பெருந்துறை கொக்கோ கோலா ஆலையில் காங்கிரசு கட்சியின் நிலைபாட்டை முன் வைத்து ... காங்கிரசு கமிட்டி தலைவர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு சில கேள்விகள்

EVKS Ilangovanநக்கீரன் இணைய இதழில் (http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=140602) பெருந்துறை கொக்கோ கோலா ஆலைக்கு தமிழக அரசு கொடுத்த அனுமதி பற்றியும், அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் சட்டசபையில் கொடுத்துள்ள தவறான செய்தியை விமர்சித்தும் சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீங்கள் பேசியதாக செய்தி வெளிவந்து உள்ளது. மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள். மக்கள் பிரச்சினையை ஊடகத்தில் கொண்டு சென்றதற்கு நன்றி.

ஆனாலும் நீங்கள் கொக்கோ கோலா பற்றி கொண்டுள்ள நிலை பற்றியும், உங்களது கட்சியின் கொள்கைகளில் உள்ள சில விசயங்களைப் பற்றியும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் நாங்கள் (மக்கள்) உள்ளோம்.

நீங்கள் அங்கம் வகிக்கும், பொறுப்பில் உள்ள காங்கிரசு கட்சி தான், 1977 -இல் ஜனதா அரசால் FERA சட்டப்படி வெளியேற்றப்பட்ட கோக் நிறுவனத்தை, 16 ஆண்டுகள் கழித்து காட் ஒப்பந்தப்படி உலகமயமாக்கல் என்ற பெயரில் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது.

அப்போது 60 சதவிகித குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே வின் (கோல்ட் ஸ்பாட் ,தம்ஸ் அப் , லிம்கா, புரூட்டி) நிறுவனத்தை கொக்கோ கோலா நிறுவனம் ஆறே மாதத்தில் அடியோடு விழுங்கும் வகையில் (இடம், தண்ணீர், வரி உட்பட) பல்வேறு சலுகைகளை கொக்கோ கோலா நிறுவனத்திற்கு வாரி வழங்கியது காங்கிரசு கட்சி அரசு.

தமிழகத்தின் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர், லவ் ஓ, லிவ் ஓ உட்பட அனைத்து உள்ளூர் குளிர்பான நிறுவனங்களையும் கொக்கோ கோலா மூலம் இந்தியாவை ஆண்ட காங்கிரசு கொண்டு வந்த கொள்கைதான் அழிக்க வைத்தது.

இன்று நாட்டில் 60 இடங்களில் கொக்கோ கோலாவும், 24 இடங்களில் பெப்சி நிறுவனமும் ஆலை அமைத்து, குளிர்பானம் உற்பத்தி செய்து நாட்டின் 93 சதவிகித குளிர்பான சந்தையை கைப்பற்றி உள்ளன. இதில் உள்ள பெரும்பாலான ஆலைகளுக்கு, உங்கள் கட்சி ஆளும்போதுதான் அனுமதி கொடுக்கப்பட்டது. கொக்கோ கோலா, பெப்சியை எதிர்த்து வாழ்வாதாரம் அழிகிறது எனப் போராடும் மக்களை, காங்கிரசு கட்சி அரசுதான் பல்வேறு முறைகளில் ஒடுக்கி வந்தது என்பதுதான் நடைமுறை உண்மை.

திருச்சி -சூரியூரில் உங்கள் கட்சியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (முன்னாள் எம்.பி.) குடும்பத்தினரின் எல்.ஏ.பாட்டிலர்ஸ் நிறுவனம் பெப்சிக்கு, தினமும் 90 லட்சம் லிட்டர் நிலத்தடி தண்ணீரை யாரிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல் எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக குளிர்பானம் தயாரித்து தந்து கொண்டு உள்ளது. சூரியூரில் போராடும் மக்களை போலீசை வைத்தும், அதிகாரிகளை வைத்தும் அடக்கி வருகின்றனர்.

பெருந்துறையில் கொக்கோ கோலா ஆலையை எதிர்த்து காங்கிரசு கமிட்டி தலைவர் இளங்கோவன் அவர்கள் பேசுவதை உண்மையில் நாங்கள் மனதார வரவேற்கின்றோம். ஆனால் உங்கள் கட்சி கொள்கையை (கொக்கோ கோலா, பெப்சிக்கு ஆதரவாக உள்ள) விமர்சித்து மாற்றாமல், இதுவரை ஆதரித்து செயல்பட்டதற்கு மக்களிடம் மன்னிப்பு எதுவும் கேட்காமல், உங்கள் கட்சிக்காரர் செய்யும் தொழிலை (பெப்சி தயாரிப்பது) இதுவரை எதுவும் தடுக்காமல், நீங்கள் பேசுவது உண்மையில் யாரை ஏமாற்றுவதற்க்கு? இல்லை உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா?

தமிழகத்தில் அரசுக்கு வரும் எதிர்ப்பை தனதாக்கிக் கொள்ள, வழக்கம் போல் மக்களை மடையர்களாக எண்ணிக் கொண்டு, எதை வேண்டுமானாலும் பேசலாம் என உள்ளீர்களா ?

கொக்கோ-கோலா பற்றி தற்போது காங்கிரசு கொள்கைதான் என்ன? பெருந்துறையில் மட்டும் விவசாயத்தை அழிக்கும் கொக்கோ-கோலா ஆலைக்கு எதிர்ப்பு; ஆனால் தமிழகத்தில் மற்ற பகுதியில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, பெப்சி ஆலை பற்றி இதுவரை நீங்கள் எதுவும் பேசியதில்லை. அதில் உங்கள் கொள்கை முடிவுதான் உண்மையில் என்ன? மக்களிடம் நேர்மையாக இதைச் சொல்ல முடியுமா உங்களால்?

உண்மையில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி கொக்கோ-கோலா, பெப்சியை எதிர்ப்பது பற்றி எப்படி இருந்தாலும் கவலையில்லை; தமிழகத்தில் எங்களது நிலைப்பாடு, கொக்கோ-கோலா, பெப்சியை எதிர்ப்பது என தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியில் முடிவு ஏதாவது எடுத்து உள்ளீர்களா? இதை அகில இந்திய காங்கிரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் ஏதாவது போட்டு உள்ளீர்களா? அப்படி இருந்தால் நேர்மையாக சொல்லுங்கள்.

உள்ளூரில் காங்கிரசு கமிட்டியில் உறுப்பினராக, பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் பெருந்துறையில் கொக்கோ -கோலா ஆலை வந்தால், தங்களின் வாழ்வாதாரம் அழியும், குடிநீர் வளம் அழியும், விவசாயம் அழியும், தங்களின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நிலையை உணர்ந்து போராட்டக் களத்தில் உள்ளனர். இப்படி உள்ளூர் கட்சிக்காரர்கள் இருப்பது என்பது இயல்பு. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடங்கி அனைத்து வாழ்வாதாரம் பாதிக்கும் பிரச்சினைகளிலும் கட்சி முடிவு பற்றி எதுவும் கவலைப்பட மாட்டார்கள். நான் அவர்களோடு பல இடங்களில் இணைந்து பணியாற்றியும் போராட்டங்களில் பங்கேற்றும் உள்ளேன்.

ஆனால் கொள்கைகளை முடிவு செய்யும் அகில இந்திய காங்கிரசு கமிட்டியில் உறுப்பினராக உள்ள, தமிழக காங்கிரசு கமிட்டித் தலைவராக உள்ள திரு.இளங்கோவன் அவர்களே, நீங்கள் எந்த கொள்கை அடிப்படையில் கொக்கோ - கோலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் எனக் கூறுங்கள்.

நாளை உங்கள் அகில இந்திய தலைமை கொக்கோ - கோலா ஆதரவு நிலைப்பாட்டை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லா விட்டாலோ, அல்லது கொக்கோ - கோலா பற்றி உங்களை எதுவும் பேசக் கூடாது என சொல்லி விட்டாலோ நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என சொல்ல முடியுமா திரு. இளங்கோவன் அவர்களே.

தமிழக மக்கள் பொய்யான, நேர்மையற்ற அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால்களை நம்பி, நம்பி இதுவரை ஏமாந்தது போதும். எப்போதும் பொய் கூறி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதி போல், அப்பாவி மக்களை ஏமாற்ற நேரத்திற்க்கு ஒரு பேச்சு என்பதை உண்மையில் மாற்றி நேர்மையாய் தாங்கள் செயல்பட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

- முகிலன்

Pin It