிரஸ்  உட்பட, ஒழுங்காக இல்லை. அவர்கள் அனைவருமே  ‘வளர்ச்சி’ நிகழ்ச்சிநிரலையே முன்னிறுத்துகிறார்கள், AVBARKALUTIAYA அவர்களுடைய எதிர்ப்பு மென்மையானதாகவும்  அரை மனதுடன் கூடியதாகவும் இருக்கிறது, அவர்கள் அப்படி இருப்பது மோடிக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

அவர்கள் அனைவருமே மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, யார், எப்போது பதவிக்கு வந்தாலும் சரி, நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்போருக்கு எதிராகப் போராடத் துணிந்தவர்களை நசுக்கினார்கள், இன்னும் நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடக்குமுறை கொலை உடபட் பல்வேறு வடிவங்களில் வந்தது, வந்துகொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராமம் அல்லது சிங்கூர் ஆனாலும் சரி, ஒரிசாவில் கலிங்காநகர் ஆனாலும் சரி, ஆந்திரப்பிரதேசத்தில் சிரிகாகுளம் ஆனாலும் சரி, அல்லது தற்போதைய மேற்கு வங்கம் ஆனாலும் சரி, அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுவதற்கு மக்கள் வந்தாலும் கொடூரமாக அடக்குவதே ஒரே வழியாக இருந்துவந்துள்ளது. இருப்பினும், அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம்  அவர்களுடைய சொந்தத் தேர்தல் நலன்களில் தான் பா.ஜ.க.வும் நரேந்திர மோடியும் அதிகாரத்திற்கு வருவதை எதிர்க்க முயற்சி செய்தார்கள்.

மேலும் பல்வேறு ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டியும், மோடியின் பாசிச ஆட்சியைக் கட்டியமைக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். மோடி அரசாங்கம் ஏற்கெனவே காப்பீட்டுத் துறையையும் பாதுகாப்புத் தொழில்துறையையும் அயல்நாட்டு மூலதனத்திற்குத் திறந்துவிட்டுள்ளது, மேலும் பல்வேறு ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்த முக்கியமான துறைகளில் நுழைவதற்கு ஒன்றுடன் ஒன்று போட்டியிடும்.

பாசிச அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்குப் பல்வேறு இடையூறுகள் இருக்கின்றன. எனவே, அந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்குச் சிறந்தவழி உழைக்கும் மக்களின் இயக்கதை வளர்த்தெடுப்பதே ஆகும், அதுதான் அடிப்படை மக்கள்திரளின் பலத்தின் அடிப்படையில், மக்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் முறியடிக்க முடியும்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை, விவசாய வர்க்கத்தையும், தொழிலாளர் வர்க்கத்தையும், குட்டி முதலாளிய வர்க்கத்தையும், தலித்துக்களையும், சிறுபான்மையினரையும், பழங்குடிகளையும், ‘வளர்ச்சி’ என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிநிரலுக்கு எளிதில் இரையாகிவிடக் கூடிய வேலையில்லா இளைஞர்களையும் கூட,  திரட்டுவதற்கு முயற்சி செய்ய  வேண்டும். அது அனைத்து வகையான் இயக்க வடிவங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது, ஏகாதிபத்தியத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆகியவற்றின் சதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கும், ஜனநாயக மக்கள்திரளினரை அணிதிரட்டவும், ஜனநாயக இயக்கங்களை பலப்படுத்தவும், பாராளுமன்ற வழியையும், பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழியையும், சட்டபூர்வமுறைகளையும், சட்டவிரோத முறைகளையும், அமைதியான முறைகளையும், ஆயுதம் ஏந்தும் முறைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

பாசிச எதிர்ப்பு முன்னணியை வளர்த்தெடுப்பதற்கான உண்மையான புறநிலைச் சூழல் முதிர்ச்சியடையாத வரை, ஆளும்வர்க்கங்களிடையே கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் எந்த முயற்சியும்,  தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமின்றி, ஆளும்வர்க்கங்களின் ஒரு பிரிவின் நலன்களுக்கும் சேவை செய்வதாகவும் இருக்கும். மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு, ஒன்றிணைக்கமுடிந்த அனைத்து சக்திகளையும் அணிதிரட்டவேண்டி வரும்போது,  அத்தகைய அணிதிரட்டல்களுக்கான பணியை மறுக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல.

ஆனால் அத்தகைய பிரச்சனை சார்ந்த கூட்டணிகள், ஓர் அரசியல் கூட்டணியான, பாசிச எதிர்ப்பு முன்னணியுடன் சமப்படுத்திப் பார்க்கப்படக் கூடாது. வளர்ச்சியின் சிறிய பகுதிகள் மூலம் கிடைக்கும் அற்பப் பலன்களைக் காட்டி, பாதுகாப்புத் துறையையும், காப்பீட்டுத் துறையையும் முன்பைவிடப் பெரிய அளவிற்குத் திறந்துவிட வழிவகுக்கச் செய்துவிடும். அத்தகைய குழப்பம் ஒரு மாயையை உருவாக்கி, மக்களின் எதிர்ப்புப் பார்வையை மங்கச் செய்து விடும்.

இன்றைய காலங்களில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அற்பச் சலுகைகள் ஜனநாயகமாகக் காட்டப்படுகின்றன, டாம் ஹெல்டர் என்ற கிறித்தவச் செய்தியாளர் ஒருவரின் சிறிய கூற்றை இங்கு மேற்கோள் காட்டலாம்:

“ஏழைகளுக்கு நான் உணவை வழங்கிய போது, அவர்கள் என்னை ஒரு புனிதர் என்று அழைத்தனர். ஏழைகளுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்று நான் கேட்கிற போது, அவர்கள் என்னைக் கம்யூனிஸ்டு என்று குறிப்பிடுகின்றனர்.”

இந்திய மக்களுக்கு ஏன் உணவும் வேலையும் கிடைக்கவில்லை,  தேசிய இயற்கை வளங்கள் ஏன் கொள்ளையடிக்கப்படுகின்றன, மக்கள் ஏன் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கின்றனர் என்று கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜனநாயகம் என்பது அரசாங்கங்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; அதன் பொருள் மக்கள் தமது சொந்த நலன்களுக்காக, தங்களுடைய சொந்த அரசை நிர்வகிக்கும் மக்களுடைய உரிமை ஆகும். அந்த ஜனநாயக்த்திற்கான போராட்டம் தான் உண்மையிலேயே பாசிச அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டமாக இருக்க முடியும்.

உண்மையான எதிரிகளுக்கு எதிராக, உண்மையான நட்புசக்திகளைத் திரட்டுவோம். தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான தலைவர்கள் அறைகூவலை எதிர்கொள்ள வேண்டும், துணிவுடனும், அச்சமின்றியும், அனைத்து முனைகளிலும் எதிர்ப்பை முன்னிறுத்தி வெற்றியைப் பெறவேண்டும். அவர்கள் தமது குறுங்குழுவாதத்தை, உன்னைவிடப் புனிதமானவன் என்பது போன்ற அனைத்து வகையான மனப்போக்கையும் கைவிட்டு, மக்களின் நலன்களில் ஒன்றுபட்டால் மட்டுமே இதைச் சாதிக்கமுடியும்.

நன்றி: அலோக் முகர்ஜி, பிரான்டியர், தொகுதி 47, எண்.11-14, செப்டமபர் 21 – அக்டோபர் 18, 2014. 

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It