நரேந்திர மோடி அரசு, பதவி ஏற்ற பின், அது செயல்படும் அரசு மட்டும் அல்ல; விரைவாகச் செயல்படும் அரசு என்று கூறிக் கொண்டு, சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு முறையான வழியைக் கடைப்பிடிக்காமல், அவசரச் சட்டங்கள் மூலம் செயல்படவே ஆர்வம் காட்டுகிறது.

Modi in parliament
காப்பீட்டுத் துறையில்அந்நிய முதலீட்டு வரம்பை 26%இலிருந்து 49%க்கு உயர்த்துவதற்கு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது.

அதே போல் நில எடுப்புச் சட்டத்தில் விவசாய நிலங்களைப் பெரும் அளவில் கையகப்படுத்தும் பொழுது, பெரும்பான்மை விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதியை நீக்கவும், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதியை நீக்கவும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது.

இவற்றைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் "கடுமையாக" எதிர்த்தன. பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற மேலவையில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால் இச்சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற காங்கிரசின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆகவே பா.ஜ.க. காங்கிரசுடன் "பேச்சு வார்த்தை" நடத்தியது.

காப்பீட்டுத் துறையில் இந்திய அரசின் நிறுவனங்கள் 99% மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்து இருக்கும் நிலையில், அந்நிய நாட்டு நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் 7.85% மக்களுக்கும், அடுத்த காலகட்டங்களில் 1.12 % மக்களுக்கும் மட்டுமே சேர வேண்டிய பணத்தை அளித்து உள்ளன. இவ்வாறு மக்களை ஏமாற்றும் அந்நிய முதலாளிகளின் முதலீட்டை 26%இலிருந்து 49%க்கு உயர்த்தி, இந்திய மக்களை மேலும் ஏமாற்ற அனுமதிக்க வேண்டுமா? மக்கள் நலனைப் பற்றி அக்கறைப் படாத ஆளும் கட்சி, உலக முதலாளிகளின் நெருக்கடியைத் தீர்க்க, அதைச் செய்தே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.

இதை எதிர்த்த காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியுடன் "பேச்சு வார்த்தை" நடத்தி, இச்சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்படப் போவது இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தானே ஒழிய, அதிகார மையங்களில் உள்ளவர்களோ, அரசியல் அதிகாரப் பிடிப்பு உள்ளவர்களோ அல்லர் என்பதைப் புரிந்து கொண்டு, காப்பீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்து விட்டன. காங்கிரஸ் கட்சியின் நேரடி ஆதரவுடனும், மற்ற எதிர்க் கட்சிகளின் 'வெளி நடப்பு செய்தல்' போன்ற மறைமுக ஆதரவுடனும் 12.3.2015 அன்று இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

நில எடுப்புச் சட்டத் திருத்தத்தைப் பொறுத்த மட்டில், கூலி விவசாயிகள் மற்றும் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் மட்டும் அன்றி, பெரும் நில உடைமையாளர்களும் பாதிக்கப் படுகின்றனர். ஆகவே பொது மக்களை மட்டுமே ஏமாற்றும் காப்பீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது போல, நில எடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தர முடியாமல் தவிக்கின்றனர்.

அது மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் வருணாசிரம அதர்மத்தை வெளிப்படையாகவே நிலைநிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள், அதற்கான உள் கட்டமைப்புப் பணியாக, முதலில் கிராமப் புறங்களில் தங்கள் கிளைகளை நிறுவ முயன்று கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இச்சட்டத் திருத்தம் அதற்கு ஒரு தடையாக இருக்கிறது என்று அவை நரேந்திர மோடியைச் செல்லமாகக் கடிந்து கொள்கின்றன.

வருணாசிரம அதர்மத்தை வெளிப்படையாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை; இப்போதைய வடிவமே பார்ப்பன ஆதிக்கம் அசைக்க முடியாத நிலையில் திருப்தியாகவே உள்ளது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சியோ, கிராமப்புற நிலமற்ற கூலி விவசாயிகளைப் பற்றிக் கவலைப் படவே இல்லை. அக்கட்சியின் எண்ணம் எல்லாம் நில உடைமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பற்றியே சுற்றிச் சுற்றி வருகிறது. சோனியா காந்தி அன்னா ஹசாரேக்கு 14.3.2015 அன்று எழுதிய கடிதத்தில் அவருடைய கவலையைக் காங்கிரஸ் கட்சி முற்றிலும் புரிந்து கொண்டு உள்ளது என்றும், நில உடைமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்காக தன் கட்சி முழு வலிமையுடன் பாடுபடும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இச்சட்டத் திருத்தமே நிலம் கையகப்படுத்துவதற்குப் பெரும்பான்மை விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதியையும், சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் பாதிப்பைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதியையும் நீக்க வேண்டும் என்பதைப் பற்றித் தான். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இழப்பீட்டுத் தொகையைப் பற்றி மட்டும் பேசுவது எதைக் காட்டுகிறது? உழைக்கும் மக்களைப் போல் நில உடைமையாளர்கள் அரசியல் அதிகாரத்தில் பிடிப்பு இல்லாதவர்கள் அல்லர்; அதே சமயம் முதலாளிகளைப் போல் வலுவான பிடிப்பு உடையவர்களும் அல்லர்.

பொது மக்களை மட்டுமே பாதிக்கும் காப்பீட்டுச் சட்டத் திருத்தம் நிறைவேறச் "சாதாரண பேச்சு வார்த்தையே" போதுமானதாக இருந்தது. ஆனால் நில எடுப்புச் சட்டத் திருத்தம் அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் இதில் கூலி விவசாயிகள், பொது மக்கள் அல்லாமல் நில உடைமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுள் கூலி விவசாயிகளும் பொது மக்களும் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டு விட முடியும். ஆனால் நில உடைமையாளர்களை அப்படி விட முடியாது; அதே சமயம் இவர்களுடைய நலன்களை விட முதலாளிகளின் நலன்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க முடியும். ஆகவே அவர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்காக மட்டுமே ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொண்டு போராடுகின்றன.

உழைக்கும் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தங்கள் நலன்களைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாத தேர்தல் அரசியல் கட்சிகளை நம்பியே இருக்கப் போகிறார்களா? அல்லது இந்த ஏமாற்று அரசியல் கட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு, தங்கள் சுதந்திரத்திற்காக மக்கள் இயக்கத்தைத் தொடங்கப் போகிறார்களா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.3..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It