Communists

ஏறக்குறைய 90 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இன்று 100க்கும் குறையாத பல்வேறு இயக்கங்களாகப் பிரிந்து கிடக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இரசியாவிலும் சீனாவிலும் சுமார் 25 ஆண்டுகளுக்குள் அந்நாட்டுப் பொதுவுடமைக் கட்சிகளால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தபோது இந்தியாவில் அது ஏன் இன்னும் முடியவில்லை? இதற்கான காரணம் வெறும் அமைப்பு ரீதியானதாக மட்டும் இருக்க முடியாது. சமூக உற்பத்தி முறை பற்றிய புரிதலிலும், அதையொட்டிய திட்டம் மற்றும் செயல் தந்திரங்களில் ஏற்பட்ட தவறுதலே முக்கிய காரணமாக இருக்க முடியும். இதைப்பற்றிய (மேலும் ஆய்வுக்குரிய) கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய சமூக அமைப்பு

இந்தியாவில் உற்பத்தி முறைகளின் வளர்ச்சிப் போக்கை அப்படியே ஐரோப்பிய உற்பத்தி முறைகளின் வளர்ச்சிப் போக்கோடு பொருத்திப் பார்க்க முடியாது. அது அவசியமானதும் அல்ல. இந்திய தன்மைகளைக் கொண்ட அதன் வளர்ச்சிப் போக்கைப் புரிந்து கொண்டாலே போதும். புராதன பொதுவுடைமைச் சமூகம் நெடுங்காலமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன் கூறுகளை இன்றும் மலைப்பகுதிகளில் காணமுடிகிறது. விவசாயத்தில் நன்கு வளர்ச்சியடைந்த சமூகமும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. அதன் நகர அமைப்பிலிருந்தே அது ஒரு முன்னேறிய நாகரிகம் என்று தெரிகிறது. அது ஒரு நிலவுடமை சமூகமாகவே இருந்திருக்க வேண்டும்.

ஆரியர்களின் வருகைக்குப் பிறகு ஒரு புதிய சமூக அமைப்பு உருவாகிறது. முன்னேறிய ஒரு சமூகத்தை பின்தங்கிய ஒரு கால்நடை வளர்ப்பு சமூகம் வெற்றிகொள்கிறது. இதன் பயனாக ஒரு புதிய வகை சாதிய சமூகம் உருவாகிறது. நிலபிரபுத்துவமும் அடிமை உடைமையும் கலந்தது போன்ற ஒரு உற்பத்தி முறை உருவாகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்த சமூகம் பல்வேறு சீர்திருத்த வளர்ச்சிக்கு உட்பட்டிருந்தபோதும் இதை ஒரு வகையான நிலவுடைமைச் சமூக அமைப்பு என்றே கருத வேண்டும். நிலம் சில நேரங்களில் அரசுக்கு சொந்தமாக இருந்த போதிலும் அரசு நிலவுடைமை என்றே கருதவேண்டும். புராதன பொதுவுடைமை என்று எண்ணக் கூடாது. ஏனெனில் அப்போது அரசு என்பது கிடையாது.

ஆங்கிலேயர் ஆட்சிக்கால உற்பத்தி முறை:

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சுமார் கி.பி.1700-ல் இந்தியாவின் வருமானமானது உலக வருமானத்தில் ஏறக்குறைய 24 சதவீதமாக இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. இது அப்போதைய ஒட்டுமொத்த ஐரோப்பிய வருமானத்துக்குச் சமமானது. ஆனால் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றபோது இந்திய வருமானம் உலக வருமானத்தில் 4 சதவீதமாக குறைந்து போயிருந்தது. இதிலிருந்தே காலனிய உற்பத்தி முறை இந்தியாவின் வளர்ச்சியை எப்படி சிதைத்து ஒழித்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் தன்னிச்சையான தொழில் வளர்ச்சியை முடமாக்கியது. அதே நேரத்தில் ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டின் ஆட்சி என்பதால் நிலவுடைமை சமூகம் சீர்திருத்த முறையில் வளர்ச்சியடைந்து அரை நிலப்பிர‌புத்துவ சமூகமாக மாறியது. நாணய முறை, வரி அமைப்பு, எடை மற்றும் அளவுகளை நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக மாற்றியமைத்து. இரயில்வே, அஞ்சல், வங்கிகள் போன்ற கட்டமைப்புத் துறைகளை ஏற்படுத்தியது. இறுதிக் கட்டத்தில் வணிக முதலாளிகளாயிருந்த பலர் தொழில் உற்பத்தித் துறைக்கும் விரிவடைந்து சென்றனர். இவை யாவும் ஆங்கிலேயரின் இறுதிக் காலத்தில் இந்திய உற்பத்தி முறை அரை நிலப்பிரபுத்துவ காலனி உற்பத்தியாக இருந்ததைக் காட்டுகிறது.

ஆங்கிலேயருக்குப் பிந்தைய உற்பத்திமுறை :

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் முதலாளிய வர்க்கம் தோன்றுவதற்கு முன்னர் நிலவுடைமை வர்க்கத்தின் ஒரு பகுதி தொடக்கமுதலே கடுமையாகப் போராடி வந்தது. மற்றொரு பகுதி சமரசமாகச் சென்று கூட்டாளியானது. இந்த மாதிரி சில சக்திகளால்தான் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர் ஆதரவோடு உருவாக்கப்பட்டது. முன்னாளில் சில சில சீர்திருத்தங்களைக் கோரி வந்த இக்கட்சி முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கேட்பவும், உலக சூழலுக்கு ஏற்பவும் கொஞ்சம் கொஞ்சமாக தனது கோரிக்கைகளை உயர்த்தி முழு சுதந்திரம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது. இதனிடையே அனைத்து முதலாளிய, நிலவுடமைச் சக்திகளும் இக்கட்சியில் ஒன்றிணைந்தன. இவற்றுள் புரட்சிகர, முற்போக்கு, பிற்போக்கு பிரிவுகளும் அடங்கும்.

இதனிடையே பொதுவுடைமை இயக்கமும் தன்னிச்சையாகவும், காங்கிரசோடு இணைந்தும் வளர்ந்து வந்தது. ஆங்கிலேய அரசு சோவியத் புரட்சியின் தாக்கத்தால் பொதுவுடைமைக் கட்சியை செல்வாக்கு பெறவிடாமல் செய்ய தன்னால் ஆன அனைத்தையும் செய்தது. இதற்காக காந்தியின் தலைமையையும் காங்கிரசையும் வளர்த்துவிடுவதற்கு அதுவே உதவியாக இருந்தது.

பொதுவுடைமைக் கட்சியும் சுயமாக சூழ்நிலைக்கேற்ற செயல் தந்திரங்களைக் கடைப்பிடிக்க இயலாததாக சோவியத் கட்சியின் வழிகாட்டுதலைப் பெரிதும் சார்ந்து இருந்தது. இதனால் சுதந்திரப் போராட்டத்தில் தலைமையை அதனால் கைப்பற்ற முடியவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்து முன்னெடுக்காதது போன்ற பல தவறுகளைச் செய்தது. எனினும் ஆங்கிலேயருக்கு அச்சமூட்டும் ஒரு சக்தியாகவே இருந்தது. இந்த சூழ்நிலையையும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த முதலாளிய வர்க்கம் ஆங்கிலேயரை ஒரு சமசர உடன்பாட்டின் மூலம் வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தது. ஒரு புறம் மக்கள் சக்திமூலம் தாம் பலவந்தமாக வெளியேற்றப்படுவதைவிட சமரச முறையில் இந்திய முதலாளிகளிடம் அதாவது காங்கிரசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதே மேல் என்று கருதி 1947-ல் ஆங்கிலேய அரசு வெளியேறியது.

முதலாளித்துவ சுதந்திரத்திற்குப் பிந்தைய மாற்றம்:

இவ்வாறாக பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் பலவந்தமாக ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்டு சுதந்திர அரசு அமைவதை வெற்றிகர‌மாகத் தடுத்து காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த வாய்ப்பை தவறவிட்ட பொதுவுடைமை இயக்கத்திற்கு, அதாவது புரட்சிக்கான புறச்சூழல் இருந்தும் அகச்சூழல் பொருத்தமாக இல்லாததால் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்த பொதுவுடைமை இயக்கத்திற்கு அதன்பின் வாய்ப்பே கிடைக்கவில்லை. அதன்பிறகு புறச்சூழல் புரட்சியைக் கோருவதாகவே இல்லை.

இந்நிலையில் சுதந்திரம் பெற்ற முதலாளிய வர்க்கம் ஒருபுறம் பொதுவுடைமை இயக்கத்தையும் மறுபுறம் நிலவுடைமையையும் நசுக்கியது. நிலவுடைமை வர்க்கத்தை ஒரு அரசியல் சக்தி என்ற முறையில் ஒழித்துக் கட்டியது. மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு நவீன இந்தியாவை உருவாக்கியது. இது சில இடங்களில் பலவந்தமாகவும் சில இடங்களில் அமைதியான முறையிலும் நடந்து முடிந்தது. உலக முதலாளித்துவத்தின் படிப்பினைகளைக் கொண்டும் சோவியத் சோசலிசத்தின் படிப்பினைகளைக் கொண்டும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு இணையான ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. நீதித்துறை, நிர்வாகத்துறை, குற்றவியல் சட்டம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் நவீன முதலாளித்துவ முறையிலான சட்டங்கள் உருவாக்கப்பட்டது. சுருக்கமாக முதலாளித்துவ சனநாயகம் நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாத பின்தங்கிய உற்பத்தி உறவுகள் நிலவும்போது, உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க இயலாதவாறு மேல் கட்டுமான அரசியல் அதை பலவந்தமாக காத்து நிற்கிறபோது, உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டு சமூகத்தின் முன்னோக்கு வளர்ச்சி தடைப்பட்டு ஒரு முட்டுச்சந்தில் நிற்பதுபோன்ற நிலை ஏற்படும்போதே புரட்சிக்கான புறச் சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாதபோது என்னதான் முயற்சி எடுத்தாலும் அது வெற்றி பெறாது.

சுதந்திரத்திற்குப் பின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பின்தங்கி இருந்தபோதும் அதன் வளர்ச்சிக்கு அதாவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை நோக்கி வளர்வதற்கு மேல்கட்டுமானம் ஒரு தடையாக இல்லை. எனவே சீர்திருத்த முறையில் தொடர்ந்து உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் வளர்ந்து வந்தன‌. இது இன்றுவரை நீடிக்கிறது. இதுதான் ஒரு புரட்சிகர புறச்சூழல் இங்கு நிலவாததற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் சுதந்திர முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சிப் பாதையை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் 30 ஆண்டுகள் சோவியத் ரசியாவின் தாக்கத்தாலும் தொழில்நுட்பங்களுக்கு அந்நாட்டை சார்ந்திருந்ததாலும் ஒருவித கலப்புப் பொருளாதார முறையைப் பின்பற்றியது. ஒருபுறம் தேசியமயமாக்கப்பட்ட கனரக மற்றும் கட்டுமானத் தொழில்துறை, மறுபுறம் கட்டுப்படுத்தப்பட்ட சந்தைப் பொருளாதாரம் என்ற ஒரு கலப்பு பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்டது. பல ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டன. வேளாண்மையில் உற்பத்திப் பெருக்கத்திற்கான பல புரட்சிகரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஓரளவு தன்னிறைவு அடையப்பட்டது.

இரண்டுவித காரணங்களால் இவ்வளர்ச்சி மிகவும் மந்தமானதாகவே இருந்தது. ஒருபுறம் அதிகார வர்க்க ஊழல் முறைகேடுகளால் பொதுத்துறை வளர்ச்சி எதிர்பார்த்த பலனளிக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் பின்தங்கிய நிலையும் இந்தப் பொதுத்துறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. மறுபுறம் சந்தை முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் ஒருவித கட்டுப்பாடுகளுடனே இருந்ததால் அதுவும் போதிய வளர்ச்சி அடையவில்லை. எனவேதான் 80களுக்குப் பிறகு சோவியத்தும் முடிவுறும் நிலைக்கு வந்தபோது இக்கொள்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. முதலாளித்துவ சக்திகளை தங்கு தடையின்றி கட்டவிழ்த்து விடும் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனத்தை தனியாக விற்பதன் மூலமும் இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலம் ஆதிமூலதனத் திரட்சி போன்றதொரு மூலதனத் திரட்சிக்கு வித்திடப்பட்டது. வெளிநாட்டு மூலதனமும் தங்குதடையின்றி நுழைவதற்கு வழி வகுக்கப்பட்டது. இதனால் தொழில்துறை வளர்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக இவ்வளர்ச்சி இருந்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதலாளித்துவ வளர்ச்சி ஓரளவுக்கு நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது. அதாவது நிலவுடைமையின் மிகச் சொச்சங்கள் அழிந்து முழுவதுமான முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது.

இன்றைய உற்பத்தி முறை :

இன்று இந்தியா உலகில் 9வது பெரிய பொருளாதாரமாகவும், வாங்கும் திறன் அடிப்படையில் 3வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே விவசாயத் துறையிலிருந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் 27% தொழில் துறையும் 55% சேவைத்துறையும் பங்களிக்கிறது. மொத்த உற்பத்தி சக்திகளில் 52% விவசாயத்தைச் சார்ந்தும், 14% தொழிற்துறையைச் சார்ந்தும், 34% சேவைத் துறையைச் சார்ந்தும் உள்ளது. இப்புள்ளி விவரங்கள் கிட்டத்தட்ட முன்னேறி முதலாளித்துவ நாடுகளை ஒத்திருக்கிறது. விவசாயம் சந்தைக்கான உற்பத்தியையே முக்கியமாகவும் முதன்மையாகவும் கொண்டிருக்கிறது. உற்பத்தி உறவுகளிலும் கூலியுழைப்பு மூலதனம் (உற்பத்தி சாசனங்கள்) என்ற முறையே முதன்மையாக உள்ளது. நிலவாடகை முறை என்பது மிகவும் குறைவாக 7% என்ற அளவிலேயே உள்ளது. அதுவும் பணமாகவே செலுத்தப்படுகிறது. சாதிய அமைப்பு முறைகளும் தளர்ந்து வருகிறது.

தேசிய இனங்கள் வளர்ச்சி :

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு ஒப்பீட்டளவில் தேசிய இனங்களின் வளர்ச்சி தடையில்லாமலே நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் நில உரிமையை தேசிய இனங்கள் பெற்றது ஒரு முக்கிய விஷயமாகும். எனினும் ஒன்றிய அரசு முக்கிய வருவாய்களை எடுத்துக் கொள்வதும், மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம் கொண்டிருப்பதும் ஒரு முக்கிய தடையாகும். புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு மாநில அரசுகளை கலைப்பதில்லை என்ற போதும் அந்த உரிமை நீக்கப்படவேண்டும். நிதி ஆதாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு மத்திய அரசு அதிலிருந்து பெற்றுக்கொள்ளும் முறை உருவாக்கப்பட வேண்டும்.

உலக சூழலும் இந்திய முதலாளி வர்க்கமும்

இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நிதி மூலதனம் பொருளுற்பத்தி துறைக்கு உதவிகரமாக இருந்த நிலை மாறி, பொருளுற்பத்தியின் உபரிமதிப்பை மறு வினியோகம் செய்யும் கருவியாக மாறிவிட்டது. இதைப் பங்குச் சந்தையின், மற்றும் அபவமான பொருள்சந்தையின் எல்லாவிதமான கருவிகளையும் கொண்டு ஊக வணிகத்தின் மூலம் செல்வத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பாயச்செய்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலரின் உலகப் பயன்பாட்டைக் கொண்டு எல்லா நாடுகளின் செல்வங்களைப் பறித்துக் கொள்கிற‌து. அமெரிக்கக் கடன் பத்திரங்களில் பிறநாடுகளை மூல‌தனமிட வைத்து திருப்பிச் செலுத்தும்போது வெறும் டாலரை அச்சடித்துக் கொடுக்கிறது. இதனால் அதற்கு செலவு ஏதும் ஏற்படாததோடு டாலரின் மதிப்பு குறைவதன் மூலம் தனது கடன் தொகையில் ஒரு பகுதியை தானே தள்ளுபடி செய்து கொள்கிறது. இந்த டாலரின் ஆதிக்கத்துக்கு எதிராக சிறு எதிர்ப்பு காட்டிய நாடுகளையும் ஆயுதபலத்தால் அடக்கி ஒழித்துவிடுகிறது.

பனிப்போரில் வெற்றி பெற்ற பிறகு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டபோதிலும் அதற்கு சவால்கள் இல்லாமல் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து 10 சதவீத வளர்ச்சி கண்டுவரும் சீனா உலகம் முழுவதும் அதற்கு ஒரு சவாலாக உள்ளது. இரசியாவும் 90களில் ஏற்பட்ட சீர்குலைவுகளுக்குப் பிறகு மெதுவாக எழுச்சி பெற்று வருகிறது. இதுபோக BRICS நாடுகள் கூட்டமைப்பு மர்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு போன்ற பல அமைப்புகள் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை கேள்வி கேட்கிறது. இப்படி தனது ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருவதால் உள்நாட்டு நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது அமெரிக்கா. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இந்திய முதலாளி வர்க்கம் உலக முதலாளித்துவ அமைப்பில் ஒரு அங்கமேயாயினும் ஒப்பீட்டு ரீதியில் ஒரு சுதந்திரமான நிலையையே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதற்கு எதிரான சக்திகள் இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு தனது வளர்ச்சியிலேயே கருத்தாக உள்ளது.

பாட்டாளி வர்க்க கட்சித் திட்டம் :

எனவே இந்தியாவில் முதன்மையான முரண்பாடானது உழைப்புக்கும் மூலதனத்துக்குமானதாகவும், இரண்டாவது முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்குமானதாகவும் உள்ளது. இந்திய முதலாளி வர்க்கத்துக்கு ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடு பகையற்றது. எனவே இந்தியாவில் பாட்டாளி வர்க்க கட்சிக்கான திட்டம் சோசலிசப் புரட்சிக்கான திட்டமாகவே இருக்க முடியும். எவ்வளவு பெரிய அமைப்பாக இருந்தாலும் இதனைப் புரிந்து கொள்ளாமல் தவறான திட்டத்தைக் கொண்டிருந்தால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

Pin It