chennai flood

நடுத்தெருவில் நிற்கிறது தமிழ்நாட்டின் தலைநகரம்! ‘அம்மா உணவக’த்தில் சாப்பிடுவதையே கண்ணியக் குறைவாக நினைத்தவர்கள் கூட இன்று உணவுக்குக் கையேந்தி நிற்கிறார்கள்!

முற்றி முதிர்ந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில்! ஏரிகள் நிரம்பாதா, குடிநீர்த் தட்டுப்பாடு தீராதா என்று ஏங்கிக் கிடந்தவர்கள் இப்பொழுது, நிரம்பித் தளும்பும் ஏரிகள் எப்பொழுது உடையுமோ என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான சாலைகள் பாழாய்ப் போய் விட்டன. மிச்சம் மீதி சாலைகளைக் கூட வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருப்பதற்காக, வேறு வழியின்றி அரசே வெட்டிக் கூறு போட்டு விட்டது. பெரும்பாலான வீடுகளில் மழைநீரும் சாக்கடை நீரும் புகுந்து நாறிக் கிடக்கிறது. தொலைத்தொடர்பு, மின்சாரம், போக்குவரத்து என அத்தனையும் நாட்கணக்கில் முடக்கம். கடலூர் நிலைமையோ சொல்லவே வேண்டா! அந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆக, தனியொரு மனிதன் முதல் பேரதிகாரம் படைத்த அரசு வரை அனைவர் சொத்தும் அத்தனையும் பாழ்பட்டுக் கிடக்கின்றன தமிழ்நாட்டில். இவ்வளவுக்கும் காரணம் யார்? மீண்டும் இப்படி நடக்காமலிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? ஆராய்வோம் வாருங்கள்!

பொறுப்பில்லாத ஆட்சி

வடகிழக்குப் பருவமழை தொடங்கப்போகிறது என்பதை உணர்ந்து, முன்கூட்டியே அரசு அலுவலர்களுக்கு, தேவையான ஆணைகளைத் தான் வழங்கி இருந்ததாகவும், அவர்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிரத்தையுடன் மேற்கொண்டதாகவும், ஆனாலும் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சேதங்களைத் தவிர்க்க இயலாது என்றும் பேசியுள்ளார் முதல்வர்.

தெரியாமல்தான் கேட்கிறேன், மழை வரப் போவதை முதல்வர் தானாகவே உணர்ந்து கட்டளை பிறப்பித்தால்தான் உண்டு என்றால், இந்த வானிலை ஆராய்ச்சி மையங்களெல்லாம் எதற்கு? ஊருக்கெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே குறி சொல்லும் ரமணன், இந்த முறை வரப் போவது பருவமழை மட்டுமில்லை, கடும் புயல்மழை நம்மை நெருங்கி வருகி வருகிறது என்று முன்கூட்டி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யவில்லையா?

உண்மையில், அப்படி ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது; அரசுதான் அதைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்து இவ்வளவு பெரிய அழிவுக்கு வழி வகுத்து விட்டது என ஊரே வயிறெரிந்து கொண்டிருக்க முதல்வர் விடுத்திருக்கும் அறிக்கை அதற்கு எண்ணெய் வார்ப்பதாக இருக்கிறது.

சரி, அப்படி என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

வீராணம் ஏரியில் காட்டாமணிச் செடி, ஆகாயத்தாமரை போன்றவை வளர்ந்து தூர்வாரப்படாமல் கிடக்கிறது.அதைச் செய்திருந்தால் ஏரியில் ஒன்றரை டன் நீரைச் சேமித்திருக்கலாம். செய்யாததால் மூன்றில் ஒரு பங்கு நீரைத் தேக்கி வைக்க வழியில்லாமல் போய்விட்டது. மேலும், வேளாண் பெருமக்கள் நீர் கேட்டபொழுது ஏரியைத் திறந்து விடாமல் முழுக்கொள்ளளவு நீர் வைத்துக் கொண்டு, மழை வந்தவுடன் திறந்துவிட்டதால் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. இதை நான் சொல்லவில்லை ம.தி.மு.க தலைவர் வை.கோ கூறியுள்ளார்.

வீராணம் ஒன்று மட்டுமில்லை செம்பரம்பாக்கம், பூண்டி எனத் தமிழ்நாட்டில் எல்லா ஏரிகளின் கதையும் ஏறத்தாழ இதுதான். எந்த ஏரியும் கடந்த பல ஆண்டுகளில் தூர் வாரப்படவும் இல்லை; கரைகள் வலுப்படுத்தப்படவும் இல்லை. இன்று பல ஏரிகள் உடைப்பெடுத்துள்ளதன் காரணம் இதுதான். அது மட்டுமின்றி, புயல் மழை பற்றிய வானிலை ஆராய்ச்சி மைய எச்சரிக்கை வந்தவுடனே ஏரிகளின் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து விடத் தொடங்கியிருந்தால் கடைசி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கன அடி நீரை மொத்தமாகத் திறந்து விட வேண்டியிருந்திருக்காது.

ஏரியின் மதகுகளை முன்கூட்டித் திறந்து விடக்கூட விரலை அசைக்காத அரசுவேறு என்னதான் அப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது என எவ்வளவு சிந்தித்தாலும் புரியவில்லை. ஒருவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியவில்லையோ எனத் தோன்றுகிறது.

புயல் நெருங்கும்பொழுது எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அப்படி மேற்கொண்டால் எந்த அளவுக்குச் சீரழிவுகளைத் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு ஒடிசா தலைசிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது பற்றி விரிவாகவும் அழகாகவும் இதழாளர் சமஸ் அவர்கள் எழுதியுள்ள ‘கொல்வது மழை அல்ல’ கட்டுரை, ஆட்சியாளர்களும் மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய பாடம்!

இப்படித் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிக எளிய, அடிப்படை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாத முதல்வர், ஏதோ தான் எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுத்தும் தன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் அழிவு நேர்ந்து விட்டது போலப் பேசி, “நான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்” எனவெல்லாம் வார்த்தைகளை உதிர்ப்பது குறிப்பிட்ட ஒரு கண் மருத்துவமனையின் விளம்பரத்தை வேண்டுமானால் நினைவூட்டலாமே தவிர, குமுறிக் கிடக்கும் உள்ளங்களுக்கு அது மருந்தாகாது.

வெட்கமில்லாத தி.மு.க

மிதிவண்டி அளவு இடம் கிடைத்தாலே மீன்பாடி வண்டி ஓட்டக்கூடியவர் கருணாநிதி. இயற்கையே தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கும்பொழுது வாய் மூடிக் கொண்டிருப்பாரா? பிளந்து கட்டுகிறார்.தந்தைக்குப் போட்டியாகத் தனயனும் மழை அங்கி (ரெயின் கோட்டு), கணுக்காலணி (பூட்சு) என அணிந்து கொண்டு தன் நடைப் பயணத்தை மேலும் தீவிரமாக்கியிருக்கிறார்.

நோக்கத்தை அடைய விருப்பப்படியெல்லாம் முயற்சியெடுக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது; செய்யட்டும். அதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால், இத்தனை சீரழிவுக்கும் முழுக் காரணம் ஜெயலலிதா மட்டுமே என்பது போல இவர்கள் பேசும்பொழுதுதான் நமக்கு எரிச்சல் மண்டுகிறது.

“மாதம் மும்மாரி பொழிகிறதா?” - இது தமிழின் ஆகப் பழைய கலை வடிவமான கூத்து முதல் இன்றைய திரைப்படங்கள் வரை, அரசர் காலக் கதை என்றாலே தவறாமல் இடம்பெறும் உரையாடல். உரையாடல் எழுதியே உலகத் தமிழினத்தைக் கவிழ்த்த கருணாநிதி அவர்கள் இதைத் தெரியாதவர் இல்லை.

அப்படி, இயல்பாகவே மாதத்துக்கு மூன்று முறை மழை பெய்யும் இந்தப் பகுதி இன்று ஒரு நாள் மழைக்குத் தாங்காததாக மாறிப் போயிருக்கிறது என்றால், அதற்கு இந்த ஐந்தே ஆண்டுக் கால ஜெயலலிதா ஆட்சிதான் காரணமா?

இது வழக்கத்துக்கு மாறான மிகக் கனமழைதான் என்றாலும், நடந்திருக்கும் பேரழிவுக்குக் காரணம் அது கிடையாது எனக் கூறும் வல்லுநர்கள், முதன்மையாக மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். அவை:

௧. ஏரி, குளம், ஊருணி என எல்லா நீர்நிலைகளையும் வீட்டு மனைகளாக்குவது

௨. திட்டமிடல் ஏதுமின்றி ஆண்டுதோறும் (முக்கால் அடி) உயர்த்தப்படும் சாலைகள்

௩. மழைநீர் வெளியேறப் போதுமான வசதிகள் இல்லாதது ஆகியவை.

Chennai Flood 1

தவிர, மாறி மாறி ஆட்சி புரிந்த தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் வேளாண்மை முதலான நாட்டுப்புறத் தொழில்களையும் - கலைகளையும் வளர்க்க ஒரு துரும்பும் கிள்ளிப் போடவில்லை. இதனால், தலைமுறை தலைமுறையாக வாழ்வளித்த நல்தொழில்களைக் கண்ணீரால் கைகழுவி விட்டுப் பிழைப்புத் தேடி நகரப் பகுதிகளுக்கு மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால், நகரப் பகுதிகளில் மக்கள்தொகை பெருகியுள்ளது. நான்காயிரம் பேர் வாழக்கூடிய பகுதியில் நாற்பதாயிரம் வாழ நேர்ந்தால் மாடி மேல் மாடி கட்டிக் குடியிருக்க வேண்டுமானால் செய்யலாம். ஆனால், அதற்கேற்ப வடிகால் வசதிகளையோ இன்ன பிற அடிப்படை வசதிகளையோ செய்து தருவது அவ்வளவு எளிதில்லை.

இஃது ஒருபுறமிருக்க, பெருநகர மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளை ஆட்சியாளர்கள் புதிய புதிய சட்ட-திட்டங்களின் பெயரால் சூறையாடிப் பணமுதலைகளின் வணிக வளாகங்களுக்கும் தன்னாட்சி நகர்களுக்கும் (townships) தாரை வார்ப்பதால் இந்த மண்ணின் மைந்தர்கள் ஒதுக்குப்புறப் பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டி வருகிறது. போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமே சரிவரச் செய்யப்படாத இந்தக் கண்ணகி நகர்களும், திடீர் நகர்களும் ஒருநாள் மழைக்குக் கூடத் தாக்குப்பிடிப்பதில்லை. மக்கள் வாழத்தகாத இத்தகைய பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் பாதிப்புகளும், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடவே ஆண்டுதோறும் பெருகிவருகின்றன.

இன்னும் நிறையக் காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணங்கள் இவைதாம். இவை அத்தனையும் இந்த ஐந்தே ஆண்டுகளில் நடந்தவையா? அல்லது, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் மட்டும்தான் இவையெல்லாம் நடக்கின்றனவா? தமிழ்நாட்டிலிருந்த 38,202 ஏரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மண்ணால் சமாதி கட்டப்பட்டு இன்று வெறும் 18,000 ஏரிகள்தாம் மிச்சம் இருக்கின்றனவாமே, இவை அத்தனையும் அ.தி.மு.க ஆட்சியில்தான் சூறையாடப்பட்டனவா? எனில், கருணாநிதி கூறுவது போல் நடந்திருக்கும் இந்தப் பேரழிவுக்கு ஆளுங்கட்சியின் மெத்தனம் மட்டும்தான் காரணமா? அ.தி.மு.க ஒவ்வொரு முறை ஆட்சியில் அமரும் முன்பும் தவறாமல் அந்த அரியணையில் வீற்றிருந்த தி.மு.க மேற்படி தவறுகளில் ஒன்றைக் கூடத் தன் ஆட்சிக் காலத்தில் செய்ததில்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தி.மு.க தலைவர் சிந்திக்காவிட்டாலும் பொதுமக்கள் தங்கள் கட்சி விருப்பு-வெறுப்புகள் அனைத்தையும் ஒரு மணித்துளி ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

அறிவில்லாத நாம்

‘எதிராளியைக் குற்றஞ்சாட்டுவதற்காக நீ உன் ஆள்காட்டி விரலை நீட்டும்பொழுதே மற்ற மூன்று விரல்கள் உன்னை நோக்கித் திரும்பி, நீ எதிராளியை விட மும்மடங்குக் குற்றவாளி என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன’ என ஒரு பொன்மொழி உண்டு. அது போல, தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் எவ்வளவுதான் வண்டி வண்டியாகக் குற்றம் சாட்டினாலும் இந்த அளவுக்கு அவர்கள் தவறு செய்ய மீண்டும் மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வாரி வழங்கிய மக்களாகிய நாம் அவர்களை விடப் பன்மடங்கு குற்றவாளிகள் இல்லையா?

அது மட்டுமின்றி, இப்படி ஒருநாள் மழை பெய்தாலே நகரமே தத்தளிக்கும் அளவுக்கு இந்த மண்ணை மாற்றியதிலும் நம் பங்கு கொஞ்சநஞ்சமில்லை.

பிளாச்டிக் குப்பைகளையும் பாலித்தீன் பைகளையும் போகிற போக்கில் கண்ட கண்ட இடங்களிலும் வீசியெறிந்து விட்டுப் போகிறவர்கள் யார்? தி.மு.க, அ.தி.மு.க கட்சியாட்களா? இல்லை, பொதுமக்களாகிய நாம் அனைவரும்தான்.

ஒரு சொட்டு மழைநீரைக் கூட மண்ணின் கண்ணில் காட்டாமல் வீட்டின் சுற்றுப்புறம் முழுக்க சிமெண்ட்டால் மெழுகி அழகு பார்ப்பவர்கள் யார்? அரசியலாளர்களும் ஆட்சியாளர்களுமா? இல்லை, எல்லாவற்றுக்கும் அவர்களை மட்டுமே குறை சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொள்ளும் நாம் எல்லாருமேதான்.

மட்கும் குப்பை - மட்காத குப்பை எனக் குப்பைகளைப் பிரித்துப் போடுமாறு அரசு எத்தனையோ முறை வலியுறுத்தியாகி விட்டது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அதைக் கேட்டோம்?

அரசு என்பது மாபெரும் அமைப்புதான். அது செய்யும் ஒரு சிறு தவறு கூடப் பல கோடிப் பேரைப் பாதிக்கும் என்பதும் உண்மைதான். ஆனால், அதே பல கோடிப் பேர் சேர்ந்து மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு பேராற்றல் வாய்ந்த அரசாக இருந்தாலும் அத்தனை கோடித் தவறுகளையும் அன்றாடம் உட்கார்ந்து சரி செய்து கொண்டிருக்க முடியாது நண்பர்களே! அது ஒருக்காலும் நடக்காத கதை!

எனவே, முதலில் நாம் நம்மைத் திருத்திக் கொள்வோம்!...

பின், தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வாக்களிப்பதை நிறுத்திக் கொள்வோம்!

அப்பொழுதுதான், அடுத்த மழைக்கு நம் வீட்டுக்குள் நீர் வராமலும், நாம் தெருவுக்கு வராமலும் தப்பலாம்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It