ஜான் ரிடெல்

தமிழாக்கம் : வான்முகில்

ஆசிரியர் பற்றிய குறிப்பு : ஜான் ரிடெல் 1960ஆம் ஆண்டிலிருந்தே கனடா, வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் - புரட்சிகர சோசலிச இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருபவர். 1907 முதல் 1923ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச புரட்சிகர சோசலிச இயக்கங்கள் குறித்த முக்கிய ஆவணங்களை நூல்களாகப் பதித்துள்ளார். ‘The Communist International in Lenin’s time’என்ற தலைப்பில் ஆறு நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இவருடைய எழுத்துக்களை johnriddel.wordpress.comஎன்ற இணைய தளத்தில் காணலாம்.

ஜான் ரிடல் ‘‘From Marx to Morales: Indigenous Socialism and the Latin Americanization of Marxism’ என்ற தலைப்பிலே MRZINEஇதழில் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிதாக எழுந்துள்ள மக்கள் போராட்டங்களினால் அந்நாடுகளின் புரட்சியாளர்கள், வல்லரசிய நாடுகளிலுள்ள புரட்சியாளர்களிடையே புதியக் கருத்து பரிமாற்றங்கள் தோன்றியுள்ளன. பொலிவியாவில் அதிபராக மொராலெஸ் இருப்பதைப்போல்பெரும்பாலான போராட்டங்களுக்கு தொல்குடியின மக்களே தலைமையேற்றுள்ளனர். இலத்தீன்அமெரிக்க புரட்சியாளர்கள் மார்க்சியத்திற்கு கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் வளம் சேர்த்துள்ளனர். மார்க்சிய சிந்தனையின் இதுவரை அறியப்படாத முகாமையான கூறுகளுடன் இலத்தீன் அமெரிக்கப் புரட்சியாளர்களின் கருத்துக்கள் எவ்வாறு பொருந்திப் போகின்றன என்பது குறித்து இக்கட்டுரைப் பதிவு செய்கிறது.

ஐரோப்பிய மையவாதம்

மார்க்சியக் கோட்பாடு, “ஐரோப்பிய மையவாதத்திற்கு” ஆட்பட்டுள்ளது என்று இலத்தீன் அமெரிக்கப் புரட்சியாளர்கள் அடிக்கடி விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனமே விவாதத்திற்கான நல்ல தொடக்கமாக இருக்கும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சோசலிசப் புரட்சி நடப்பதற்கு முன்பாக அந்நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைப்போல் முதலாளிய வளர்ச்சியில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்ற நம்பிக்கையையே அவர்கள் ஐரோப்பிய மையவாதம் என்று புரிந்துக் கொண்டனர். ஜரோப்பிய மையவாதம் என்பது சமூக முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சியே அடிப்படை என்று வலியுறுத்துவது; அது தொல் குடியின, வேளாண் மக்களின் மெய்நிலைக்கு மாறானது எனவும், அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கும் தேவையை முதன்மைப்படுத்துவது என்ப தாகவும் புரிந்து கொள்ளப்பட்டது.

karl marx 450‘எந்த சமூக அமைப்பும் அதன் உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சி அடைவதற்கு முன்பாக அழிவதில்லை’ என்ற மார்க்சின் பிரபலமான கூற்று, அவரது ஐரோப்பிய சார்பிற்கான ஆதாரமாகக் காட்டப்படுகிறது. 1914ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தில் கார்ல் காவுத்ஸ்கியும், பிளெக்கானவும் இத்தகைய கருத்தைக் கொண்டிருந்த செவ்வியல் மார்க்சியக் கோட்பாட்டாளர்களாகக் கருதப்பட்டனர். இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான குஸ்தாவோ போரஸ் ஈனோஹோஸா ‘முதலாளித்துவ உற்பத்திமுறை அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே உழைப்பாளிகள் ஆட்சி செய்ய முடியும்” என்று காவுத்ஸ்கியின் கருத்தைக் கூறுகி றார். இலத்தீன் அமெரிக்கா இன்னமும் அந்த நிலையை அடையவில்லை. 1917ஆம் ஆண்டிற்கு முன்பாக, இலத்தீன் அமெரிக்க முன்னோடி மார்க்சியர்களும் இத்தகைய பார்வையையே கொண்டிருந்தனர்.

ஆனால் ருசியப் புரட்சிக்குப் பின்னர், தற்போது ‘இலத்தீன் அமெரிக்க மார்க்சியம்’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய சிந்தனை உருவாகி வளர்ந்தது.

இந்த புதிய சிந்தனை முறையின் முன்னோடியாக பெருவிய பொதுவுடைமையாளரான ஹொஸே கார்லோஸ் மரீயாதெகி என்பாரை, அர்ஹெந்தினா நாட்டு மார்க்சிய ஆய்வாளரான நெஸ்தார் கோயன் குறிப்பிடுகிறார்.

மரீயாதெகி, ஐரோப்பிய சார்புத்திட்டங்களையும், பல்வேறு பிரிவுகளாக இருந்த முதலாளிகளின் பின்னால் தொழிலாளர்களை அணி திரட்டும் முயற்சியையும் எதிர்த்தார் என்றும் ”அவர் சோசலிச போராட்டங்களுக்கான அடித்தளமாக ‘இன்கா கம்யூனிசத்தை’ மீட்டுருவாக்கம் செய்யத் தலைப்பட்டார்’ என்றும் கூறுகிறார் கோயன். மரீயாதெகிகாலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் இலத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள் வல்லரசிய எதிர்ப்பையும் சோசலிசக்கூறுகளையும் உள்ளடக்கியதாகவே இருப்பதாக கூறுகிறார் கோயன்.

பொலிவியாவில் தொல்குடியின மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராடி வந்துள்ளனர். இந்தப் போராட்ட அனுபவத்தைப் பெற்றுள்ள பொலிவியாவின் துணை அதிபரான ஆல்வாரோ கார்சியா லினெரா தனது நாட்டில் நிலவிய ஸ்டாலினிய, டிராட்ஸிகிய நீரோட்டங்களை உள்ளடக்கிய மார்க்சியத் தத்துவமரபு முழுவதுமே ஐரோப்பிய மையக் கருத்துகளுக்கு ஆட்பட்டிருந்ததாகக் கூறுகிறார். ‘தொழில் வளர்ச்சியினூடாக நவீன சமூகத்தை கட்டமைத்தல்’, ‘தேசிய அரசை வலுப்படுத்துதல்’ என்பதான மார்க்சியத்தின் கருத்தியல் பொலிவியாவில் பெரும்பான்மையாக உள்ள வேளாண் சமூகங்களை சமூக மாற்றத்திற்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கின்றது என்கிறார்.

கூபப் புரட்சி :

மார்க்சியத்தை ஆட்கொண்டிருந்த அதிகாரத்துவத்திலிருந்தும், வறட்டுவாததிலிருந்தும் காஸ்த்ரோவையும்சேகெவாராவையும் தலைவர்களாகக் கொண்ட கூபப் புரட்சியானது விடுவித்தது என்று கோயன் கூறுகிறார். இலத்தீன் அமெரிக்க புரட்சியின் தன்மை குறித்த சேகெவாராவின் கருத்துகள் மரீயாதெகியின் கருத்துகளோடு ஒத்துப் போகின்றன. மரீயாதெகியைப் போன்றே சேகெவாராவும் புரட்சிகர சமூக மாற்றத்திற்கு மக்களின் உணர்வு நிலையும் தலைமை பொறுப்பும் அடிப்படையானவை என்ற உறுதியுடையவர்.

உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையிலும் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற சோவியத் தலைவர்களின் கருத்தை சேகெவாரா கடுமையாக விமர்சித்தார்.

மார்க்சின் கருத்துக்கள் :

கோயென்னின் கருத்துப்படி, கூபப்புரட்சியின் முன்னணிப் பங்களிப்பு 1970களிலும் தொடர்ந்து நீடித்தது; அக்காலக்கட்டத்தில் 1920ஆம் ஆண்டுகளில் நிலவியிருந்த வல்லரசியத்தையும் முதலாளித்துவத்தையும் ஒரு சேர எதிர்ப்பது என்ற புரட்சிகர மார்க்சியத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்தது. இது மட்டுமின்றி கூபப்புரட்சி காலனிய ஆதிக்கம், விளிம்பு நிலை சமூகங்கள் குறித்த மார்க்சின் பிற்கால ஆய்வுகளுக்கும், மார்க்சின் அதுவரை அறிப்படாத எழுத்துகளுக்கும் புத்துயிர் அளித்தது.

மார்க்ஸ் தனது பிற்கால ஆய்வுகளில் தமது இளமைக்கால எழுத்துக்களில் வெளிப்பட்ட ஐரோப்பிய மையவாதக் கருத்துக்களைக் கடந்து சென்றுள்ளார் என்கிறார் கோயென்.

கோயென் முதிர்ந்த மார்க்சிடம் வெளிப்படும் ஆழமானக் கருத்துகளை கீழ்வருமாறு கண்ட றிகிறார்.

மாற்றமில்லாத, ஒரேவிதமான பரிணாமப் பாதையில் ·வரலாறு இயங்குவதில்லை.

தங்களது வரலாற்று ரீதியான வளர்ச்சிப்பாதையில், · உலக நாடுகள் அனைத்தும் மேற்கு ஐரோப்பா என்ற ஒரே ஒரு பரிணாம மையத்தை மட்டுமே சுற்றிச் சுழலத் தேவையில்லை.

வல்லரசிய ஆதிக்கத்தின் கீழ் உள்ளவரை, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எத்தகைய முன்னேற்றதையும் அடையப்போவதில்லை.

இலத்தீன் அமெரிக்க சிந்தனை அயர்லாந்து போன்ற காலனிய நாடுகளில் முதலாளியத்தின் தாக்கங்கள் குறித்த முதிர்ந்த மார்க்சின் கருத்துகளோடு ஒத்துப் போகின்றன. தியோடர் ஷானின் எழுதிய ’Late Marx and Russian Road’ என்ற நூலிலிருந்து மார்க்சின் இறுதிக்கால எழுத்துகள், ஆய்வுகள் குறித்து நாம் அறிய முடிகிறது.

ஷானின் இந்த நூலை, இலத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் இன்றைய போராட்டங்களுக்கு விளக்கமளிக்கும் ஆய்வேடாக நாம் இன்று மறுவாசிப்பு செய்ய முடியும். மார்க்ஸ் தனது இறுதிப் பத்தாண்டுகளை ருசியா மற்றும் முன்றாம் உலக நாடுகள் குறித்த ஆய்வில் செலவிட்டார்.

ருசியா குறித்த அவரது ஆய்வுகள் ருசிய வேளாண் சமூகத்தின் அடித்தளமாக விளங்கிய மீர் என்ற வேளாண் கம்யூன் பற்றிப் பேசுகின்றன.

ருசியாவின் வேளாண் கம்யூன்கள் :

போல்ஷ்விக்கட்சிக்கு முன்னோடிகளாயிருந்த, ருசிய மார்க்சிஸ்ட் வட்டத்தை வழி நடத்திய ப்ளெக்கானவ் முதலாளிய வளர்ச்சியால் ருசியா மாற்றமடையும்போது மீர்’ அழிந்து போய்விடுமென்று நம்பினார். மார்க்ஸ் இத்தகைய முடிவை ஏற்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.

அவர் 1881ஆம் ஆண்டு வேரா சசுலிச்சுக்கு எழுதிய கடிதத்தில் கம்யூன்களே ருசிய சமூக மறுமலர்ச்சிக்கான நெம்புகோலாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்தக் கடிதம் 1924ஆம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மார்க்ஸ் தனது “மூலதனம்” நூலில் தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வாகக் காட்டும் சமூகப் பரிணாம வளர்ச்சி, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அக்கடிதத்தில் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.

ஷானின் நூலில் சேர்க்கப்பட்டுள்ள மார்க்சின் கடிதங்களிலிருந்து “மக்களின் விருப்புணர்வு” ((Peoples’ will)) என்ற ருசிய மக்களிடம் பிரபலமான புரட்சிகர இயக்கத்தின் கருத்துகளோடு மார்க்சின் கருத்துகள் அடிப்படையில் ஒத்திருப்பதை அறிய முடிகிறது. வளர்ந்து வரும் சோசலிசப் பொருளாதாரத்துடன் கம்யூன்கள் ஒத்திசைந்து இருக்க முடியும் என்ற மார்க்சின் கருத்தே ருசியப் புரட்சியாளர் களிடமும் இருந்தது.

மார்க்சின் இனப்பண்பாட்டியல் குறிப்பேடுகள் (Ethnological Notebooks):

தொல்குடியின சமூகங்கள் குறித்து மார்க்ஸ் இக்கால கட்டத்தில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் குறித்த பதிவுகள் இனப்பண்பாட்டியல் குறிப்பேடுகள் (Ethnological Notebooks)என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. இந்தக் குறிப்பேடுகள் குறித்து பெரும்பாலான மார்க்சியவாதிகள் அறிந்திருக்கவில்லை. ருசியாவைச் சேர்ந்த சசுலிச்சுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில், இந்த ஆய்வுகள் அடிப்படையில் அமைந்த சுருக்கமான முடிவைக் காணலாம்: “இந்தத் தொல்குடியின சமூகங்கள் கிரேக்க, ரோம, யூத சமூகங்களை விடவும் ஒப்பற்ற உயிர்ப்புடன் உள்ளன. எனவே தொல்குடியின சமூகங்களை முதலாளிய சமூகத்துடன் ஒப்பிடவே தேவையில்லை”.

கிறிஸ்டைன் வார்டு என்பவர் மார்க்சின் இந்தக் குறிப்பேடுகள் குறித்த ஆய்வினைச் செய்துள்ளார். இன்றளவும் தொல்குடியின சமூக அமைப்புகள் நீடித்திருப்பதை ஒடுக்குமுறை மலிந்த அரசுத் தொடர்புள்ள அமைப்புகளின் ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் அடையாளமாகவே மார்க்ஸ் காண்பதாகக் கூறுகிறார். எனவே இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் தொல்குடியின சமூக அமைப்புகளைக் காப்பாற்றி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.இலெனின் காலத்தில் வாழ்ந்த மார்க்சியர்கள், மார்க்சின் சிந்தனையில் ஏற்பட்ட இந்த பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே தான் ருசியப் புரட்சி நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, கிராம்சி பின்வருமாறு எழுதினார்.

இது காரல் மார்க்சின் மூலதனத்திற்கு எதிரான புரட்சி. ‘மூலதனம்’ நூல் ருசியாவில் பாட்டாளிகளுக்குப் பயன்படுவதைவிட, முதலாளிகளுக்கே அதிகம் பயன்படும் நூலாகவே கருதப்பட்டது”.

முதலாளியம் முழுமையாக வளர்ச்சியடைந்து, வீழ்ந்த பின்னரே சோசலிசப் புரட்சி நிகழும் என்ற ஐரோப்பிய மைய வாதம் காவுத்ஸ்கியிடமும், இரண்டாம் கம்யூனிச அகிலத்திடமும் முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் வெளிப்பட்டது. இந்த ‘ஐரோப்பிய மைய வாதத்திற்கு’ எதிரான மார்க்சின் நிலை பாட்டை, இலெனின் காலத்தில் வாழ்ந்த, புரட்சிகர மார்க்சிய மரபில் வந்த லக்சம்பர்க், டிராட்ஸ்கி, புகாரின், கிராம்சி, லூகாஸ் ஆகிய சிந்தனையாளர்கள் எதிரொலித்தனர். இச்சிந்தனையாளர்கள் மார்க்சின் பிந்தையக்கால ஆய்வுகள் குறித்து அறிந்திருக்கவில்லை.

1881ஆம் ஆண்டு மார்க்ஸ் ருசியாவைப் பற்றி எழுதியுள்ளதை பொதுமைப்படுத்தி ஷானின் கூறுவது:

விஞ்ஞான சோசலிசத்தின் பரிசுத்தமான வடிவங்கள் அரசியல் ரீதியாக மாற்றங்களை உருவாக்கும் திறனற்று இருந்தன. அனைத்து அரசியல் தாக்கமிக்க புரட்சிகர சமூக மாற்றங்களுக்கும் பின்புலமாக மார்க்சியத்துடன் உள்ளூர் அரசியல் மரபுகளின் இணைவே இருந்துள்ளது”.

இலத்தீன் அமெரிக்காவில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் பொலிவார், மார்த்தி, சாந்தினோ போன்ற பழங்குடியினத் தலைவர்களின் தலைமையில் நடந்தன. இங்கு காலனிய எதிர்ப்புப் போராட்ட மரபுடன் இணைந்தே சோசலிசத்திற்கான இயக்கங்கள் செயல்பட்டன. இதுவே இலத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர அனுபவமாக உள்ளது. மரபுடன் இணைந்த மார்க்சியமே இலத்தீன் அமெரிக்க மார்க்சியத்தின் சிறப்பான, வலுவான கூறாகும்.

மரீயாதெகி இதனை மிக அழகாகக் கூறுகிறார்:

“(இலத்தீன்) அமெரிக்காவிற்கான சோசலிசம் போலியானதாகவோ அல்லது நகலாகவோ இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அது ஒரு வீரஞ்செறிந்த படைப்பாக இருக்க வேண்டும். நம்முடைய மொழியை, மெய்நிலையை அடிப் படையாகக் கொண்ட இலத்தீன் அமெரிக்க சோசலிசத்திற்கு நாம் உயிர்க் கொடுக்க வேண்டும்.”

மீர் (Mir) என்றறியப்பட்ட வேளாண் கம்யூன்களின் புரட்சிகர ஆற்றல் குறித்த மார்க்சின் கருத்து அக்டோபர் புரட்சிக்குப் பின் நனவானது. ருசியக் கம்யூன்கள் புரட்சிக்கு முன், பல பத்தாண்டுகளாக நலிவடைந்து வந்தன. 1917ஆம் ஆண்டு விவசாயிகளின் மொத்த நிலத்தில் பாதிக்குமேல் தனியாருக்குச் சொந்தமாக இருந்தது. ஆனால், 1917-18ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளாண் சீர்த்திருத்தக் காலத்தில் விவசாயிகள் கம்யூன்களை மீட்டுருவாக்கம் செய்தனர். ‘மீர்’ ருசிய விவசாயத்தின் அடிப்படை அலகாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கு வேளாண் கம்யூன்கள் சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமான பங்காற்றின.

1927ஆம் ஆண்டு, ஸ்டாலினால் மேலிருந்து திணிக்கப்பட்ட கூட்டுப்பண்ணை உற்பத்திக்கு முன்பு வரை, மொத்த விளை நிலத்தில் 95 விழுக்காடு சமூக சொத்தாகவே இருந்தது.

இலத்தீன் அமெரிக்க அனுபவத்திற்கும், ருசியப் புரட்சிக்கும் இரண்டு விதமான ஒற்றுமைகள் உள்ளன. முதலாவது, போல்ஷ்விக்குகள் விவசாயிகளுடன் இணைந்து போராடியது. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சுரண்டப்படும் உழைப்பாளிகள் அணியில், உழைப்பை முதலாளிக்கு விற்கும் உழைக்கும் வர்க்கத்தினர் சிறுபான்மையினராகவே உள்ளனர். இரண்டாவதாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் தொல்குடிகளின் போராட்டங்களில் பண்டைய சமூகத்தில் நிலவிய கம்யூனிசத்தின் தொடர்ச்சியான இருப்பும், நிலங்கள் சமூக சொத்துரிமையாக இருப்பதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தேசிய விடுதலை:

மூன்றாவதாக, ஜார் மன்னனின் ருசிய ஆக்கிரமிப்பு காலனியத்தால் வாழ்வாதாரங்களை இழந்த, ஒடுக்கப்பட்ட கிழக்குப் பகுதி சிறுபான்மை மக்களை போல்ஷ்விக்குகள் அணுகிய முறையை இன்றைய இலத்தீன் அமெரிக்க நடைமுறையோடு ஒப்பிட முடியும். போல்ஷ்விக்குகளின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கொள்கையை விவாதிக்கும்போது, பெரும்பாலும் 1913-16ஆம் ஆண்டு கால ஸ்டாலின் - இலெனின் ஆகியோரது நிலைபாடுகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். 1917ஆம் ஆண்டு புரட்சிக்குப்பின்னர், போல்ஷ்விக்குகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை எவருமே கணக்கில் கொள்வதில்லை.

புரட்சிக்குப் பின்னர், போல்ஷ்விக்குகள் 1913ஆம் ஆண்டு ஸ்டாலின் கூறிய தேசிய இனத்திற்கான வரையறையையும் மீறி செயல் பட்டுள்ளனர். புரட்சி நடந்த 1917ஆம் ஆண்டில் தேசிய இனமாக இன்னமும் உருவாகாத ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவளித்து, அதனை நடைமுறைப்படுத்தினர்.

சிறுபான்மையின மக்களின் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் போல்ஷ்விக்குகள் திட்டங்களை வகுத்தனர்; அதற்கென அரசின் நிதி ஆதாரங்களை அதிக அளவில் ஒதுக்கினர்.

இந்த போல்ஷ்விக்குகளின் செயல்பாடுகள் பொலிவியா உள்ளிட்ட பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது தொல்குடி மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் புரட்சிகர கொள்கைகளுக்கு மிகவும் ஒத்துப் போகின்றன.

சூழலியலும் பொருள்முதல்வாதமும்

இறுதியாக, சூழலியல் குறித்துக் கூற வேண்டும். இப்பூவுலகு எதிர் கொண்டுள்ள சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு காத்திரமான கொள்கை முடிவுகளை பொலிவியா, கூபா போன்ற வல்லரசிய எதிர்ப்பு இலத்தீன் அமெரிக்க நாடுகளே வெளியிட்டுள்ளன.

இந்நாடுகளின் உறுதியான இந்த நிலைப்பாட்டிற்கு அங்கு நடைபெறும் தொல்குடி மக்களின் போராட்டங்களே பின்புலமாக உள்ளன. பொலிவிய அதிபர் ஈவா மொராலெஸ் “இயற்கையையும், மனித வாழ்வையும் காப்பதற்கான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த வேண்டிய பொறுப்பை வரலாறு எம்மிடம் பணித்துள்ளது” என்று தொல்குடி மக்களின் முன்னணிப் பங்கு குறித்துக் கூறுகிறார். தொல்குடி மக்களின் சூழலியல் குறித்த அணுகுமுறை அடிப்படையில் புரட்சிகரமானதாக உள்ளதால்தான் மொராலெசால் இவ்வாறு கூற முடிந்தது.

இதற்கு மாறாக, வல்லரசிய நாடுகளின் நடைபெறும் சூழலியல் விவாதங்கள் தொழில் நுட்பத்தையும், சந்தை வழிமுறைகளையுமே மையப்படுத்துகின்றன. இயற்கையை அழித்தொழிக்கும் முதலாளிய அமைப்பை முடிந்த மட்டும் காப்பாற்றும் நோக்கில் கரிம வணிகம், வரிவதிப்பு ஆகிய சந்தை வழிமுறைகள் குறித்து அவை பேசுகின்றன.

தொல்குடியின இயக்கங்களோ இயற்கைக்கும் மனித குலத்திற்குமிடையே ஒரு புதிய உறவை படைப்பது குறித்துப் பேசுகின்றன; “பூமித்தாயை விடுதலை செய்வோம்” என்ற இவர்களின் முழக்கம் இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இந்த இயக்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்த வழக்கத்தில் இல்லாத தங்கள் மூதாதையரின் மெய்யறிவிலிருந்து பெற்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த சொற்றொடர்களின் பின்னால் பொதிந்துள்ள அவர்களின் உலகப் பார்வையை ஒருவகையான பொருள் முதல்வாதம் என்றே கருத முடியும்.

பொலிவியத் தொல்குடியின எழுத்தாளரான மார்செலோ சாவேந்ரா வார்காஸ் “முதலாளிய சமூகமே பொருள் முதல்வாதத்தை மறுக்கிறது; அது பருண்மையான உலகின் மீது போர் தொடுத்து, அதை அழிக்கிறது. ஆனால் நாங்கள் பருண்மையான உலகத்தினை அரவணைத்துக் கொள்கிறோம்; எங்களை இப்பூவுலகின் ஒர் அங்கமாய்க் கருதுகிறோம்; இவ்வுலகை அக்கறையுடன் பாதுகாக்கிறோம்” என்று கூறுகிறார்.

இத்தகைய அணுகுமுறை ஜான்பெலமி ஃபாஸ்டர் எழுதியுள்ள ‘மார்க்சும் சூழலியலும்’ (Marx and Ecology) என்ற நூலில் காணப்படும் மார்க்சின் சிந்தனையை ஒத்திருக்கிறது. மனிதனுக்கும், இயற்கைக்குமிடையேயான ‘வளர்சிதை மாற்ற உறவில் ஏற்பட்ட பிளவை (metabolic rift) நீக்குதல் என்ற கோட்பாட்டிற்கு இணையானதாக ‘பூமித்தாயை விடுதலை செய்வோம்’ என்ற கருத்தைக் கூறுவது முற்றிலும் சரியானதே. ஷானின் சொல்வதுபோல், உள்ளூர் புரட்சிகர மரபுகளை இணைத்துக் கொண்ட உயிர்ப்பாற்றல் மிக்க இலத்தீன் அமெரிக்க மார்க்சியம் தான் நமது எதிர்கால நம்பிக்கையின் அடிப்படை.

பெருவிய மார்க்சிய சிந்தனையாளரும், தொல் குடியினத் தலைவருமான ஊகோ ப்ளாங்கா சொன்ன ஒரு நிகழ்வை முடிவுரையாகக் கூற விரும்புகிறேன். ப்ளாங்கோவின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்வீடன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூஸ்கோவின் அருகாமையிலிருந்து கெச்சுவா கிராமத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். அங்கு தொல்குடியின சமூகத்தினரிடையே காணப்பட்ட கூடி வாழும் முறையைப் பார்த்து, வியந்து, ஒரு பயணி ‘இது கம்யூனிசத்தைப் போல் உள்ளது’ என்று கூறினார். அதற்கு சுற்றுலா வழிகாட்டி ‘இல்லை கம்யூனிஸம் இது போல் இருக்கிறது’ என்று பதிலுரைத்தார்.

(தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில் வெளியான கட்டுரை)

Pin It