உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் நினைவைப் போற்றும் விதமாக அவரது நினைவு நாளான  ஏப்ரல் 23ஆம் நாள் உலக புத்தக தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் புதிய நூல்களின் வெளியீட்டு விழாக்கள், நூல் விமர்சனக் கருத்தரங்கங்கள், நூல் வாசிப்பு நிகழ்வுகள், நூல்கள் குறித்த கருத்துரைகள் என வெவ்வேறு வடிவங்களில் புத்தக தினங்கள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

உலகளவில் புத்தக தினம் அனுசரிக்கப் படுவதற்கும் நம் தமிழகத்தின் புத்தக தினத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இத்தினத்தில் அனைத்துத் தரப்பினரையும் புத்தகங்களை வாசிக்க வைப்பதற்கான விழிப்புணர்வு இயக்கங்கள் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதைப் பார்க்கையில் ஒரு விஷயம் தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் தன்னியல்பில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உருவாகாமல் இப்படியான பயிற்சியின் வாயிலாக புத்தகங்களைப் படிக்க வைக்க இயக்கம் நடத்த நேர்வது துரதிர்ஷ்டமானது இல்லையா?

ஆயின், தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் பெருமளவில் குறைந்துகொண்டே வரும் காலச் சூழலில் புத்தக வாசிப்பை முன்வைத்துத்தான் புத்தக தினத்தை அணுகவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் வெகு சில எழுத்தாளர்களின் நூல்கள் தவிர பெரும்பான்மை எழுத்தாளர்களின் நூல்கள் ஆயிரம் பிரதிகளைத் தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. விதிவிலக்காக சில புத்தகங்கள் மறு பதிப்பு அந்தஸ்து பெற்று தொடர்ந்து வெளிவருகின்றன.

மற்ற மொழி நூல்கள் விற்பனையின் ஒப்பீட்டளவில் தமிழில் மிகக் குறைவாகவே காணப் படுகின்றன. உலகளவில் பதிப்புத் தரத்திலும் படைப்புத் தரத்திலும் வலுவான சாதனைகளைக் கொண்டுள்ளபோதும் தமிழ்ச்சூழலில் பரந்து பட்ட வாசிப்பு நிகழாமல் போனதற்கான காரணம் என்ன? விற்பனைக் குறைவாக இருப்பது எதனால்? முன்னைவிடவும் நூலகங்களின் பயன்பாட்டு அளவு குறைந்துபோனதன் பின்னணியில் உள்ள காரணி எது என்பதை சற்றே ஆராயலாம்.

தமிழகத்தில் 80களில் பல்கிப் பெருகத் தொடங்கிய ஆங்கிலப் பள்ளிகளின் கல்வி கற்றல் முறையிலிருந்தே இந்தப் பின்னடைவு நிகழத் தொடங்கியது. 90களில் கல்வி கற்கத் தொடங்கி யவர்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வியையே அதிகமாக நாடினர். இன்றைய தலைமுறையினர் கலை இலக்கிய அரசியல் சமூகம் என்ற பொதுத் தளங்களில் அதிகம் நாட்டமில்லாது போனதற்கான அக்கறையின்மையின் விதை அக்காலத்திலேதான் வீர்யத்தோடு விதைக்கப்பட்டது. அப் பின்புலத்தி லிருந்தே இந்த வாசிப்புப் பின்னடைவைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்நாட்களில்  பள்ளிப்பாட நூல்களைத் தவிர மற்ற எதனையும் வாசிக்கவே கூடாது என்றும் வார இதழ்கள் மற்றும் மாத சஞ்சிகைகளைப் படித்தால் தண்டனை என்றும் கண்டித்தும் தண்டித்தும் வளர்க்கும் சூழ்நிலையே ஆங்கிலப்பள்ளி மற்றும் அம்மாணவர்களின் குடும்பங்களிலும் தீவிரமடையத்  தொடங்கியது.

இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக திட்டமிட்டு வளர்த் தெடுக்கப்பட்ட வேலைக்கான கல்விகள் - படித்துக் கொண்டிருக்கும்போதே வேலை, படித்து முடித்த வுடன் வேலை - என்ற தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விமுறைப்படிப்பைக் கடந்து மாணவர்கள் வேலையை நோக்கி விரையும் எந்திர பொம்மைகளாக மாறிக் கொண்டிருந்தனர். அவர் களின் கல்வி சார்ந்த வேலைக்கனவு நூலகத்திற்கு செல்வதைத் தடுத்து, கலை இலக்கியம் அரசியல் நூல்களை வாசிப்பதற்கான வாசல்களை இழுத்து மூடியது.

பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் களும் முழு மூச்சாகப் பாடங்களைப் படித்து மதிப் பெண்களைக் குவிக்கும் எந்திரங்களாக மாணவர் களை மாற்றி அவர்களை ஏதாவது நிறுவனத்தின் பணியாளராக்கி அந்தப் பின்னணியில் தங்கள் கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களை சேர்ப் பதில் முனைப்புக் காட்டினர். கலை இலக்கிய சமூகத் தொடர்பிலிருந்து அவர்களை முற்றிலு மாக அகற்றி வைப்பதில் இக்காலத் தலைமுறை ஆசிரியர் களுடன் கல்வி நிறுவனங்களும் கவனமாகச் செயல் பட்டன.

இதன் விளைவு  தமிழக அரசு நடத்தும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் அதிகமாக வெற்றிபெற்று அரசுப்பணிகளில் சேர்பவர்கள் ஆங்கிலவழிக் கற்றவர்களைவிடவும் தமிழ்வழிக் கல்வி கற்றவர்களே அதிகம் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தனியார் பள்ளி கல்லூரிகளில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு நடத்தும் வேலைவாய்ப்புக்கான பொதுத்தேர்வு களில் கலந்துகொள்ள இயலாதவர்களாக இருப் பதற்கு பொது அறிவுத் துறையில் போதிய தெளி வில்லாததே காரணமாகும். அப்படிக் கலந்துகொள் பவர்களிலும் மிக சொற்பமான அளவிலேயே வேலைக்குத் தெரிவு செய்யப்படுவதாகவும் அவ்வாய்வு மேலும் தெரிவிக்கிறது.

ஆனால் இச்சூழலில் படித்து வளர்ந்தவர்கள் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றி நிறைய வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பதை கவனத்தில் கொள்வதில்லையா என்ற கேள்வி எழலாம். உண்மைதான். நிறைய பணம் சம்பாதிக்கும் அவர்களின் இருப்பைக் கருத்தில் கொண்டால் ஒரு உண்மை புலப்படும். சமூகத்திற்கு முற்றிலும் தொடர்பற்று தனது சொந்தக் குடும்பத்திலிருந்தும் அந்நியப்பட்டு, தான், தனது மனைவி, குடும்பம் என்று சுருங்கி வாழ்வதோடு பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் சுயநல வாழ்நிலைக்கான அடிப்படை மனநிலை இக்கற்றல் முறையிலிருந்தே தொடங்குகிறது. பொது அறிவுப் போதாமையைத் தந்த பள்ளிப் படிப்பும், சமூக மதிப்பீடுகளையும் அதன் விழுமியங்களையும் சொல்லித் தராத கல்வி முறையுமே இச்சீரழி விற்கான அடிப்படை.

இவ்விடம் தமிழ் இலக்கியத்திலிருந்து ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ளல் நலம்.

...................................... மரத்தின்

கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு

என்கிறது நன்னூல் சூத்திரம்.

ஒரு மரத்தின் வளைவு நெளிவு கனபரிமானத்தை கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர் பயன் படுத்தும் கருவி நூல் என்பதாகும். மரத்தின் வளைவைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவதுபோல ஒரு மனிதனின் மனதில் உண்டாகும் வளைவு நெளிவுகளைக் கண்டறிந்து அம்மனநிலையை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செய லாற்றும் என்று நன்னூல் விளக்குகிறது.

இவ்வுண்மையைப் பலரும் புரிந்துகொள்ளாத காரணத் தாலேயே புத்தக வாசிப்பின் மீதான தமிழ் மக்களது நாட்டமும் குறைந்துபோனதை கண்டுணர முடியும். ஆக மிகுந்த இழிவான தொரு பாதையில் தமிழ்ச்சமூகம் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் புத்தகங்களின் தேவையும் ஆற்றலும் இன்றியமை யாததாகிறது.

புத்தகங்கள் ஆற்றுகிற செயல்களில் முக்கியமானது மனதிலுள்ள கேடுகளை அகற்றுவது. இப்புவியில் நிகழும் அத்துணை தீங்குகளுக்கும் குணக்கேடுகள்தான் காரணம். அடிப்படையில்  மனதில் உண்டாகும் அழுக்குகளை, குறைபாடு களைப் புத்தகங்கள் களைந்தகற்றுகின்றன. தீமைகளில்லாத உலகத்திற்கு இட்டுச்செல்லும் புத்தகங்களை அனைத்துத் தரப்பினரும் வாசிப்பதற்கான சூழலை வலியுறுத்துவது அவசிய மாகும்.

சென்ற நூற்றாண்டின் இறுதிக் காலத்திலிருந்து ‘அச்சுப் புத்தகங் களின் காலம் முடிந்துவிட்டது’ என்பதானதொரு குரல் பரவலாக எழுந்தடங்கி வருகிறது. ஆனாலும் இணையம் மற்றும் பல்வேறு ஊடகங் களில் புத்தக வடிவில் நூல்கள் வெளி வரப் பெற்றாலும் அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. எக்காலத் திலும் அச்சு நூல்களே வாசிப் பவருக்கு மிகவும் அணுக்கமானவை. அன்பு, அறம், நேர்மைப்பண்பு, சமூக அக்கறை போன்ற நற்பண்புகளை புத்தகங்களிடமிருந்தே ஒருவர் பெற முடியும். நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கிச் செம்மைப் படுத்துகின்றன.

படிப்பதற்கு நேரமில்லை என்று கூறி புத்தகங்களைத் தட்டிக்கழிக்கும் பலரும் ஜவஹர்லால் நேருவின் கூற்றைக் கவனிக்கவேண்டும்.

‘பரபரப்பான பிரதமராக செயல் பட்டுக் கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி புத்தகங்களை வாசிக்கமுடிகிறது. அதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா’ என்று கேட்ட போது அதற்கு நேரு ‘எனக்கான புத்தக வாசிப்புக்கான நேரத்தை எனது உறக்கத்திலிருந்து நான் திருடிக் கொள்கிறேன்’ என்று பதிலுரைத் தாராம்.

இந்த நேரத்தில்தான் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று திட்ட மிட்டுக் காத்திராமல் கிடைக்கிற நேரங்களில் புத்தகம் வாசிக்கிற பழக்கத்தை உண்டாக்கிக் கொள் வதுடன் மற்றவர்களுக்கும் அப் பழக்கத்தை கைமாற்றி அவர்களையும் வாசிக்கச் செய்து தமிழ்ச் சமுதாயம் தழைக்க முன்னெடுப்போம்.

அறிவை விரிவு செய்து அகண்ட மாக்க ஒவ்வொருவரும் நூல்களைப் பயிலவேண்டும். பிறரையும் பழக்க வேண்டும். அறிவிற் செறிந்த தலை முறையை வாசிக்கும் பண்பால் வளர்த் தெடுக்கவேண்டும். ஏனெனில் மனிதர் களைவிட ரொம்பவும் மும்மரமாக புத்தகங்கள் செயலாற்றவேண்டிய காலமிது.

- உலகப் புத்தகத் தினம் ஏப் - 23

Pin It