புலி எதிர்ப்பரசியலில் காலச்சுவடு கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலை எதிர்ப்பும், சிங்களப் பேரினவாதமும்
அறிவுலகம் தனது கருத்தாக்கங்களை மக்கள் போராட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றும்போது போராட்டங்கள் கூர்மையடைவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த அறிவுலகம் விலைபோகும் பட்சத்தில் அல்லது நேர்மையற்றதாய் மாறும் பட்சத்தில், அது நேர் எதிர்மறையான கருத்துருவாக்கத்தை படைக்கிறது அல்லது போராட்டத்தை எதிர்த்திசையில் சித்தரிக்கிறது. கருத்துக்கள் ஆளும் இக்காலகட்டத்தில் பிழையாக சித்தரிக்கப்பட்ட போராட்டம் எளிதாக தோற்கடிக்கப்படுகிறது. அந்தப் போராட்டம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நிற்கிறதோ அதே தத்துவத்தின் வாயிலாக அப்போராட்டத்தை தவறாக சித்தரிக்கும்போது அப்போராட்டம் எதிரிகளால் எளிதாக வேட்டையாடப்படுகிறது. இந்த வகையான உள்ளறுப்புப் பணிகள் ஒரு கூலிப்படைக்கு ஒத்ததாகவே கருதப்படும். உலகில் பல்வேறு போராட்டங்கள் இவ்வாறு தவறாக சித்தரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருக்கின்றன. பல போராட்டங்களை நேர்மையான சிந்தனையாளர்கள் காப்பாற்றியும் இருக்கிறார்கள், பாலஸ்தீன போராட்டம் உட்பட. சில போராட்டங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும் தன் மீது வைக்கப்பட்ட நேர்மையற்ற அவதூறுகளை உடைத்து நேர்மையை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வகையில் இந்தியாவில் அறிவுசீவிகளின் மத்தியிலும், மற்றவரிடத்திலும் வேட்டையாடப்பட்ட போராட்டங்களில் புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்றாக பார்க்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட வன்மம், நேர்மையின்மை, விலைபோதல், இந்திய தேசியத்தை - பார்ப்பனியத்தைப் பாதுகாத்தல் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இப்போராட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டது. இது தவிர இப்போராட்டத்தை தவறாக சித்தரித்து விவாதத்தை உருவாக்குவதன் மூலம் விடுதலை கருத்துருவாக்கத்தை பின்னுக்குத் தள்ளுதல், உடைத்தல், விடுதலைப் போராட்டம் அதன் பின்னடைவிலிருந்து எழுந்து வருவதை தடுத்தல் என்பதும் அடக்கம். அவை அனைத்திலும் ஓர் ஒற்றுமையை நாம் கவனித்தால் இவர்கள் ஒருபோதும் சிங்கள அரசின் பேரினவாத வன்முறையை, அதன் வரலாற்றை ஆழமாக கேள்வி கேட்காதவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் உணர முடியும். சிங்களப் பாசிசத்தை தொகுக்காதவர்களாகவும், அதை மேம்போக்காக சித்தரிப்பவர்களாகவும், அதிக பட்சமாக போகிற போக்கில் சிங்களப் பாசிசம்- புலிப்பாசிசம் போன்றது என்பதாக இணைத்து புலிப்பாசிசத்தை தீவிரமான ஒன்றாகக் காட்டுவதற்கு பயன்படுத்தியும் உள்ளார்கள். இந்தச் செயல்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் இனப்படுகொலை போருக்குப் பிறகு அமைதிகாப்பவர்களாகவும் அல்லது விடுதலைப் போராட்டத்தை மனித உரிமைமீறலாக சித்தரிப்பதையும் நாம் காணலாம்.
இதன் மூலமாக 60 ஆண்டுகாலப் போராட்டத்தை கருத்தியல் ரீதியில் புறக்கணிப்பது, விடுதலைப் போராட்டத்தின் தேவையை மறுப்பது, சிங்களப் பாசிசத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என பலவாறு எதிர்அரசியல் புரிவதை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகளை விமர்சனம் செய்ய இருக்கும் விருப்பமும், தன்முனைப்பும் ஒடுக்கப்படும் தமிழர்களைப் பற்றியும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பற்றியும் அல்லது நேர்மையற்று நடந்து கொள்ளும் இந்திய-சர்வதேச அரசுகளைப் பற்றியும் ஒரு போதும் இருந்ததில்லை. மேலும் மிகக் கவனமாக புவிசார் அரசியல் நிலைமையையும், சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்கேற்பைப் பற்றியும், குறிப்பாக வல்லாதிக்க-ஏகாதிபத்திய நலன் நகர்வுகளை ஒரு போதும் தவறிக்கூட தங்கள் கட்டுரைகளில், வாதங்களில் குறிப்பிட மாட்டார்கள். அதாவது இவர்களின் முழு நோக்கமும் போராட்டம் வெல்லவேண்டும் என்பதல்ல, அல்லது மக்களின் மீதான அக்கறை என்பதல்ல, இவர்கள் தனது தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக (அல்லது மூலைக்குத் தள்ளப்பட்ட தனது அறிவு செறுக்கின் கோபம்) அல்லது சிங்கள அரசால் அடியாட்களாக மாற்றப்பட்டு எழுதுகிறார்கள் என்பதே. இவர்களை அறிவுசீவி அல்லது கருத்துருவாக்க அடியாட்கள் என்று அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இந்த தொழிலின் மூலம் இவர்கள் தங்களது அறிவுசீவி கிரீடத்தை காத்துக்கொள்வதுடன் இவர்களின் எசமானனுக்கு வேண்டிய இடைவெளியையும் உருவாக்கித் தருவார்கள். இதன் மூலம் போராட்டம் தனது ஆதரவு தளத்தை வெகுவாக இழக்கும், பின்னர் அதன் தார்மீக இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழலையும் எதிர்கொள்ளும். தனது முதன்மைப் போராட்டத்தை நடத்துவதுடன் இந்த போலியான சூன்யத்தையும் எதிர்கொண்டு வென்றாக வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். இதை திறம்பட உயர்சாதி ஊடகங்களும் அதன் அறிவுசீவிகளும் காலம் காலமாக செய்து வருவதை நாம் அறிவோம். இந்த வகையில் காலச்சுவடு கருத்துருவாக்க அடியாளுக்குரிய அனைத்து தகுதிகளுடன் தமிழகத்தில் வலம் வருகிறது.
சீர்குலைவு தாக்குதல்கள்
காலச்சுவடு தனது எசமானனுக்கு விசுவாசமாக தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கட்டுரைகளை வைத்துக் கொண்டு வருகிறது. புலிகளின் மீது விமர்சனங்கள் வைக்கக் கூடாது என்பதல்ல எமது நிலைப்பாடு. எந்த அடிப்படையில் யாருக்கு பலம் சேர்க்கும் வகையில் இக்கட்டுரைகள் இருக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே எமது எதிர்ப்புகள்.
எந்த காலச்சூழலில் இத்தகைய விமர்சனங்களை காலச்சுவடு மேற்கொள்கிறது என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டும். காலச்சுவடின் கட்டுரைகள் மிகச்சரியான காலகட்டத்தில் சிங்கள அரசை காக்கும் நேரங்களில் வெளியிடப்படுகின்றன. காலச்சுவடின் வியாபார நோக்கத்தையும் அதற்காக அது செய்யும் பசப்பு வேலைகளையும் முன்னரே மே பதினேழு இயக்கம் கட்டுரையாக வெளியிட்டு இருந்தது. நேரடியாக வாசித்தாலும் சரி, மறுவாசிப்பு செய்தாலும் சரி அல்லது குப்புறப் படித்து வாசித்தாலும் சரி காலச்சுவடின் அயோக்கிய புத்தியை அம்பலப்படுத்துவது முடியாத காரியமல்ல.
காலச்சுவடின் தொடர் ‘கருத்துருவாக்க அடியாள்’தனம்
ஒரு புலி எதிர்ப்பு கட்டுரையை கடந்த டிசம்பர் 2011 இதழில் காலச்சுவடு வெளியிட்டு இருந்தது. http://www.kalachuvadu.com/issue-144/page23.asp. புலிகளை விமர்சித்து இப்படி ஒரு அரைகுறை பிரசவத்தை அவசர அவசரமாக வெளிப்படுத்தி இருப்பதன் அவசியம் என்ன?
2009 இனப்படுகொலை போர் முடிந்ததும் ‘கிழக்கிலிருந்து ஒரு கடிதம்’ என ஒரு அனாமதேய புலி எதிர்ப்புக் கடிதம் வெளியிடப்பட்டதன் அவசியம் என்ன? நேர்மையற்றக் அக்கடிதக்கட்டுரையை போலியானது என ஒரு குழந்தைகூட நிரூபிக்கும் எனும்போது எதற்காக அக்கட்டுரை வெளியிடப்பட்டது.?
இதே போல கடந்த 2011 சனவரியில் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டபோது, வழக்கம்போல படுகொலையை நியாயப்படுத்த புலிகளை சொல்ல முடியாத நிலையில் ஒரு புதுக் கதையை இந்திய அறிவுசீவி வர்க்கம் வெளியிட்டது. இந்த கட்டுக்கதை காலச்சுவடிலும் வெளிவந்தது. இந்திய அரசு அதிகார வர்க்கத்துடன் இணைந்து நிதி ஆதாரத்திற்காக செயல்படும் ஒரு அரைவேக்காட்டு அறிவுசீவியிடம் நேர்மையற்ற அந்த பேட்டியை வாங்கி வெளியிட்டது காலச்சுவடு.
இவ்வாறு எண்ணற்ற செயல்பாடுகளை காலச்சுவடு போகிறபோக்கில் எழுதிவிட்டுப் போவதன் காரணம் என்ன?
தமிழினப் படுகொலைப் போர் முடிந்தவுடன் மொத்த உலகமும் இலங்கை அரசின் பயங்கரவாத்தைக் கண்டு திகைப்புற்றபோது, பிரச்சினையை திசை திருப்பும்விதமாக புலிகளின் எதேச்சதிகாரம் என்ற கட்டுரையை வரைந்தது. ஏற்கனவே முடக்குவாதத்தில் சிக்கி இருக்கும் தமிழ்நாட்டு மாற்று அறிவுசீவிகளுக்கு ஏதுவாக இந்தக் கட்டுரை அமைந்தது. “சரிதான், நாம் புலிகளை எதிர்த்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது” என்ற உள்மன சாந்தியை அவர்களுக்கும், அவர்களின் தொடர் வியாதிக்கட்டுரைகளால் ஏற்கனவே அரசியலற்றுப் போன தமிழகத்தின் மாற்று அறிவுசீவி வாசகனுக்கும் இக்கட்டுரை அளித்திருக்கும். தமிழ்நாட்டைத்தவிர வேறு எங்கேனும் இத்தகைய இனப்படுகொலை நடந்த பிறகு ஒரு கட்டுரை எழுதியிருந்தால், இந்நேரம் காலச்சுவடு காணாமல் போயிருக்கும் அல்லது அறிவுசீவி மஞ்சள் பத்திரிக்கையாக அறியப்பட்டிருக்கும்.
இதே போல இப்பொழுது வெளிவந்திருக்கும் கட்டுரை புலிகளின் மீதும், தமிழினப்படுகொலை பற்றியும் ஒரு நேர்மையான சுயவிமர்சனமாக இல்லாமல், புவிசார் அரசியல், புவிசார் பொருளாதாரம், வளர்ந்து வரும் கடற்சார் வர்த்தகம்-பாதுகாப்பு என 2000ஆம் வருடங்களில் விரியத் தொடங்கிய நகர்வுகளை இருட்டடிப்பு செய்து எழுதப்பட்டது மட்டுமல்லாமல், அரைவேக்காட்டு அரசியலறிவு, காழ்ப்புணர்ச்சி நிறைந்து எழுதப்பட்டுள்ளது. உணர்ச்சி வயப்பட்ட அரசியலே இத்தகைய விமர்சனங்களை தடுக்கிறது என்று சப்பைக்கட்டு வேறு. புலிகளை விமர்சித்துப் பேசலாம்; ஆனால் அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியம். ஆதாரங்கள், அன்றைய சமகால நகர்வுகள், இனப்படுகொலைப் போரின் யுக்திகள், இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற சர்வதேச ஊடுறுவல்கள், மேற்குலக நாடுகளின் ரவுடித்தனங்கள் என மிகப்பெரிய ஆய்வை முன்வைக்கும் அளவிற்கு விடயங்கள் இருக்கும்போது வெறுமனே '9/11க்குப் பிறகு அமெரிக்கா புலிகளை இப்படிப் பார்த்த்து', 'புலிகள் இப்படி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை', 'ஐரோப்பா இதை கண்டுகொள்ளவில்லை', 'இந்தியா கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை' என சப்பைகட்டு வாசகங்களை வைத்துக் கொண்டு 'கட்டுரை போட்டி'க்காக எழுதியது போன்று எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. எழுதியவர் தனது வாதங்களை நேரடியாக ஒரு பொது மேடையில் விவாதத்திற்கு வைப்பாரென்றால் அனைத்து பிதற்றல்களும் உடைந்து போகும் என்பதையும் நாங்கள் இங்கு முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்தக்கட்டுரையின் சில சாரம்சங்களை காண்போம்.
//புலிகள் ஏன் இத்தகையதொரு முடிவைச் சந்திக்க நேர்ந்தது? இந்திய ஆய்வாளர் ஒருவர் சொல்வது போன்று அது அவமானகரமான முடிவு.// இந்த ஆய்வாளர் யாரென்று சொன்னால் அதன் பின்னுள்ள அரசியலையும் நாம் சேர்த்து வாசகர்களுக்குச் சொல்லலாம். சொல்வாரா?..
நாமும் கூட இப்படிச் சொல்லலாம் “இலங்கையின் முன்னாள் அரசு அதிகாரியும் பின்னாளில் மகிந்தாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஒருவர் சொல்வது போல 'தமிழகத்தில் மகிந்த நிறைய ஆதரவாளர்களை குறிப்பாக அறிவுசீவிகளை விலைக்கு வாங்கியிருந்தார்…’ மேலும் அவர் சொன்னதாவது ‘ஜி.எல் பெரிஸ் தனது அறிவுசீவித் தொடர்புகள் மூலம் இதனைப் பெரிதும் சாத்தியப்படுத்தி இருந்தார்’..
ஹலோ பாஸ் இப்படி நாங்களும் நிறைய பப்ளிக் ரிலேசன்ஸ் கட்டுரைகளை – கட்டுக்கதைகளை எழுத முடியும். இதற்கு அறிவிசீவி-இலக்கியவாதி என்கிற எந்த கடவுளும் தேவையில்லை. இந்த யுக்தியெல்லாம் அம்பலப்பட்டு வெகு நாளாயிற்று.
சிங்கள அரசின் ’மக்கள் தொடர்பு’ வியாபார ஒப்பந்தம்
இலங்கையின் மக்கள் தொடர்பு நிறுவனம் பெல்பாட்டிங்கர் என்கிற நேர்மையற்ற லாப நோக்கை குறிக்கோளாகக் கொண்ட மக்கள் தொடர்பு (பி.ஆர்) நிறுவனத்தினைப் பற்றி நாங்கள் பாலிவுட் திரைப்படவிழா எதிர்ப்பின் போதே சொல்லியிருக்கிறோம். http://www.bbc.co.uk/news/world-south-asia-11606899.. இந்த நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கை அரசின் ஆதரவு செய்திகளையும், புலி எதிர்ப்பு செய்திகளையும் ஊடகங்களில் பதிய வைத்தது. இதே நிறுவனம் தான் பினோசெட்டின் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் எதிர்கொண்டு அவருக்கு ஆதரவான செய்திப் பதிவுகளை செய்து கொண்டிருந்தது. ராசபக்சேவும், பினோசெட்டும் வேறுவேறானவர்கள் அல்ல; அதே போல காலச்சுவடும், பெல்பாட்டிங்கரும் வேறுவேறல்ல.
இந்தியாவில் இந்த பெல்பாட்டிங்கர் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு சேவைகள் தேவைப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள அறிவுசீவி நிறுவனங்கள், அது எகனாமிகல் பொலிடிக்கல் வீக்லியாக இருந்தாலும் சரி, தெகல்காவாக இருந்தாலும் சரி அல்லது லோக்கல் காலச்சுவடாக இருந்தாலும் சரி, இதன் ஆசிரியர்கள்/நிறுவனர்கள் ஒன்று இந்து 'ராமின்' கைப்பிள்ளைகள், அல்லது இந்திய அரசின் வெளியுறவுத்துறை செளத் பிளாக்கின் கைப்பிள்ளைகள். ஆக மொத்தம் நேர்மையற்றவர்கள். இவர்களை ஒரு பி.ஆர் நிறுவனத்தை வைத்து வளைக்க கடினப்பட வேண்டியதில்லை; ’சொன்னால் போதும்’ செய்து விடுவார்கள். ஏனெனில் இவர்கள் தங்களின் வர்க்க எதிரிகளை எதிர்க்க எந்த அநீதியையும் செய்பவர்கள்.
இப்பொழுது எதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு?
கடந்த ஆகஸ்டு-செப்டம்பர் மாத பாராளுமன்றத்தில் இலங்கை அரசு ஒரு போர்க் குற்றவாளி எனும் தீர்மானத்தை கிட்டத்தட்ட கொண்டு வரும் தருணத்தை நாம் பார்த்தோம். அதை அவசர அவசரமாக சென்னையின் அப்சர்வர் ரிசர்ச் பெளண்டேசனின் சத்தியமூர்த்தி மற்றும் ஏனைய எடுபிடிகளை வைத்தும், காங்கிரஸின் எம்.பியை வைத்தும் டில்லியில் – கான்ஸ்டிடுசன் அரங்கில் இலங்கை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தமிழகம் அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து தடுக்க முயன்றது இந்திய காங்கிரஸ் அரசு.
அதன் பிறகு வந்த மாதங்களில் ஐ.நா.வில் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையை நெருக்க முடிவெடுத்தபோது அதை தனது எல்.எல்.ஆர்.சி விசாரணை முடிவுறாததைக் காரணம் காட்டி தட்டிக்கழித்த்து. இந்த அறிக்கை தற்போது (நவம்பர்,2011) வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கை மேசை துடைக்கக் கூட உதவாத அறிக்கை என்பதும், இது ஒரு கண் துடைப்பு என்பதும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிறது. இச்சூழலில் இந்த அறிக்கையைப் பற்றிய விவாதங்கள் தமிழக சூழலில்- அறிவுசீவித் தளத்தில் வராமல் இருக்கவும், நார்வேயின் அறிக்கையில் அப்பட்டமாக தெரியக்கூடிய இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை விவாதமாக்காமல் இருக்க திசை திருப்பும் கட்டுரையாக காலச்சுவடு இந்த புத்திசுவாதீனமற்ற கட்டுரை குழந்தையை அவசர அவசரமாக பெற்றெடுத்திருக்கிறது.
இவர்கள் கட்டுரை ஒரு போதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு நேர்மையற்றதாய் நடந்தது அல்லது இந்தியா எவ்வாறு வல்லாதிக்கம் செய்தது என்பதை கவனக்குறைவாகக் கூட எழுதி இருக்க மாட்டார்கள் (ஒரு வேளை காலச்சுவடின் கம்யூட்டரின் தட்டச்சு எடிட்டரில் எக்ஸ்பர்ட் சிஸ்டம் ஏதானும் இன்ஸ்டால் ஆகி இருக்கலாம்) இவை எதையும் பரிசீலிக்காத கட்டுரை எவ்வாறு நேர்மையான விமர்சனத்தை- அதுவும் சுயவிமர்சனத்தை வைத்திட முடியும்?
இவர்களின் வாத முறைகளை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அதாவது பலுச்சிஸ்தான் விடுதலை போராட்டத்தைப் பற்றி எழுதுவதென்றால்(இவர்கள் பாணியில்), பலுசிஸ்தான் போராளிகள் தங்கள் விடுதலைப் போராட்டம் எவ்வாறு அமெரிக்காவின் பயங்கரவாத்த்திற்கு எதிரான போருடன் குறுக்கே சென்று நின்றது என்பதை கவனிக்கவில்லை. இதன் பலனாக அவர்கள் தாலிபான்களுடன் சேர்ந்து பயங்கரவாதிகளாக அமெரிக்காவால் பார்க்கப்பட்டு பலியிடப்பட்டார்கள். பலுசிஸ்தான் போராளிகள் தங்களை தாலிபான்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி தங்களது ஆயுதப் போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்றி இருக்க வேண்டும் அல்லது தங்களது தலைக்கு மேல் கட்டும் டர்பனை வேறு நிறத்திற்காகவாவது மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் மேற்குலக அரசியலின் குறை புரிதல்கள், பாகிஸ்தான் – அமெரிக்காவின் கூட்டுப் போர்முறைகள், தாலிபான்களிடம் குறைந்து அல்லது இல்லாது இருந்த சனநாயக முறைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்துதல் என பல விடயங்களை கண்டு கொள்ளாமல் வெறும் ஆயுதங்களை நம்பியே தனது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்- என விரிந்து செல்லும். அதாவது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணிடம் சென்று “.. நீ ஏன் அவன் கண்ல படுற மாதிரி அந்தப் பக்கம் போன..” என்பதான முறையாக அமையும்.
(இப்படி திசை திருப்பாமல் இருந்திருந்தாலும் கூட நமது – தமிழக அறிவுசீவிகள் – நேர்மையாக விவாதிப்பார்களா என்று கேட்டுவிடக்கூடாது நீங்கள். அவர்கள் தங்களது ஆன்மாவைத் தொலைத்து வருடங்களாகிவிட்டது.)
சிங்கள பேரினவாத அறிவுசீவி வர்க்கத்தின் கூட்டாளி இந்திய ஊடக வர்க்கம்.
ஜி.எல் பெரிஸ்ஸின் புகைப்படத்தை இடம் கிடைக்கும்போதெல்லாம் பெரிது பெரிதாக காலச்சுவடில் அடிக்கடி காண்பவர்கள் அல்லது கவனிப்பவர்கள் காலச்சுவடை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஜி.எல். பெரிஸ்-> சிங்களப் பேரினவாத அறிவுசீவிகள் -> இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் -> வெளியுறவு அறிவுசீவிகள்- அறிவுசீவி தொண்டு நிறுவனங்கள்- செளத் ஏசிய அனலிஸ்ட் குருப்- அப்சர்வர் ரிசர்ச் பெளண்டேசன், இதர -> இந்து ஆசிரியர் என்.ராம் மற்றும் அவரது நண்பர் கும்பல் -> எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி ஆசிரியர்- ராம் மனோகர் ரெட்டி (முன்னால் இந்து இதழின் பொருளாதார பகுதி ஆசிரியர் -> ஐ.ஏ.என்.எஸ் தலைமை ஆசிரியர் எம்.ஆர். நாராயண் -> பிரண்ட் லைன் என விரிவடையும் இந்தக் கும்பலை தமிழர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
காலச்சுவடு நேர்மையற்ற திசை திருப்பும் விவாதங்களை முன்வைத்தது இது முதன்முறையல்ல. போர் முடிந்த சமயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையின் பால் சிந்தனை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழ்ச் சமூகத்தில், முற்றிலுமான சிதைவு சிந்தனைக் கட்டுரைகளை பிரசுரித்து இருந்தது. அதில் முக்கியமான கட்டுரையாக "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு” என்கிற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை. http://www.kalachuvadu.com/issue-116/page47.asp
இது முழுக்க முழுக்க புலி எதிர்ப்பாக மட்டுமே அமைந்தது மட்டுமன்றி சிங்கள அரசின் கொடூர யுத்ததைப் பற்றிய எந்த ஒரு விவாதமும் முன் வைக்கப்படாமல் தமிழர்களின் சிந்தனை களத்தினை புலிகளின் மீதான விமர்சன அரசியலை நோக்கித் திருப்பியது. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியாவின் கடுமையான முயற்சியாலும் அணிசேரா நாடுகளின் உதவியாலும் சர்வதேச விசாரனையில் இருந்து இலங்கை தப்பிய அச்சமயத்தில், இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் பற்றிய ஆவணங்களும், பதிவுகளும், கட்டுரைகளும் நிரப்பி இருக்க வேண்டிய நேரத்தில், மனித குலத்திற்கு விரோதமான குற்றத்தில் புலிகள் ஈடுபட்டதாக ஆவணப்படுத்துகின்ற தோரணையில் அக்கட்டுரை அமைந்திருந்தது.
புலி அரசியலை விமர்சிப்பது என்பது வேறு புலிகள் கடுமையான போர்க்குற்றங்கள் புரிந்தார்கள் என்பதாக ஆதாரப்பூர்வ அனுபவக் கட்டுரை எனும் பெயரில் போலிக் கட்டுரைகளை வெளியிடுவது என்பது வேறு. அக்கட்டுரையிலிருந்து //வன்னி யுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள். அதிலும் பிரபாகரன் தன்னை நம்பிய மக்களைக் கொன்று குவித்தார். படுகொலைக்குக் காரணமாக இருந்தார். சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார். சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார். இறுதியில் அவர் அநாதரவாகக் கொல்லப்பட்டார்.// அதாவது லெபனான் மீதான 2008 இஸ்ரேலின் தாக்குதலில் 1000க்கும் அதிகமான லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கு முழுமையான காரணம் - இசுரேலிய படைவீரர்கள் இருவரை ஹிஸ்புல்லா போராளிகள் சிறைபிடித்து செய்த அரசியலே என்று சொல்வதற்கு ஒப்பானது. அதாவது இசுரேல் வேறு வழியில்லாமல் இரண்டு படைவீரர்களைக் காக்க ஆயிரம் லெபனான் மக்களை கொல்லவேண்டி வந்தது, இதற்குக் காரணமாக ஹிஸ்புல்லாக்களின் ஆட்கடத்தல், பிளாக்மெயில் அரசியலே என்று எழுதுவதைப் போன்றது. இதைப் போன்ற அரைவேக்காட்டு கட்டுரைகளை காலச்சுவடு கும்பல்களிடம் இருந்து வெளிப்படவே செய்யும்.
இது மட்டுமல்லாமல் இந்தக் கட்டுரை முகாமில் கழிப்பறையில் எழுதப்பட்டது என்றும், ரகசியமாக அனுப்பப்பட்டது என்றும் பெரிதுபடுத்தி படம் காண்பிக்கப்பட்டது. அடிப்படையில் இக்கட்டுரை எழுத ஒருவருக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் தேவைப்பட்டிருக்கும் அந்தக் கழிப்பறை ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தரத்தில் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவர் நான்கு மணி நேரம் அங்கு இருந்திருக்க முடியும்.. முகாமைப் பற்றி முழுமையாகத் தெரிந்த தமிழீழத் தமிழர்கள் இந்தச் செய்தியை கண்டு சிரித்திருக்கவே முடியும்.
அந்தக் கட்டுரை எழுதியவர் தமக்கு 15 வருடங்களுக்கு மேலாகத் தெரிந்தவர், விடுதலை அரசியலில் பிடிப்புள்ளவர் என்று காலச்சுவடு முதலாளி கண்ணன் அவர்கள் குறிப்பிட்டது உண்மையெனில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அவர் ஏன் புலிகளுக்கு எதிராக சாட்சியத்தைப் பதியவில்லை என்பதான அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். அந்த அநாமதேய நபர் கட்டுரையின் முகப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார் //மனமும் நினைவுகளும் ஒரு சீருக்கு வரமுடியாது கொந்தளித்த நிலையிலேயே உள்ளன.// ஆனால் கட்டுரை படிப்பவர்களுக்கு அதன் சீரமைப்பும் நுணுக்க அரசியல் கட்டமைப்பும் எளிதாக புலப்படும். இந்த சீருக்கு வரமுடியாத மன நிலையில் இக்கட்டுரையை எழுத முடியுமா என்பது முதலாளி கண்ணன் அவர்களுக்கே விளங்கும்.
அந்தக் கட்டுரையை கவனமாக படிப்பவர்கள், முக்கியமாக தமிழரல்லாதவர்கள் யாராயினும் இந்தக் கட்டுரை, நிதி பெறுவதற்காக ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் தயார் செய்த ஆவணக் கட்டுரையினை அல்லது அரசுவர்க்கம் ஒரு நிகழ்வை தொகுத்து வைக்கும் அரசாங்க ஆவணக்கட்டுரையை ஒத்து இருப்பதை கவனிக்க முடியும். சாராம்ச ரீதியிலும், எழுத்து நடையிலும், இக்கட்டுரை சிங்கள கொடூர முகாமில் மறைத்து எழுதப்பட்டது என்பதை ஒருவரும் நம்ப இயலாது. ஆனாலும் தைரியமாக இந்தக் 'கட்டுரை திரைக்கதை'யை தமிழர்களிடத்தில் காலச்சுவடு விற்றது. இந்தக் கட்டுரை கிட்டத்ட்ட போர் புரிந்த அரசின் வெற்றி நகர்வுத் திட்டங்களை, எதிர்முனையிலிருந்து விவரிக்கும் தோரணையில் ஆவணமாகவே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் புலிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குறிப்பான ஆதாரமற்று, வெற்று வார்த்தைக் கட்டுமானங்களில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக எழுதப்பட்டுள்ளதை கவனிக்க முடியும்.
இந்தக் கட்டுரையின் நோக்கத்தினை உற்று நோக்கினால் இலங்கை அரசும், புலிகளும் குற்றம் புரிந்தனர் என்ற சாரம்சத்தில், ஆனால், கூர்மையாக புலிகளைப் போலவே சிங்களப் படைகளும் போர்க் குற்றங்களைப் புரிந்தனர் என்று புலிகளை முதன்மைக் குற்றவாளிகளாகவும் அதன் விளைவாக அதே போன்றதொரு குற்றங்களை சிங்கள ராணுவம் பின்பற்றியது என்பதாக, இரண்டாவது அணியின் மீது மேலோட்டமாக குற்றப் பதிவுகளை ஆழமாக உள்ளடக்கமற்று பதிவு செய்கிறது. இந்தக் கட்டுரை வேறு எவரையும் விட இலங்கை அரசிற்கு சாதகமான ஒரு கட்டுரையாக இருக்க/உதவ முடியும். ஆனால் இந்தக் கட்டுரை வலுவான குற்றம் நிரூபிக்கும் ஆவணமாக இல்லாமல், கருத்தியல் தளத்தில் சிங்கள அரசிற்கு வலுசேர்க்கும் கட்டுரையாகவே அமைகிறது. அதாவது ஒரு பி.ஆர் கட்டுரை. அந்த காலகட்டத்தில் அதாவது போர் முடிந்த இரண்டொரு மாதங்களில் புலிகளை மிக தரக்குறைவாக சித்தரிக்கும் கட்டுரைகள், நம்பத்தகுந்த நடுநிலை ஊடகங்கள் என்று அறியப்படும் ஊடகங்களான எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, தெகல்கா போன்ற ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதே போலவே தமிழக மீனவர் படுகொலையை திசை திருப்பும் கட்டுரைகளும் இந்த இரண்டு ஊடகங்கள் மற்றும் காலச்சுவடிலும் வெளியிடப்பட்டது. இம்மூன்றிலும் இந்த இரண்டு முக்கியமான காலகட்டத்திலும் ஒரே மாதிரியான கட்டுரைகள் (சாராம்சம்-வடிவம் உட்பட) வெளியிடப்படுகின்றன.
புலிகளின் மீது சிங்கள அரசு வைக்கும் குற்றச்சாட்டை தமிழரின் வாயிலிருந்து ஒரு வாக்குமூலமாக பதிவு செய்ததை போன்றதொரு விவரணத்தை காலச்சுவடின் ’அநாமதேய குறிப்புகள்’ செய்கின்றன. இதே காலகட்டத்தில் மாதிரியாக 'கிழக்கிலிருந்து ஒரு கடிதம்' என்று தலைப்பிட்ட ஓர் அநாமதேயக் கடிதம் எகனாமிக் பொலிடிக்கல் வீக்லியில் வெளியிடப்பட்டிருந்தது ஆச்சரியத்தை அளிக்கக்கூடும். அதெப்படி முகாமில் இருந்தவர் இரு இதழ்களுக்கும் இக்கடிதத்தை எழுதி இருப்பார் என்பது ஆச்சரியமே. ஒரு வேளை முதலாளி கண்ணனே இக்கடிதத்தை அங்கே ஒப்படைத்திருப்பாரோ.. ஏனெனில் எகனாமிக் பொலிடிக்கல் வீக்லிக்கு இந்து ராமின் நண்பர் ராம்மனோகர் ரெட்டி ஆசிரியராவதற்கு முன் இம்மதிரியான அநாமதேய எழுத்தாளர்களின் கட்டுரைகளை வெளியிடும் பழக்கம் கிடையாது. (அதுமட்டுமல்லாமல் இத்தனை விளம்பரங்களையும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் லாப நட்ட அறிக்கைகளை விளம்பரமாக வெளியிடுவதும் கிடையாது. மேலும் பிளாஸ்டிக் உறைகளையும் அவர்கள் பயன்படுத்தியதும் கிடையாது. எல்லாம் இந்து ஆசிரியர் என்.ராமின் நண்பரின் பொருளாதார வளர்ச்சித் திட்டமே காரணம். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் சண்டைகளுக்கு சிறப்பு விவாதப் பக்கங்களை ஒதுக்கும் இந்த இதழ் இதுவரை இலங்கைப் போரைப் பற்றிய சிறப்பு விவாதத்திற்கு அழைப்பு விடுவதற்கான காலம் வரவில்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும்)
இந்த ஒற்றுமைகள் ஒரு விபத்தல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் நலம் பயக்கும். இந்திய- இலங்கை நலனை மிக சாதுர்யமாக முன்னெடுக்கும் வல்லமையும் அறிவாற்றலும் இந்த நபர்களுக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக பாசிசமாக மாறியிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறிவுசீவி வர்க்கத்தை மேலும் மேலும் சுயமோகத்திற்குள்ளும், வெற்று விவாத பிரமைகளுக்குள்ளும் தள்ளும் உக்தியே இவையெல்லாம்.
சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் வைக்கப்பட்டன. அத்தகைய ஆதாரங்கள் இதுவரை இலங்கை அரசினால் பதில் சொல்லப்படவும் இல்லை முறியடிக்கப்படவும் இல்லை, மறுக்கப்படவும் இல்லை. புலிகளின் மீதான குற்றச்சாட்டுகளில் பொத்தாம்பொதுவான, நீதிமன்ற விசாரனைக்குட்படுத்த முடியாத வார்த்தைக்கட்டுகளையே பார்க்க முடிகிறது. இந்த கருத்துகளை மிக எளிதாக உள்ளடக்கமற்ற வன்மமாக நேரடியான விவாதங்களில் நிரூபித்திடல் முடியும்.
பின்வரும் கருத்துப்பதிவுகளை கவனிக்க. அதனினும் முக்கியமானது இக்கட்டுரை வெளியிடப்பட்ட காலகட்டத்தில் 'வடக்கின் வசந்தம்' என்கிற பெயரில் ”போருக்குப் பின்னான தமிழினப்படுகொலை” திட்டத்தின் செயல்பாடு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான திட்டமிடலும் கூர்மைப்படுத்தலும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் முக்கிய பங்காற்றியவர்கள் காலச்சுவடின் செல்லப் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இந்தப் பின்னணியில் இக்கட்டுரையின் வரிகளை வாசியுங்கள். வடக்கின் வசந்தம் முடிவில் போரே நடைபெறாத மட்டக்களப்பில் 7000 தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறையால் கர்ப்பிணிகளாக்கப்பட்டிருந்தனர் என்பதை ஆதரப்பூர்வமாக கள ஆய்வறிக்கை 2011 ஜூன் மாதத்தில் விவரித்தது.
////வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.
இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது.///
சிங்கள அரசின் மனித உரிமை மீறலென்பது புலிகளின் மனித உரிமை மீறலை ஒத்தது (ஆகவே அதற்குப் பழகிய நாங்கள் இதற்குப் பழகுவது கடினமாக இல்லை … அல்லது புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபட்டு போரற்ற அடக்குமுறைக்கு திரும்புவது ஒரு வகையான இயல்பு நிலை வாழ்க்கை என்பதை கட்டுரை மிகக்கவனமாக கட்டமைக்கிறது)
மேலும் போராட்டத்தின் பின்னான விவாதத்திற்கு முன்வைக்கும் பொருளாக மீள்கட்டமைத்தல், மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல் என்கிற பிரச்சனைகளை முன்வைக்கும் கட்டுரை, போராட்டத்தின் அடிப்படைக் கேள்வியான 'தமிழீழத்தின் விடுதலை', 'அரசியல் தீர்வு' என்பதைப் பற்றிய கருத்துகளை மிகக் கவனமாக மறைக்கிறது. இந்தப் பதங்களைத்தான் 'தமிழீழ விடுதலையை கைவிடுங்கள்' என்று வற்புறுத்தும் மேற்குலக நாடுகளும், சர்வதேச மனித உரிமைத் தொண்டு நிறுவனங்களும் முன்வைக்கின்றன என்பதை மறக்க முடியாது. //இப்போதுகூட - புலிகளின் மீதான இவர்களின் பகையுணர்ச்சி தீர்ந்த பிற்பாடும் - தமிழ்மக்களின் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. தவிரவும் மக்களின் நல்வாழ்க்கைக்கான உத்தரவாதம், ஏற்பாடுகள், இயல்புநிலை என்பவற்றுக்குக் கூட எவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை.// இயல்புநிலை- எது இயல்பு நிலை?.... சிங்கள அரசின் ஆட்சியில் நகர்த்தப்படும் வாழ்வை, சிங்கள ஆட்சியதிகாரத்தை மெளனமாக அங்கீகரித்து முன்வைக்கப்படும் சமரச- போராட்டமற்ற (எவ்வகையான வடிவமானாலும் ) வாழ்க்கை முறையை இயல்பு நிலை என முன்வைக்கிறது.
மேலும் காலச்சுவடு அக்கட்டுரையில் குறிப்பிடுவது // ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (..) வட்டமிட்டு நோட்டமிட்டது.. வேவு விமானத்தின் தரவுகளின்படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது.
வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு .. சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள். கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். … சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்…. புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன.
சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின…. கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோபமூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். ...//
இந்த வாதங்கள் கோத்தபய ராசபக்சேவின் பேச்சினை நினைவுபடுத்தலாம். ஆனால் இவை காலச்சுவடின் கட்டுரை வரிகள். அதாவது புலிகளுக்கு பிணங்கள் வேண்டும். அதன் மூலம் சர்வதேசத்தை நெருக்கலாம், ராணுவத்திற்கு தப்பியோடி வந்த மக்கள் உயிரோடு வேண்டும். மக்களைக் கொல்வது புலிகளின் நோக்கம், ராணுவத்தின் நோக்கம் உயிரோடு பிடிப்பது. ஆனால் முந்தைய பத்தியில் சொல்லிய “எப்பொழுதும் வானில் பறந்து கொண்டிருக்கும் உளவு விமானம்” புலிகள் மக்களைக் கொல்வதையெல்லாம் படமெடுக்கவில்லை. சேனல்4 இல் வெளியிடப்பட்டது போன்ற காணொளிகள் புலி ஆதரவாளர்களுக்கு கிடைத்ததைப் போல இலங்கை அரசிற்கு இதுவரை ஏன் காணொளிகள் கிட்டவில்லை.. அதுவும் உளவு விமானம், சாட்டிலைட்டுகளின் உதவியோடும், அமெரிக்காவின் முப்பரிமாண ரேடார்களின் உதவியோடும், மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர், தெர்மோபாம், கிளஸ்டர் பாம் கொண்டு நடத்தப்பட்ட போரில் இது பதிவாகாமல் எப்படி போனது? புலிகள் புரிந்த இத்தனை அட்டூழியங்களுக்கும் இலங்கை அரசிடம் ஆதாரமில்லாமல் போனது எப்படி.?.. நிமிடத்திற்கு 90 செல்களை எறியும் ராக்கெட் லாஞ்சர்களில் மக்கள் இறந்ததை விட புலிகளின் துப்பாக்கிகளால் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு இறந்தவர்கள் அதிகம் என்பதே காலச்சுவடின் வாதம்.
போர் காலச்சுவடு விவரித்ததைப் போல நடக்கவில்லை. இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அறிக்கையை ஒரு கட்டுரையாக/ ஒரு முன்னோட்டமாக வெளியிடும் காலச்சுவடிற்கு இதை ஆய்வு செய்வதற்கான அவசியமும் தேவையும் இல்லை. இதில் காலச்சுவடு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு தமிழர் அல்லாத பிற மக்களால் பேசப்பட்ட கட்டுரைகளை முன்வைக்க முடியும்.
மேலும் இக்கட்டுரையில் உள்ள முரண்கள் இதன் போலித்தன்மையை பல இடங்களில் வெளிப்படுத்துகின்றன, உதாரணமாக //ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன// இதே கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டிருந்த //சர்வதேச ஊடகம் வெளியேற்றப்பட்டமை// என்கிற வாசகத்தை காலச்சுவடே மறந்து போயிருந்தது.
எல்லாவற்றிலும் அயோக்கியமான எழுத்தாக காலச்சுவடு பதிவு செய்திருப்பது //யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவ மதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? …”.//
//ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள்.//
இந்தக் கருத்தை எந்த குருமார் சொன்னார் என்று காலச்சுவடு விவரித்தது என்றால் பொருத்தமாக இருக்கும். மேலும் இலங்கை அரசிற்கும் பெரும் உதவியாக இருக்கும். எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா? அதுவும் புலிகள் அற்றச் சூழலில் அவர்கள் யாருக்காக பயப்படுகிறார்கள், அவர்களை காப்பாற்றத்தான் பரமபிதா ராசபக்சே இருக்கிறாரே, பிறகு என்ன, காலச்சுவடே பேசுங்கள். உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்கிறோம். மன்னார் மாவட்டத்தின் பேராயர் பல்வேறு ஆணையங்களில் இப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். அதைத் தவிர வேறு யார் இத்தகைய கருத்தை அதுவும் போரின் முனையிலிருந்து நேராக முகாமுக்கு வந்த ஒருவருக்கு செய்தி அனுப்பி இருந்தார் என விளக்குவது காலச்சுவடின் பொருப்பு.
//இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன//
இந்தப் போரை பிரபாகரனின் உயிருக்கு குறி வைத்து நடந்த போராக சிங்கள அரசும், காலச்சுவடும் ஒரே சிந்தனையோட்டத்தில் பேசுவது விபத்தல்ல. திரும்பத் திரும்ப காலச்சுவடு இந்தப் போரை ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான போராக சித்தரிப்பதற்குரிய கருத்துருவாக்க அடித்தளத்தை வலிந்து நேர்மையற்றதாய் உருவாக்குகிறது.
தமிழர்களின் நியாயத்தைப் பேசுகிறோம், மனித உரிமைகள்பால் நிற்கிறோம் என்ற போர்வையில் வன்மம் மிக்க கருத்துப் பதிவுகளை காலச்சுவடு தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அரசுவர்க்க, அரச நலன் சார்ந்து செயல்படும் நபர்களின் கருத்துக்களையும், ஆதாரரமற்ற வெற்று அவதூறுகளையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே செல்கிறது. இதற்கு மேலாக தனது வர்த்தக நலன், தான் கட்டமைக்கும் நேர்மையான நடுநிலை மக்கள் சார்பு அரசியல் விவாதங்கள் என்கிற பிம்பத்தை சார்ந்தது என்று மிகத் தெளிவாக உணர்ந்த காலச்சுவடு, அதற்குரிய புத்தகங்களை வெளியிட்டு தனது பிம்பத்தைக் காக்கிறது. ஆனால் ஒரு போதும் தான்முன்வைத்த அவதூறுகளைப் பற்றிய நேரடியான விவாதங்களுக்கு வருவதில்லை.
மேலும் தனது போலிபிம்பத்தை தற்காத்துக் கொள்ள ஒரு உளவாளி அமைப்பு எப்படி போராட்ட ஆதரவு கருத்துக்களை வைப்பதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து நகர்கிறதோ அதே போல காலச்சுவடும் ஐ.நா. அறிக்கை பற்றிய கருத்தரங்கம், ஐ.நாவின் அதிகாரி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தினை மொழிபெயர்த்து வெளியிடல் என பல சாகசங்களைப் புரிகிறது. தெளிவாக இம்மாதிரியான நிகழ்வுகளில் நேர்மையான-அப்பாவி சிந்தனையாளர்களையும் அவர்களூடாக நேர்மையற்ற விலைபோன அறிஞர்களையும் சேர்த்துக் கொள்கிறது. இந்த யுக்தி தமிழ்ச் சமூகத்தில் செல்லுபடியாகிறது. காலச்சுவடின் நோக்கம் புத்தக விற்பனையாக நிற்கிறது. பத்திரிக்கையில் வைக்கும் நேர்மையற்ற விவாதங்களை சமாளிக்கும் விதமாக இசுலாமிய, தமிழீழ, தலித்தியப் புத்தகங்களை வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் நாங்கள் காலச்சுவடை ஒரு நேர்மையற்ற சமநிலை தவறிய கருத்துருவாக்க ஊடகமாக பார்க்கிறோம்.
புலம்பெயர் தமிழர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எங்களது வேண்டுகோள்
இதற்கு மேலும் புலம்பெயர் தமிழர்கள் இந்திய அரசு-இலங்கை அரசின் கருணையில் இயங்கி வரும் காலச்சுவடை வாங்கி அதன் வியாபாரத்தையும், அறிவிசீவிக் கழிவுகளையும் பெருக்கினால், ‘சுயமரியாதை அறியாத, சுயபோராட்ட வரலாறு புரியாத மக்கள்’ என புலம்பெயர் மக்களின் முகத்தில் வரலாறு காறி உமிழும். இந்த இதழையும் இதனூடாக வரும் பதிப்புகளையும் தமிழர்கள், முக்கியமாக புலம் பெயர் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் புறக்கணித்தல் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நேர்மையான படைப்பு தளம் உருவாவதற்கு உதவுகிறீர்கள். மேலும் களைகளை களையும்போது மட்டுமே பயிர்களை நாம் பேணவும் முடியும்; அடையாளம் காணவும் முடியும். குழப்பங்கள் நிறைந்த போருக்குப் பின்னான காலகட்டத்தில் வெளிப்படையாக செயல்படும் இந்த அடியாட்களை புறக்கணித்து வெளியேற்றுவதே நமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். இதை மே பதினேழு இயக்கம் உங்கள் முன் தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறது.
காலச்சுவடை தொடர்ந்து ஆதரித்து வரும் படைப்பாளிகள் தங்களது படைப்பு நேர்மையில் உள்ள பிடிப்பை அரசியல் நேர்மையிலும் காட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். இவர்கள் மேலும் காலச்சுவடுடன் நின்று தமது படைப்புகளை வெளிப்படுத்த விரும்பும் பட்சத்தில் இத்தகைய செயல்பாடுகள் ஒரு சிங்கள கைக்கூலியுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு ஒப்பாகும் என்பதை நீங்களே உணர்வீர்கள். பல்வேறு மாற்றுவெளிகள் உருவாகிய இந்த காலகட்டத்தில் ஒரு பதிப்பகமும், இதழும் மட்டுமே உங்களது படைப்புகளை மக்களிடத்தே சென்று சேர்ப்பித்து விடும் என்று நம்புவது அறிவுடைமையாகாது.
காலச்சுவடையும், அதன் முதலாளியையும் நாங்கள் நேரடியாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம்; விவாதிக்க காத்திருக்கிறோம். அதற்கு ஒரு கால அளவு இருக்கிறது என்பதையும் தீர்க்கமாகச் சொல்கிறோம். சனநாயகமாக பதில் சொல்லாமல், நேரடியான விவாதத்திற்கு வராமல் காலச்சுவடு நழுவிச் சென்று தனது தொடர்ச்சியான சீர்குலைவு அரசியலையும், அரசு வர்க்க சாதக அரசியலையும், ஆதாரங்களற்ற வார்த்தை ஜாலமிக்க கட்டுரைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தும் பட்சத்தில், காலச்சுவடு தனது தளத்தில் உள்ள பலத்தை பயன்படுத்தி பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்பது போல, மே பதினேழு இயக்கமும் அதன் முழு பலத்தையும் அந்த இயக்கம் வலுவாக உள்ள களத்தில் இருந்து செலுத்தி காலச்சுவடை எதிர்கொள்ளும் என்று தாழ்மையோடு தெரிவிக்க விரும்புகிறோம். காலச்சுவடை புறக்கணிப்பது தமிழர்களின் ஆகப்பெரும் வரலாற்றுக் கடமையாக பார்க்கிறோம்.
நாம் வெல்வோம்
- திருமுருகன் காந்தி (
மே பதினேழு இயக்கம்