இந்திய ராணுவத்தைப் பற்றியும் ராணுவ வீரர்களைப் பற்றியும் நம் மக்களுக்கு அளப்பறிய மரியாதை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டை பாதுகாப்பதால்தான் நாமெல்லாம் இங்கே நிம்மதியாக தூங்க முடிகின்றது என்று நம் பொதுபுத்தியில் பதிய வைக்கப் பட்டிருகின்றது. ஆனால் காஷ்மீரிலும், மணிப்பூரிலும், நாகாலாந்திலும் போய் இந்திய ராணுவத்தின் மேன்மையைப் பற்றி கேட்டீர்கள் என்றால் அதன் வானளவு உயர்ந்த புகழை உங்கள் காது குளிர சொல்வார்கள். இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஏறக்குறைய ஐம்பது சதவீதத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டு நாட்டின் பாதுகாப்பிற்காக பாதுகாக்கப்படும் இராணுவ வீரர்கள் அடிப்படையில் எப்படிப்பட்டவர்கள்?.

manipur ladies 540

  வரம்பற்ற சொத்துக்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் இந்திய ஜனநாயகத்தையும் அதை தாங்கிப் பிடித்திருக்கும் அரசு கட்டுமானங்களையும்  அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இந்திய போலி தேசியவாதத்தைக் கட்டமைத்த பார்ப்பனியக் கருத்தியலில் இருந்து பிறப்பதாகும். இந்தியாவை உள்நாட்டு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் வரைமுறையின்றி கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு எல்லையில் எதைக் காப்பாற்ற இவர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்? உண்மையிலேயே  கொழுந்து விட்டெறியும் தேசபக்தியின் விளைவாக இவர்கள் ராணுவத்தில் சேர்ந்தார்களா என்று பார்த்தால் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்றே நடப்பு நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.

  தன் சொந்த நாட்டு மக்கள் மேல் உள்ள பேரன்பின் காரணமாகவே  ராணுவத்தில் சேருகின்றார்கள் என்றால் தன் சொந்த நாட்டு மக்கள் போராடும் போது அவர்களை  அடித்து உதைப்பதற்கும், சுட்டுக் கொல்வதற்கும் நிச்சயமாக இவர்கள் துணைபோக மாட்டார்கள். தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிரான இந்த அமைப்பில் இருப்பதைவிட வேறு ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வேலையைத் தூக்கி  எறிந்துவிட்டு வந்திருப்பார்கள். ஆனால் அப்படி அவர்கள் வராமல் இருப்பதற்குக் காரணம் இந்த வேலையையும் விட்டுவிட்டு வந்துவிட்டால் தன்னையும் தான் சார்ந்த குடும்பத்தையும் பட்டினி போட்டு சாகவிடும் நிலைமைக்குத் தான் தள்ளப்படுவோம் என்பதாலேயே அவர்கள் அவ்வாறு செய்வது கிடையாது.

    நாட்டுமக்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருந்திருக்குமேயானால் நாட்டின் தேசிய கொடிக்கு வணக்கும் தெரிவிக்கும் கைகளால் முதலாளிகளுக்கு கதவு திறந்துவிட்டு கேவலமாக வணக்கம் வைக்க மாட்டார்கள். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பல இராணுவ வீரர்கள் இந்தியாவில் உள்ள பல தனியார் தொழிற்சாலைகளில் வருகின்றவன், போகின்றவனுக்கெல்லாம் கதவு திறந்துவிட்டு சல்யூட் அடிக்கும் வேலையைப் பார்க்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

 முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பணியில் மட்டும் 16 ஆயிரம் முன்னால் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தரைப்படை, கடற்படை, விமானப்படை போன்றவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கார்கில் போரிலும், மும்பையில் தாஜ் ஓட்டலை தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது அதற்கு எதிராகவும், குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோவிலில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான போரிலும் பங்கெடுத்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜிசிஎஸ் என்ற ரிலையன்ஸ் நிறுவனத்திக்குச் சொந்தமான குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். முகேஷ் அம்பானியின் சொத்துக்களைக் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகள், ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதுதான் இவர்களின் வேலை.

   ரிலையன்ஸ் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தரகு முதலாளிகளின் தொழிற்சாலைகளும் மிகக்குறைவான சம்பளத்தில் சிறப்பாக இவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் கூலிக்குக் கூட இவர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக பல தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் செயல்படுகின்றன. நாட்டுக்காக ஆயுதம் தரிப்பது தேசபக்தி என்றால் இப்படி இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடித்து உலகம் பூராவும் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு என்ன பெயர்?

 இவர்களிடம் உண்மையில் தேசபக்தி  என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதையே இவை காட்டுகின்றன.  அதனால்தான்  தன் சொந்த நாட்டு மக்களை கொடூரமாக கொலை செய்யவும், தன் சொந்தநாட்டு பெண்களை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தவும், தனியார் முதலாளிகளிடம் கூழைக் கும்பிடு போடவும்  முடிகின்றது.

 சில வருடங்களுக்கு முன்னால், ராணுவ தளபதி மற்றும் துணை ராணுவ தளபதிகள் மூன்று பேர் உட்பட பல பேர் தங்களுடைய ஆயுதங்களை வெளியாட்களுக்கு விற்று காசாக்கியது நமக்கு நினைவிருக்கலாம். இவர்களின் உண்மையான தேசபக்தி என்பது இவ்வளவுதான். மேலும் ராணுவ அதிகாரி கர்னல் புரோகித் மூலம் இராணுவத்தில் இருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து திருடப்பட்டு இந்து பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்டதும் அதன் மூலம் மலோகன் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு அப்பாவிகள் பலர் பலியானதும் நாடறிந்த உண்மைகள். இராணுவத்தில் உள்ள பல பேர் இந்துத்துவா கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்களாகவும், சாமானிய மக்களை துச்சமாக மதிப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். எந்த விதமான மனித மதிப்பீடுகளும் அற்ற இவர்கள் தான் பணியில் இருந்து ஒய்வு பெற்றபின் பணக்கார முதலாளிகளின்  வாசல்களில் காவல் காத்துக் கிடக்கின்றார்கள். பெரும்பாலான இராணுவ வீரர்கள் அரசாங்கம் தனக்கு சலுகைவிலையில் தரும் மதுவகைகளைப் பல மடங்கு விலை வைத்துத் தன் சொந்த நாட்டு மக்களுக்கு சாராயம் விற்கும் சாராய வியாபாரிகளாக உள்ளனர்.

  எனவே மக்கள் இனி இராணுவ வீரர்கள் பற்றி வெற்று பெருமிதத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழும் ஒரு நாட்டில் அந்த மக்களின் வறுமைக்குக் காரணமான அரசையும் அந்த அரசை பின்நின்று இயக்கும் கார்ப்ரேட்டுகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது தேசபக்தி என்றால் அதை விட ஒரு கேவலமான வார்த்தை வேறு இருக்க முடியாது. இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளை நன்றாக புரிந்துகொண்ட எந்த நபரும் இராணுவத்தில் சேரமாட்டார்கள். இந்திய மக்களை உள்நாட்டு திருடர்கள் மற்றும் பன்னாட்டு திருடர்கள் கொள்ளையடிப்பதற்குப் பாதுகாப்பு கொடுக்கும் ஒரு வன்முறை அமைப்பே நமது இராணுவம் என்பது. காவல்துறைக்கும் ஏறக்குறைய இதே பணி தான். இராணுவ வீரர்களைப் போலவே இவர்களும் பணி ஓய்வு பெற்ற பின்னால் பல தொழிற்சாலைகளில் முதலாளிகளுக்குக் கதவு திறந்துவிட்டு சல்யூட் அடிக்கும் கேவலமான வேலையையே பார்க்கின்றனர்.

  தற்போதுகூட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்படுவதாக கூறி முன்னால் ராணுவத்தினர் தலைமையில் டெல்லியில் மிகப்பெரிய பேரணி ஒன்று நடைபெற்று இருக்கின்றது. இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி என்று கூறப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியைப் பின்நின்று நடத்தியது பி.ஜே.பி என்று தெரிகின்றது. நாட்டில் நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன அவற்றை பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்படாத அதற்காக எல்லாம் போராடாத இராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவர்கள் கோஷம் போட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி கட்டிவிட்ட கட்டுக்கதையை நம்பி போராடுகின்றார்கள் என்றால் அவர்களின் தேசபக்தி உருவாகும் மூலத்தை நீங்கள் கண்டுகொள்ளலாம். எனவே பணியில் இருக்கும் போது அரசு பயங்கரவாதத்தின் துணைக்கருவியாய் இருப்பதும் பின்பு பணிஓய்வு பெற்றபின் அரசு பயங்கரவாதத்தை பின்நின்று நடத்திய பன்னாட்டு இந்நாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் வயில்களில் முதலாளிகளின் கார்களுக்குக் கதவு திறந்துவிட்டு சல்யூட் அடித்தும் தனது அடிமை தேசபக்தியைக் காட்டும் இந்த இராணுவத்தில் நம் சேரப் போகின்றோமா? இல்லை அவற்றை போற்றி புகழத்தான் போகின்றோமா?

- செ.கார்கி

Pin It