1923ஆம் ஆண்டு,மே மாதம் முதல் தேதி தமிழ்நாட்டில் சென்னைக் கடற்கரையில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தமிழ் மண்ணின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெருமைக்குரியவர், மே தினக் கூட்டத்தை நடத்தினார். தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கும் அதுதான் முதல் மே தினக் கூட்டம். அவர் உரையில் காணப்பட்ட வேகமும், உணர்வும் நோக்கமும், இன்றைய மே தினக் கூட்டங்களில் காணப்படுகிறதா? இந்தக் கேள்விக்கு விடை தேடும்போது, மனம் மகிழ்ச்சியடையவில்லை. சிங்காரவேலர் காலகட்டத்தைவிட இன்று பரவலாக மே தினக் கூட்டம் நடத்தப்படுவது உண்மைதான். தமிழ்நாட்டில் மே தினத்திற்கு விடுமுறையே கிடைத்திருக்கிறது. ஆனால் உணர்வு நிலை எந்தநிலையில் இருக்கிறது?

workersபொங்கல், தீபாவளி போல் மே தினம் ஒரு பண்டிகை தினமாக மாறியிருக்கிறது. பண்டிகைக்கு உரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. தொழிலாளர் அல்லாதவர்களுக்கு இது ஒரு விடுமுறை நாள். அவ்வளவே !

தொழிலாளர் வர்க்கம் சமூக மாற்றத்திற்கான அச்சாணி. இந்தப் புரிதல் சிலருக்கு மட்டுமே இருக்கிறது. பல பேருக்கு இல்லை. இடது சாரிகள் மட்டுமே வர்க்கம் பற்றிப் பேசுகிறார்கள், மற்றவர்கள் மற்றவை பற்றிப் பேசுகிறார்கள்.

உலகம் பொருள் உற்பத்தியால் இயங்குகிறது. இந்த உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் சமூக  மாற்றமாகிறது. தொழிலாளர்கள் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உற்பத்தியில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? உற்பத்திக் கருவிகள், உற்பத்திக் கருவிகளைத் தங்கள் ஆளுகையில் வைத்திருப்பவர்கள், உற்பத்திக்குத் தங்கள் உழைப்பைத் தருகிறவர்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து உற்பத்திச் சக்திகள். கருவியைத் தன் உடைமையில் வைத்திருக்கும் சக்தியும், உற்பத்திக்கு உழைப்பைத் தரும் சக்தியும் முரண்படுகிறது, மோதுகிறது. இந்த முரண்பாடுதான் வர்க்கப் போராட்டததிற்கும் அழைத்துச் செல்கிறது. உற்பத்திக் கருவிகள் மாறும்போது, சமூகமும் மாறுகிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய சக்தியாக உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையைப் பெரும்பாலான தொழிலாளர்கள் உணரவில்லை. இவர்கள் உணரும் போது தான் வர்க்கப் போராட்டம் வாய்ச்சொல்லிலிருந்து மீளும்; கனவு நனவாகும்.

ஆனால் இன்றுள்ள நிலை என்ன? உழைக்கும் மக்களுக்குத் தங்கள் பங்களிப்பு சமுதாய மாற்றத்தில் என்ன என்பது தெரியவில்லை. தொழிற்சங்கம் என்பது தங்களைப் பாதுகாக்க இருக்கிறது, தங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற இருக்கிறது என்று மட்டுமே தொழிலாளர்கள் புரிந்துகொண்டால், சமூகப் புரட்சி சாத்தியமாகாது. எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரத் தூக்கம் ஆகிய கோரிக்கைகளைச் சுமந்துதான் மே தினப்போராட்டம் தொடங்கியது. ஆனால் அது தொடக்கமே தவிர முடிவல்ல. இவை கிடைத்தால் எல்லாம் கிடைத்ததாகக் கொள்ளக்கூடாது. இன்று பெரிய நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் சட்டப்படி எட்டு மணி நேர உழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதைத் தாண்டி சமூக மாற்றத்தில் தங்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பதைப் பெருவாரியான உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

“காண்பதெல்லாம்  தொழிலாளி செய்தான்” என்று பாரதிதாசன் கூறினார். காண்பதை எல்லாம் செய்தவனுக்குத் தன்னை ஒத்தவர்களின் கூட்டால் சமூக மாற்றத்தைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை? சமூக விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாத மக்களால், சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவத்தால் கற்பவர்கள் என்பது உண்மைதான். அது கற்பதில் ஒரு பகுதிதான். உழைக்கும் மக்களுக்குச் சமூகம் பற்றிய அறிவியல் உண்மையும், அதன் மாற்றத்தில் தன் பங்களிப்பு என்ன என்ற உண்மையும், தத்துவக் கல்வியால்தான் கிடைக்கும். இந்தத் தத்துவக் கல்வி, மார்க்சியக் கல்வி தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டும். அது கிடைக்காத வரை வர்க்கப் போராட்டம் வாய்ச்சொல்தான். உழைக்கும் மக்களுக்காக நிற்பவர்கள் வாய்ச்சொல் வீரர்கள்தான். இந்த நிலை மாற வேண்டும். மாறுவதற்கு இந்த மே தினத்தைப் பயன்படுத்தினால், சமுதாயம் மாறும். கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றினால், வழக்கம் போல் மே தினம் வரும் ! போகும் ! காலம் கரையும், ஆனால் வர்க்கப் புரட்சி கரையேராது.

இந்த நிலை மாறுமா? மாறும் !

தேக்கம் உடையும் ! கிழக்கு வெளுக்கும்.

Pin It