தி.க.சி.-யை நான் சந்தித்தது 1965 – ஆம் ஆண்டாக இருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் சென்னை நகரில் நிலவிய இலக்கியச் சூழலைப் புரிந்து கொள்வது, தி.க.சி.-யின் பங்களிப்பை மதிப்பிடவும் உதவும்.

thikasi 243அந்த நாட்களில் சென்னை நகரில் மொழி மற்றும் பக்தி சார்ந்த சங்கங்களும், நாடக சபாக்களுமே அதிகம். இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் சங்கம் எங்காவது ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம். சென்னை நகருக்குத் தொலைகாட்சி வராத காலம். அதனால் மத்திய தர வர்க்கத்தின் பொழுது போக்கிற்குப் புகலிடம் சபாக்கள்தான். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் அனேகமாக எல்லா சபாக்களும் நாடகங்கள் நடத்தும். நாடகக் குழுக்களும் பல உண்டு. இயக்குநர்.கே.பாலச்சந்தர், ’துக்ளக் சோ’ போன்றவர்கள் எல்லாம் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நாடகங்கள்தான் திரை உலகிற்கும் ஏணிப்படி. திரையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் போது கூட சிவாஜி கணேசன் சிவாஜி நாடக மன்றம் நடத்தி வந்தார். எம்.ஜி.ஆரும் இன்னும் சில நடகர்களும் நாடகம் நடத்தி வந்தார்கள். ஆர்.எஸ்.மனோகர், சகஸ்ரநாமம், டி.கே.சண்முகம் சகோதரர்கள் முதலியோரும் நாடகக்குழு வைத்திருந்தார்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணி நாடகங்கள் பின்னுக்குப் போய் சமூக நாடகங்கள் முன்னுக்கு வந்தன. சமூகப் பிரச்சினைகள், கேலி, அரசியல் கிண்டல் மற்றும் நகைச் சுவைத் துணுக்குகளின் கதம்பமாலையாகவும் நாடகங்கள் இருந்தன. பொழுது போக்கிற்குத் தீனி போடுவதே நாடகத்தின் நோக்கமாக இருந்தது.

சபாக்களுக்காக தயார் செய்யப்பட்ட அந்த நாடகங்கள் பெரும்பாலும் தாம்பரத்தைத் தாண்டியதில்லை. வெளியூர்களில் சபாக்கள் குறைவு. வெளியூர்களில் கண்காட்சிகள் நடக்கும் போதுதான் சென்னை நாடகக்குழக்கள் தாம்பரம் தாண்டும். பல நாடகக் குழுக்களில் தொழில் முறை நாடக நடிகர்கள் கிடையாது. வேறு எங்காவது வேலை பார்த்துக் கொண்டே மாலை நேரப் பொழுதுபோக்காக நாடகங்களில் நடிக்கும் அமெச்சூர் நடிகர்களே அப்போது அதிகம்.

சபா நாடகங்களிலிருந்து மாறுபட்ட எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் தாம்பரத்தைத் தாண்டி ஆட்சி புரிந்தன. பிற்காலத்தில் திரை உலகை அவர் ஆக்கிரமிக்கத் தொடங்கியவுடன் அவருடைய நாடகங்களும் முடங்க ஆரம்பித்தன. தி.மு.க.நாடக வடிவத்தை ஆட்சிக்கு வரும் அறிகுறி தெரியும் வரை பயன்படுத்தியது. பொதுவுடைமைக் கட்சியும், கட்சி வீச்சோடு இருந்த கால கட்டங்களில் நாடக மேடையைப் பயன்படுத்தியது.

சென்னை நகரில் பக்தி சார்ந்த சங்கங்கள் பல உண்டு. அச்சங்கங்கள் எல்லாம் பஜனையும், கதாகாலட்சேபத்திலும் கவனம் செலுத்தின. அவை அல்லாமல் தமிழ் மொழி சார்ந்த அமைப்புகள், மற்றும் சங்கங்கள் நகரில் தங்கள் முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் தி.மு.க. சார்புடையவையாகவே இருந்தன. சென்மேரிஸ் ஹால் (அது தற்போது இல்லை) கோகலே ஹால், YMCA பட்டிமன்றம், பச்சையப்பன் கல்லூரி ஆகியவை எல்லாம் மொழி சார்ந்த சங்கங்கள் நிகழ்ச்சி நடத்தும் களங்களாக இருந்தன. ராயப்பேட்டை பகுதியில் இருந்த லட்சுமிபுரம் இளைஞர் சங்கம் பிராமண அறிவுஜீவிகள் சங்கமாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர்கள் சந்ததிக்கக் கூடிய சங்கமாக தமிழ் எழுத்தாளர் சங்கம் மட்டுமே இருந்தது. பின்னால் அது பிளவு பட்டது. இப்போது அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கமாக இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தாது. ஆண்டு விழாவை மட்டுமே சிறப்பாக நடத்தும். இருந்தாலும் தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க தமிழ் எழுத்தாளர் சங்கம் சரியான மேடையாக இருந்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கூட்டம் சென்னை மகாஜன சபையில் தான் பொதுவாக நடக்கும். மகாஜன சபை என்பது சென்னையில் முதன் முதலில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் தேசபக்தர்களால் துவங்கப்பட்ட சபையாகும். அந்நாட்களில் மவுண்ட் ரோடில் அடையாளத்திற்கு இடம் சொல்ல வேண்டுமானால் மகாஜன சபைக்கு அருகில் என்பார்கள். இப்போது எல்.ஐ.சி. அருகில் என்கிறார்கள். இந்தத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் இருமுறை செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

மொழி சார்ந்த இலக்கியச் சங்கங்கள் இருந்த அளவுக்கு இலக்கியம் சார்ந்த இலக்கியச் சங்கங்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலை இருந்தது. விமர்சம் வளராததால், விவாதம் இல்லை. விவாதம் இல்லாததால் இலக்கியச் சங்கங்களும் இல்லை. இந்த நிலை மாறத் தொடங்கியது. மாறத் தொடங்கிய காலத்தின் பிரதிநிதிதான் தி.க.சி.

சென்னை மவுண்ட் ரோட்டில், இப்போது அண்ணாசாலையில், மத்திய நூலகக் கட்டிடம் பெரிதாகக் கட்டப்பட்டது. அதில் பெரிய அரங்கம் ஒன்று போக நான்கு சிற்றரங்கள் அமைக்கப்பட்டன. இலக்கிய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை சிற்றரங்கம் என்பதால் அவைகளுக்கு அப்போது வாடகை கிடையாது. வியப்பால் புருவம் உயர்கிறதா? ஆமாம் ஐந்து ரூபாய் மட்டுமே மின் மற்றும் பராமரிப்புக் கட்டணமாக வாங்கப்பட்டது. வாடகை என்று எதுவும் கிடையாது. இந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்திக் கொண்டவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ’ஞானரதம்’ பத்திரிகையை நடத்திய சித்ரபாரதி என்னும் அப்பாஸ் இப்ரகீம்.

அவர் வாசகர் வட்டம் நிறுவி தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினார். எழுத்தாளர் வாசகர் சந்திப்பு ஏற்பட்டது. சா.கந்தசாமி, கிரியா ராம கிருஷ்ணன், மறைந்த ஐராவதம் இன்னும் சிலர் ’இலக்கியச் சங்கம்’ என்ற சங்கத்தைத் தொடங்கி தொடர்ந்து நிதழ்ச்சிகளை அங்கு நடத்தினர். கனமான இலக்கியம் என்ற திக்கை நோக்கி சி.சு.செல்லப்பாவின் ’எழுத்தும்’ க.நா.சுப்பிரமணியத்தின் ’இலக்கிய வட்டமும்’ வெளிவந்தன. சா.கந்தசாமியின் ’இலக்கியச் சங்கம்’ க.நா.சு.வின் வழி பயணித்தது. சுதந்திரப் போராட்ட வீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமியும் வாசகர் வட்டம் நிறுவி சில நிகழ்ச்சிகளை சில ஆண்டுகள் நடத்தினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் அப்போது இருந்தது. பின்னால் தோன்றிய மக்கள் எழுத்தாளர் சங்கம் மத்திய நூலக கட்டிடத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டது.

கலை இலக்கிய உலகில் சமூக அக்கறையின்மையும், வலதுசாரிப் போக்கும் அழுத்தமாகத் தங்களின் கால்களைப் பதித்த போது, சென்னை நகரில் இயங்கத் தொடங்கிய போது, அதை எதிர்கொள்ளும் ஆளுமையாக தி.க.சி. விளங்கினார். மாற்று இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தார். 1965 – ஆம் ஆண்டு அவர் தாமரை ஆசிரியர் குழு பொறுப்பை ஏற்றார். பருப்பு இல்லாமல் கல்யாணம் நடக்கலாம். ஆனால் தி.க.சி. இல்லாமல் சென்னையில் இலக்கியக் கூட்டம் நடக்காது. அவர் பேசினாலும் பேசாவிட்டாலும் பார்வையாளராக எல்லாக் கூட்டத்திலும் கலந்து கொள்வார். விவாதங்களில் பங்கு கொள்வார். விவாதங்களில் முற்போக்கு இலக்கியக் கோட்பாடு வெளிப்படும். கூட்டம் முடிந்ததும் அரங்கத்திற்கு வெளியேயும் நின்று பேசிவிட்டுத்தான் போவார். தனி நபராகப் போராடிய தி.க.சி-யின் பின்னால், பின்னர் ஒரு படையே திரண்டது.

நான் தி.க.சி.-யை இது போன்ற கூட்டங்களில்தான் சந்தித்தேன். நான் கூட்டத்தில் விதாதங்களில் கலந்து கொள்வேன். என் விவாதத்தை எல்லாம் அவர் கவனித்திருக்கிறார். இருந்தாலும் நானும் அவரும் பேசிக்கொள்ள உறவாட சில கூட்டங்கள் தேவைப்பட்டன. மெல்ல நெருங்கி வந்தோம். நெருங்கியபின் அந்த நெருக்கம் பிரிக்க முடியாத நெருக்கமாயிற்று. ‘நெருக்கம்’ என்றால் அதற்கு என்ன பொருள் உண்டோ அந்தக் கராறான பொருளில் எங்கள் நெருக்கம் அமைந்தது. அக்கால கட்டத்தில் தி.க.சி.-யின் பங்களிப்பை இரண்டு வகையாகக் கொள்ளலாம். கலை-கலைக்காகவே என்று முழங்கப்பட்ட காலத்தில் கலை மக்களுக்காகவே என்ற மாற்றுக் கோட்பாட்டை முன் வைத்தது ஒன்று என்றால், வாசகர்களையும் முற்போக்கு இலக்கியவாதிகளையும் ஒருங்கிணைத்தது மற்றொன்று.

ஆனந்த விகடன் வார இதழ் ஒவ்வொரு வாரமும் சிறந்த ஒரு சிறுகதையை முத்திரைக் கதை என்று விளித்து அதற்கு ரூபாய் 500 சன்மானம் வழங்கியது. அந்நாட்களில் 500 ரூபாய் ஒரு நல்ல தொகை. ஜெயகாந்தன் கதை எப்போது விகடனில் வந்தாலும் அது முத்திரைக் கதைதான். ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் ’அக்னிப் பிரவேசம்’ வெளிவந்தது. அந்த வாரம் இலக்கியச் சங்கத்தின் கூட்டம் இருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நான் போய் இருந்தேன். தி.க.சி-யும் அவ்வாறே முன்னாலேயே வந்திருந்தார். நாங்கள் வந்த சில நிமிடங்களில் சி.சு.செல்லப்பா வந்தார். நான் ஏற்கனவே சி.சு.செல்லப்பாவிடம் பழகி இருந்தேன். அவர் ’அக்னிப் பிரவேசம்’ பற்றிப் பேச ஆரம்பித்தார். ’ஒரு சொம்பு தண்ணி ஊத்தினா எல்லாம் ஆயிடுச்சா?’ என்று பேச ஆரம்பித்தார். நான். தி.க.சி, மற்றும் அங்கே வந்த சிலரும் அந்தக் கதை பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். சம்பிரதாய ரீதியாக எங்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் அந்த விவாதத்தில் முழுமை பெற்றது. பிற்காலத்தில் ஜெயகாந்தன் பற்றி என்னை அவர் எழுதச் சொல்ல இந்த நிகழ்வு ஒரு காரணமோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

தி.க.சி. சென்னை தியாகராயா நகரில் பனகல் பார்க் எதிரே ஒரு கட்டிடத்தின் அறையில் தங்கி இருந்தார். அவர் வேலை பார்த்த சோவியத் நாடு அலுவலகத்திற்கு பத்து நிமிடங்களில் நடந்தே போய்விடலாம். தி.க.சி-யுடன் அவருடைய மூத்த மகன் கணபதி இருந்தார். அவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். குடும்பம் நெல்லையில் இருந்தது. அந்த அறையில் தி.க.சி-யோடு இருந்த இன்னொருவர் நாவலாசிரியர் டி.செல்வராஜ். செல்வராஜ் அப்போது ஒரு இளம் வழக்கறிஞர். கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டு மோதல் தொடர்ந்த காலகட்டம் அது. தி.க.கி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனாலும் இரண்டு பேரும் ஒரே அறையில். இந்தப் பண்பு தான் தி.க.சி. இதில் செல்வராஜீக்கும் பங்கு உண்டு. தன் அடையாளத்தை இழக்காமலேயே மாற்றாரோடு பழகும் கலையில் தி.க.சி வல்லவர்.

தி.க.சி.க்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு தோழமையாக உருவெடுத்தது. நான் அடிக்கடி அவருடைய அறைக்குச் செல்வேன். நான் ஏற்கனவே பகீரதன் நடத்திய ’கங்கை’ குத்தூசி குருசாமியின் ’குத்தூசி’ இன்னும் சில இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன். தி.க.சி.’ தாமரை’-யில் என்னை எழுதச் சொன்னார். எழுதத் தொடங்கினேன். என்னுடைய விமர்சனக் கட்டுரைகள் பல தாமரையில் வெளியாகி எனக்கு ஒரு அங்கீகாரத்தைத் தேடித் தந்தன. நட்பு, தோழமை, என்ற படிகளில் ஏறி அவரை ஒரு குருவாகப் பார்த்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் கண்ணதாசனை ஆசிரியராகக் கொண்டு ’கண்ணதாசன்’ இதழ் வெளிவந்தது. தாமரையில் எழுதியவர்கள், ’கண்ணதாச’னிலும் எழுதத் தொடங்கினர். கண்ணதாசன் ஆசிரியர் குழு தாமரைக்குத் ’தம்பிக் குழு’ ஆனது. கண்ணதாசன் ஆசிரியர் குழுவிற்கு என்னை தி.க.சி. அறிமுகம் செய்தார். நான் கண்ணதாசனிலும் எழுதத் தொடங்கினேன். கண்ணதாசனின் தம்பி இராம.கண்ணப்பனும், கார்க்கி சண்முகமும் இதழை பொறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் இருந்த கந்தர்வனும் கண்ணதாசன் ஆசிரியர் குழுவிற்கு உற்ற நண்பராய் இருந்தார். நாங்கள் பழகிய பின் ஒரு இலக்கிய வட்டம் ஆனோம்.

நான், தி.க.சி, டி.செல்வராஜ், இராம.கண்ணப்பன், கார்க்கி சண்முகம், கந்தர்வன், ம.நா.இராமசாமி மற்றும் சிலரும் அடிக்கடி மாலை நேரங்களில் சந்தித்து பேசத் தலைப்பட்டோம். பின்னர் சென்னைக்கு வந்த என்.ஆர்.தாசனும் எங்கள் வட்டத்தில் இணைந்தார். பனகல் பார்க், நடேசன் பார்க் இவை நாங்கள் அடிக்கடி சந்திக்கும் பூங்கா. சில சமயங்களில் எங்கள் குழு கடற்கரைக்கும் செல்லும்.

தி.க.சி-யின் நட்பின் எல்லை எப்போதும் விரிந்து பறந்து சென்று கொண்டே இருக்கும். கல்கியை விட்டு வெளியேறிய நா.பார்த்தசாரதி ’தீபம்’ பத்திரிகையை ஆரம்பித்தார். தி.க.கி., நா.பா.-வின் உற்ற தோழர். பக்கபலமாக இருந்தவர். தீபம் தந்த எழுத்தாளர் தான் இன்று செல்வாக்கோடு இருக்கும் திருப்பூர் கிருஷ்ணன். திருமலை ’தீபத்‘திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தீபத்திலும் எழுத எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. வல்லிக் கண்ணன் அறிமுகம் கிடைத்தது. ஆனால் எங்கள் பூங்கா சந்திப்புக்கு நா.பா, வல்லிக் கண்ணன் முதலியோர் வரமாட்டார்கள்.

தி.க.சி-யை நான் குருவாகக் கொண்டாலும் ’அவர் இல்லாமல் நான் இல்லை’ என்பது ஒருவகையில் உண்மை என்றாலும், அவருக்கு ஒரு ஏமாற்றத்தை நான் கொடுத்தேன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு ஒன்று அப்போது திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசுவதற்கு தி.க.சி ஏற்பாடு செய்தார். தீபம் நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி முதலியோர் கலந்து கொண்ட மேடையில் நான் பேசினேன். ஆனாலும் அரசியல் நோக்கில் என்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈர்த்தது. அதற்கு டி.செல்வராஜ், மறைந்து தோழர் வி.பி.சிந்தன் ஆகியோர் முக்கிய காரணம். இலக்கியப் பாதைக்கு தி.க.சி. அரசியல் பாதைக்கு டி.செல்வராஜ், அவர் வழித் தோழர் வி.பி.சிந்தன் என்பதாயிற்று என் வாழ்க்கை. தி.க.சி-க்கு என்மீது லேசான வருத்தம் உண்டு. நான் அவருடைய கண்டுபிடிப்பு. அவரை குருவாக ஏற்றவன். முற்போக்குப் பார்வைக்கு அவர்தான் திசைகாட்டி. என்றாலும் அரசியல் நோக்கு வேறு மாதிரியாக என்னுள் இருந்தது. ஆனால் தி.க.சி. அதை எல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தும் மனிதர் அல்ல. அவர் பண்பின் சிகரம். அதனால் எங்களின் பயணம் தொய்வில்லாமல் தொடர்ந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் இடதுசாரிகளின் ஜனநாயக இலக்கிய அமைப்பாக நாங்கள் ’மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத்’ தொடங்கினோம். தி.க.சி-யும், டி.செல்வராஜீம் அதிகாரபூர்வமாக மக்கள் எழுத்தாளர் சங்கத்தில் இல்லை. ஆனால் ’எல்லாமாக இருந்து’ இயங்கினார்கள். அவர்கள் களத்தில் இருந்தவர்கள். அவர்களுக்குத் தெரியும் மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் தேவை.

மக்கள் எழுத்தாளர் சங்கம் 1969-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் மாநில மாநாடு சென்னையில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்றது. சங்கத்தின் அடித்தளமாக இருந்த தி.க.சி மேல் தளத்தின் மேடைக்கு வரவில்லை. சூழ்நிலை அப்படி. எந்கச் சூழ்நிலைக்கும் எங்களைப் பிரிக்கும் வலிமை இல்லை. நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.

1975-ஆம் ஆண்டு நான் ’சிகரம்’ இதழை ஆரம்பித்தேன். ஆனால் தி.க.சி அதில் எழுதவில்லை. சூழ்நிலை அப்படி. ஆனால் அவர் இல்லாமல் ’சிகரம்’ இல்லை.

தி.க.சி. பணி ஓய்வு பெற்று நெல்லைக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் எங்கள் தோழமையில் இடப்பெயர்ச்சி இல்லை.

அந்த நாட்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

Pin It