கோயில் கட்டுகிறவர்கள் - கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் - தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள்:

“எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” என்ற பரப்புரை பயணம் சென்னை மாவட்டக் கழக தோழர்களால் நடத்தப்படுவது இது இரண்டாவது முறை. இந்த முறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆறு முனைகளில் இருந்து தொடங்குகிறது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட செயல் திட்டங்களை நாங்கள் எடுத்து வந்த போதும், இன்றைய சூழலில் –கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓரிரு ஜாதியவாதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வளர்த்துக் கொள்வதற்காக பொதுமக்களிடம் ஜாதி உணர்வை தூண்டிவிட்டதை பார்த்து ஒவ்வொரு ஜாதியினரும் அவ்வாறு நடக்க தொடங்கிவிட்ட சூழலில் தான் இப்படிப்பட்ட ஒரு பயணத்தை நாம் நடத்தவேண்டிய தேவை வந்தது. இந்த பயணத்தின் வழியாக பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ‘ஜாதி ஒழிப்பை’ மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் நோக்கம்.

‘பறிபோகிறது எங்கள் நிலம்’ என்பது பற்றி திருமூர்த்தி விளக்கிப் பேசினார். இப்போது வந்திருக்கின்ற சட்டம் நிலத்தை எப்போது வேண்டு மானாலும் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தாது மணல் கொள்ளை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றது; மீத்தேனுக்காக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண் பாலைவனம் ஆக்கப்படுகின்றது; இப்படி பல வகையில் நமது கனிம வளம் கொள்ளைப் போகிறது. நமக்கான இட ஒதுக்கீடு அரசு துறைகளில் மட்டும்தான் என்ற சூழலில் வேக வேகமாக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிக் கொண்டே போகிறார்கள். உலகிலேயே பெரிய தொழில் வாய்ப்பை வழங்குகின்ற நிறுவனம் நமது இரயில்வே துறையைக் கூட தனியாருக்கு கொடுக்க துணிந்துவிட்டார்கள் என்ற போக்கைப் பார்க்கின் றோம் இப்படி நமக்கான வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஜாதி என்ற ஒன்றில் தனது கவனத்தை முழுதும் குவித்து, தான் மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தையும் அதன் பக்கம் திருப்பி ஜாதிவெறியை ஓங்கச் செய்கின்ற முயற்சியை, தடுப்பதற்கான முயற்சி தான் இந்த பயணம்.

நாங்கள் பயணம் செய்யும் இடங்களில் பேசப் போவதெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைப் பார்த்துத்தான், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரிடம் – தங்களை உயர்வான ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் போய் இந்து மதத்தின்படி நீங்கள் பெரிய ஜாதி அல்ல என்பது ஒன்று; எப்படி இருந்தாலும் உங்களுடைய முன்னோர்கள் அறியாமையின் காரணமாக இந்த ஜாதியை கடைபிடித்திருக்கக் கூடும். ஆனால் நீங்களோ கல்வி பெற்றிருக்கின்றீர்கள் – உயர் கல்வி பெற்றிருக்கின்றீர்கள் – வேலை வாய்ப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் இந்தியா முழுவதும் பரவி செல்கின்றீர்கள்; இந்தியாவை விட்டு வெளிநாடு களுக்கும் கூட செல்கின்றீர்கள்; உங்களுக்கு ஒரு பரந்து விரிந்த விசாலமான பார்வை கிடைத்திருக்கின்றது; நீங்களுமா இந்த ஜாதியை பேசிக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் தலைமுறையிலாவது விட்டுத் தொலையுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசுவதுதான் எங்கள் திட்டம். ஆனால் இப்போது வந்திருப்பவர்களெல்லாம் ஒருபக்கம் ஜாதி வெறியையையும் மற்றொரு பக்கம் மத வெறியையும் தூண்டிவிடப் பார்க்கின்றார்கள்.

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னால், அவர்கள் now or never என்ற ஒரு கொள்கையை வைத்திருக் கின்றார்கள்; இப்போது செய்தால் தான் – இல்லா விட்டால் எப்போதும் முடியாது என்று வேக வேகமாக தொடங்கிவிட்டார்கள் தங்கள் வேலையை. எம்.ஜி.ஆர் வாரம், சிவாஜி வாரம், ரஜினி வாரம் என்று தொலைக் காட்சிகளில் வருவதைப் போல, இந்த வாரம் மாட்டுக்கறி வாரம் - சமஸ்கிருத வாரம் – பத்து பிள்ளைகள் வாரம் என்று அதையே நாம் பேசிக் கொண்டிருக்கும்படி நம்மை செய்துவிட்டார்கள்; அவர்கள் செய்யும் கொடுமைகளின் பக்கம் நமது கவனத்தையே விடாமல் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள். ஆனால் அவர்கள் என்னென்னவற்றை யெல்லாம் மாற்றத் தொடங்கியிருக்கிறார்கள் – எதிலிருந்து மாற்றத்தை கொண்டுவரத் துடிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சில அமைப்புகள் திரிசூலத்தை கொடுத்து மூன்று எதிரிகளை சொன்னார்கள்; முதலில் முஸ்லீம்கள் அடுத்து கிறிஸ்துவர்கள் அடுத்து மதசார்பின்மை பேசுபவர்கள் என்றான். இப்பொழுது அதை மாற்றி அமைத்துக் கொண்டான். குiஎந ஆள (ஐந்து எம்) என்கிறார்கள்; முதலில் மார்க்சிஸ்ட் இரண்டாவது மெட்டீரியலிஸ்ட் மூன்றாவது மெக்காலேயிஸ்ட் நான்காவது மிஷனரிஸ் கடைசியாக முஸ்லீம்ஸ் என்கிறான். முஸ்லீம் மீது உள்ள கோபம் போய் விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; முதலில் இருந்து சொன்னவை எல்லாம் மறந்தாலும் கடைசியாக சொன்னது மறக்காமல் மனதில் அழுத்தமாக நிற்கும் என்பதால் தான் முஸ்லீமை கடைசியாக சொல் கின்றார்கள்.

மெக்காலே மீது கோபம் ஏன்?

இவர்களை நோக்கி நம்மை திருப்பிவிடுவதில் ஒவ்வொன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்; மார்க்சியத்தின் மீதான கோபம் ஒரு வேலை பணக் காரனுக்கு வரலாம்; கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு மெட்டீரியலிஸ்ட் மீது கோபம் வரலாம்; மெக்காலே மீது என்ன கோபம்? கல்விமுறையை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தவர்மீது என்ன கோபம்? மெக்காலே கொண்டு வந்த கல்விமுறை தான் நம்மை அடிமையாக்கியது என்று நம்மவர்கள் சிலர் சொல்கின்றார்கள்; ஆங்கிலேயரிடம் அடிமையாக இருங்கள் என்றா சொல்லிக் கொடுத்தார்? கல்வி முறையில் என்ன கற்றுக் கொடுத்தார்? நம்ம ஆள் எதையுமே படிக்க மாட்டான்; எவனோ சொல்லி சென்றதை இவனும் சொல்லிக் கொண்டே இருப்பான்; இவன் படித்து தெரிந்து கொள்வதில்லை.

உதாரணமாக ‘தஞ்சை பெரிய கோவிலின் நிழல் கீழே விழாது’ என்று எவனோ சொல்லிவிட்டு போனதை இன்றும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; அங்கு போய் பார்த்தால் நிழல் விழுவதைப் பார்க்க முடியும். அரிஸ்டாட்டில் அவர்கள் ‘பெண்களுக்கு இரண்டு பல் குறைவு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தவர்; அவரின் மனைவி வாயைத் திறந்து பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும் அதைவிட்டு சொல்லிக்கொண்டே இருக்கிறாரே என்று அவரைப் பின்னால் கிண்டல் செய்தார்கள் என்பதாகச் சொல்வார்கள்.

யாராவது பரப்பிவிடும் கருத்தை உறுதிபடுத்திக் கொள்ளாமலேயே பல கருத்துகள் பின்பற்றப்படு கின்றன; அதில் ஒன்று தான் மெக்காலே பற்றியது. வேதம் புனிதமானது என்கிறார்கள்; கருப்பர்களை (நம்மவர்களை) அழிப்பதற்காக, மது – மாமிசம் கொடுத்து இந்திரனைத் (கடவுளை) துணைக்கு அழைப்பதைதான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக் கின்றது; அதை படித்து பார்க்காமலேயே புனித மானது என்று சொல்லி வருகிறார்கள். இதை யெல்லாம் பார்த்த மெக்காலே ‘மினிட் ஆன் எஜுகேசன்’ என்று எழுதுகிறார். அதில் சொல்லு கிறார்…. ‘இந்த நாட்டில் இருக்கின்ற இலக்கியங்கள் –அறிவுச் செல்வங்கள் (பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகளெல்லாம் அப்போது இருந்தது) என்று சொல்வதை எல்லாம் சேர்த்துப் பார்த்தேன்; இவைகள் சொல்லுகின்ற செய்திகள், ஐரோப்பிய தொடக்கப் பள்ளி மாணவனின் புத்தகத்தில் இருக்கும் செய்திகளின் அளவுக்குக் கூட இல்லை’ என்று.

இங்கிருந்த அறிவியல், வரலாறு, புவியியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கின்றது; இவனுடைய புவியியலில் பாற்கடல் எல்லாம் இருக்கின்றது. ஆயிரம் அடி உயர அரசர்கள் இவனுடைய வரலாற்றில் இருக்கின்றார்கள். அறிவியல் ஒன்றுமே இல்லை. எனவே இவர்களுக்கு நாம் அறிவியலை கொடுத்தாகவேண்டும் வரலாற்றை கொடுத்தாக வேண்டும் புவியலைப் பற்றிய செய்திகளை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கல்வி முறை வேண்டும் என்று சொன்ன மெக்காலேவை ஆங்கிலத்தை நம்மீது புகுத்தியவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மெக்காலே சொல்கிறார்… “எங்களில் சரிபாதி பேர் தாய் மொழியில் கல்வி வேண்டும் என்றார்கள்; நாங்கள் சரிபாதி பேர் ஆங்கிலத்தில் தான் வேண்டும் என்று சொன்னோம்; நாங்கள் எல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தோம்; முதலில் ஆங்கிலத்தில் கல்வியை கொடுப்பது, அதன் வழியாக அறிவை பெற்ற அந்தந்த மொழிக்காரர்கள் ஒரு இருபது -முப்பது ஆண்டுகளில் தங்கள் மொழியில் நூல்களை கொண்டுவந்து விடுவார்கள் என்று முடிவு செய்தோம்” என்று.

அரசின் தூண்களாக மூன்றைத்தான் சொல்வார்கள்; ஒன்று சட்டம் இயற்றுகின்ற துறை, அடுத்து நீதித்துறை, மற்றொன்று நிர்வாகம் செய்கின்ற அரசு அதிகாரிகள் துறை. இந்த மூன்றிலும் ஒன்றுகூட ஒழுங்காக இல்லை. இதன் மீதெல்லாம் நமது கவனம் செல்லவே விடுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பற்று பேசுகின்றார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று பி.ஜே.பி சொல்கின்றான். ஒரிஜனல் காந்தியை கொன்று வழக்கு நடத்தி, உயர் நீதி மன்றத்திற்கு போய், மேல் முறையீட்டில் உறுதி செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட கோட்சேவை தேசபக்தன் என்கிறான்; ஆனால் இராஜீவ் காந்தியை கொன்றதாக வழக்கு ஏதும் நடத்தப்படாமலேயே, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனின் படம் வைத்தால் கூட கைது செய்கிறார்கள்; என்ன நிர்வாக துறை இது?

தமிழ்நாட்டை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்று ஒவ்வொன்றாக செய்கிறார்கள். 1925 இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்ணூறு ஆண்டுகள் கழித்து 2014 இறுதியில் தான் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் இட ஒதுக்கீடு பற்றிய சிக்கல் வந்த போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக் கொள்வதாக, இங்கிருக்கும் பி.ஜே.பி.யினர் சொன்னார்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை எதிர்க்க முடியாது என்ற நெருக்கடியை உனர்ந்து பி.ஜே.பி சொன்னதை இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸும் சொல்கிறான். திருக்குறளை தேசிய நூல் ஆக்குவோம் என்று தருண்விஜய் சொல்கிறார். அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தியாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் சொல்கிறார்கள் எங்கள் பிரதமர் எப்போது வெளிநாட்டு தலைவர்களிடமெல்லாம் கீதையை கொடுத்தாரோ அப்போதே கீதை தேசிய நூலாக முடிவு செய்யப்பட்டதாக தான் பொருள் என்கிறார் சுஷ்மா சுவராஜ்.

கீதை: விவேகானந்தர் கூறியது என்ன?

கீதையை பற்றி நாங்கள் கேட்கும் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்; கீதையைப் பற்றி அம்பேத்கர் எழுதியதை கூட விடுங்கள். பார்ப்பனர்களின் ஹீரோ விவேகானந்தர் என்ன சொல்கிறார்? (காங்கிரசில் காந்தி, பி.ஜே.பி யில் மோடி என பார்ப்பன ரல்லாதவரை கொண்டுவந்து வைத்துக் கொண்டு உங்கள் ஆள் என்று நம்மிடம் காட்டுவார்கள்; அப்படிதான் விவேகானந்தரையும் இவர்கள் காட்டுகிறார்கள்.) போர் நடந்து கொண்டிருக்கும் போது கிருஷ்ணன் அர்சுணனுக்கு சொன்னது தான் கீதை; இவ்வளவு பெரிய புத்தகமாக இருக்கிறதே ! சண்டை நடக்கும் போது யார் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்தது? என்று விவேகானந்தர் கேட்டார். இது ஒரு பித்தலாட்டம் என்ற பொருளில் விவேகானந்தர் சொன்ன கீதையை தான் தேசிய நூலாக்க வேண்டும் என்று சொல்கின்றான்.

விவேகானந்தர் மேலும் பலவற்றை கேட்டார். வயதான மாடுகளை பாதுகாக்க கோசாலை என்று நடத்துபவர்கள் நன்கொடை கேட்டு விவேகானந் தரிடம் சென்றார்கள்; (ஞான தீபம் என்று விவேகாந்தரின் நூல்களை தொகுத்து போட்டிருக் கிறார்கள் வாய்ப்பிருப்பவர்கள் படித்துப் பாருங்கள்) பீகாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் இதை ஏன் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று விவேகானந்தர் கேட்டதற்கு, என்ன இருந் தாலும் கோமாதா நமது தாய் அல்லவா? என் கிறார்கள். ஆம் உங்களைப் போன்ற புத்திசாலிகளை வேறு யார் பெற்றிருக்க முடியும்? என்கிறார் விவேகானந்தர். இதை நாங்கள் பேசும் வீரமணியோ அம்பேத்கரோ எழுதவில்லை; பார்ப்பனர்கள் பாராட்டும் விவேகானந்தர் சொல்கிறார்.

மோடியின் கண்டுபிடிப்புகள்

அறிவியலை பரப்புவதற்கு ஆய்வதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன; இப்போது மோடி புதுசா அறிவியலை கண்டுபிடிக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்திலேயே - புராணத்திலேயே இருந்திருக்கின்றது; இல்லையென்றால் விநாயகரின் உடலில் யானையின் தலை எப்படி ஒட்டப்பட்டிருக்க முடியும்? என்று விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த மடையன்களும் (விஞ்ஞானிகள்) கேள்வி கேட்காமல் - எதிர்ப்பு தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் கழுத்தின் சுற்றளவு எவ்வளவு? யானையின் கழுத்தின் சுற்றளவு எவ்வளவு? என்ற சிறு கேள்வியை அன்று பெரியார் கேட்டார். எவரிடமிருந்தும் பதில் வரவில்லை

அந்த காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக மோடி பேசுகிறார்; அதே போல இங்கு வளவன் ஏவா வானவூர்தி (பைலட் இல்லாத ராக்கெட்), கைவிட்டகலா கால இயந்திரம் (ரிஸ்ட் வாட்ச்) இருந்தது என்று இங்கிருக்கும் புலவர்களும் புழுகி கொண்டிருக்கிறார்கள். இருவர் சொல்வதும் பொய்தான்; யார் பொய் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தமிழ் படித்தாலே உனக்கு கண் பின்னால் போய் விடுகிறது’ என்றார் பெரியார். நாளைக்கு என்றே எந்த புலவரும் பேசுவதில்லை; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்பார்கள். இதைச் சொன்னால் பெரியாரை கோபித்துக் கொள்கிறார்கள்; ‘கடவுளையும் காதலையும் விட்டால் உன் இலக்கியங்களில் என்ன இருக்கின்றது? எடுத்துக் காட்டு’ என்றார் பெரியார். அப்படி காட்டுவதற்கு எதுவும் இல்லை. சிலர் பட்டிமன்றங்களில் பேசுவதற்கு மட்டும் பயன் பட்டிருக்கலாமே தவிர வேறு எதற்கு பயன்பட்டது?

துரியோதனன் மனைவியும் கர்ணனும் தாயம் ஆடிக்கொண்டிருந்தார்களாம்; துரியோதனன் வந்ததைப் பார்த்து எழுந்த அப்பெண்ணின் முந்தானையைப் பிடித்து கர்ணன் இழுத்தானாம்; முத்துகள் எல்லாம் உதிர்ந்து விட்டதாம். உடனே துரியோதனன் ‘பொறுக்கவோ, கோக்கவோ’ என்று கேட்டானாம்; “அதற்குப் பொறுத்துக் கொள்ளட்டுமா? கோபித்துக் கொள்ளட்டுமா? என்பதும், பொறுக்கிக் கொடுக்கட்டுமா? கோர்த்துக் கொடுக்கட்டுமா? என்பதும் பொருள்” என்று கூறுகிறார்கள்; வட இந்தியாவில் நடந்ததாகச் சொல்லபடும் கதை இது; துரியோதனன் தமிழில் எப்படி பேசியிருப்பான்? என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. இப்படித் தான் இவர்கள் தொடர்ந்து புழுகுகிறார்கள்.

பாரதப் போர் நடக்கிற போது, அரண்மனையில் இருக்கும் கண் தெரியாத திரிதராஷ்டரனிடம், சஞ்சயன் என்பவன் ஒரு கருவி மூலமாக பார்த்துப் போரின் நிலைமையைப் பற்றி சொல்லுகின்றானாம்; எனவே அந்த காலத்திலேயே தொலைக்காட்சி இருந்தது என்கிறார். இவை எல்லாவற்றையும் விஞ்ஞானிகளில் மாநாட்டிலேயே பேசுகிறார்கள். படிப்புக்காரன் யாரும் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘ஆலிஸ் இன் தி வொண்டர் லேண்ட்’. அரேபியன் கதைகள் இதையெல்லாம் கடவுள் என நம்பாமல் கதை என்று படித்துக் கொண்டே போகிறார்கள்; ஆனால் இவர்கள் மட்டும் நம்மை நம்பச் சொல்கிறார்கள். அதன் மீது தன்னுடைய ஆட்சியை – அறிவியலை எல்லாவற்றை யும் கட்டமைத்து விட எண்ணுகின்றார்கள்; எல்லாம் அதையொட்டி போகவேண்டும் என்கிறார்கள்.

ஹரியானாவில் செத்துப் போன மாட்டின் தோலை உரித்ததற்காக, ஐந்து பேரை கொன்றான். மனித உயிர்களைவிட, செத்த மாட்டை உயர்வாகக் கருதி கடந்த ஆட்சிக் காலத்தில் இப்படி செய்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (ஈழ சிக்கல் வருகின்ற போதெல்லாம் அவ்வப்போது கிரிக்கெட் போட்டி வந்துவிடும்; பலரும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அனைத்து பிரச்சனையையும் மறந்து விடுவார்கள்.) இப்படி பல சிக்கல்கள் நடக்கும்போதெல்லாம் நம் நாட்டில் அவ்வப்போது ஜாதி சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஜாதி வாதம் பேசப்படுகின்றது. ஜாதியை உயர்த்தி பேசுபவர்கள் யார்? பலன் அனுபவிக்கும் ஜாதியா? இல்லையே பாதிக்கப்பட்டவன் அல்லவா பேசிக் கொண் டிருக்கிறான். அவர்களிடம் போய் அவர்களை விளங்கச் செய்வதற்குத் தான் இந்தப் பயணம்.

பெரியார் ஜாதியை பற்றி பல விளக்கங்களை சொல்லியிருக்கின்றார். சுயமரியாதை இயக்கம் தொடங்கும் முன்பே காங்கிரஸ்காரராக இருக்கும் போதே பேசத் தொடங்கிவிட்டார்; காங்கிரஸ் மாநாடுகளில் பேசுகிறார். காரைக்குடி ஜில்லா மாநாட்டிற்கு பெரியார் தான் தலைவர்; அந்த தலைமை உரையில், மனுதர்மத்தைப் பற்றி, சூத்திரன் என்பதற்கான அர்த்தம் பற்றி, தாழ்த்தப் பட்டவர்களை அவமதிக்கலாமா என்பதைப் பற்றி பல பிரச்சனைகளை பேசுகிறார். தீண்டாமை என்பதில் இருக்கும் மூடத்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் பார்த்தப் பின்னால் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். இன்று என்ன அவசரம் என்று கருதுவதற்கு என் மனம் இடம் தர மறுக்கிறது என்று எழுதுகிற அளவிற்கு தீண்டாமையின் கொடுமையைப் பெரியார் உணர்ந்திருந்தார்; ஆனால் பாதிக்கப்பட்ட நாம் உணரவில்லை.

(தொடரும்)

Pin It